பகுதி - 4
மகிழ்ச்சியைத் தருகிறது! காரணம், ``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் இந்த பகுதியில், இதுவரை 32 மகான்களை தரிசித்துள்ளோம். மிதமிஞ்சி சென்றால் மூன்று பகுதிக்குள் ஒரு தொகுப்பை முடித்துவிடுவோம். ஆனால், மகான் ஸ்ரீ விஜயேந்திரரின் இந்த தொகுப்பு மூன்றை கடந்து பகுதி-4ல் வந்திருக்கிறோம். அத்தகைய விஜயேந்திரரின் வாழ்க்கை வரலாறு, பல மகிமைகள் நிறைந்தது. வாருங்கள்.. இந்த தொகுப்பிலும் சில மகிமைகளைக் காணலாம்.
திரிகோணத்தில் தவம்
ஸ்ரீ விஜயேந்திரர் வாசம் செய்யும் மூல பிருந்தாவனம் அருகில் ``காஷ்யப்ப தீர்த்தம்’’ என்னும் புஷ்கரணி (குளம்) உள்ளது. இக்குளத்தை பற்றிய தகவல்களை அறிவதற்கு முன்னர், இக்குளத்தை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள் மடத்தின் நிர்வாகிகள். குளம் மிக தூய்மையாக காணப்படுகிறது. அதற்கு பாராட்டுக்கள். கோயிலில் புஷ்கரணி இருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால், மடத்தில் புஷ்கரணி இருப்பது அரிதிலும் அரிது! ஆகையால், இங்கு புஷ்கரணி இருப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
கும்பகோணத்தில், மூன்று மாமுனிவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். இதனை, ``திரிகோணம்’’ அதாவது முக்கோணமாக காட்சித்தரும் மூன்று திக்குகளில் அமர்ந்து முனிவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். ஒரு முனிவர், ஸ்ரீ லட்சுமி நாராயணரை நோக்கித் தவம் புரிகிறார், அவர் பெயர் `காஷ்யபர்’. இன்னொருவர், `மதங்க முனிவர்’. இவர், ஸ்ரீ வரதராஜப் பெருமாளை நோக்கித் தவம் புரிகிறார். மற்றொருவர், `அத்திரி முனிவர்’. இவர், ஸ்ரீ வராஹஸ்வாமியை நோக்கி தவம் புரிகிறார். இதில்,
1) காஷ்யப்ப முனிவர் - காஷ்யப்ப தீர்த்தம் இடத்திலும், (ஸ்ரீ விஜயேந்திரரின் மூல பிருந்தாவனம்
அருகில்),
2) மதங்க முனிவர் - விஜயேந்திரர் மடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சக்ர படித்துறை இடத்திலும்,
3) அத்திரி முனிவர் - கும்பகோணத்தில், கரும்பாயிரம் கொண்ட பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரில், ஸ்ரீ வராஹஸ்வாமி கோயில் உள்ளது. அந்த இடத்திலும், தவம் புரிகிறார்கள். இந்த மூன்று முனிவர்களும் மூன்று திசைகளில் தவம் புரியும் இடம் முக்கோணங்களாக வரைபடத்தில் காணப்படுகிறது. ஆகையால், திரிகோணத்தில் முனிவர்கள் தவம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
வரம் கேட்ட காஷ்யப்ப முனிவர்
முனிவர்களின் தவங்களை மெச்சிய அந்தந்த கடவுள் அதாவது காஷ்யப்ப முனிவருக்கு லட்சுமி நாராயணரும், மதங்க முனிவருக்கு வரதராஜப் பெருமாளும், அத்திரி முனிவருக்கு வராஹஸ்வாமியும் காட்சிக் கொடுத்தார்கள். காஷ்யப்ப முனிவரின் தவவலிமைக்கு இணங்க, ஸ்ரீ லட்சுமி நாராயணர் காட்சிக் கொடுக்கிறார்.``காஷ்யப்ப முனிவரே... உமது தவத்தை நாம் மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்’’ என்றார் பகவான்.
