- சென்னை, மயிலாப்பூர்.
``பரிபூரணம்’’ என்றால் முழுமை, நிறைவு. இதற்குப் பிறகு எதுவும் இல்லை. ``விநாயகர்’’ என்றால் இவர்தான் நாயகர். இவரோடு ஒப்பிட்டுச் சொல்ல வேறு ஒரு நாயகன் இல்லை.
இவரை அடுத்து இவரைப் போல ஒருவர் வரப்போவதில்லை என்றும் பொருள் என்றார், காஞ்சி மகாப் பெரியவர்.
பரிபூரண விநாயகர் என்றால்?
தன்னை அணுகியவருக்கு எல்லாம் இதற்குப் பிறகு கேட்க எதுவும் இல்லை என்கிறபடியான தன்னிறைவைத் தர வல்லவர். அப்படி ஒரு விநாயகர், நாடி வருவோருக்கெல்லாம் மனநிறைவு கொள்ளும் வண்ணம் அருள் புரிகிறார்.
எங்கே?
சென்னை - மயிலாப்பூரில், கச்சேரி சாலையை ஒட்டிய ஒரு தெருவில் இருக்கிறது, அங்குதான் இவரது திருக்கோயில். இவரது பெயராலேயே அந்த தெரு, `‘பரிபூரண விநாயகர் கோயில் தெரு’’ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் குடியேறியவர் மதுரைமுத்து. இவர் ஒரு நீதிபதியிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தன் வீடு அமைந்த பகுதி, தெரு குத்தாக இருப்பதால் அதற்கு பரிகாரமாக ஒரு விநாயகரை வைத்து வழிபடத் தொடங்கினார். அவருக்கு பரிபூரண விநாயகர் என்றும் பெயரிட்டார். இந்த விநாயகர் இங்கு வந்த நேரம், இந்த பகுதி நன்கு வளர்ச்சியடைய, இவர் இந்த பகுதியின் அடையாளமாகவே மாறிப்போனார். காலப் போக்கில் இங்கு நிறைய வீடுகள் வர பெரிய தெருவாய் விரிந்து, பரிபூரண விநாயகர் தெரு என்றே மாறிப் போனது.
தெருவை ஒட்டி இருக்கும் இந்த விநாயகர் கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சந்தனம் அரைக்க ஒரு உயர்ந்த கல் திண்டு. அதைக் கடந்து உள்ளே செல்ல சிறிய மண்டபம். அங்கே வரிசைக் கட்டி அருளும் சுவாமிகள், மகான்களின் படவரிசை. அங்கு நின்று நேரே நோக்கினால், அழகாய் கருவறையில் அமர்ந்து சிரிக்கிறார் விநாயகர். மிகச் சிறிய உருவம்; அருளோ அபாரம். இந்த தெரு வழியே கடந்து செல்பவர்களுக் கெல்லாம் இவரிடம் தனித்த பிரியம் இருக்கிறது. ‘‘இன்ன விஷயமாகப் போகிறேன்; நல்லபடியாக முடித்துக் கொடு’’ என்று வேண்ட, விக்னேஸ்வரன் விக்னங்களை உடைத்து காரிய சித்தி செய்து அருள்கிறார். இந்த விநாயகருக்கு இன்றும் நான்காவது தலைமுறையாக மதுரைமுத்து பரம்பரையினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இத்தலத்தில் வேண்டிக் கொண்ட பக்தர்கள் அபிஷேக நேரத்தில் தாமும் கலந்து கொண்டு மகிழ்கிறார்கள். கோயில் திறந்திருக்கும் நேரம் தவிர்த்து இவரை தரிசிக்க வேண்டுமானால், கோயிலின் பின்பகுதியில் இருக்கும் மதுரைமுத்து குடும்பத்தினரை அணுக, கதவு திறந்து தரிசனத்திற்கு உதவுகிறார்கள்.
இந்த விநாயகர் வடக்குநோக்கி இருப்பதால் சிவஸ்வரூபம் என்கிறார்கள். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் உள்ளவர்கள் இவரிடம் வேண்ட அந்த வாய்ப்பு உடனே கிடைக்கிறது. திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் தேங்காயில் நெய் ஊற்றி விளக்கேற்ற உடனே அவர்கள் எண்ணம் ஈடேறுகிறது.
பள்ளியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற இந்த விநாயகருக்கும் தோப்புக்கரணம் போடும் மாணவர்களை இங்கே பார்க்க முடிகிறது.
சிவனை தரிசிக்க வந்த மகாவிஷ்ணுவிடம் இருந்த சுதர்சன சக்கரத்தை குழந்தை கணபதி எடுத்து விழுங்கி விடுகிறார். அதை மீண்டும் பெற மகாவிஷ்ணு தன் கரங்களால் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட அதைக் கண்டு வாய்விட்டு சிரித்தார், கணபதி. அப்படிச் சிரித்தபோது, வாயில் இருந்த சக்கரம் வெளியில் வந்து விழ, மகாவிஷ்ணு அதை பெற்று மகிழ்ந்தார்.
அன்று முதல் கணபதியை மகிழ்விக்க தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது. அவரும் தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை உடனே வாரி வழங்கி விடுகிறார்.
நவீன அறிவியலோ தோப்புக் கரணம் அறிவுக் கூர்மையை அதிகப்படுத்தும் பயிற்சி என்கிறது. லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த எரிக்ராபின்ஸ் என்பவர் தனது ஆராய்ச்சியின் மூலம் தோப்புக்கரணம் போடும் போது மூளையில் இருக்கும் நியூட்ரான்கள் தூண்டப்படுகின்றன. அதனால் அறிவுத் திறன் மேம்படும் என்று கண்டறிந்திருக்கிறார். யேல் பல்கலைக் கழக நரம்பியல் மருத்துவர் யூஜினியஸ் அங், இது அக்குப்ரஷர்போல காது மடல் புள்ளியைத் தூண்டி அறிவை அதிகப்படுத்தும் வித்தை என்கிறார்.
அமிர்த நாடியைத் தூண்டும் அற்புத முயற்சிதான் குட்டிக் கொள்வதும் தோப்புக்கரணமும் என்கிறது வேத விஞ்ஞானம்.
எது எப்படியோ, அறிவியலும் ஆன்மிகமும் கைக்கோர்த்துக் கொள்ள, இந்த பரிபூரண விநாயகர் பள்ளி மாணவர்களிடம் தோப்புக்கரணத்தை வாங்கிக் கொண்டு அறிவுக் கண்களைத் திறந்து விடுகிறார். பரிபூரண விநாயகரை வணங்க தடைகளில் இருந்து விடுபட்டு, ஞானம் கிடைக்கிறது. அதனால் பரிபூரண ஆனந்தமும் மலர்கிறது.
ஆலயத் தொடர்புக்கு: 9003294117.


