Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வானிலிருந்து விழும் தங்கத் துண்டுகள்!

மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கு சிறிது தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள `காட்கோட்’ மலை உச்சியில் கோயில் கொண்டிருக்கும் கடவுளுக்கு கண்டோபா என்று பெயர். சிவபெருமானின் 64 தோற்றங்களில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல, ஜெஜிரி என்ற இடத்திலிருந்து புறப்பட வேண்டும். 450 படிக்கட்டுகள் கொண்ட கரடுமுரடான பாதையில், சற்று கஷ்டப்பட்டு ஏறிச் செல்ல வேண்டும். பூஜைக்கு வேண்டிய ``பாந்த்ரா’’ என்ற மஞ்சள் பொடி, தேங்காய் போன்ற பொருட்களை, மலையடிவாரத்திலிருந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும். மலை ஏறிச் செல்லும்போது, அழகிய சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும், பாதையின் இருபுறமும் ``தீபமாலா’’ என்ற சிற்பக் கலை சிறக்கும் அடுக்கு கல்யாண தூண் விளக்குகளும் வழிகாட்டியாக நம்மை வரவேற்கின்றன.

மலை ஏறிச் செல்லும் பக்தர்கள், பலத்த ஓசை எழுப்பியும், பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டும் செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்கள், வழியில் கண்டோபாவின் இரண்டாவது மனைவியான பனாய் சந்நதியருகே வரும்போது மட்டும் ஓசை எழுப்பாமல், அவரை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்று தொடர்ந்து படியேறுகிறார்கள். மேலும், சிறிது தூரம் ஏறிச் சென்றால், தீபமாலா கற்சிலை விளக்குகளால் சூழ, கண்டோபா கோயிலைக் காணலாம். இக்கோயிலுக்குள் கண்டோபாவும் (சிவபெருமான்) அவரது மனைவி மால்ஷாபாயும் (பார்வதி) சிலைவடிவாகக் காட்சியளிக்கின்றனர்.

பக்தர்கள் இந்த இரு தெய்வங்களின் அருகில் சென்று அவர்களைத் தொட்டு மஞ்சள் பொடி (பாந்த்ரா) அபிஷேகம் செய்து, கை கூப்பி வணங்கி தங்கள் குறைகளையும், கஷ்டங்களையும்கூறி நன்மை கிடைக்க மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறார்கள். பக்தர்கள், பூஜை - தரிசனங்களை முடித்துக் கொண்டு மீண்டும் கீழே வரும் வழியில், மறுபடியும் கண்டோபாவின் இரண்டாவது மனைவி பனாய் கோயிலுக்கு வந்து அவரை வணங்கி நன்றி தெரிவித்துவிட்டு கீழே இறங்குகிறார்கள்.

கண்டோபாவின் இரண்டாவது மனைவி பற்றிய புராண வரலாறு சுவாரசியமானது. ஒருசமயம், கண்டோபா தன் முதல் மனைவி மால்ஷாவுடன் சதுரங்கம் விளையாடி தோற்றார். இதனால் வெறுப்புற்ற அவர் தன் பரிவாரங்களுடன் மலையிலிருந்து கீழே வந்து காட்டுக்கு வேட்டையாடப்போனார்.

அங்கு ஆடு - மாடுகள் மேய்க்கும் காட்டுவாசிப் பெண் பனாய் என்பவளைக் கண்டு காதல் கொண்டு, அவள் பெற்றோர் சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்துகொண்டார்.

புதுமனைவியை அழைத்துக் கொண்டு முதல் மனைவி மால்ஷாவிடம் போனார் சிவன். இந்த திருமணத்தை ஏற்காத மால்ஷா, இரண்டாவது மனைவி பனாயை விரட்டி விட்டாளாம். மால்ஷாவின் இல்வாழ்க்கையைப் பங்குபோட்டுக்கொள்ள விரும்பாத பனாய், அந்த மலைப் பாதையில் கோயில் கொண்டுவிட்டாள். ஈசனை மணந்ததால் பனாயும் தெய்வமானாள். இந்த மலைக்கோயிலுக்கு செல்லும் நுழைவாயில் முன் மல்லா என்ற அரக்கனின் சிலை இருக்கிறது. இவன் கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றவன்.

