Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கருணை தெய்வம் காமாட்சி அம்மன்

‘தாய்மையில்தான் பெண்மை முழுமை அடைகிறது’ என்பார்கள். ஒரு கருவைத் தான் சுமப்பதும் அதனை உயிரும், உடலும் கொண்ட குழந்தையாகப் பெற்றெடுப்பதுமான அனுபவத்தில், அவளே அறியாமல் அவளுடைய உள்ளத்தில் அன்பு, பாசம் எல்லாம் தாமாக உருவாகிப் பொங்கிப் பெருகும். தன் குழந்தை வளர வளர அதற்குத் தான் காட்டும் அன்பை, அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கும் அவள் பரவலாக்குகிறாள். தன் சுற்றம், உறவு என்று இவ்வாறு விஸ்தரிக்கும் அவளுடைய பாசம், சம்பந்தமேயில்லாதவர் மேலும் பரவுவதுதான் தாய்மையின் சிறப்பு.

மனிதத் தாய்க்கே இத்தகைய பண்பு உண்டென்றால், ஜகத்தையே காக்கும் அகிலாண்டேஸ்வரியின் பாச அருள் எல்லா உயிர்களிடத்தும் சமமாகப் பரவும் என்பதுதானே யதார்த்தம்?

ராமனும் சரி, கிருஷ்ணனும் சரி அதற்கு முந்தைய அவதாரங்களைப் போல அல்லாமல் தத்தமது தாய்க்கு மகனாகப் பிறந்தவர்கள். தூணைப் பிளந்து கொண்டு வந்த நரசிம்மருக்கு, அந்தத் தூண்தான் தாய் என்பார்கள்! இதனாலேயே இந்த அவதாரங்கள் நல்லிதயம் கொண்டனவாகவும், தர்மத்தை நிலைநாட்ட அக்கிரமக்காரர்களை அழிப்பதாகவும் அமைந்திருந்தன.

இப்படி கடவுளரையே பெற்ற தெய்வத் தாய்கள் வழி வந்த எல்லா தாயாரும் அதே அன்பு, கருணையோடு திகழ்கிறார்கள். அவர்கள் தேவர்களானாலும் சரி, மானுடர்களானாலும் சரி.

அந்த வகையில் காமாட்சி அம்மனும் தன் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிக்கிறாள். ‘கருணையும் அன்பும் நிறைந்த கண்களைக் கொண்டவள்’ என்பது ‘காமாட்சி’ என்ற சொல்லின் பொருள். காம என்றால் அன்பு, பாசம், விருப்பம்; அட்சி என்றால் கண். கா மற்றும் ம என்ற சம்ஸ்கிருத அட்சரங்களைத் தன் கண்களாகக் கொண்டவள் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.

கா என்றால் சரஸ்வதி, மா என்றால் மகேஸ்வரி, க்ஷி என்றால் மஹாலக்ஷ்மி. ஆக, முப்பெரும் தேவியரின் சக்தி பொங்க அருள்பாலிப்பவள் காமா(ட்சி)க்ஷி என்றும் இன்னொரு விளக்கம் சொல்லப்படுகிறது.

பராசக்தியின் ஓர் அம்சமாக காஞ்சிபுரத்தில் அருளாட்சி புரிகிறாள், அன்னை. ‘காஞ்சிபுரம்’ தலத்தை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருபவர் காமாட்சி அம்மன்தான்.இந்த காமாட்சி அம்மனுக்குத் தனிச் சிறப்புண்டு. ஆமாம், காஞ்சிபுரத்தில் அநேக சிவாலயங்கள் இருந்தாலும், அந்தக் கோயில் எதிலுமே அம்மனுக்கு என்று தனி சந்நதி இல்லை. ஊருக்கும், அடுத்து உலகத்துக்கே பேரருள் புரிய காமாட்சி அம்மன் தனிக் கோயில் கொண்டிருக்கும்போது, தனியே வேறு சந்நதி எதுவும் வேண்டுமா என்ன?

