Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

19.9.2026 சனி புரட்டாசி முதல் சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ‘புரட்டாசி மாதம்’ என்றாலே பக்தர்களின் வாழ்வில் வறுமையையும் துன்பத்தையும் விரட்டி, பகவானின் அருளைப் புரட்டித் தரும் புண்ணிய மாதமாகும். பக்தி உணர்வும், ஆன்மிக அதிர்வுகளும் நிறைந்த இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் திருமால் வழிபாட்டிற்குரிய பொன்னான நாட்களாகும்.

புரட்டாசி சனிக் கிழமையன்று ஸ்ரீ மன் நாராயணனுக்கு தளிகை (படையல்) இட்டு வழிபடுவது தொன்று தொட்டு வரும் பாரம்பரிய வழக்கமாகும். ‘‘திருமலைக்குச் சென்று திரும்பி வந்தால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் நேரும்” என்பது கோடிக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பாதயாத்திரை யாகவோ அல்லது சாதாரணமாகவோ பக்தர்கள் திருமலை திருப்பதிக்குச் சென்று எம்பெருமானை தரிசிக்கின்றனர். இம் மாதத்தில் தான் திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு பிரம்மோற்சவப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

19.9.2026 சனி தூர்வாஷ்டமி

பாத்ரபத மாத (புரட்டாசி) வளர்பிறை அஷ்டமி திதி ‘தூர்வாஷ்டமி’ என்று புண்ணிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ‘தூர்வா’ என்றால் அருகு (அறுகம்புல்). விநாயகப் பெருமானுக்கும், பரமேஸ்வர னுக்கும் மிகவும் உகந்த அறுகம்புல்லை முதன்மையாக வைத்துப் போற்றி வழிபடும் திருநாளாகும்.இந்நாளில் விரதமிருந்து அறுகம்புல்லால் இறைவனை அர்ச்சித்து வழிபட, வம்ச விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். குறிப்பாக, பெண்கள் தம் சந்ததியினரின் நல்வாழ்விற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு அருள்பெறுகின்றனர்.

20.9.2026 ஞாயிறு கேதார விரத ஆரம்பம்

சிவபெருமானின் அருள்பெற கடைப்பிடிக்கப்படும் மிக மேன்மையான விரதங்களில் ‘கேதார கௌரி விரதம்’ முதன்மை யானது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி/நவமி திதியில் தொடங்கி

ஐப்பசி மாத அமாவாசை வரை (தீபாவளி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தின் தொடக்க நாள் இன் றாகும். பராசக்தி தேவி, சிவபெருமானின் திருமேனியில் பாதியைப் பெற்று ‘அர்த்தநாரீஸ்வரராக’ உருவெடுக்க நோற்ற உன்னத விரதமிது. குடும்ப ஒற்றுமை ஓங்கவும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பெருகவும், எடுத்த காரியங் களில் வெற்றி பெறவும் பக்தர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பினைக் கட்டி, கேதாரேஸ்வரரை மனமுருகி வழிபடத் தொடங்குவர்.

20.9.2026 ஞாயிறு அதுக்க நவமி

பாத்ரபத மாத (புரட்டாசி) வளர்பிறை நவமி திதி அதுக்க நவமி’ என்று சாஸ்திரங்களில் அழைக்கப்படுகிறது.

‘துக்கம் இல்லாத நிலை’யைத் தருவதால் இது ‘அதுக்க நவமி’ என்றும் போற்றப்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்படும் மனக்கவலைகள், துன்பங்கள் மற்றும் தடைகளை அகற்றி மன அமைதியைத் தரும் அற்புதமான நாளிது. இந்நாளில் தேவி வழிபாடும், ஸ்ரீ மன் நாராயண வழிபாடும் செய்வது அளப்பரிய நன்மைகளைத் தரும். விசேஷ தானங்கள் செய்வதும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதும் பித்ருக்களின் ஆசியையும், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தரும்.

