Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகத்தினுள் அனுபவப்பட வேண்டும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 112 (பகவத்கீதை உரை)

``ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்திரம்

வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்வத (6:21)’’

‘‘ஒரு யோகியால் அறியக் கூடியது, நிலைத்த சுகம். இது இந்திரியங்களுக்கெல்லாம் எட்டாதது. முடிவில்லாதது, புத்தியினால் மட்டுமே உணரப்படக் கூடியது. இந்த சுகத்தில் அவன் நிலைத்து விட்டானானால், அதற்குப் பிறகு அவன் அசைவதில்லை.’’

ஏற்கெனவே சொன்னபடி, இந்திரிய சுகங்களுக்கு எல்லையே இல்லை. ஒன்றுக்குப் பின் இன்னொன்று, அதற்கு பிறகு வேறொன்று என்று தேடல் மட்டும் எப்போதும் தேங்குவதேயில்லை. ‘போதும்’ என்ற திருப்தியை அடைய முடியாத அவலம் இது. புலன்கள் ஒன்றை அடுத்து இன்னொன்று அல்லது ஒன்றில்லாவிட்டால் வேறொன்று என்று ஆலாய்ப் பறந்து கொண்டுதான் இருக்கும். புத்தி அவற்றுக்கு அடிமையாகாத பட்சத்தில், அவற்றின் கொட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அடங்கும். சைவக் கோயில் மூலவர் கருவறை முன்பாக சண்டன், பிரசண்டன்; வைணவக் கோயில் கருவறை முன்பாக ஜயன், விஜயன் என்ற துவார பாலகர்கள்; அம்மன் கோயில் கருவறை முன்பாக ஹரபத்ரா, சுபத்ரா என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ துவார பாலகிகள் அமைந்திருப்பார்கள்.

இவர்களின் வலது கரம் மேல் நோக்கி உயர்ந்திருக்கும். அதில் ஆள் காட்டி விரல் விண்ணைச் சுட்டிக் காட்டும். இந்த ஒருமித்த மூன்று துவாரபாலக நிலைகளுக்கும் ஒன்றேதான் அர்த்தம். ‘பரமாத்மாவிடம் ஒடுங்குவாயாக’ என்ற அறிவித்தலே அது. கருவறைக்குள் சிவனோ, பெருமாளோ, அம்மனோ எந்த உரு தெய்வம் இருந்தாலும், ஒரு பக்தனின் குறிக்கோள் அந்த பரமாத்ம சொரூபத்தை அடைய வேண்டியது என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இந்த உணர்வுக்கு வருமுன்னர், நம் இந்திரியங்கள் அதற்குச் சம்மதித்து அடங்க வேண்டும். அதற்கு யோகப் பயிற்சிகள் அவசியம். பயிற்சியின் உயர் கட்டத்தில் அவ்வாறு அடக்குவது என்பது ஒரு யோகிக்கு எளிதாகும். நம்முடைய நல்ல நண்பர்களாக, நமக்குச் சரியான வழிகாட்டக் கூடிய வழித்துணையாகக் கருதப்பட வேண்டிய புலன்களை, நம்மைத் தீயன நோக்கி அழைத்துச் செல்லும் பகைவர்களாகவே மாற்றி விட்டோம்! எத்தனை முறை கண்டித்தாலும், தண்டித்தாலும் மீண்டும், மீண்டும் அதே தப்பு - வேறு மாதிரியாக, வேறு பரிமாணத்தில், வேறு காலத்தில்! கண் காட்டும் விஷயம் நம் ஆத்ம நலனுக்குக் கேடு என்பது தெரிந்திருந்தாலும், கண்ணை - பார்வையை - நம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்த பலவீனத்தை புலன்கள் நன்கு புரிந்து கொண்டு நமக்குள்ளேயே இருந்து கொண்டு நம்மைத் தவறாக வழி நடத்துகின்றன. பாழுங்கிணறு என்று தெரிந்தே நாமும் விழுகிறோம். ‘இந்த ஒரு முறை மட்டும்,’ என்ற தாபமோ, ‘முந்தியதைப் போல இந்த முறை நிகழாது,’ என்ற அசட்டு தைரியமோ, இவை எல்லாமே நம் புலன்கள் நமக்குக் கொடுப்பவை. ஆன்மாவை நெருங்க விடாமல், அதன் பரிபூரணத்தை உணர்ந்து கொள்ள அனுமதிக்காமல் அவை ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

