Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நவராத்திரி நாயகியர்

நவராத்திரி என்பது ஒன்பது நாட்களுக்கு நீண்டு பத்தாம் நாள் விஜய தசமியாக நிறைவுறும் மகிழ்ச்சியான கொண்டாட்டம். அதாவது, பக்தி செலுத்துவதற்கும், அம்பிகை அருளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறைகளில் ஒன்று.

நவராத்திரி வைபவம் பற்றி காஞ்சி பரமாச்சார்யார், ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் என்ன சொல்கிறார்?

‘‘நவராத்திரி நாட்களில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். இவ்வாறு மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அவர்கள் எல்லோருமாக இருப்பவள் பராசக்தி ஒருவளே. இந்த உண்மையை, பரதேவதையே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ - ப்ரஹ்ம ரூபா) என்றும், அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ-கோவிந்த ரூபிணி) என்றும், அவளே ஸம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ-ருத்ரரூபா) என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. அதாவது, லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறாள் என்று பொருள்.’’

மஹேஸ்வரியாக வந்து மது, கைடபர் ஆகிய அரக்கர்களை அழித்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நவராத்திரியின் முதல் நாள் அமைகிறது. அவர்களை அம்பிகை நேரடியாகத் தாக்கி அழிக்கவில்லை என்றாலும், அவர்களை வதம் செய்வதற்கு மஹாவிஷ்ணுவிற்கு தன் பூரண சக்தியையும் நல்கியவள் சாமுண்டிதான். மஹாவிஷ்ணுவிற்கே ஏற்பட்ட மாயையைப் போக்கியவள் இவள் என்கிறது புராணம். இன்றைய தினம் ‘அம்பா, சாம்பவி, சந்திரமவுலிரமலா, அபர்ணா, உமா பார்வதீ, காளீ, ஹேமவதீ, சிவா த்ரிநயனீ, காத்யாயினீ, பைரவீ, சாவித்ரீ, நயௌவனா, சுபகரீ, ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா, சித்ரூபி, பரதேவதா, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ‘’’ - என்று அம்பிகையின் நாமங்களை ஸ்துதி செய்யலாம். இந்த வழிபாட்டால் வறுமை நீங்கும், ஆயுள் நீடிக்கும்.

இரண்டாம் நாளில் ராஜராஜேஸ்வரி என்ற பராசக்தியை கொண்டாடுகிறோம்.

நேர்மைக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டு ஆட்சி செலுத்திய சுரதன் என்ற மன்னன், தான் பெரிதும் நம்பியிருந்த அமைச்சர்கள் மற்றும் உறவினர்களே தனக்கு எதிராகத் திரும்பியது கண்டு விரக்தியுற்று காட்டுக்குச் சென்று வாழ ஆரம்பித்தான். அங்கே ஒரு வணிகனை சந்தித்தான். நாணயம், வாக்குத் தவறாமை, நேர்மை ஆகிய நற்பண்புகளால் பெரிதும் கீர்த்தி பெற்றிருந்த அந்த வணிகன், சொந்த மனைவி, பிள்ளைகளாலேயே வஞ்சிக்கப்பட்டான்.

வெறுப்புற்ற அவன் அந்த வேதனையுடன் இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்திருக்கிறான். இருவரும் தம் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களை சுமேதஸ் என்ற முனிவர் சந்தித்தார். அவர்களுடைய இழிநிலையைக் கேட்டு மிகவும் பரிதாபப்பட்ட முனிவர், அம்பிகை ராஜேஸ்வரியை சரணடைந்து ஹோமம் இயற்றி வணங்குமாறு அறிவுறுத்தினார். கூடவே, நவராத்திரி நாட்களில் அம்பிகையின் வரலாற்றை கேட்டும், படித்தும், சண்டி ஹோமம் செய்தும் வழிபட்டால் அவர்கள் இழந்தனவற்றை மீண்டும் பெற்று நலமடைவார்கள் என்று அறிவுறுத்தினார். அதேபோல அவர்கள் முழு நம்பிக்கையுடன் யாகம் செய்தார்கள்.