20.9.2026 ஞாயிறு திருவிடைக்கழி முருகன் பாலபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைக்கழி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு முருகப்பெருமான், திருக்குரா மரத்தின் அடியில் சிவபெருமானை பூஜை செய்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் புரட்டாசி மாத வளர்பிறை காலத்தில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு பாலபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. வேலவனுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடும் போது, ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம், நாக தோஷங்கள் நீங்கும்; புத்திர பாக்கியமும், காரியத் தடைகள் அகன்ற வெற்றியும் கிட்டும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகும்.

21.9.2026 திங்கள் ஏனாதி நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் அவதாரச் சிறப்பைப் போற்றும் புண்ணிய நாளிது. சோழ நாட்டில் எயினனூர் என்ற ஊரில் பிறந்த இவர், வாள்பயிற்சி அளிக்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார். சிவனடியார்களிடம் அளவுகடந்த பக்தி கொண்டவர். போர்க் களத்தில் தன்னை எதிர்த்து வந்த அதிசூரன் என்பவன், தன் நெற்றியில் திருநீறு அணிந்து வந்ததைக் கண்ட ஏனாதி நாயனார், ‘‘சிவனடியார்” என்று கருதி ஆயுதத்தை கீழே எறிந்து தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தார். இவரது ஈடற்ற சிவபக்தியையும் தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான், அவருக்குத் தன் திருவடி நிழலை அளித்தருளினார். புரட்டாசி மாத உத்திராட நட்சத்திரத்தில் வரும் இவரது குருபூஜை நாளில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

21.9.2026 திங்கள் கஜலட்சுமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை தசமி திதியில் கடைபிடிக்கப்படும் மகத்தான விரதம் கஜலட்சுமி விரதம் ஆகும். அஷ்டலட்சுமிகளில் ஒருவரான கஜலட்சுமி தேவி, இருபுறமும் யானைகள் நீரால் அபிஷேகம் செய்ய, தாமரை மலரில் வீற்றிருந்து பக்தர்களுக்குச் சகல செல்வங்களையும் அள்ளித் தரும் வடிவம் கொண்டவள். இந்நாளில் லட்சுமி தேவியை மலர்களாலும், நிவேதனங்களாலும் அலங்கரித்து பூஜித்து வர, வறுமை அடியோடு அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாபெரும் வளர்ச்சியும், கடன்கள் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யங்களும், ராஜபோகமான நல் வாழ்வும் குடும்பத்திற்குச் சேரும் என்பது ஐதீகம்.

22.9.2026 செவ்வாய் விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி

புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘பரிவர்த்தன ஏகாதசி’ அல்லது ‘வாமன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. சயன ஏகாதசி நாளில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்த ஸ்ரீ மன் நாராயணன், இந்நாளில் தனது நிலையிலிருந்து மறுபக்கம் புரண்டு படுப்பதாகக் (பரிவர்த்தனம்) ஐதீகம்.மேலும், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ளத் திருமால் ‘வாமன அவதாரம்’ எடுத்த புண்ணிய நாளும் இதுவே. இந்நாளில் ஏகாதசி விரதமிருந்து பகவான் விஷ்ணுவையும் வாமன மூர்த்தியையும் வழிபடுபவர்களுக்கு, தெரிந்தும் தெரியாமலும் செய்த மகா பாவங்கள் அனைத்தும் விலகி, வைகுந்த பதவியும் மாபெரும் புண்ணிய பலன்களும் கிடைக்கும்.

