Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பஞ்சாமிர்தம் அபிஷேகத்தால் மனம் குளிரும் அனுமன்

கரூர் அருகே இருக்கும் சிந்தலவாடி என்னும் ஊரில், பிரசித்தி பெற்ற ``யோக நரசிம்மர்’’ அருள்பாலித்து வருகிறார். இவர் அருகிலேயே, `முக்ய பிராணன்’ என்றும் `பக்காசுரவத’ என்றும் இரண்டு வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை காணலாம். சிந்தலவாடி, அருமையான கிராமம். இக்கோயில் அருகில் காவேரி சலசலவென ஓடுகிறாள். கோயில் சுற்றிலும் தென்னை மரங்கள். இதற்கு நடுவில், இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ள நாம் பின்னோக்கி காலத்திற்கு செல்ல வேண்டும்.

காவேரியில்கிடைத்த நரசிம்மர்

கருப்பத்தூர் என்னும் கிராமம் (சிந்தலவாடியில் இருந்து 4கி.மீ., தொலைவில் கருப்பத்தூர் உள்ளது) காவேரி ஆற்றங்கரையை ஒட்டி இருப்பதால், பலரும் காவேரி ஆற்றில் தினமும் குளித்து வருவது வாடிக்கை.

இந்த நிலையில், தினமும் ஒருவர் துணிகளை எல்லாம் கற்களில் நன்கு அடித்து துவைப்பது வழக்கம். துவைத்து முடித்த பின்னர், ஆற்றில் தானும் குளிப்பார். இப்படியாக நாட்கள் செல்ல, இரவில் தாங்கமுடியாத முதுகு வலி அவருக்கு ஏற்பட்டது. இதனால், கடும் அவதிப்பட்டார்.

``நீ தினமும் துணிகளை அடித்து துவைக்கும் கற்களின் பின்புறத்தில் நான் இருக்கிறேன்’’ என சூட்சுமமாக கனவில் தோன்றி நரசிம்மப் பெருமான் கூறுகிறார். இது ஒருபுறமிருக்க, கருப்பத்தூர் அருகிலேயே `திருக்காம்புலியூர்’ என்கின்ற கிராமமும் உள்ளது. இங்கு, நரசிம்மர் பக்தரான ஸ்ரீ முஷ்ணம் ஹரியாச்சார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரின் கனவிலும் தோன்றிய நரசிம்மர்,

``காவேரி ஆற்றங்கரையில் குறிப்பிட்ட கற்களின் பின்னால் நான் இருக்கிறேன்’’ என கூறினார். முதுகு வலியால் அவதிப்பட்ட நபரும், ஹரியாச்சாரும் கனவில் நரசிம்மப் பெருமாள் கூறிய இடத்திற்கு செல்கிறார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். நடந்தவற்றை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டார்கள். அதன் பின்னர், அந்த குறிப்பிட்ட கற்களை குப்புறப்படுத்து பார்த்தார்கள். அந்த கற்களில் யோக நிலையில் நரசிம்மர் காட்சியளித்தார். பார்த்த அடுத்த நொடியில், இருவரும் கைகளை தலைக்குமேல் உயர்த்தி `ஸ்ரீ யோக நரசிம்மாய நமஹ... ஸ்ரீ யோக நரசிம்மாய நமஹ...’’ என வேண்டினார்கள். அதன் பின், இருவரும் `யோக நரசிம்மரை’ தலையில் வைத்துக்கொண்டு, திருக்காம்புலியூரை நோக்கி பயணித்தனர்.

சிந்தலவாடியில் நரசிம்மர்

அந்த சமயத்தில், சிந்தலவாடி என்னும் ஊர் வந்தவுடன் தலையில் வைத்துள்ள யோக நரசிம்மரின் பாரம் அதிகமாகிவிடுகிறது. இதனால், வலிதாங்க முடியாமல், யோக நரசிம்மரை சிந்தலவாடியிலேயே வைத்துவிட்டார், ஹரியாச்சார். சிறிது நேரத்திற்கு பின்னர், இருவரும் நரசிம்மரை தூக்கும்போது, அவர்களால் முடியவில்லை. அளவிற்கு மீறிய பாரம். செய்வதறியாது இருவரும் திகைத்தனர். மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரிடம் சென்று இதன் விவரங்களைகூறி தெளிவுபெறலாம் என திடீரென்று ஹரியாச்சாருக்கு யோசனை பிறந்தது. ஸ்ரீ வியாசராஜரை சந்தித்த ஹரியாச்சார், நடந்தது அனைத்தையும்கூறி தீர்வைக் கேட்டார்.

“ஹரி... உனக்கு இன்னுமா புரியவில்லை? காவேரிக்கரை ஓரமாக, தினமும் காவேரி நீரை கொண்டு, நிர்மால்ய அபிஷேகம், கந்தோதக ஸ்நானம் செய்து கொள்ள, நம் நரசிங்கன் இங்கேயே வாசம் செய்ய விரும்புகிறார்” என்று மகிழ்ச்சி பொங்க வியாசராஜர் கூறினார்.