பிரதானமாக சொல்லப்படும் ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் இந்த காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இது ‘காமகோடி சக்தி பீடம்’ என்று வழங்கப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த சிவபெருமானின் கோபத்தைத் தணிக்க, தோள் மீது அவர் சுமந்திருந்த தாட்சாயணி என்ற அம்பிகையின் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டுமாறு தன் சக்கராயுதத்தை ஏவினார் மஹாவிஷ்ணு. அந்த வகையில் அம்பிகையின் நாபி பாகம் விழுந்த தலமாக இப்பகுதி கருதப்படுகிறது.

ஒரு தாயின் நாபிப் பகுதி என்பது அவளுடைய கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியிலும், பராமரிப்பிலும் பெரிதும் துணை புரியும் உடல் பாகம். இந்தப் புராண சம்பவத்திலிருந்தே காமாட்சி அம்மன் பரிபூரண தாயுள்ளம் கொண்டவள் என்பதும் புரிகிறது.அதேசமயம், பண்டாசுரன் என்ற அசுரனை அம்பிகை காமாட்சி வதம் செய்தபின் அந்தக் கோபம் கலையாமல் இத்தலத்தில் எழுந்தருளினாள்; உக்கிரம் தணியாமல், கயிலைநாதனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்றபடி தவம் இயற்றி அவர் அருளைப் பெற்றாள் என்று தல புராணம் சொல்கிறது. (அம்பாள் கருவறையில் இவ்வாறு ஒற்றைக் காலில் தவம் புரியும் அம்மனின் சிற்பம் ஒன்று இருக்கிறது.

இதை எல்லா பக்தர்களும் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரம் தெரிந்து கொண்டவர்கள் அர்ச்சகரிடம் கேட்டுக் கொண்டால், அவர் காட்டும் தீபாராதனை ஒளி மூலம் அந்த விக்ரகத்தை தரிசிக்கும் பாக்கியத்தை அடையலாம்.) கடுந்தவம் இயற்றியதால் அம்பிகைக்கு ஈசனருள் கிட்டியது என்றாலும், இந்தக் கலியுகத்தில், பண்டாசுரனைப் போல பல கயவர்கள் மிகுந்துவிட்டதால் தொடர்ந்து கடும் கோபம் கொண்டிருந்தாள் அம்பிகை.

அந்த உக்கிரத்தைக் குறைப்பதற்கும், நல்லோர் யாரையும் அந்தக் கோபம் தகித்து விடக்கூடாதே என்ற பரிவாலும், ஆதிசங்கரர் அம்மனுக்கு முன்னால்ஸ்ரீ சக்கரம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். கூடவே ‘ஆனந்த லஹரி’ ஸ்லோகங்களைப் பாடியும் அன்னையை மகிழ்வித்தார். அதற்குப் பிறகு இந்தத் தலத்தில் சாந்தமடைந்த அம்பிகை தன் பக்தர்களின் கோடானுகோடி விருப்பங்களை (காமம்) நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் மணம் பரப்பி வருகிறாள்.

காமாட்சி தேவியின் கரங்களில் கரும்பும், புஷ்ப பாணமும் இருப்பதன் காரணம் என்ன? அது காதல் தேவன் மன்மதனின் ‘ஆயுதங்கள்’ அல்லவா? மக்களிடையே வித்தியாசம் பாராமல் அனைவர் மனதிலும் காதல் என்ற காம உணர்வைத் தூண்டி விடுபவன் அவன். அதனால் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள இயலாத தன் பக்தர்களை அவனிடமிருந்து காப்பாற்றவே அந்த இரு ஆயுதங்களையும் மன்மதனிடமிருந்து காமாட்சி பறித்துக் கொண்டாள் என்று காஞ்சி மஹா பெரியவர் காரணம் சொல்லியிருக்கிறார்.

