Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

8.8.2026 - சனி திருப்பரங்குன்றம் மச்சமுனி

தமிழகத்தின் புனித மலைத்தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவதோடு, சித்தர்களின் அருள் நிறைந்த தலமாகவும் போற்றப்படுகிறது. இம்மலையுடன் தொடர்புடைய மகான்களில் மச்சமுனி சித்தர் முக்கியமானவர். மச்சமுனி, மச்சேந்திரநாதர் என்ற பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். மச்சமுனி சித்தர், ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்ததாக சித்தர் மரபுச் செய்திகள் கூறுகின்றன. நீண்ட காலம் தவம் மற்றும் யோகத்தில் நிலைத்து வாழ்ந்த இவர், இறுதியில் திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி அடைந்தார். திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகிலுள்ள சுனையில் மச்சமுனி சித்தர் மீன் வடிவில் இன்றும் நீந்துவதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது. மச்சமுனி சித்தரை குருவாக ஏற்றுக் கொண்ட பக்தர்கள், அவரது குருபூஜை நாளில் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது. மச்சமுனி சித்தருடன் தொடர்புடைய பாடல்களில் பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய ஜபத்தின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது.

9.8.2026 - ஞாயிறு யோகினி ஏகாதசி

ஆஷாட(ஆடி) மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி, யோகினி ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி திருமாலின் திருவடிகளை அடைய வழிகாட்டும். யோகினி ஏகாதசியின் மகிமையை பிரம்ம வைவர்த்த புராணம் எடுத்துரைக்கிறது. மகாராஜா மாந்தாதாவுக்கு யோகினி ஏகாதசியின் பெருமையை ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்ததாக புராண மரபு கூறுகிறது. ஒருவருடைய அறியாமையால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கி, மனத்தூய்மை ஏற்பட இந்த விரதம் துணைபுரியும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி திருமாலை வழிபட வேண்டும். துளசி தளம் சமர்ப்பித்து, திருமாலின் திருநாமங்களைச் சொல்லி, விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை, நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. இயன்றவர்கள் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். உடல்நிலை அல்லது வயது காரணமாக முழு உபவாசம் முடியாதவர்கள், பழம் அல்லது பால் போன்ற எளிய உணவை எடுத்துக்கொண்டு, விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி அன்று இரவு விழித்திருந்து திருமாலைத் தியானிப்பதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. மறுநாள் துவாதசி பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

10.8.2026 - திங்கள் கூற்றுவனார் குருபூஜை

கூற்றுவ நாயனார், சேர நாட்டில் உள்ள களந்தை என்னும் ஊரைச் சேர்ந்தவர். போரில் சிறந்து விளங்கிய வீரராகவும், சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவராகவும் கூற்றுவ நாயனார் விளங்கினார். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தலைவனாக ஏற்றுக்கொள்ளாத உறுதியான சிவபக்தி கொண்டவர். தமக்கு முடிசூட்டுவதற்காக சோழ மரபைச் சேர்ந்த தில்லைவாழ் அந்தணர்களை அணுகினார். ஆனால், அவர்கள் சோழ குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முடிசூட்டும் மரபு இருப்பதாகக் கூறி மறுத்தனர். இதனால் கூற்றுவ நாயனார் மனம் வருந்தினாலும், சிவபெருமானின் திருவடிகளையே தனது உண்மையான முடியாகக் கருதி வாழ்ந்தார். கூற்றுவ நாயனார், பல நாடுகளை வென்று புகழ்பெற்ற வீரராக இருந்தபோதிலும், அந்த வெற்றிகளால் அவர் கர்வம் கொள்ளவில்லை. சிவனடியார்களைக் கண்டால் அவர்களைப் பணிந்து வணங்கி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். இறைவன் மீது கொண்ட பக்தியும், அடியார்களிடம் கொண்ட அன்பும் அவரது வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தன. கூற்றுவ நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சிவாலயங்களில் கூற்றுவ நாயனாரை நினைவுகூர்ந்து வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாயன்மார்களின் வரலாற்றைப் படித்தல், தேவாரப் பாடல்களைப் பாடுதல், சிவபெருமானை வழிபடுதல், சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தல் போன்றவை சிறப்பான வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன.

10.8.2026 - திங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஐந்து கருடசேவை

ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு நடைபெறும் ஐந்து கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவிழாவில் ஐந்து பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.

அவர்கள்;

1. ரங்கமன்னார்,

2. பெரிய பெருமாள்,

3. திருத்தங்கல் பெருமாள்,

4. திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள்,

5. சுந்தரராஜப் பெருமாள்.

ஐந்து பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, ஆண்டாள் கோயில் முன்பு சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது. ஐந்து பெருமாள்களையும் வரவேற்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், ஆண்டாள் முன்னிலையில் பெரியாழ்வார் ஐந்து பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் செய்வது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.

12.8.2026 - புதன் ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த பெற்றோர், பாட்டன், பாட்டி என முன்னோர்களை நன்றியுடன் நினைவுகூரும் நாளாக அமைகிறது. அன்றைய தினம், அதி காலையில் நீராடி, முன்னோர்களை மனதில் நினைத்து தர்ப்பணம், திலதர்ப்பணம், பிதுர் வழிபாடு போன்றவற்றை குடும்ப மரபுப்படி மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் தர்ப்பணம் செய்வதும் வழக்கமாக உள்ளது. வெளியிடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் குடும்ப வழக்கப்படி வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து வழிபடலாம். அன்று சுத்தமாக இருந்து, முன்னோர்களின் படத்திற்கு மலர் வைத்து வணங்கி, இயன்றளவில் அன்னதானம் அல்லது உணவு வழங்கலாம்.

14.8.2026 - வெள்ளி ஆடிப்பூரம்

ஆடிப்பூர நாளில் அம்மன் கோயில் களில் வளைகாப்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அம்பாளுக்கு வளையல்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம், பூமாலை ஆகியவற்றால் அலங்கரித்து, பெண்களின் மங்கள வாழ்வுக்காக வழிபாடு செய்வது வழக்கம். சில ஆலயங்களில், ஆடிப்பூரத்தை சீமந்த விழாவாகவும் கொண்டாடுகின்றனர். அம்பாளை கருவுற்ற தாயாக பாவித்து, வளையல் அணிவித்து, சீர்வரிசை செய்து வழிபடுகின்றனர். இதனால் குழந்தைப்பேறு வேண்டுவோர், குடும்ப நலம் வேண்டுவோர், ஆடிப்பூர வழிபாட்டில் சிறப்பாகக் கலந்து கொள்கின்றனர்.

14.8.2026 - வெள்ளி ஸ்ரீ வில்லிபுத்தூர் தேர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர், தமிழகத்தின் புகழ்பெற்ற பெரிய திருத்தேர்களில் ஒன்றாகும். பிரம்மாண்டமான தேரில் ஆண்டாள் நாச்சியாரும், ரங்கமன்னாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் திரண்டு, வடம் பிடித்து தேரை இழுக்கின்றனர். “கோவிந்தா, கோவிந்தா”, “ஆண்டாள் திருவடிகளே சரணம்” என்ற பக்தி முழக்கங்களுடன் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது. இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர் தேர்.