Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆண்டாள் காட்டும் சங்கின் பெருமை

வணக்கம் நலந்தானே!

கருப்பூரம் நாறுமோ

கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான்

தித்தித்தி ருக்குமோ,

மருப்பொசித்த மாதவன்றன்

வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன்

சொல்லாழி வெண்சங்கே!

நாச்சியார் திருமொழியில் வரும் பத்துப் பாசுரங்களும் பாஞ்சசன்னியத்தை, சங்காழ்வானை மையப்படுத்தி பாடியவை ஆகும். மற்ற பாசுரங்களில் ஆங்காங்கு பாஞ்சசன்னியத்தை சங்கைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால், இங்கோ பத்துப் பாசுரங்களுமே இதை மையமாக வைத்தே பாடியிருக்கிறாள். சங்கிற்கு ஏன் ஆண்டாள் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து பாடியிருக்கிறாள் என்று பார்க்கும்போது, பொதுவாக எல்லோருமே சுதர்சன ஆழ்வாரை அதாவது சக்கரத்தாழ்வாரை பிரதானமாகப் பாடுவது வழக்கம். பகவானுடைய ஆயுதம் என்று சொன்னாலே சக்கரத்தாழ்வாரை குறிப்பிடுவது வழக்கம். மேலும், பொதுப்படையாக பஞ்சாயுதங்கள் என்று சொல்வதும் வழக்கம்.

அதாவது சங்கு, சக்கரம், கதை, வாள், வில்… போன்றவை ஆகும். சங்கு, பாஞ்சஜன்யம், சக்கரம் சுதர்சனம், கதை கௌமோதகி, வாள் நந்தகம், வில் சாரங்கம் (சார்ங்கம்), இதில் சங்கை ஆண்டாள் பிரதானமாக பாடுகிறாள். மற்ற ஆயுதங்களை விட சங்கையே இங்கு பிரதானமாக்கி பாடுவதன் காரணம் என்னவெனில், சங்கு பகவானின் கைகளிலேயே இருக்கிறது. அது சரி, மற்ற ஆயுதங்களும் பகவானின், கைகளில் தானே இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால், மற்ற ஆயுதங்களுக்கும் சங்கிற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. ஒருவேளை சக்கரத்தை எடுத்துக் கொண்டால், சக்கரத்திற்கு வேலை வரும்போது அதாவது சக்கரத்தால் சம்ஹாரம் செய்ய வேண்டுமென்ற வேலை வரும்போது சக்கரம் கைகளிலிருந்து புறப்பட்டுப்போய் சம்ஹாரம் செய்துவிட்டு மீண்டும் கைக்கு வருகின்றது. ஆனால், சங்கானது கையிலேயே இருக்கிறது. சங்கிற்கு வேலை வரும்போது என்ன ஆகின்றதெனில், கையிலிருந்து புறப்பட்டு போகாமல், கையிலிருக்கும் சங்கானது பகவானின் திருவாய்க்கு அருகே வருகிறது.

சங்கு கையிலேயே இருக்கிறது. அதற்கான வேலை வரும்போது விலகிப்போய் வேலையை பார்க்கவில்லை. அதுதான் இருக்கக்கூடிய இடத்தைவிட இன்னும் நெருக்கமான இடத்திற்கு வருகின்றது. இவ்வளவு நேரமாக கைக்கருகே இருந்தது இப்போது திருவாய்க்கு அருகே வருகின்றது. அப்போது அந்தரங்கமாக இருக்கக்கூடியது சங்காகும். எனவே, நம்முடைய விஷயத்தை சங்கினிடம்தான் கேட்க முடியும். ஏனெனில், பிராட்டி எப்படி பகவானுக்கு அந்தரங்கமோ, அதேமாதிரியான அந்தரங்க ஸ்தானம் சங்கிற்கு இருக்கிறது. அதனால், சங்கினிடம்தான் நாம் சில விஷயங்களை கேட்க முடியும். அதனாலேயே ஆண்டாள் இங்கு சங்கை தேர்ந்தெடுக்கிறாள். ஏனெனில், அவ்வளவு அந்தரங்கமாகவும் அத்யந்தமாகவும் இருக்கக் கூடியது சங்கு.

பகவான் பாஞ்சசன்னியத்தை எடுத்து ஊதும்போது கௌரவ சைன்னியத்தில் இருப்பவர்களின் இதயம் பிளந்தது என்று பகவத்கீதையின் ஓரிடத்தில் வருகின்றது. சங்காழ்வான் தன்னுடைய நாதத்தினாலேயே நடத்திக் காண்பிக்கிறான். ஒலியினாலேயே நடத்துகின்றான். இதையெல்லாம் வைத்துத்தான் ஆண்டாள் நீ எவ்வளவு பெரிய பாக்கியசாலி. நான் உன்னிடம்தான் சில விஷயங்களை சொல்ல முடியும் என்கிறாள். சங்காழ்வான் என்று எடுத்துக் கொண்டால் சங்கம்… பகவானுடைய சங்கம் என்பது நாத சொரூபம். இந்த நாத சொரூபத்தை பகவான் தன்னுடைய சங்கமாக வைத்திருக்கிறார்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)