Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

5.9.2026 - சனி ஸ்ரீ ரங்கம் சட்ட முனி குருபூஜை

சட்ட முனி சித்தர் பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் சித்த மருத்துவத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்கியவர். பொய், அறியாமை, மனத்தின் மாசு ஆகியவற்றை விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதைத் தமது பாடல்களின் மூலம் எடுத்துச் சொன்னவர். சட்ட முனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீ ரங்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆவணி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் இவருடைய குருபூஜை அனுசரிக்கப்படுகிறது. சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் இந்த நாளில் சட்ட முனியை வணங்கி, அவரது பாடல்களையும் ஞானக் கருத்துகளையும் பாராயணம் செய்வது சிறப்பு. மருத்துவ ஞானத்தையும் ஆன்மிக ஞானத்தையும் இணைத்துச் சென்ற சித்தர்களில் சட்ட முனிக்கு தனிச்சிறப்பு உண்டு.

7.9.2026 - திங்கள் காமிகா ஏகாதசி

பெருமாளுக்கு மிகவும் பிரியமான ஏகாதசி விரதங்களில் ஒன்று காமிகா ஏகாதசி. ஆவணி மாத தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாளை துளசி மாலையால் அலங்கரித்து வழிபடுவது சிறப்பு. அன்று முழுவதும் உபவாசம் இருந்து, விஷ்ணு நாமங்களைச் சொல்லி, விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை, திவ்யப் பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. குறிப்பாக துளசியால் பெருமாளை வழிபடுவது இந்த ஏகாதசியின் சிறப்பாகக் கருதப்படுகிறது. காமிகா ஏகாதசி நாளில் பெருமாளை மனமுருகி வழிபட்டால் குடும்பத்தில் அமைதியும், மனதில் நம்பிக்கையும் பெருகும்.

7.9.2026 - திங்கள் திருச்செந்தூர் வெள்ளை சாத்தி விழா (ஆவணி)

ஆவணி மாதத்தில் திருச்செந்தூரில் நடக்கும் பெருவிழாவில், ஒரு நாள் முருகருக்கு பச்சை சாத்துதல் வெள்ளை சாத்துதல், சிகப்பு சாத்துதல் என விழா நடக்கும். மூன்று பெரும் தெய்வங்களாகவும் (பிரம்மன், திருமால், சிவன்) முருகப்பெருமான் விளங்குகிறார் என்பதைக் காட்டுவதற்காக இந்த விழா நடக்கும். வெள்ளை பிரம்மனையும், பச்சை பெருமாளையும், சிவப்பு சிவபெருமானையும் குறிக்கும். இன்று அதிகாலை, சண்முக பெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். பகலில் பச்சை சாத்தி ஊர்வலம் வருவார். இக் காட்சியை காணக் கண்கோடி வேண்டும்.

8.9.2026 - செவ்வாய் பிரதோஷம்

சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பான விரத நாள் பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷம் வருகிறது. மாலை சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பும் பின்பும் உள்ள காலம் பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவபெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பிரதோஷ நேரத்தில் நந்தியின் வழியாக சிவபெருமானை தரிசிப்பது மிகவும் சிறப்பு. பல கோயில்களில் பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூன்று முறை பிராகாரத்தை வலம் வருவார். பிரதோஷ நாளில் சிவநாமம் சொல்லி, கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மன

அமைதியைத் தரும்.

8.9.2026 - செவ்வாய் செருத்துணை நாயனார் குருபூஜை

செருத்துணை நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். கிழக்கு தஞ்சை பகுதியில் மருகனாட்டில் வேளாளர் மரபில் வந்தவர். சிவனடியார்களிடம் அன்பு மிகுந்தவர். சிவபூஜை செய்வதில் கடுமையானவர். சிவ பூஜையில் ஒரு குற்றம் நிகழ்ந்தால் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார். யாராக இருந்தாலும் தண்டித்து விடுவார். வர் ஒருமுறை திருவாரூரில் சிவத் தொண்டில் ஈடுபட்டிருந்த பொழுது, பல்லவ மன்னன் கழற்சிங்கரின் பட்டத்து அரசி, பூஜைக்குரிய பூவை முகர்ந்து பார்த்ததால், அரசி என்றும் பாராமல் அவரை தண்டித்தார். அந்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கடுமை காட்டிய இந்தச் சிவனடியாருக்கு இறைவன் தனது திருவடி நிழலை அளித்த தினம் இன்று. ஆவணி பூசம். சிவாலயங்களிலும் சிவனடியார் இல்லங்களிலும் இவருடைய குருபூஜை தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

9.9.2026 - புதன் அதிபத்த நாயனார் குருபூஜை

அதிபத்த நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். நாகப்பட்டினம் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்தவர். தினமும் வலையில் கிடைக்கும் மீன்களில் சிறந்த மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற பக்தியுடன் கடலில் விட்டுவிடுவார். ஒரு நாள் வலையில் பொன்னால் ஆன மீன் கிடைத்தது. குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் அந்தப் பொன் மீனையும் சிவபெருமானுக்கே உரியது என்று கடலில் விட்டார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் உமையம்மையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அவருக்கு அருள் செய்தார். அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. எவ்வளவு வறுமை வந்தாலும் இறைவனிடம் வைத்த அன்பை விட்டுவிடக்கூடாது என்பதற்கு அதிபத்த நாயனாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

9.9.2026 - புதன் புகழ்த்துணை நாயனார் குருபூஜை

புகழ்த்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் செருவிலிப்புத்தூர் என்னும் தலத்தில் சிவ வேதியர் மரபில் பிறந்தவர். சிவபெருமானை சிவாகம முறைப்படி பூஜித்து வந்தார். ஒரு காலத்தில் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டபோதும், நாயனார் சிவபூஜையை மட்டும் நிறுத்தவில்லை.

