Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும்!

ஜோதிட சாஸ்திரத்தின் ஆச்சரியங்களில் ஒன்று, எது ஒன்று சுப ஸ்தானமோ, அதுவே அசுபமாகவும் சில விஷயங்களை வைத்திருக்கிறது. இது எப்படி என்றால், உடம்பில் பல அங்கங்கள் உண்டு. நமக்கு காதுகள், கண்கள் எப்படியோ அப்படியே மல ஜல உறுப்புகளும் என்பதை மறந்துவிடக் கூடாது.எல்லாம் ஒரே உடம்பில்தான் இருக்கின்றன. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் தெரியும். கால் வீங்குகிறது என்றால் உடம்பில் நீர் பிரியவில்லை என்று பொருள். அங்கு காலை மட்டும் பரிசோதித்துப் பார்ப்பதால் பயன் இல்லை. இரத்த அழுத்தத்தையும் சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும்.கண்களில் பூச்சி பறக்கிறது. பார்வையில் கோளாறு இருக்கிறது. கண் எரிச்சல், சிவப்பாக மாறுகிறது என்றெல்லாம் பிரச்சனைகள் வந்தால், நரம்பு மண்டலங்களைப் பரிசோதிக்க வேண்டும். இரத்த அழுத்தத்தையும் முக்கியமாக கண்ணில் ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையின் அளவையும் பரிசோதிக்க வேண்டும்.

இதேதான் ஜோதிட சாஸ்திரத்திலும் வரும். ராசிகளில் நன்மையும் தீமையும் கொட்டிக் கிடக்கின்றன. 6, 8, 12 ராசிகள் மட்டும்தான் தீமை தரும் ராசிகள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போது நாம் மூன்றாவது ராசி அல்லது பாவத்தைச் (bhavam) சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை 3 ம் பாவம் உத்தியோகம், வீரியம், சகோதரம், சிறு பயணம் போன்ற நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறது என்று பார்த்தோம்.இப்போது மூன்றாம் ராசியின் ஒரு முக்கியமான பலனைச் சொல்லுகின்றேன். ஒவ்வொருவருடைய ஆயுளின் முடிவையும் மூன்றாம் பாவம் சுட்டிக்காட்டும். பொதுவாக ஆயுள் ஸ்தானம், மாரக ஸ்தானம் என்று சொல்கிறோம் அல்லவா, கடுமையான மாரக ஸ்தானம் மூன்றாம் பாவம்தான்.காரணம், அது பாவத் பாவத்தில் வரும் பொழுது, எட்டாம் பாவத்துக்கு எட்டாம் பாவமாக வரும். எனவே, எட்டாம் பாவத்தை விட மோசமான மாரக ஸ்தானம் அது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.இதைப்போலவே தன குடும்ப ஸ்தானம் என்பது வரவு செலவுகளையும் குடும்பத்தையும் பற்றிச் சொல்கிற இடம் ஆரம்பக் கல்வியைச் சொல்கிற இடம். ஆனால், அதுவும் ஒரு மாரக ஸ்தானம்தான்.

களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஏழாம் இடமும் மாரக ஸ்தானம்தான். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் முதலில் உபய லக்னங்களுக்கு அது பாதக ஸ்தானமாகவும் வரும்.லாப ஸ்தானம் என்று சொல்லும் 11-வது இடமும் ஒரு மாரக ஸ்தானம்தான். ஸ்திர லக்கினங்களுக்கு அது பாதக ஸ்தானமாகவும் வரும்.இதைச் சொல்வதற்குக் காரணம், ஒவ்வொரு பாவத்திலும் நன்மையும் தீமையும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிறது. கெட்டதில் ஒரு நல்ல பலனும், நல்லதில் ஒரு கெட்ட பலனும் அடங்கி இருக்கிறது.அதனால்தான், எந்த ஒரு ராசியும் எப்படி பலவீனப் படக் கூடாதோ, அதைப் போலவே அதிக பலமும் பெற்று விடக்கூடாது. அதுவும் பிரச்னைகளைத் தரச் செய்யும். குறிப்பிட்ட லக்னங்களுக்கு மூன்றாம் இடம் மிகத் தீவிரமாக வேலை செய்யும். உதாரணமாக மேஷ லக்னம். மூன்றாம் இடம் மிதுனம். ஆறாம் இடம் கன்னி. இந்த இரண்டு இடங்களுக்கும் உரியவர் புதன். மூன்றாம் இடம் ஆறாம் இடம் என்று இரண்டு அசுப ஸ்தானங்களுக்கும் புதன் வருவதால், மேஷ லக்னக்காரர்களுக்கு புதன் தசை சிரமங்களைத் தந்தே தீரும். இவர்களுக்கு புதன் வலிமை பெறக் கூடாது.அதைப்போல கன்னி லக்னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மூன்றாம் இடம் விருச்சிகம். எட்டாம் இடம் மேஷம். இரண்டுக்கும் உரியவர் செவ்வாய்.