ஹோமகுண்டத்திலிருந்து அம்பிகை சங்கரியாக வெளிப்பட்டாள். அந்த கஷ்ட காலத்திலும் அவர்கள் தங்கள் விதியைத்தான் நொந்து கொண்டிருந்தார்களே தவிர, துரோகம் இழைத்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களுடைய குணத்தைப் பாராட்டினாள் அம்பிகை. அவள் அருளால், மன்னனின் உண்மையான விசுவாசிகள், ஒரு கட்டத்தில் அவருடைய விரோதிகளை எதிர்த்து அழித்து மன்னனையே மீண்டும் தலைவனாக்கி மகிழ்ந்தார்கள். அதேபோல, வணிகரின் சொந்த பந்தங்களெல்லாம், பல துர்பலன்களை அனுபவித்தார்கள். தம் தவறை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு, தாம் பறித்த சொத்துகளை அவரிடமே திரும்பக் கொடுத்து அவருடைய வர்த்தகம் மேலும் செழித்தோங்குமாறு செய்தார்கள்.

இந்த ராஜேஸ்வரியை நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபடுவதால் பகை நீங்கும், ஒற்றுமை கைகூடி வளம் சிறக்கும்.

நவராத்திரி வைபவத்தின் மூன்றாம் நாளில் மஹிஷாசுரமர்த்தினியை வழிபடுவது வழக்கம்.

அசுரத் தோன்றல்களான சண்ட-முண்டன், சும்பன் - நிசும்பன், ரத்தபீஜன் ஆகிய அசுரர்களை மாய்த்த அம்பிகை இறுதியாக மஹிஷாசுரனையும் வதைத்த புராணம் இந்த வழிபாட்டுக்கு ஆதாரமாக இருக்கிறது. சிவனோ, மஹாவிஷ்ணுவோ, பிரம்மனோ ஏதோ ஒரு கட்டத்தில் அசுரர்களுக்கு வரமளித்திருந்ததால், அவர்களைத் தாமே அழித்தல் நேர்மையாகாது என்பதால், துர்க்கையிடம் அந்தப் பொறுப்பையும், தம் ஆயுதங்களையும் ஒப்படைத்து அனுப்பி வைத்தார்கள். துர்க்கையும் பேரழகியாக உருக்கொண்டு பூலோகம் வந்தாள்.

அவளைப் பார்த்த சண்டன்- முண்டன், சும்பன் - நிசும்பன் மற்றும் ரத்தபீஜன் ஆகிய அரக்கர்கள் அவள் மீது கொண்ட காம வெறியால் தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு அழிந்தார்கள். இந்த துர்க்கை, மகிஷன் என்ற மிகக் கொடிய அரக்கனையும் வதைத்தாள். அதனாலேயே மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள். இவ்வாறு தன் பராக்கிரமத்தை நிரூபித்த அம்பிகையை வழிபட்டால் எந்த அச்சுறுத்தலையும், பயத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெற மன, உடல் உறுதி கிட்டும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மஹாலக்ஷ்மியை வழிபடுவது வழக்கம்.

செல்வம் என்பது நிலையில்லாதது. இன்று ஒருவருக்குச் சொந்தமான செல்வம், நாளை இன்னொருவருக்குடையதாக மாறிவிடுகிறது. இந்த நிலையற்ற தன்மையைக் குறிப்பது போலதான் மஹாலக்ஷ்மி தாமரை மலர் மீது நின்றிருக்கிறாள். மிக மென்மையான, நீரோட்டத்தின் வேகத்தில் அல்லாடக்கூடிய மலர் மீது அமர்ந்தும் கொள்ளாமல் நின்றிருக்கிறாள் லக்ஷ்மி என்றால், செல்வம் ஸ்திரமானதல்ல என்பதை நிரூபிக்கத்தானே!

ஆனால், யாருக்கு தயாள குணம் இருக்கிறதோ அவரிடம் சேரத்தான், செல்வமாகிய லக்ஷ்மி விரும்புகிறாள். அப்போதுதானே அவரிடமிருந்து, இல்லாதவர்களுக்கும் அது பகிர்ந்தளிக்கப்படும்!

இந்த உண்மையை ஆதிசங்கரர் ஒரு சம்பவத்தால் நிலைநாட்டினார். துறவறம் பூண்ட அவர், அந்த நியதிப்படி ஒவ்வொரு வீடாகச் சென்று ‘பவதி பிக்ஷாந்தேஹி’ என்று சொல்லி பிட்சைப் பொருட்களை யாசித்துப் பெற்று அதையே அன்றைய உணவாகக் கொள்வார்.

