Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உலகத்தை அளந்த உலகளந்த பெருமாளின் அருகில் அனுமன்!

பகுதி 3

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த உலகளந்த பெருமாளின் அருகில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகின்ற அனுமனை இந்த இதழின் வாயிலாக தரிசிக்க இருக்கிறோம்.

21 அடி உயரமுள்ள பெருமாள்

திருக்கோவிலூரில் வீற்றிருக்கும் உலகளந்த பெருமாள், மிக பெரிய திருக்கோலம். பச்சை நிற திருமேனி. நம் கண்ணைக் கவரும் வலது திருவாயை (காலை) உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்ற, புன்னகையுடன் மிக அழகாக சேவை சாதிக்கிறார். வலது கையில் சங்கம் ஏந்தி, வரும் பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஓர் ஐதீகம். இடது கையில் சக்கரம், ஒரு அடியை வானம் முழுவதும் மற்றொரு அடியை பாதாள உலகம் முழுவதும் அளந்து, மூன்றாவது அடி எங்கே என்று மகாபலியை கேட்பதாக வலது கையை வைத்துள்ளார். மேலே வலது திருவடியை பிரம்மா ஆராதனை செய்கின்றார். பெருமாளின் இடது திருவடியில் கீழே லட்சுமி, பிரகலாதன், மகாபலி, அவருடைய மகன் நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்தவண்ணம் அமைந்துள்ளார்கள்.

அதே போல், வாமன ரூபத்தில் வந்த சிறுவனுக்கு தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை தடுத்த சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரின் பத்தினி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் பெருமாளுக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் எழுந்தருளி உள்ளார்கள்.

உலகளந்த பெருமாளின் திருமேனி, தாரு (மரம்) அமைப்பைக்கொண்ட மிகப் பழமையான அரிதான பெருமாள் ஆவார். இத்தகைய ஆஜானுபாகனான பெரிய பெருமாள், நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. 108 சாளக்கிராம மாலையுடன் ஸ்ரீ கர விமானத்தின் கீழ் பெருமாள் எழுந்தருளியுள்ளார். 20க்கு 8 அடி பரப்புள்ள கருவறையில், 21 அடி உயரமுள்ள பெருமாளின் காட்சி வேறு எங்கும் காணமுடியாது. இவருக்கு `உலகளந்த பெருமாள்’, `ஆயனார்’, `இடைகழி ஆயன்’ என்னும் பல பெயர்கள் உண்டு. உற்சவரின் திருநாமம், `தேஹளீசப் பெருமாள்’. இவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிரித்த முகத்துடன் பரமதேஜஸ்ஸுடன் காட்சியளிப்பது, கண்ணைக் கவரும்படியாக உள்ளது. உற்சவரான தேஹளீசப் பெருமாளுக்குதான் திருமஞ்சனம் நடைபெறுகின்றன. மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

தேர்வில் நன்கு தேர்ச்சி பெற

திரிவிக்ரமரை சேவித்த பின்பு, பிராகாரத்தை வலம் வந்தால், சற்று தூரத்திலேயே.. சுமார் ஆறு அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி சந்நதி காணப்படுகின்றன. வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களில் எப்படி சில அறிகுறிகள் தென்படுகிறதோ.. அது போல், இந்த வீர ஆஞ்சநேயரிடத்திலும் ஒரு முகமாக அனுமன் காணப்படுவதும், திருவடிகள் முன்னும் பின்னும் இருப்பதும், கையில் சௌகந்திகா புஷ்பத்தை ஏந்தியும், வால் தலைக்கு மேலே சென்றும், அதில் சிறிய அளவில் மணி காணப்படுவதும் பார்க்க முடிகிறது. இருந்த போதும், வியாசராஜர்தான் பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறுவதே ஆகும். திருமணம் ஆகாதவர்கள், தேர்வில் நன்கு தேர்ச்சி பெற நினைப்பவர்கள், சனிக்கிழமைகளில் நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். அப்படி வழிபடும் பக்தர்களுக்கு, வீர ஆஞ்சநேயர் அருள் புரிகிறார். மேலும், அனுமன் ஜெயந்தி அன்று விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்படும். அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

இந்தத் திருக்கோயிலுக்கு பல தீர்த்தங்கள் உள்ளது.

1. சக்கர தீர்த்தம்,

2. சங்க தீர்த்தம்,

3. ருணமோசன தீர்த்தம்,

4. கர்த தீர்த்தம்,

5. ஆகாச கங்கை தீர்த்தம்,

6. வாராஹ தீர்த்தம்,

7. அகஸ்த்திய தீர்த்தம்,

8. காலவ தீர்த்தம்,

9. மிருகண்டு தீர்த்தம்,

10. கிருஷ்ண பத்ரா நதி தீர்த்தம்,

11. தெப்போற்சவம் நடைபெறும் பெரிய புஷ்கரணி.

- என மொத்தம் பதினொன்று புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

விஜய மன்னரின் பங்களிப்பு

இக்கோயிலுக்கு பெரிய கோபுரங்கள் மூன்றும், சிறிய கோபுரங்கள் நான்கும் உள்ளன. இவைகள் பல்லவ, பாண்டிய, விஜயநகர மற்றும் திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி காலத்தில் கட்டப்பட்டவை. பெரிய கோபுரம் (கிழக்கு), கட்டை கோபுரம் (வடக்கு), ராஜகோபுரம் (கிழக்கு), மற்றோரு ராஜகோபுரம் (மேற்கு), திருமங்கை மன்னன் கோபுரம், சுவர்க்கவாசல் கோபுரம் (வடக்கு), கிளி கோபுரம் என கோபுரங்கள் அழகுறக் காட்சியளிக்கின்றன. அதே போல், தீர்த்தவாரி மண்டம், திருத்தேர் மண்டபம், உறியடி மண்டபங்கள், பதினாறு கால் மண்டபம், வசந்த மண்டபம், விஸ்தார மண்டபம், சித்ரா பெளர்ணமி மண்டபம், ஏகாதசி மண்டபம், ஸ்ரீ ரங்கநாதர் மண்டபம், பாரிவேட்டை மண்டபம், பூங்காவன மண்டபம், பாண்டியன் மண்டபம் ஆகிய மண்டபங்களும் கம்பீரமாக வானுயர உயர்ந்து காணப்படுகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 5.30 முதல் இரவு 8.30 வரை.

எப்படி செல்வது: விழுப்புரத்தில் இருந்து 37.கி.மீ., பயணித்தால், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தை அடையலாம். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.