23.8.2026 - ஞாயிறு புத்திர ரத ஏகாதசி
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘‘புத்ரதா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனை நினைத்து இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும் .ஏற்கனவே குழந்தைகள் உள்ளவர்கள், தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த ஏகாதசி விரதத்தால் பாவங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
23.8.2026 - ஞாயிறு குங்கிலிய கலய நாயனார் குருபூஜை
நாகை மாவட்டம் திருக்கடவூர் தலத்தில் கலயனார் என்ற பெரியார் இருந்தார். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்த கடேசருக்கு, விதிப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக் கலயர் என்று அழைத்தனர்.
அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மேலும் வாட்டியதால் மனைவி, மக்களும் சுற்றமும் இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். மனைவியார் தமது தாலியை எடுத்துக் கொடுத்து உணவுப் பொருளை வாங்கிவரக் கூறினார்.
அப்போது ஒரு வணிகன் குங்கிலியப் பொதிகொண்டு வந்தான். உடனே வந்த நோக்கம் மறந்து தாலிக்கு குங்கிலியப் பொதியினைத் தருமாறு கேட்டார். அவனும் குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலய னார் கோயிற் களஞ்சியத்தில் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார்.
அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் வருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய திருவருளினாலே வீடு முழுதும் செல்வம் பெருகியது.. இதை கண்டு வியந்த நாயனாரின் மனைவி உணவு சமைக்க ஆரம்பித்தார். திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு ‘‘நீ சோர்வாக இருக்கிறாய.வீட்டுக்கு சென்று உணவு சாப்பிடு” என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். கலியனார் வீட்டுக்கு வந்தார். செல்வ மெல்லாங் கண்டார். வறுமை மறைந்தது. தொண்டு வளர்ந்தது. அவர் குருபூஜை தினம் இன்று.
25.8.2026 - செவ்வாய் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1906-1993) தமிழுலகின் தலைசிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழின் இனிமையையும், சைவ சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களையும் எளிய நடையில் மக்களிடம் கொண்டு சென்ற மகான். அவரது அறிவு, நகைச்சுவை, நினைவாற்றல், பக்தி, தொண்டு ஆகியவற்றின் காரணமாக மக்கள் அவரை அன்புடன் ‘‘வள்ளல் வாரியார்” என்று போற்றினர்.
வாழ்நாள் முழுவதும் திருப்புகழையும் முருகபக்தியையும் பரப்புவதைத் தனது வாழ்க்கைப் பணியாகக் கொண்டார். அவரது சொற்பொழிவுகள் அறிவுக்கும் ஆன்மிகத்திற்கும் விருந்தாக அமைந்தன. கடினமான வேதாந்தக் கருத்துகளையும், புராண நிகழ்வுகளையும், இலக்கிய நயங்களையும் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவை, உவமை, வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றுடன் எடுத்துரைப்பதில் அவர் தனித்துவம் பெற்றிருந்தார். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வாரியார் சுவாமிகள் ஒரு சிறந்த கொடையாளரும் ஆவார். சொற்பொழிவுகள் மூலம் கிடைத்த வருமானத்தை தனக்காகச் சேர்த்துக் கொள்ளாமல், பல திருக்கோயில்களின் திருப்பணி, கல்வி நிறுவனங்கள், மாணவர் உதவித்தொகைகள், அன்ன தானம், சமயப் பணிகள் போன்ற பொதுநலத் திட்டங்களுக்கு வழங்கினார். இந்த அளப்பரிய ஈகைக் குணமே அவருக்கு ‘‘வள்ளல்” என்ற சிறப்புப் பெயரை நிலைநிறுத்தியது.
27.8.2026 - வியாழன் ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் (உபாகர்மம்) என்பது மிக முக்கியமான ஆன்மிகத் திருநாளாகும். ‘‘உபாகர்மம்” என்ற சொல்லுக்கு ‘‘மீண்டும் தொடங்குதல்” என்று பொருள். இந்த நாளில் பழைய பூணூலை அகற்றி, புதிய யஜ்ஞோபவீதம் (பூணூல்) அணிந்து, வேத அத்யயனத்தைப் புதிதாகத் தொடங்குகின்றனர்.