அந்தப் பகுதியில் வாழும் மக்களை துன்புறுத்தி வந்தான். பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், கண்டோபாவிடம் முறையிட, அவர் மலையிலிருந்து கீழிறங்கி வந்து அரக்கன் மல்லாவை அடக்கினார். மனம் திருந்திய அவன், கண்டோபாவின் தீவிர பக்தனாக மாறினான். அவன் வேண்டுகோளுக்கிணங்க, அவன் பெயரான மல்லா என்ற பெயரைத் தன் பெயராகவே ஏற்றுக் கொண்டார் கண்டோபா. அதாவது, மல்லா என்று அழைத்தாலும் அது கண்டோபாவையே (சிவபெருமானையே) அழைப்பதாக ஆகும். இதனால் மல்லாவும் தெய்வமானான். ஆண்டுதோறும் கண்டோபாவுக்கு பற்பல விழாக்கள் நடைபெற்றாலும், சோமவதி (திங்கட்கிழமை அமாவாசை) என்ற திருவிழா பெரிய அளவில் நடக்கிறது.

அன்றைய தினம் கண்டோபா - மால்ஷா தெய்வ உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு ஒரு பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்படும். பிறகு, மல்ஹார் சாகர் நதிக்கரையோரம் கொண்டு வரப்பட்டு, அங்கே பூஜைகள் நடைபெறும். பிறகு அந்த இரு தெய்வங்களுக்கும் நதிக்கரையில் அபிஷேகம் நடைபெறும்.

அப்போது அங்கு கூடியுள்ள பக்தர்களும் நதியில் நீராடுவார்கள். அதேசமயத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் மஞ்சள்பொடி, தேங்காயுடன் நதிக்கரையில் கூடி ‘ஜெய் மல்ஹார்’ என்று உரத்த குரலில் கோஷமிடுவார்கள். பக்திப் பாடல்கள் பாடுவார்கள். தேங்காயை உடைத்து, துண்டுகளாக்கி அவற்றோடு மஞ்சள் பொடியைக் கலந்து வான் நோக்கி வீசுவார்கள். அந்த மஞ்சள் தேங்காய் துண்டுகள் மீது சூரிய ஒளி பட, அவை தங்கத் துண்டுகளாக மாறித் தங்கமழை பொழிவதுபோல் தோன்றும்! தரையில் விழும் அவற்றை அசல் தங்கமாகவே கருதி, பக்தர்கள் சந்தோஷத்துடன் எடுத்துச் செல்வார்கள். இந்த தேங்காய் துண்டுகளை வீட்டில் வைத்துக் கொண்டால், நிறைய செல்வமும், நன்மைகளும் சேரும் என்று அந்த பக்தர்கள் நம்புகிறார்கள்.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள், அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைகிறார்களாம். இத்திருவிழா நடக்கும் அதேநேரத்தில், மலையடிவாரத்தில் உள்ள மல்லாவின் சிலைக்கும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வணங்குவார்கள். இந்த சோமவதி (அமாவாசை திங்கட்கிழமை) ஆண்டுக்கு இரண்டு முறை வரும். மஹாராஷ்டிர மன்னன் வீரசிவாஜி இக்கோயிலுக்கு ஏராளமான பொன், வெள்ளி மற்ற திரவியங்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளாக அனைத்து மதத்து மக்களும் இத்தலத்திற்கு வருகை தருகிறார்கள். அருகிலுள்ள மாநிலங்களான ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கண்டோபாவை தரிசனம் செய்து திரும்புகிறார்கள்.