Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

ஹர்ஷ யோகம்!

ஜோதிடத்தில் பலவித கிரக இணைவுகளில் உள்ள யோகங்கள் பலவிதமான பலன்களையும் ஆச்சர்யங்களையும் தரவல்லது. அவ்வாறே, நம் வாழ்வில் நேற்று வரை சாதாரணமாக இருந்தவர் திடீரென ஆடம்பரமாக வலம் வருவதை காணும் பொழுது நமக்கும் ஆச்சர்யங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆச்சர்யங்களை கிரகங்களே ஏற்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரம் விபரீத ராஜயோகம் என ஒன்றை குறிப்பிடுகின்றது. இந்த யோகம் சிலருக்கு ஏற்படும்பொழுது திடீர் பணக்காரர் ஆவது... திடீர் பல விஷயங்களில் பாதிப்புகள் நிகழ்வது ஏற்படுகின்றது. இந்த விபரீத ராஜயோகங்களில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் ஆச்சர்யமே. விபரீத ராஜயோகம் என்ன என்பதே ஆச்சர்யம்தான். அசுப கிரகங்கள், அசுப பாவங்கள் என்று சொல்லக்கூடிய ஜாதகக் கட்டங்களில் அமர்ந்து பெரிய மாற்றத்தை அதாவது, பொருளாதார வளர்ச்சியை, பதவியை தரக்கூடியது ஆகும். கிரகங்கள் அதற்கான காலக்கட்டங்களில் நிகழ்த்தும் பொழுது ஒன்றும் செய்ய இயலாது. அப்படிப்பட்ட விபரீத ராஜயோகங்களில் ஒன்றை காணலாம். இதைத்தான் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற சொலவடை உள்ளது. அதாவது, அசுப கிரகங்கள் அசுப கிரகங்களோடு இணைந்து அசுப பாவகங்களில் வேலை செய்யாத பொழுது சுப கிரகங்கள் எளிமையாக தங்கள் பணியைச் செய்வதால் உண்டாகும் யோக அமைப்பாகும்.

ஹர்ஷ யோகம் என்றால் என்ன?

ஹர்ஷ என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆச்சர்யம் என்ற பொருளுண்டு. அவ்வாறே, வாழ்வில் பெரியளவில் ஆச்சர்யத்தை வளர்ச்சியை தரவல்லது என்றால் மிகையில்லை. இந்த யோகமானது, அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய கிரகங்கள் அசுப ஸ்தானங்களான ஆறாம் (6ம்), எட்டாம் (8ம்), பன்னிரண்டாம் (12ம்) பாவகங்களில் நின்று அந்த ஆறு(6), எட்டாம்(8), பன்னிரண்டாம்(12) பாவகங்களின் அதிபதிகள் அது போலவே வெவ்வேறு பாவகங்களில் நின்று, லக்னாதிபதி வலிமையுடன் இருந்தால் இந்த ஹர்ஷ யோகம் சிறப்பான பலன் தரும். இதுவே ஹர்ஷ யோகம் ஆகும்.

ஹர்ஷ யோகத்தின் சூட்சுமங்கள் என்ன?

இந்த விபரீத ராஜயோகமானது பொருளாதார மேம்பாட்டை பெரியளவில் தரக்கூடியது. அதே சமயம் சிலருக்கு பெரிய பாதிப்பையும் தரக்கூடியதாகவும் இருக்கிறது. தொழில், உத்யோகம் ஆகியவை பெரியளவில் வளர்ச்சியைத் தரும். வாழ்க்கையில் பெரிய மாறுபாட்டை இந்த ஹர்ஷ யோகம் செய்யும்.

ஹர்ஷ யோகம் பலன்கள்...

*எதிரிகளை வென்று எதையும் சாதிக்கக்கூடிய அமைப்பை உருவாக்கும்.

*கடன்கள் பெற்று பெரிய அளவில் சுயதொழிலை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.

*நல்ல ஆரோக்கியத்தை உண்டாக்கும். உடல் வலிமை பெறுவதற்காக உடற் பயிற்சி மற்றும் உடலை வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

*ஆறாம்(6ம்), எட்டாம்(8ம்) பாவகமும் மறைமுகத் தொடர்பு பெறுவதால் பிரச்னைகள் மற்றும் மறைமுக எதிரிகளும் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு மறைமுக எதிரிகள் உருவாக்கப்படுவார்கள்.

*தொழில் பாவகத்திற்கு 6ம் பாவகம் பாக்கிய பாவகமாக அமைவதால் இயற்கையாகவே நன்மைக்கான அமைப்புகள் உருவாகும்.

*இவர்கள் சிந்தனைகள் முழுவதும் பெரிய தொழிலதிபர்களாக மாறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அமைப்பை உருவாக்குவார்கள்.

*சமூகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் பெரியோர்கள், நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

*பெரிய வாகனங்களை வாங்கும் பாக்கியத்தையும் வீடு, நிலம் ஆகியவைகள் வாங்கும் அமைப்பையும் இந்த ஹர்ஷ யோகம் உருவாக்கும்

*இவற்றில் பன்னிரெண்டாம் பாவகமும் (12ம்) சேர்ந்து வலிமை பெறுவதால், சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வெளிநாட்டில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கின்ற அமைப்பையும் உருவாக்கும்.

*எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய யுக்தியால் வெற்றியை உருவாக்கும் சூட்சுமத்தை அறிந்திருப்பார்கள்.

*ஆராய்ச்சி மனம் கொண்டவர்களாகவும் புதியதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

*சிறிய சிறிய விஷயங்கள் கூட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற திடமான நம்பிக்கையை கொண்டிருப்பார்கள்.

ஹர்ஷ யோகத்திற்கான பரிகாரங்கள் என்ன?

என்னதான் கிரகங்கள் யோகம் செய்தாலும் அசுப கிரகங்களினால் சில பாதிப்புகள் உண்டு. அந்த பாதிப்புகளை தவிர்க்க, அந்த அசுப கிரகங்களுக்கு தகுந்தாற் போல வழிபாடுகள் அல்லது பரிகாரங்கள் செய்து கொள்வது நன்மை தரும்.

*நல்ல சுப நாட்களில் அல்லது பண்டிகை காலங்களில் அன்னதானம் செய்வது உங்களின் அசுபப் பலன்களை நிவர்த்தி செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

*கால்நடைகளுக்கு, நாய், பறவைகளுக்கு உங்களால் இயன்ற உணவை கொடுங்கள், உங்களின் உள்ளுணர்வில் ஆனந்தம் உண்டாகும்.

*சரபேஸ்வரர், கால பைரவர் மற்றும் பத்திரகாளி போன்ற தெய்வங்களுக்கு ஹோமங்கள் செய்வதும் வளர்ச்சியை மேம்படுத்தும். உங்களிடம் உள்ள கெட்ட சக்தியை தகர்த்துவிடும். நீங்கள் நன்மை பயக்கும் நேர்மறை ஆற்றலை பெறுவீர்கள். உங்களை எதிர்ப்பவர்கள் மறைந்து போவார்கள்.