28.8.2026 - வெள்ளி நாராயண குரு ஜெயந்தி
ஸ்ரீநாராயண குரு (1855-1928) கேரளத்தின் தலைசிறந்த ஆன்மிக ஞானி, சமூகச் சீர்திருத்தவாதி, தத்துவஞானி மற்றும் கவிஞர் ஆவார். சாதி வேறுபாடுகளும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் தீவிரமாக நிலவிய காலத்தில், மனித சமத்துவம், கல்வி, ஆன்மிகம் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்தி புதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய மகான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள செம்பழந்தி என்னும் ஊரில் பிறந்த நாராயண குரு, சிறுவயதிலேயே வேதம், உபநிஷத்துகள், சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றார். தீவிர தவ வாழ்க்கையின் மூலம் ஆன்மிக ஞானத்தை அடைந்தார்.
1888-ஆம் ஆண்டு அருவிப்புரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டை நடத்தினார். அக்காலத்தில் கோயில்களை நிறுவும் உரிமை சிலருக்கு மட்டுமே இருந்த நிலையில், அவர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூகச் சமத்துவத்தின் வரலாற்றுச் சின்னமாக அமைந்தது. ‘‘இறைவன் அனைவருக்கும் பொதுவானவன்” என்ற அவரது கொள்கை இதன் மூலம் வெளிப்பட்டது.
‘‘ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே தெய்வம் - மனிதனுக்கு.”
இந்த வாசகம் அனைத்து மனிதர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர்ந்த மனிதநேயக் கருத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது.
கல்வி இல்லாமல் சமூக முன்னேற்றம் இல்லை என்று வலியுறுத்திய அவர், பல பள்ளிகள், கோயில்கள், மடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை உருவாக்க ஊக்கமளித்தார். மத வழிபாடு மட்டுமல்ல, கல்வி, தூய்மை, தொழில், ஒழுக்கம் ஆகியவையும் மனித முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை எடுத்துரைத்தார்.
அவரது வழிகாட்டுதலின் பேரில் உருவான ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP Yogam), கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
நாராயண குரு ஆன்மிகத்தை சமூக நலனுடன் இணைத்த மகான். இறைவனை வணங்குவதோடு மனிதனை நேசிக்கவும், பிறருக்குச் சேவை செய்யவும் அவர் போதித்தார். அவரது வாழ்க்கை, சமத்துவம், அன்பு, சகோதரத்துவம், கல்வி, ஆன்மிகம் ஆகியவற்றின் ஒளிவிளக்காக இன்றும் விளங்குகிறது.
‘‘மனிதனை உயர்த்துவது பிறப்பு அல்ல; பண்பும் அறிவும் அறமும் தான்” என்ற உயர்ந்த வாழ்க்கைச் செய்தியை தம் வாழ்வால் உலகிற்கு உணர்த்திய மகானாக ஸ்ரீநாராயண குரு என்றும் போற்றப்படுகிறார்.
28.8.2026 - வெள்ளி காயத்ரி ஜெபம்
காயத்ரி மந்திரம் வேதங்களின் தாயாகப் போற்றப்படுகிறது. ‘‘வேதமாதா காயத்ரி” என்று சாஸ்திரங்கள் புகழ்கின்றன. இந்த மந்திரத்தை உலகிற்கு அருளியவர் மகரிஷி விஸ்வாமித்திரர். சூரியனின் பரம்பொருள் வடிவான ஸவிதா நாராயணனை தியானித்து, நமது புத்தி நல்ல வழியில் செல்ல அருள் வேண்டுவதே காயத்ரி மந்திரத்தின் நோக்கமாகும்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
பொருள்
எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் பரம்பொருளின் தெய்வீக ஒளியை நாம் தியானிக்கிறோம். அந்த இறையருள் நமது புத்தியை நல்வழியில் செலுத்தி, ஞானத்தையும் நல்லறிவையும் அருளட்டும்.



