ஆதி சக்திக்கு சேவகம் செய்யும் பல கோடி யோகினிகளில் மிக மிக முக்கியமான சக்திவாய்ந்த யோகினி இந்த ஹயக்ரீவ யோகினி என்றால் அது மிகையல்ல. இந்த யோகினி அழகான வலிமை மிக்க பெண்ணின் உடலும் ஒரு குதிரையின் முகமும் கொண்டவளாக இருக்கிறாள். ஒரு கையில் ஜப மாலையும் மற்றொரு கையில் கபாலமும் தாங்கிக் கொண்டு, சிம்ம வாகனத்தில் ஏறி வருபவளாக காட்சி தருகிறாள்.
குதிரை முகம் ஏன்?
குதிரை வேகத்தின் சின்னமாகவும் வலிமையின் ஆற்றலாகவும் குறிக்கப்படுகிறது. இவள் வேகத்தையும், வலிமையையும் தருபவள். யோக நெறியில் பயிற்சிகள் செய்வோருக்குத் தவவலிமை மற்றும் குறிக்கோளை அடைவதற்கான வேகம் ஆகியவற்றை வழங்குகிறாள்.சிலர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமானின் திரண்ட சக்தியின் வடிவமே இந்த யோகினியாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள். பரிமுகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமானின் கையிலும் ஜப மாலை இருக்கிறது இந்த யோகினியின் கையிலும் ஜப மாலை இருக்கிறது.
கையில் ஜப மாலை ஏன்?
மந்திரங்களை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்ய வேண்டும் என்பதாலேயே அதற்கு மந்திரம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வார்கள். அந்த மந்திரத்தை எண்ணிக்கை இல்லாமல் சொல்வது பலன் தராது. மந்திர ஜெபத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உதவுவது ஜப மாலை. ஆகவே மந்திர ஜெபத்தில் உயர்ந்த சித்திகளைத் தந்து அதில் ஏற்படும் தடைகளை நீக்குபவள் இந்த யோகினி என்று புரிந்து கொள்ளலாம்.
ஞான தேவியான சரஸ்வதியின் கையிலும், ஞான மூர்த்தியான தட்சிணாமூர்த்தியின் கையிலும், ஞானமே வடிவான ஹயக்ரீவர் கையிலும் இருப்பது இந்த ஜப மாலை தான். ஆகவே இது ஞானத்தின் சின்னம். இந்த ஞான சின்னத்தை தாங்கி இந்த யோகினி இருப்பதால் ஞானத்தை வழங்கக் கூடிய யோகினி என்று சொன்னாலும் அது மிகையில்லை.
கையில் காலியான கபாலம் ஏன்?
தலையின் ஆணவம் என்ற கெட்ட எண்ணம் இல்லாமல், மனம் ஆனது காலியாக இருக்கும் போது, தான் அங்கே ஆன்மிக உணர்வு தோன்றும். இப்படி ஆன்மிக உணர்வை அடைய தடையாக இருக்கும் ஆணவத்தை அழிக்கும் யோகினி என்பதால், இந்த யோகினியின் கையில் கபாலம் இருக்கிறது.ஞானமும், கல்வியும் சிறக்க ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும், அதற்குக் கட்டுப்பாடான வாழ்க்கை முறை அவசியம். இதற்கு மனம் அமைதியாக இருப்பது அவசியம். மனத்தை அதன் போக்கில் ஓடவிடாமல் தடுப்பவை ஜெபமும், தவமும். இதை விளக்குவதற்கே அவள் தன் கரத்தில் ஜெபமாலையை ஏந்தி இருக்கிறாள் மற்றொரு கரத்தில் காலி கபாலத்தை தாங்கி இருக்கிறாள்.
சூரியனின் தேரும் ஹயக்ரீவ யோகினியும்
நமது புராணங்களில் சூரியனின் தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் குதிரையில் ஒருத்தியே இவள் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படி உலகம் எங்கும் ஒளியை பரப்பும் சூரியனை, என்னுடைய ஞானம் என்னும் ஒளியை அதிகரிக்கச் செய்யும் படி காயத்திரி மந்திரம் வேண்டுகிறது. ஆகவே சூரியன், இங்கே அறியாமை இருளை நீக்கி, ஞான ஒளி ஏற்றும் ஞான மூர்த்தியாக கருதப்படுகிறார்.
