Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனம் மாறினால் வாழ்க்கை மாறும்!

ஒரு ஊரில் ஒருவன், பெரிய யானைகளை மிகவும் மெலிந்த கயிறுகளால் கட்டி வைத்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டான். அவைகள் சக்திவாய்ந்தவை; ஒரு சிறிய இழுப்பில்கூட அந்த கயிறுகளை அறுத்துவிட முடியும். ஆனால், அவை அமைதியாக நின்றுகொண்டிருந்தன. காரணம் என்ன? சிறிய யானைகளாக இருந்தபோது அவற்றை அதே கயிறுகளால் கட்டினர். அப்போது அவை பலமுறை முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை. “என்னால் முடியாது” என்ற நம்பிக்கை அவற்றின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. காலம் கடந்தது, அவை பெரிதாயின. சக்தி அதிகரித்தது. ஆனால், மனதில் பதிந்திருந்த தோல்வி நினைவு மாற்றப்படவில்லை. அதனால் மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. இறைமக்களே, இந்தச் சிறிய சம்பவம் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு ஆழமான பாடத்தை கற்பிக்கிறது. பல நேரங்களில் நம்முடைய கட்டுப்பாடுகள் வெளியில் இல்லாமல் உள்ளத்திலேயே இருக்கின்றன.

“என்னால் முடியாது”, “என்னால் மாற்ற முடியாது”, “என் வாழ்க்கை இப்படித்தான்” என்ற எண்ணங்கள்தான் நம்மை கட்டி வைக்கும் கயிறுகள். உண்மையில் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகள், அருள், ஆவிக்குரிய வல்லமை இவையெல்லாம் பெரியவை. ஆனால், பழைய தோல்விகள், பாவ பழக்கங்கள், பிறர் சொன்ன எதிர்மறை வார்த்தைகள் ஆகியவை மனதில் பதிந்து நம்மை முயற்சி செய்யாமல் தடுக்கின்றன. சாத்தான் பெரும்பாலும் சங்கிலிகளால் அல்ல, எண்ணங்களால் மனிதரை கட்டிப் பிடிக்கிறான். “நீ தகுதியற்றவன்”, “நீ பிரயோஜனமற்றவன்” என்ற பொய்களை நம்பச் செய்கிறான். ஆனால், தேவனின் வார்த்தை என்ன சொல்கிறது? நாம் புதிய சிருஷ்டிகள். நம்முடைய கடந்த காலம் நம்மை நிர்ணயிக்காது. கிறிஸ்துவில் நமக்கு புதிய ஆரம்பம் உண்டு. மனதை மாற்றுவது என்பது வாழ்க்கையை மாற்றுவது.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’’ (ரோமர் 12:2) என இறைவேதம் கூறுகிறது. எனவே, ஒரு விசுவாசி தனது சிந்தனையை தேவனின் சத்தியத்தினால் புதுப்பிக்கும்போது, பழைய கயிறுகள் சக்தியிழந்து போகும். நாம் முயற்சி செய்யத் தொடங்க வேண்டும். ஜெபத்தில் உறுதியாக நிற்க வேண்டும். தேவனின் வாக்குத்தத்தங்களை பற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நாம் நினைத்ததைவிட அதிகமாக சாதிக்க முடியும். யானைகள் போல பழைய தோல்விகளை நினைத்து நின்றுவிடாமல், தேவன் கொடுத்துள்ள வல்லமையை உணர்ந்து முன்னேறுவோம். எனவே, நம்மை கட்டி வைத்திருப்பது வெளிப்புற சூழ்நிலை அல்ல; நம் மனநிலையே. நம்பிக்கையை மாற்றினால் வாழ்க்கை மாறும். தேவனின் சத்தியம் நம்மை விடுவிக்கும்.

- அருள்முனைவர். பெவிஸ்டன்