ஒருசமயம். ஒரு பெண்மணி தன்னிடம் இருந்தது இதுதான் என்று சொல்லி ஒரு நெல்லிக்கனியை அவருக்கு அளித்தாள். கடுமையான ஏழ்மை நிலையிலும் தானம் அளிக்கும் அவளுடைய பெருங்குணத்தைப் பாராட்டிய ஆதிசங்கரர், மிகவும் மகிழ்ந்து, சர்வமாதாவான ஜகதாம்பிகையை பிரார்த்தனை செய்து ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடி, அவளுடைய வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகளால் நிரம்பும்படி செய்தார்! அந்த மஹாலக்ஷ்மியை நான்காம் நாள் வழிபடுவது செல்வச் செழிப்புக்கு வழி வகுக்கும்.

நவராத்திரி வைபவத்தின் ஐந்தாம் நாளும் மஹாலக்ஷ்மிக்கு உரியதே.

பண்டரிபுரத்தில் வாழ்ந்து வந்த சீனிவாச நாயக் மிகவும் கஞ்சன். யாருக்கும் எள்ளளவும் தானம் செய்யவோ, உதவி புரியவோ மாட்டான். ஆனால், அவனுடைய மனைவி சரஸ்வதி மிகுந்த தயாள குணம் உள்ளவள். ஒரு கட்டத்தில் அவனுடைய கருமித்தனத்தை ஒரு சம்பவத்தால் வெளிப்படுத்தி சீனிவாசனை மனம் திருந்த வைத்தார் பண்டரிபுரக் கடவுளான பாண்டுரங்கன். உடனே அவன், தன் பொருள், சொத்துகள் அனைத்தையும் இல்லாதோருக்கு வாரி வாரி வழங்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அனைத்தும் இழந்து தான் வறியவனாகிப் போக, ‘பாக்யாத லக்ஷ்மி பாரம்மா…’ என்று ஸ்ரீ ராகத்தில் பாடல் இயற்றி அம்பிகையின் கருணையை யாசித்தான். நாளடைவில் அவனே புரந்தரதாசன் என்றும் பெயர் பெற்றான், பல நூறு கீர்த்தனைகளை இயற்றினான்.

இப்படி அருளக்கூடிய மஹாலக்ஷ்மி. நாம் விரும்பும் அனைத்து செல்வங்களையும் அருள்வாள்.நவராத்திரி கொண்டாட்டத்தின் ஆறாம் நாளும் மஹாலக்ஷ்மிக்குரியதே. கோபக்கார முனிவர், துர்வாசர். ஒருமுறை அவரை இந்திரன் அலட்சியப்படுத்தியதால் வெகுண்டு, ‘உன்னுடைய உலகம் இனி அசுரர் வசமாகும். உன்னிடம் இருக்கும் அனைத்து ஐஸ்வர்யமும் உன்னை விட்டுப் போய்விடும், போ’ என்று சாபமிட்டுவிட்டார். அப்போதே அனைத்தையும் இழந்துவிட்ட இந்திரன் பதறிப்போனான். உடனே தன் குருவான பிரஹஸ்பதியை சரணடைந்தான்.

அவனுக்கு ஆறுதலளித்த பிரஹஸ்பதி, மஹாலக்ஷ்மி பூஜையையும், நவராத்திரி விரதத்தையும் மேற்கொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார். அவ்வாறே அவன் அம்பிகையை வழிபட, அன்னையும் துர்வாசரை சமாதானப்படுத்தி, இந்திரனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டாள். முனிவரும் அப்படியே செய்ய, இந்திரன், தான் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றான். இழந்த பொருட்களை மீட்டுத் தரும் சகல வல்லமை படைத்த மஹாலக்ஷ்மியை இந்த ஆறாம் நாளில் வணங்கி வழிபடுவது சம்பிரதாயம்.

அடுத்த மூன்று நாட்களும் அன்னை சரஸ்வதிதேவியை வழிபடும் தினங்கள்.