இறைவன் மீது வைத்திருந்த அன்பையும் நம்பிக்கையையும் அவர் கைவிடவில்லை. அவரது பக்தியை மெச்சிய சிவபெருமான் தினமும் ஒரு பொற்காசை அருளியதாக பெரியபுராணம் கூறுகிறது. அந்தப் பொற்காசைக் கொண்டு சிவபூஜைக்குத் தேவையானவற்றை வாங்கி வழிபாட்டை தொடர்ந்து செய்தார். இறுதியில் இறைவனின் திருவடி நிழலை அடைந்தார். ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் இவரது குருபூஜை நடைபெறுகிறது.

9.9.2026 - புதன் திருச்செந்தூர் ஆவணி தேர் விழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தப் பெருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டத்தன்று விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வார்கள்.

9.9.2026 - புதன் புவனேஸ்வரி ஜெயந்தி

தச மகாவித்யா தேவியர்களில் நான்காவது தேவியாக விளங்குபவர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன். புவனம் என்றால் உலகம். உலகங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரியாக இருந்து அவற்றை ஆட்சி செய்பவள் என்பதால் புவனேஸ்வரி என்ற திருநாமம் ஏற்பட்டது. புவனேஸ்வரி ஜெயந்தி நாளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் அலங்கரித்து, தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

புவனேஸ்வரி தேவியின் மந்திரங்களைச் சொல்லி, லலிதா சகஸ்ரநாமம் போன்ற அம்பாள் வழிபாட்டு நூல்களைப் பாராயணம் செய்வதும் நல்லது. சக்தி வழிபாட்டில் புவனேஸ்வரி அம்மனுக்கு தனிச்சிறப்பு உண்டு. உலகம் முழுவதையும் தாயாக இருந்து காப்பவள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

10.9.2026 - வியாழன் அமாவாசை

ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை இன்று. அதிகாலையில் நீராடி, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், பிதுர் வழிபாடு செய்வது வழக்கம். இயன்றவர்கள் புனித நதிகள், கடல், தீர்த்தக் கரைகள் போன்ற இடங்களுக்குச் சென்று முன்னோர் வழிபாடு செய்வார்கள். வீட்டிலும் விளக்கேற்றி, முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடலாம்.

அன்று பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதும், ஏழைகளுக்கு தானம் செய்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அமாவாசை என்பது இருள் நிறைந்த நாள் என்றாலும், முன்னோர்களை நினைத்து செய்யும் வழிபாடு நம் மனத்தில் நன்றியுணர்வை ஏற்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருந்த முன்னோர்களை மறக்காமல் நினைப்பதே இந்த நாளின் முக்கியமான நோக்கம்.

10.9.2026 - வியாழன் இளையான்குடி மாற நாயனார் குருபூஜை

இளையான்குடி மாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். வேளாளர் மரபில் பிறந்த இவர், சிவனடியார்களை சிவபெருமானாகவே கருதி உபசரித்து வந்தார். ஒருநாள் வீட்டில் உணவு எதுவும் இல்லாத நேரத்திலும், இரவு நேரத்தில் சிவனடியார் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக விதைத்திருந்த நெல்லைக் கூட எடுத்து வந்து, மனைவியுடன் சேர்ந்து சமைத்து அமுது படைத்தார். அவருடைய இந்த அடியார் தொண்டைக் கண்டு சிவபெருமான் அருள் செய்தார். ஆவணி மாத மகம் நட்சத்திரத்தில் இவரது குரு பூஜை நடைபெறுகிறது. வறுமை வந்தாலும் சிவ பூஜை, அடியார் உபசரிப்பு விடக்கூடாது என்பதையே இளையான்குடி மாற நாயனார் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

10.9.2026 - வியாழன் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஜெயந்தி

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கர்நாடக இசை உலகில் மிகப் பெரிய வாக்கேயக்காரர்களில் ஒருவர். குறிப்பாக கிருஷ்ண பக்தியில் தோய்ந்த ஏராளமான பாடல்களை இயற்றியவர். கண்ணனை குழந்தையாகக் கண்டு ரசித்து பாடிய அவரது பாடல்களில் பக்தியும், இசை நயமும், கற்பனையும் ஒன்றாகக் கலந்திருக்கும். “தாயே யசோதா”, “அலைபாயுதே கண்ணா”, “ஆடாது அசங்காது” போன்ற பாடல்கள் இன்றும் இசை மேடைகளில் மிகவும் பிரபலமாக உள்ளன.

இவரது பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் ஒரு பக்தி அனுபவமாகவே அமைந்து விடுகிறது. இசையை வெறும் கலை என்று பார்க்காமல், இறைவனை அடையும் ஒரு வழியாகக் கருதிய இசைஞர்களில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையருக்கு தனி இடம் உண்டு. இவரது ஜெயந்தி நாளில் அவரது கிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.