“ஓ... அப்படியா... காவேரி ஓரம்....” என யோசித்தவாறு ஹரியாச்சார்நின்றிருந்தார்.

“இதில் யோசிக்க என்ன இருக்கு ஹரி? சிந்தலவாடியில், காவேரி ஆற்றங்கரை அருகில் நான்தான் ஏற்கனவே முக்யப் பிராணரை (அனுமார்) பிரதிஷ்டை செய்திருக்கிறேன் அல்லவா! உனக்கு கிடைத்த யோக நரசிம்மரையும் அங்கே பிரதிஷ்டை செய்வோம். அதையும், நானே செய்கிறேன்” என்றார் வியாசராஜர்.

“அந்த ஸ்ரீ ஹரி, இந்த ஹரியின் (ஹரியாச்சார்) மூலமாக வியாசராஜரிடம் சென்று தற்போது இங்கேயே (சிந்தலவாடி) பிரதிஷ்டை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை காண முப்பிறவியில் நான் கோடானகோடி புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்” என ஆனந்த கண்ணீருடன், ஹரியாச்சார் கூறினார்.

அனுமனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம்

ஆக, இங்குள்ள யோக நரசிம்மரும், முக்ய பிராணரும் மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தரின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், முக்ய பிராணர் அருகிலேயே பக்காசுரவத அனுமன் காட்சியளிக்கிறார். இவரும்கூட ஹரியாச்சார் மூலமாக மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

பக்காசுரவத அனுமன் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. முக்ய பிராணர் இடத்தில், தலைக்கு மேலே வால் செல்கிறது. அதில் சிறிய மணியும் காணப்படுகிறது. வியாசராஜர்தான் பிரதிஷ்டை செய்தார் என்பது நன்கு புலப்படுகிறது. பக்காசுரவத அனுமனோ, இருகைகளை கூப்பிய நிலையில் அருள்கிறார். இவரை பக்த அனுமன் என்றும் அழைக்கிறார்கள்.

மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலில், நரசிம்ம ஜெயந்தி அன்று மூன்று நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில், விஷ்ணுசஹஸ்ரநாமம், புருஷஸூக்தம், நரசிம்மருக்கு பிரீதியான மன்யுஸூக்தம் போன்ற வேத மந்திரங்களோடு பால், தேன், நெய், தயிர், இளநீர், வெல்லம், மற்றும் பல வகை பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். அதே போல், அனுமன் ஜெயந்தி அன்று இரண்டு அனுமன்களுக்கு ஹரிவாயுஸ்துதி என்னும் வேத மந்திரத்தினால் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். இக்கோயிலில், பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்பு! யோக நரசிம்மருக்கும், அனுமன்களுக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

குலதெய்வம்

அபிஷேகம் முடிந்த பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, மிக அழகாக, யோக நரசிம்மருக்கும் அனுமன்களுக்கும் அலங்காரங்களை அர்ச்சகர் செய்வார். நிவேதனம் ஆன பிறகு, மகாமங்களாரத்தி யோகநரசிம்மருக்கும், அனுமன்களுக்கும் காட்டப்படும். அதை காண்பதற்கு இருகண்கள் போதாது! பல மத்வ குடும்பங்களுக்கு, சிந்தலவாடி யோக நரசிம்மர்தான் குலதெய்வமாக இருந்து அருளாசி வழங்குகிறார். மேலும், யோக நரசிம்மரின் அருகிலேயே நர்த்தன கிருஷ்ணரும் உள்ளார். தவிர, விநாயகர், நாகர்கள் சந்நதியும் உள்ளது. இக்கோயில் அருகில், நடந்து செல்லும் தூரத்தில், ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலும், பழமையானதாகும். இங்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. யோக நரசிம்மரை தரிசிக்க வருபவர்கள், வெங்கடாஜலபதியையும் தரிசித்து செல்கிறார்கள். அதே போல், சிந்தலவாடியில் இருந்து மிக அருகில், கருப்பத்தூர் அதாவது யோக நரசிம்மர் கிடைத்த ஊரில், `சிம்மபுரீஸ்வரர் கோயில்’ உள்ளது. இங்கு சென்று `சிம்மபுரீஸ்வரர் மற்றும் தாயார் குந்தாளம்பாளை தரிசித்து செல்வதும் வழக்கம்.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 8:00 முதல் 12:00 வரை, மாலை: 5:30 முதல் 07:30 வரை. தொடர்புக்கு: 98434 10227.

*எப்படிச் செல்வது?: திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, லாலாப் பேட்டைக்கு அடுத்ததாக சிந்தலவாடி இருக்கிறது. மாநகர பேருந்துகள் மட்டுமே சிந்தலவாடியில் நின்று செல்கின்றன. ஆகையால், திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு, கோவை ஆகிய பேருந்துகளில் பயணித்து, குளித்தலை அல்லது லாலாப் பேட்டையில் இறங்கி, மாநகர பேருந்துகளில் பயணிக்க வேண்டும்.