இவ்வாறு நமக்கும், புலன்களுக்குமிடையே ‘பகை’ வளர்ப்பதில் மனசுக்குப் பெரும் பங்கு உண்டு. அதற்கு ஆன்மாவைப் பற்றிக் கவலை இல்லை. புலன்களைத் தூண்டிவிட்டு ஆரோக்கியமற்ற சுகத்தை உடல் அனுபவிக்கச் செய்கிறது. ஆனால், ஆன்மா காத்திருக்கிறது. பரமாத்மாவை அறிந்து கொள்ளும்வரை அது எத்தனை இடர்களையும், கால விரயத்தையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறது. இந்த உண்மையை ஒரு யோகியால் உணர முடியும். அவன் தன் பயிற்சியால் புத்திக்குக் கூடுதல் அதிகாரம் கொடுத்து, ஓர் அழிவு சக்கரவர்த்திபோல இயங்கும் மனசையும், அதன் அடிமைகளான புலன்கள் என்ற சிற்றரசர்களையும் அடக்கி, ஒடுங்கச் செய்ய முடியும்.

‘‘உண்மையான சமாதி அடையும்போது ஒருவன் தன் இயல்பான சச்சிதானந்த சாகரத்தில் ஆழ மூழ்குகிறான். அதனால் அவனுடைய கருவி, கரணங்கள் எல்லாம் ஒடுங்குகின்றன,’’ என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.‘‘சுகம் வெளியுலகில் இல்லை; அது ஆன்ம சொரூபத்திலேயே இருக்கிறது. உள்ளே இருப்பதை உணர இந்திரியங்களுக்கு இயலாது. தெளிவடைந்த புத்தியே அதைத் தெரிந்து கொள்கிறது. அதுவே ஆன்ம சுகம் என்பதால் அது முடிவில்லாதது. ஆன்ம சொரூபத்திலேயே நிலைபெற்ற யோகி, நீருக்குள்ளே மீண்டும் இடப்பட்ட மீன் போன்றவன். மீன் எப்போதும் நீரை விட்டு நிலத்துக்குப் போவதை விரும்புவதில்லை. அதைப் போல திகட்டாத ஆன்மானந்தத்தை அனுபவிப்பவன், திகட்டுகிற அற்ப ஆனந்தத்தை நாடிப் போவதில்லை; விரும்புவதில்லை,'' என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

``யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத

யஸ்மின்ஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே’’ (6:22)

‘‘தான் அடையும் பரிபூரண, ஆன்ம சுகத்தை மிஞ்சிய ஒன்று இல்லை என்றே ஒரு யோகி கருதுகிறான். அவன் அதில் நிலைத்திருக்கும்போது எந்தவகை துக்கத்தாலும் அவன் பாதிக்கப் படுவதில்லை.’’ வாழ்க்கை அனுபவத்தில் ஏற்படும் துக்கங்கள் பொதுவாக சாதாரணமாக இருப்பதாலேயே நாம் அவற்றால் கலங்குவதில்லை. ஒருவேளை அது பழகிப் போய்விட்டதாலும் இருக்கலாம். ஆனால், பெருந்துக்கம் நிகழுமானால் நாம் அப்படியே இடிந்து போய் விடுகிறோம். அற்ப துக்கங்களை அனுபவிக்கும்போது இருந்த மனநிலை இப்போது இருப்பதில்லை. ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனப்பக்குவம் எல்லா சமயத்திலும் வருவதில்லை. அதற்கு முக்கிய காரணம், ‘கடந்து போகும் எதுவும் மறந்து போகாமலிருப்பதுதான்!’