நான்கு யுகங்களின் நாயகி காமாட்சி என்றால் அது மிகையல்ல. ஆமாம், துர்வாச முனிவர் இந்த அம்பிகையை இரண்டாயிரம் ஸ்லோகங்களால் துதித்திருக்கிறார். அவர் வாழ்ந்தது கிருதா யுகம். அடுத்ததான திரேதா யுகத்தில், ஆயிரத்து ஐநூறு ஸ்லோகங்களில் அன்னையை போற்றி வணங்கியிருக்கிறார் பரசுராமர்; மூன்றாவதான துவாபர யுகத்தில், தௌம் யாசார்யார் (மகாபாரதத்தில், பாண்டவர்களின் குருவாகவும், அவர்களுடைய பதினான்கு ஆண்டு வனவாசம் மற்றும் ஓராண்டு அஞ்ஞாதவாச காலங்களில் அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தவர்) காமாட்சி அன்னையை ஆயிரம் ஸ்லோகங்களால் வழிபட்டிருக்கிறார்; நிறைவாக இப்போதைய கலியுகத்தில், ஆதிசங்கரர் ஐநூறு ஸ்லோகங்களை இயற்றி அன்னையை பணிந்திருக்கிறார்.

ஆதிசங்கரரின் ‘காமாட்சி ஸ்தோத்திரங்கள்’ என்ற தேனாற்றிலிருந்து ஒரு துளி:

காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்

கேயூர ஹாரோஜ்வலாம்

காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்

கஸ்தூரிகா சர்ச்சிதாம்

கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்

காருண்ய கல்லோலினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்.

‘‘காஞ்சிபுரம் என்ற ஒப்பற்ற தலத்தில் அருள்புரியும் காமாட்சி தேவி, ரத்ன ஆபரணங்கள் அணிந்து அழகு மிளிர காட்சி வழங்குகிறாள். காஷ்மீரத்தின் தனிப் பெருமையான குங்குமப் பூ போன்ற சிவந்த வண்ணம் கொண்டவள் அவள். அவளுடைய அழகிய மார்பகங்களை மேலாடை பெருமையுடன் அலங்கரிக்கிறது. அன்னையின் கஸ்தூரி மணம் எங்கும் பரவுகிறது. கல்ஹர மலர்களால் (ஒருவகை அல்லி மற்றும் தாமரை) அர்ச்சிக்கப்படுபவள் அவள். வேண்டியன எல்லாம் தரும் கற்பக விருட்சம் போல நன்மைகள் பலவற்றை பக்தர்களுக்கு வாரி வாரி வழங்குபவள். அலை அலையாய் பொங்கிப் பெருகும் நதி போன்று கருணை பெருக்கும் தாயே, காஞ்சி மாநகரில் வாசம் புரியும் அம்பிகையே, உன்னை நான் சரணடைகிறேன்’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொதுப் பொருள்.

கோயிலில் அம்மன் தென்கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். தென்கிழக்கு திசை (ஈசானிய மூலை) என்பது நீர்வளத்துக்கு உகந்த பகுதி என்கிறது வாஸ்து சாஸ்திரம். வேத வியாசர் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படும் இந்த அம்மன், பஞ்ச பிரம்மாக்கள் என்று குறிப்பிடப்படும் பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியோரைத் தனக்கு ஆசனமாகக் கொண்டிருக்கிறாள். நான்கு கரம் கொண்ட நாயகி இவள். பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் ஆகியன அந்தக் கரங்களை அலங்கரிக்கின்றன. அம்மனை நவகிரகங்களும் தஞ்சமடைந்திருக்கின்றன. அதனால் அன்னையின் பக்தர்கள் எந்தவகை கிரக தோஷத்தாலும் பாதிக்கப்படுவதில்லை; அவரவர் ஜாதகப்படி அவ்வாறு பாதிக்கப்பட்டாலும், விரைவில் நிவாரணம் அடைந்து விடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறார். ஆமாம், கோயில் நகரம் என்று சொல்லப்படும் காஞ்சியில் உள்ள எல்லா கோயில்களிலும், அந்தந்த கோயில் திருவிழாவின் போது, உற்சவ மூர்த்திகள், நேராக காமாட்சி அம்மன் கோயிலை வலம் வந்து செல்கிறார்கள். தத்தமது சொந்தக் கோயிலை விட, அம்மன் கோயிலை இவ்வாறு அவர்கள் வலம் வருவது ஆண்டாண்டு காலப் பழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சம், காஞ்சி கோயில்கள் எல்லாமே காமாட்சி அம்மன் கோயிலை நோக்கியபடியே அமைந்திருப்பதுதான்!