எப்படி சூரியனைப் பிரபஞ்சத்தின் மறுபக்கத்திற்கு நேரம் தவறாமல் ஆகாசக் கடலில் செல்ல அவனது ரதக் குதிரைகள் உதவி செய்கின்றனவோ அவ்வாறே இந்த ஹயக்கிரீவ யோகினி தனது பக்தர்களைப் பிறவியாகிய பெரிய கடலைக் கடந்து விரைவில் மோட்ச உலகை அடைவதற்கு வழிகாட்டுகிறாள்.
சிம்ம வாகனம் ஏன்?
இந்த ஹயக்கிரீவ யோகினி ஆண் சிங்கம் ஒன்றைத் தனது வாகனமாக கொண்டிருக்கிறாள். சிங்கத்தைப் போல ஆற்றல் பெற இந்த தேவி அருள்கிறாள் என்று இது காட்டுகிறது.
யோகத்தில் சிறந்ததாக கேசரி யோகத்தில் சித்தி அடையவும் இவளை வணங்கியிருப்பதை நூல்கள் தெரிவிக்கின்றன. கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். இதை உணர்த்தவும் இந்த யோகினி சிம்ம வாகனத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் அபாரமான கல்வி அறிவும், பல்துறை அறிவும் பெறவும், தாம் உச்சரிக்கும் மந்திரங்கள் சித்தியாகி விரும்பிய பலன்களை உடனே அளிக்கவும் இந்த யோகினி அதிக எண்ணிக்கையில் உபாசகர்களால், உபாசனை செய்யப்பட்டிருக்கிறாள் யோகினிகள் மனிதர்களா? தேவர்களா?
மச்சேந்திர நாதர் என்ற பெரும் சித்த புருஷர் இருந்தார். இவருடைய காலத்திற்கு முன்னால் யோகிகளை வழிபட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால் மச்சேந்திர நாதர் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினார்.
அதனால் அவர் மீது மற்ற உபாசகர்களுக்கு கோபம் வந்தது. மச்சேந்திர நாதர், சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரமானவர். தனது ஆசைக்கிணங்க அவர் பதினாயிரம் யோகினிகளுடன் கதலி வனத்தில் சுற்றித் திரிந்தார் என கௌலஞானநிர்ணயா என்ற நூல் தெரிவிக்கிறது.அந்த வனத்திற்குள் நுழைபவர்கள் யோகசாதனை செய்பவர்களாகவும், ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்களாகவும், சிருங்கார ரசத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆண்களுக்கு அந்த வனத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு தான் பெண்கள் இந்த மார்க்கத்தில் நுழைந்து யோகசாதனைகள் செய்து அபாரமான சித்துக்களைக் கைவரப்பெற்றனர்.
காலகதியில் அப்படி சித்தி பெற்றவர்களே மக்களால் வணங்கப்பெறும் யோகினிகளாக வடிவம் கொண்டனர். ஊர்மக்கள் தங்கள் ஊர்களில் வழங்கும் பெயர்களை வைத்தே யோகினிகளை வழிபட்டனர்.இந்த யோகினிகள் நெருக்கடியாலோ அல்லது விருப்பத்தினாலோ தாங்கள் விரும்பும் பறவை மற்றும் பிராணிகளின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். இன்னும் சில யோகினிகள் தாங்கள் கன்னியாக இருந்த போதிலும் கையில் ஒரு குழந்தையை ஏந்தியவாறு காட்சி அளித்திருக்கின்றனர்.
அவர்கள் தங்களிடமிருந்த அதீதமான ஆற்றல்களை ஒரு குழந்தையாக மாற்றி தங்களுடன் கொண்டு சென்றனர். இதன் காரணமாக அவர்களை அடிமையாக்குவதற்காக அபிசார ஹோமம் செய்யும் மந்திரவாதிகளின் பார்வையில் இருந்து தப்பினர் எனவும் நூல்கள் தெரிவிக்கின்றன. யோகினி வழிபாடு தோன்றியதற்கு இப்படி ஒரு அழகான விளக்கத்தையும் சொல்கிறார்கள் பெரியவர்கள்.