பிறவியிலேயே பேச்சுத் திறன் இழந்திருந்த குமரகுருபரர் என்ற பக்தனுக்கு சொல்வளம் அருளியவள் சரஸ்வதிதேவி. அன்னையின் அருளால் மதுரை மீனாட்சி அம்மையைப் போற்றி, ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’என்ற நூலை இயற்றினார் அவர். அதுமட்டுமல்ல, காசி மாநகருக்குச் சென்ற அவர், அராபிய மொழியிலும் தேர்ச்சிப் பெற்று, சுல்தானுடன் உரையாடி அவருடைய தீயப் போக்கை மாற்றினார். கலைவாணியின் அருளுக்குப் பாத்திரமானவர்களில் குமரகுருபரர் ஒரு சிறந்த உதாரணம். ஆகவே இந்த நன்னாளில் சரஸ்வதி அன்னையை துதித்தால் கல்வி, கலைகளில் மேன்மையுறலாம். ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, அனுபவக் கல்வியாலும் சிகரத்தைத் தொட சரஸ்வதி அருள்வாள்.

நவராத்திரி வைபவத்தின் எட்டாம் நாளும் சரஸ்வதிக்குரியதே. காளிதாசன் தன்னிகரற்ற, தரணி போற்றும் ஏற்றமிகு புலவர். மன்னன் போஜராஜன் சபையில் இருந்த

எட்டு கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். சரஸ்வதி தேவியின் அருளால் அந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் அவருடைய ‘மூகர்’ என்ற அடுத்த பிறவியிலும் அன்னையின் கருணையை அனுபவித்தார். ‘மூக பஞ்ச சதீ’ என்ற அம்பிகையைப் போற்றும் நூலையும் இயற்றினார்.இப்படி அறிவிலியையும் அறிவார்ந்த கல்விமானாக வளர்ப்பதில் சரஸ்வதி தேவிக்குப் பேரார்வம் உண்டு. கல்விக் கடலின் கரை காண, தோணியாவாள் கலைவாணி.

ஓன்பதாம் நாளையும் நவராத்திரி வைபவம் சரஸ்வதிக்கே அர்ப்பணிக்கிறது.

காசி மாநகரில் மண்டனமிஸ்ரர் என்ற ஞான பண்டிதரை வாதத்தில் வென்று தன் தத்துவமே சரியானது என்று நிரூபித்தார் ஆதிசங்கரர். இதற்கு அவருக்கு உறுதுணையாக நின்றாள் அன்னை சரஸ்வதி. இவ்வாறு கல்வியின் மேன்மையைத் தன் பக்தர்கள் மூலமாக நிலைநிறுத்திய சரஸ்வதி தேவியை இன்று மூன்றாவது நாளாக நாம் போற்றி மகிழ்கிறோம்.

இவ்வாறாக நவராத்திரி வைபவம் நிறைவடைந்த அடுத்த நாள் (பத்தாம் நாள்) விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. முந்தின நாள் சரஸ்வதி முன் சமர்ப்பித்த புத்தகம், எழுதுபொருள், கருவிகள் போன்றவற்றை புனர்பூஜை செய்து எடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டுப் பெரியவர்கள் கரங்களில் தம் புத்தகங்களைக் கொடுத்து அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் திரும்பப் பெற்றுக் கொள்வது வழக்கம். இதனால் கல்வியில் அபிரிமிதமான முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடியும்.

இதே நாளில், முதன்முதலாக பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள். அதாவது, சரஸ்வதியை வழிபட்டு, ஒரு தாம்பாளத்தில் நெல் பரப்பி, அதில் குழந்தையின் கைவிரலைப் பிடித்து ‘அ…ஆ…’ எழுதச் சொல்லிக் கொடுக்கும் சம்பிரதாயம். இதுவே வித்யாரம்பம் ஆகும். தெய்வீக கொண்டாட்டம் என்பதால், புராண, இதிகாசங்களின்படி மகிஷன் முதலான அரக்கர்கள் மாய்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் பூரணத் திருநாளாகவும் விஜயதசமி அமைகிறது.

அதோடு ஒரு பெண் பூவாகவே இருந்தாலும், அவளும் புயலாக மாறுவாள் என்றும் இந்த சம்பவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பாண்டவர்கள் விஜயதசமித் திருநாளில் அம்பிகையை ஆராதிக்க, அதன் பலனாக அவர்கள் கௌரவர்களை வெற்றி கண்டார்கள். ஆகவே, இந்த விஜயதசமித் திருநாளில் துர்க்கை-மஹாலக்ஷ்மி-சரஸ்வதி ஆகிய அம்பிகையின் மூன்று அம்சங்களையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்க்கைக்கு அது அடித்தளமாகும்.

ப்ரபுசங்கர்