யாரேனும் நண்பர் தனக்கு ஏதேனும் உடல் உபாதை என்று நம்மிடம் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே, நாம், ‘‘இதெல்லாம் பெரிய விஷயமா? நான் பட்டேன் பாருங்க அவஸ்தை…’’ என்று ஆரம்பித்து நம்முடைய சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். அதாவது நண்பர் அடைந்திருக்கும் வருத்தத்தைவிட நாம் அடைந்தது இன்னும் மோசமானது என்பதை வலியுறுத்தும் பதில்தான் இது. ஒருவேளை நண்பர் ‘அட, பரவாயில்லையே, நம்மைவிட இவர் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறாரே, நாமே தேவலை,’’ என்று ஆறுதல் கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் அப்படி நாம் பதில் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், துக்கம் எல்லோருக்கும் பொது என்பதை நிலைநிறுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்கிறது. அவரவர் கோணப்படி, உபாதை, அல்லது நஷ்டம் எல்லாம் அவரவருக்குப் பெரியதுதான். இதில் ஒப்பீடு செய்யும்போது ‘பரவாயில்லை’ என்று ஆறுதல் கொள்ள முயற்சிக்கலாம்.

ஆனால், இந்த ஆறுதல் குறிப்பிட்ட துக்கத்திலிருந்து ஒருவரை மீட்குமா என்பதும் சந்தேகமே. அல்லது அடுத்த துக்கம் வரும்போது கலங்காதிருக்க முயற்சிக்க வேண்டும் என்ற பக்குவத்துக்கு வழிவகுத்தால் சிறப்புதான். உளவியல் மருத்துவர்கள், மக்களிடையே துக்கத்தைப் போக்குவது என்பது முடியவே முடியாத காரியம் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். ஏதோ துன்பத்திலிருந்து உளவியல் ரீதியாக விடுபட அத்தகைய மருத்துவரிடம் ஒருவர் வருகிறார் என்றால், ஒருவேளை மருத்துவரின் மனோ சிகிச்சையால் அவர் அதிலிருந்து விடுபட முடியும். ஆனால், இந்த ஆறுதலோடு அவர் வீட்டிற்குப் போவதற்கு முன்னால் இன்னொரு துக்கம் அவரை எதிர்கொண்டழைக்கிறதே! ஆகவே, மனித வாழ்க்கையில் துக்கங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க முடியாததாகிப் போனவைதான்.

பொதுவாகவே துக்கம் என்பது தேகத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது - அடிபடுவது மாதிரி! சிறு காயம், பெருங்காயம் என்று பரிமாணம் வேறுபடலாம் என்றாலும், அதனால் ஏற்படும் வலி, துக்கமெல்லாம் தேகத்துக்குதான். ஆனால், பிரம்மானந்தத்தில் திளைத்திருப்பவர்களுக்கு உணர்வுகளால் ஏற்படும் உடல் பாதிப்பு அறியப்படாததாகவே இருக்கிறது. இதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை நிழல் மாதிரி. நிழல் என்னவோ உடலால் ஏற்படுவதுதான். ஆனால், அந்த நிழலை எப்படித் தாக்கினாலும், குத்தினாலும், வெட்டினாலும், அதனால் தேகம் பாதிக்கப்படுவதில்லை. இந்த நிலையை அடைந்தவன்தான் யோகி.

உள்ளே ஆனந்த மழை பொழிய வேண்டும். அது வெளியிலிருந்து வரும் துக்க வெப்பத்தை உள்ளே சேர்க்காது. அந்த ஆனந்த வெளிச்சத்தை ஊடுருவ முடியாமல் துக்க இருள் விலகி ஓடிவிடுகிறது. அதாவது பரமாத்மாவையே அனுபவமாக அடைந்து விட்டவனுக்கு, வேறு அனுபவங்கள் எத்தகைய உணர்வுகளைக் கொடுத்தால்தான் என்ன? நம் பர்ஸிலிருந்து நம்மையறியாமல் ஒரு பத்து ரூபாய் கீழே விழுந்து விழுந்துவிட, நாமும் கவனிக்காவிட்டால், அந்த நஷ்டம் நம்மைப் பெரிதும் வருத்தாது. அதுவே நாம் முதலீடு செய்திருந்த நிறுவனம் திவாலாகி விட்டால் அந்த துக்கம் அளப்பரியது.