மானுட பக்தர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கே அருள் புரிந்தவள் காமாட்சி அம்மன். அவர்களில் ஒருவர் மஹாலட்சுமி. தன் யவ்வனம் பற்றி அவளுக்குத் தனி அகங்காரமே உண்டு. ஆனால், அது தன் கணவனாகிய மஹாவிஷ்ணுவிடமே காட்டப்பட்ட போது அவர் வெகுண்டார். தன் கறுமை நிறத்தை அவள் கேலி செய்ததால், அவள் தன் அழகை முற்றிலுமாக இழந்து வருந்த வேண்டும் என்று சபித்து விட்டார். உடனே மஹாலட்சுமி, அரூப லட்சுமியாக (உருவமற்றவளாக) மாறிவிட்டாள். கோபம் தணிந்து அவள் மேல் அனுதாபம் கொண்ட மஹாவிஷ்ணு, காஞ்சி காமாட்சியை சரணடைந்தால் அவள் நல்வழி காட்டுவாள் என்று சாப விமோசனத்தையும் தெரிவித்தார்.

அதன்படியே அவளும் நடந்து கொள்ள, தன் சகோதரனின் மனைவியான அவளை அப்படியே அரவணைத்து ஆறுதல் அளித்தாள் அன்னை காமாட்சி. இந்த அரூப லட்சுமியின் சந்நதி, காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தின் இடது பக்கம், வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவள் நோய்களைத் தீர்க்கும் ஆரோக்கிய தேவதையாகவும், அனைத்து வளங்களையும் அருளும் அன்னையாகவும் வழிபடப்படுகிறாள். அரூப லட்சுமி, ‘அஞ்சன காமாட்சி’ என்றும் போற்றப்படுகிறாள்.

காமாட்சி அம்மனுக்கு சாத்தப்படும் அர்ச்சனை குங்குமம், முதலில் அரூப லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை நம்பிக்கையுடன் அணியும் பக்தர்கள் தாம் இழந்த செல்வம், அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றை மீட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.இரண்டாமவர் மஹாவிஷ்ணு. தான் சொன்னபடி மஹாலட்சுமி தவம் புரிகிறாளா என்பதைப் பார்க்க வந்த அவர், அவளுக்குத் தெரியாமல் ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்து நின்று ரகசியமாக கவனித்தாராம்! அதனால் அவர் ‘கள்வன்’ - கள்ளப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

காமாட்சி அம்மன் சந்நதிக்குப் போகும் நுழைவாயிலின் இடப்புறத்தில் உள்ளடங்கி அமைந்திருக்கிறார்    ஸ்ரீகள்வன். இவருக்கு இடப்புறத்தில் தாயார் அஞ்சிலவல்லி நாச்சியார் காணப்படுகிறார். வைணவ மரபுப்படி, இந்த கள்வன் சந்நதி (கோயில்?), 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு, வைணவப் பெருமக்களால் போற்றி வணங்கப்படுகிறது.காமாட்சி அம்மனை வழிபடுவோர் திருமண பாக்கியம், குழந்தைப் பேறு மற்றும் நிம்மதியான வாழ்க்கையையும் அடைந்து மகிழ்வர் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

ப்ரபுசங்கர்