22.9.2026 செவ்வாய் வேதாந்த தேசிகர் நட்சத்திரம்

‘கவிதார்க்கிக சிம்மம்’ என்று போற்றப்படும் ஸ்ரீ மத் வேதாந்த தேசிகரின் அவதார திருநட்சத்திரம் மற்றும் திருவோண விரதம் ஆகிய இரண்டு புண்ணிய நிகழ்வுகள் ஒன்றாக இணை கின்றன.புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த சுவாமி வேதாந்த தேசிகர், திருமலை ஸ்ரீ னிவாசனின் கங்காமணியின் (மணியின்) அம்சமாகக் கருதப்படுபவர். வைணவ சித்தாந்தத்திற்குத் தொண்டாற்றி நூற்றிற்கும் மேற்பட்ட உயரிய கிரந்தங்களை அருளிய மாபெரும் ஆச்சாரியார்.அதேபோல, எம்பெருமான் ஸ்ரீ னிவாசனுக்கு உகந்த ‘திருவோண விரதம்’ இன்றே அமைகிறது. இந்நாளில் பெருமாளுக்குத் துளசி மாலை சாற்றி, விரதமிருந்து வழிபட குடும்பத்தில் சுபிட்சமும், அறிவாற்றலும், காரிய சித்தியும் உண்டாகும்.

23.9.2026 புதன் வாமன ஜெயந்தி

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் நிகழ்ந்த திருநாளே ‘வாமன ஜெயந்தி’ ஆகும். பாத்ரபத/புரட்டாசி மாத வளர்பிறை துவாதசி திதியில் ஸ்ரீ மன் நாராயணன் அந்தணச் சிறுவனாக அவதரித்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அவரது அகந்தையை அழித்து ஆட்கொண்டார்.இந்நாளில் வாமன மூர்த்தியைத் தயிர் சாதம் மற்றும் நைவேத்தியம் செய்து பூஜிப்பது சிறப்பு. இந்நாளில் விரதமிருந்து இறைவனை வழிபடுவதால், மனித மனதில் உள்ள கர்வம் மற்றும் அகந்தை அகன்று, இழந்த சொத்துக்களும் பதவிகளும் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

25.9.2026 வெள்ளி அனந்த பத்மநாப விரதம், கதலீ கௌரி விரதம், ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் மற்றும் நரசிங்கமுனையார் குருபூஜை

இன்று நான்கு மேன்மையான ஆன்மிக நிகழ்வுகள் ஒன்று கூடும் மிக அரிய புண்ணிய தினமாகும்:

* அனந்த பத்மநாப விரதம்: புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திதியில் மகாவிஷ்ணுவின் அனந்த ரூபத்தைப் போற்றிச் செய்யப்படும் விரதம். 14 முடிச்சுகள் கொண்ட அனந்த சரடை கையில் கட்டி வழிபடுவதால், இழந்த செல்வமும் நிம்மதியும் மீண்டும் கிடைக்கும்.

* கதலீ கௌரி விரதம்: ‘கதலீ’ என்றால் வாழை மரத்தைக் குறிக்கும். கௌரி தேவியை வாழை மர அமைப்பில் ஆவாஹனம் செய்து, சுமங்கலிகள் குடும்ப சௌபாக்கியத்திற்காகவும் வம்ச விருத்திக்காகவும் நோற்கும் உன்னத விரத நாளிது.

* ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் (புரட்டாசி சதுர்த்தசி): சிவபெருமானின் நடராஜ திருமேனிக்கு ஆண்டில் நடைபெறும் ஆறு முக்கிய அபிஷேகங்களில் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகமும் ஒன்றாகும். சிதம்பரம் உள்ளிட்ட சிவாலயங்களில் இன்று நடைபெறும் மகா அபிஷேகத்தைத் தரிசிப்பது கோடி புண்ணியம் தரும்.

* நரசிங்கமுனையார் நாயனார் குருபூஜை: 63 நாயன்மார்களில் ஒருவரும், சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்ப்புப் மகனாக ஏற்று வளர்த்த பெருமைக்குரியவருமான திருமுனைப்பாடி குறுநில மன்னர் நரசிங்க முனையார் அவதாரச் சிறப்பைப் போற்றும் குருபூஜை தினமும் இன்றே அமைகிறது. 