ஆனால் பகவானுடைய பொக்கிஷம் என்றுமே குறையாது, ஏனென்றால், அது முடிவற்றது, எப்போதுமே குறையாமல் நிறைந்திருப்பது. ஆகவே லௌகீகமான பண நஷ்டம் என்ற அற்ப துக்கங்களைத் தவிர்க்க, பரந்தாமனின் பொக்கிஷப் பெட்டியைத் திறக்க முயற்சிக்க வேண்டும். சிறுசிறு உடல் உபாதைகள் நம்மை வருத்தம் கொள்ள வைக்கின்றன. உபாதையால் ஏற்படும் வலியைவிட இந்த வருத்தம்தான் அதிகமாகவே இருக்கிறது. உபாதை அடைந்தவரின் வயதைப் பொறுத்து இந்த வருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து முடிவில் மரண பயம் என்ற அளவுக்குப் போய்விடுகிறது. உபாதைகளை சிகிச்சைகளாலும், மருந்துகளாலும் சரி பண்ணிக்கொள்ள முடியும்.

இதற்கு கால, பண விரயங்கள் அந்தந்த உபாதையைப் பொறுத்து அமையும். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர், தம் மருத்துவ மனையில், ‘நான் சிகிச்சை அளிக்கிறேன்; கடவுள் காப்பாற்றுகிறார்,’ என்று எழுதி வைத்திருப்பார்! அதாவது சிகிச்சை அளிப்பதாகிய தன் முயற்சியும், இறையருளால்தான் மேற்கொள்ளப் படுகிறது என்று அவர் உணர்ந்ததன் பிரதிபலிப்புதான் அந்த வாசகங்கள்.

இந்த வருத்தம், பயம் எல்லாம், தன்னால் தொடர்ந்து சுகபோகங்களை அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ, மரணம் தன் வாழ்வை முடித்து விடுமோ என்ற உச்சத்துக்குப் போய்விடுகின்றன. ஆனால், ஆன்ம ஞானம் என்ற உள்ளொளியை ஏற்றி வைத்தோமானால், இந்தத் துன்பங்கள், வருத்தம், பயம் எல்லாமே கேலிக் கூத்தாகவே தெரியும். இந்த அற்புத தத்துவத்தை கவிஞர் கண்ணதாசன் வெகு எளிமையாக, ‘நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று பாடினார்.

ஆன்ம ஞானம் அடைந்தவரின் நிலை அது. ‘மரணமில்லா பெருவாழ்வு’ என்றார் வள்ளலார் சுவாமிகள். இறைவனின் அருளால் மனித உடல் அழியாத ஒளி உடலாக மாறி, பூரண ஞானத்துடன் அதே இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பது அவருடைய தத்துவ சித்தாந்தம். உடலிலிருந்து உயிர் பிரிவது மரணம் என்றால், ஆன்மா, பரமாத்மாவுடன் சேருவது மரணமில்லாப் பெருவாழ்வு. உடலில் உயிர் இருக்கும்போதே இதை அனுபவிக்க முடியும் என்று பொருள்.

பொதுவாக, நம் அனுபவங்கள் புறத்தைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. அகத்தினுள் நாம் அனுபவப்படுவதில்லை. அப்படி அனுபவப்படுவதுதான் பேரானந்தம். இந்தப் பேரானந்தத்தில் லயிப்பவர்கள் மரணப் படுக்கையில் இருந்தாலும், பிறருக்கு வேண்டுமானல் அவர் மரண அவஸ்தையை அனுபவிக்கிறார் என்று தோன்றலாமே தவிர, அவருக்கு அது பேரானந்த அனுபவமாகவே இருக்கும். தன்னைச் சுற்றிலும் சோக முகங்கள் கண்ணீர் சிந்த, துக்ககரமான அந்த சூழ்நிலையிலும் பேரானந்தத்தை, மரணப் படுக்கையில் படுத்திருப்பவன் அனுபவிக்க முடியுமானால் அவனே சிறந்த யோகி.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்