Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

1.11.2026 ஞாயிறு பானுசப்தமி

ஞாயிற்றுக்கிழமையுடன் (பானு - சூரியன்) இணைந்து வரும் சப்தமி திதி ‘‘பானு சப்தமி” என அழைக்கப்படுகிறது. இந்நாள் சூரிய பகவானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். பானு சப்தமி அன்று சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் ஆரோக்கியம், கண் ஒளி, நல்வாழ்வு மற்றும் நீடித்த ஆயுளைத் தரும். ஒரு பானு சப்தமி நாளில் சூரியனை வழிபடுவது, 1,000 சூரிய கிரகணங்களின் போது வழிபடுவதற்கு இணையான புண்ணியத்தைத் தரும்.

1.11.2026 ஞாயிறு ஈஸ்வராஷ்டமி

சிவபெருமானுக்குரிய (ஈஸ்வரன்) அஷ்டமி திதி வழிபாடாகும். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் சிவபெருமானின் அவதாரமான பைரவரை வழிபடும் மகா பைரவாஷ்டமி என்றும் போற்றப்படும். ஈஸ்வரனின் அம்சமான காலபைரவர் அவதரித்த நாளாக இது கருதப்படுகிறது. பயம், எதிர்மறை ஆற்றல்கள், கடன் தொல்லைகள் நீங்கி மன அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும். முக்கியமாக சகோதர பகை விலகும்.

2.11.2026 திங்கள் ராதா ஜெயந்தி

ராதா அஷ்டமி, கிருஷ்ணரின் தெய்வீகத் துணைவியும், பிரேம பக்தியின் உன்னத எடுத்துக்காட்டுமான  ராதையின் பிறப்பைக் கொண்டாடுகிறது. ஜன்மாஷ்டமி இறைவனைக் கொண்டாடுவதைப்போல, ராதா அஷ்டமி அவரை முழுமையாக நேசிக்கும் ஆன்மாவைக் கொண்டாடுகிறது.வைஷ்ணவர்களுக்கு, ராதை கிருஷ்ணரின் தோழி என்பதை விட மேலானவர். அவர் கிருஷ்ணரின் பேரின்பத்தையும் அன்பையும் அனுபவிக்க உதவும் ஆற்றலாக வர்ணிக்கப்படுகிறார். எனவே, ராதையை வழிபடுவது என்பது உண்மையில் பக்தியை அதன் தூய்மையான வடிவில் வழிபடுவதாகும். பல வீடுகளில் ராதையை லட்சுமி தேவியின் ஒரு வடிவமாகப் பார்ப்பதால், இந்த நாள் கருணை, செழிப்பு மற்றும் திருமண நல்லிணக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தம்பதியர் பெரும்பாலும் தங்கள் வீட்டில் புரிதலும் நீடித்த அன்பும் நிலவ வேண் டும் என்று பிரார்த்தனை செய்து, இந்த விரதத்தை ஒன்றாக அனுசரிக்கின்றனர்.

3.11.2026 செவ்வாய் ஸ்ரீரங்கம் மதுரகவி நந்தவனம் குருபூஜை

1846-ஆம் வருடம், தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில், வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான, அரங்கப் பிள்ளை - ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார், வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள், அழகில் மனதை பறிகொடுத்த நிலையில், திருமாலுக்கு மலர் மாலை கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதிபூண்டார். அதற்காக மாலைகளை தொடுக்கும் கலையை கற்றுக் கொண்டார். அவரது பெற்றோர், திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி, அழகுப் பார்த்தார் மதுரகவி.தன் சொத்தில் ஒரு நந்தவனம் அமைத்தார். விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார். வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும், தாயாருக்கும், சக்கரத்து ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் சமர்ப்பித்தார். தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோயிலின் திருப்பணியைத் துவக்கி, ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து, எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து, கிபி 1903ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடத்தினார்.இதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக் கொண்ட மதுரகவி சுவாமிகள், அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார். திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில், அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு உள்ளது.

3.11.2026 செவ்வாய் காந்திமதியம்மன் தேர் விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான ஐப்பசித் திருவிழா அக்டோபர் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய அங்கமாக காந்திமதி அம்பாளின் சட்டைத் தேரோட்டம் (தேர் விழா) மற்றும் தபசு காட்சி ஆகியவை நடைபெறுகின்றன. இன்று காலை அம்பாள் சட்டைத் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருதல், மாலையில் அம்பாள் சிவபூஜை திருக்கோலம் மற்றும் இரவில் சப்தாவர்ண பல்லக்கில் அம்மன் வீதி உலா நடை பெறுகிறது. நெல்லையப்பர் கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெரிய தேரோட்டம் ஆனிப் பெருந்திருவிழாவின் போது நடை பெறும். ஐப்பசி மாதத்தில் காந்திமதி அம்மனுக்கான பிரத்யேகமான அம்மன் சட்டைத் தேரோட்டம் மட்டுமே நடைபெறும்.

4.11.2026 புதன் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் குரு பூஜை

ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி திதியில் (பூச நட்சத்திரம்) கோடகநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) ஸ்ரீசுந்தர சுவாமிகள் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருபூஜை தினத் தன்று காலை சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அன்று மாலை சுவாமிகளின் உற்சவர் விக்கிரகம் வீதியுலா வரும். பௌர்ணமி மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

4.11.2026 புதன் சங்கரன்கோவில் கோமதியம்மன் திருக்கல்யாணம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 12 நாட்கள் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. விழா நடைபெறும் 12 நாட்களும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோமதி அம்மன் கிளி வாகனம், தங்க பல்லாக்கு, அன்னபட்சி வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இன்று திருக்கல்யாணம்.

5.11.2026 வியாழன் இந்திர ஏகாதசி

இந்திரசேனன் என்ற மன்னன் தன் தந்தையின் நல்வாழ்வுக்காக இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்ததாக பத்ம புராணம் கூறுகிறது. இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் முன் னோர்கள் செய்த பாவங்கள் நீங்க அவர்கள் நற்கதியை அடை வார்கள். ஏழு தலைமுறை முன்னோர்கள் சாபத்திலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலையை அடைவார்கள் இந்த நாளில் சாளக்கிராம பூஜை செய்வது சிறப்பானது.

6.11.2026 வெள்ளி சுக்ர பிரதோஷம்

பிரதோஷ காலம் மிகவும் உயர்வானது. அது வருகின்ற கிழமையைப் பொறுத்து பலன்கள் வித்தியாசமாக இருக்கும். திங்கட்கிழமை வந்தால் சோம பிரதோஷம், சனிக்கிழமை வந்தால் சனி பிரதோஷம், வெள்ளிக்கிழமை வந்தால் சுக்கிர பிரதோஷம் என்று அழைக்கப்படும். இன்று சுக்கிர பிரதோஷம். இந்த நாளில் மாலை 5:30 மணிக்கு மேல் சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவனை வழிபட, நினைத்த காரியம் நடக்கும். விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வழிபாட்டை முடித்துக்கொண்டு உணவுக் கொள்ளலாம்.