மூன்று எட்டுக்குரியவர் செவ்வாயாக வருவதால் இவர்களுக்கு செவ்வாய் திசை மிகத் தீவிரமாகவும் கடுமையாகவும் வேலை செய்யும்.ஒரு நண்பருக்கு கன்னி லக்னம். அவர் உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்ததால் கன்னி ராசியாகவும் போனது. ராசி லக்னம் இரண்டில் அடிப்படையிலும் மூன்று எட்டுக்கு உரியவராக வருகிறார், செவ்வாய். இவருக்கு 12 வயதுக்கு மேல் 19 வயது வரை செவ்வாய் திசை. 17 வயதில் பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு அடியெடுத்து வைத்தார். ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். செவ்வாய் திசை ஓடிக் கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிளும் ஓடியது. ஆனால், செவ்வாய் திசை என்பதால் பயணத்தின்போது விபத்து நடந்தது. காரணம் பயணம் மூன்று. விபத்து எட்டு. எட்டாம் இடத்துக்கு எட்டாம் இடமாக மூன்றாம் இடம் வருகிறது.

அவருக்கு ஆயுள் ஸ்தானம் நன்றாக இருந்ததால் உயிர் பிழைத்து விட்டாரே தவிர, விபத்து விபத்துதான்.இன்னொரு ஜாதகம். சிம்ம லக்கினம். மூன்றுக்குரிய சுக்கிரன் அனுஷ நட்சத்திர சாரம் பெற்றிருந்தார். சிம்ம லக்கினத்திற்கு சனி ஆறுக்கு உரியவர்.மூன்றாம் இடம் சகோதரம். ஆறாம் இடம் பகை. ஆறாம் இடத்து சாரம் பெற்றிருந்ததால், இவருக்கு தம்பியோடு சமூக உறவு இல்லை. இவர் தம்பிக்காக செலவு செய்தாரே தவிர இவருடைய ஆபத்து காலத்தில் தம்பி கை கொடுக்கவில்லை. காரணம் தம்பிக்காரன் நான்காம் இடம் விருச்சிகத்தில் அமர்ந்தார். தம்பிக்காரனுக்கு விரய ஸ்தானமாக மூன்றாம் இடம் வந்துவிட்டது. அடுத்து தம்பிக்காரன் அமர்ந்த இடம் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு எட்டாம் இடம். ஐந்தாம் இடத்திற்கு 12-ஆம் இடம். கர்மா படி இதுதான்.

இவர் தம்பியிடம் எதையாவது எதிர்பார்த்தால் மன உளைச்சல் மட்டுமே கிடைக்கும். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்டவர்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் அல்லது எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து விட்டு,விலகி நிற்க வேண்டும். ‘‘நான் இத்தனை செய்தும் என் தம்பி என்னைக் கண்டு கொள்ளவில்லை” என்று புலம்புவதால் பலன் இல்லை.இன்னொரு ஜாதகம். கன்னி லக்கனம். மூன்றுக்குரிய செவ்வாய் நான்காம் இடத்தில் ராகுவோடு இருக்கிறார். செவ்வாய் 3, 8க்குரியவர் அல்லவா. பொதுவாக கன்னி லக்கினத்திற்கு சகோதர ஸ்தானம் என்பது கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். செவ்வாய் அஷ்டமாதிபதி ஆகி விடுவார்.

இவர் தம்பிக்கு இவரால் நயா பைசா பிரயோஜனம் இல்லை இவர் தம்பியும் இவர் உதவியை எதிர்பார்க்கவில்லை. இந்த அண்ணன் தம்பி உறவுகளில் இவருடைய தாயார் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். காரணம் நான்காம் இடமும் இதில் இணைகிறது அல்லவா.அண்ணன் காரில் போகிறார் தம்பி சைக்கிளில் போகிறார். ஆனால், அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். மூன்றாம் அதிபதி செவ்வாய் ராகுவோடு நாலில் அமர்ந்தது 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், பத்தில் குரு அமர்ந்து நாலாம் இடத்தைப் பார்ப்பதாலும், பயணம், பேச்சு, தகவல் தொடர்புகள் (மூன்றாம் இட பலன்கள்) இவருக்கு மிகுந்த ஆதாயமும் புகழும் தருகின்றன சமூக அந்தஸ்தோடு இருக்கிறார்.மூன்றாம் இடம் சுபமாகவும் வேலை செய்கிறது. அசுபமாகவும் வேலை செய்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.