``ஸ்வாமி... நான் என்ன வரம் கேட்க போகிறேன்? `சர்வே ஜனா சுகினோ பவந்து’ (அனைத்து மக்களும் இன்புற்று வாழ்க) இதைத்தான் அனுதினமும் உன்னிடம் வேண்டிவருகிறேன். ஆகையால், நீ எனக்கு எப்படி காட்சி கொடுத்தாயோ.. அதே போல், உன் திருமேனியும் இங்கேயே பிரதிஷ்டை ஆக வேண்டும். பக்தர்கள் அனைவருக்கும் உனது அருள் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று காஷ்யப்ப முனிவர் வேண்ட, ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலா வடிவமெடுத்து பிரதிஷ்டை ஆகி, விஜயேந்திரரின் மூல பிருந்தாவனத்திற்கு நேரெதிரில் இன்றும் பக்தர்களுக்காக அருளிவருகிறார்.
இத்தகைய மகிமைகளையெல்லாம் அறிந்துகொண்ட மகான் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர், காஷ்யப்ப தீர்த்த குளத்தின் அருகிலும், ஸ்ரீ லட்சுமி நாராயணரின் எதிர்புரத்திலும், தன் மூலபிருந்தாவனம் அமையவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது போலவே, பிருந்தாவனம் மேற்கொண்டு பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகிறார். இந்த காஷ்யப்ப புஷ்கரணி, கங்கைக்கு சமமானதாக கருதப்படுகிறது. மேலும், காஷ்யப்ப முனிவரின் அம்சம்தான் ஸ்ரீ விஜயேந்திரர்!
மகாமகம் குளம் புனரமைத்தல்
மத்வ சம்புரதாயத்தில், காசி மடம் என்கின்ற ஒரு பிரபலமான மடம் ஒன்று உள்ளது. இந்த மடம், கர்நாடக மாநிலம் உடுப்பியில் தொடங்கி வரிசையாக கோவா வரையில் காசி மடம் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இந்த காசி மடத்தை தோற்றுவித்தவர், ஸ்ரீ விஜயேந்திரர் தீர்த்தர் என்பது பலருக்கும் தெரியாதது. அதேபோல், மகான் ஸ்ரீ வியாசராஜரின் சீடர்கள்தான் ஸ்ரீ விஜயேந்திரர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ புரந்தரதாசர்.
இப்படி இருக்க ஒருமுறை விஜயேந்திரரின் அழைப்பின் பெயரில், புரந்தரதாசர் கும்பகோணத்திற்கு வருகை தருகிறார். அப்போது கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிவனை வழிபடுகிறார். சிவனைப் போற்றிப் பாடுகிறார். புரந்தரதாசரின் பாடல்களை கேட்டு பிள்ளையார் நர்த்தனம் ஆடுகிறார். இதனைக்கண்ட விஜயேந்திரரும், வாதிராஜரும் மெய்சிலிர்த்து மகிழ்ந்தனர். மேலும், 1528 - ஆம் ஆண்டில், கும்பகோணம் மகாமகம் குளத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, கோவிந்த தீட்சிதர்தான் மகாமந்திரியாக கும்பகோணத்திற்கு செயல்பட்டுவந்தார். அவரே குளத்தை புனரமைத்தார்.
புனரமைக்கப்படும் வரைப்படத்தை ஓவியமாக வரைந்து கோவிந்த தீட்சிதரிடத்தில் சமர்ப்பித்தது வேறு யாருமில்லை, ராகவேந்திர ஸ்வாமிகளின் சகோதரர் குருராஜாச்சார்தான் என்பது கூடுதல் தகவல். இந்த தகவலை பிரபல தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன் தன் ஆய்வில் தெரியப்படுத்தியிருக்கிறார்.
(அடுத்த இதழில் தொடரும்...)
- விஜயேந்திர தீர்த்தர்


