சில நேரங்களில் மிகப்பெரிய தத்துவங்கள் கூட திரைப்பட பாடல்கள் மூலம் நமக்குக் கிடைத்து விடுகிறது. அப்படித்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு அழகான பாடலை
எழுதினார். அதில் ஒரு சரணம்.
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்?
‘‘கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும்”
‘‘கேள்விதான் மிஞ்சும்”
என்கிற சொல்லாடல் அற்புதமானது.
மனிதனின் ஆசைக்கு அல்லது தேடலுக்கு என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது. இன்றைக்கு ஒரு கேள்விக்கு (தேவைக்கு) விடை கிடைத்துவிட்டாலும், நாளை விடியும்போது அடுத்த கேள்வி
அவனுக்குள் எழுந்துவிடுகிறது.
எதையோ அடைந்துவிட்ட திருப்தி ஒரு வினாடி கூட நிலைப்பதில்லை; அடுத்த இலக்கை நோக்கியோ அல்லது அடுத்த சந்தேகத்தை நோக்கியோ அவனது ஆன்மா துடித்துக்கொண்டே
இருக்கிறது.
இதுவே மனித இயற்கையின் பலவீனமும் பலமும் ஆகும்.மனிதர்கள் மாறுவார்கள், காலங்கள் ஓடும்; ஆனால் மனிதனை மனிதனாக இயங்கச் செய்யும் ‘‘கேள்வி” என்றைக்கும் அழியாமல் தங்கும்.
வாழ்வியலுக்கு பொருந்தும் இதே தத்துவம் கடவுள் தேடலுக்கும் பொருந்தும். குறிப்பாக கடவுள் பற்றிய தத்துவம் எப்பொழுதும் ஒரு கேள்வியில் தான் தங்கி இருக்கும். அதற்கு ஒரு விடையைத் தேடினால் அந்த விடையிலும் ஒரு கேள்விதான் மிஞ்சி இருக்கும்.
மனிதன் தன் அறிவுக்கெட்டிய வரை கடவுளுக்குப் பல வடிவங்களையும், பெயர்களையும், விளக்கங்களையும் கொடுத்துவிட்டான். வேதங்கள், புராணங்கள், அறிவியல், தத்துவம் என எத்தனையோ தளங்களில் கடவுளை வரையறுக்க முயல்கிறான்.
ஆனால், எந்த ஒரு விடையும் மனித மனதின் முழுமையான தாகத்தைத் தீர்ப்பதில்லை. ஒரு விடை கிடைத்துவிட்டதாக நாம் திருப்தியடையும் கணத்தில், அந்த விடையிலிருந்தே புதியதொரு கேள்வி முளைத்துவிடுகிறது.
இதோ கடவுளைப் புரிந்துகொண்டுவிட்டேன்; அல்லது ஆன்மிகத்தின் உச்சத்தை அடைந்துவிட்டேன் என்று எப்போதெல்லாம் மனிதன் நினைக்கிறானோ, அப்போதெல்லாம் அவனது அறியாமை மேலும் பெரிதாக வெளிப் படுகிறது.‘‘பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தி இதுதான்” என்று ஒரு முடிவுகட்டிவிட்டால், ‘‘அந்தச் சக்திக்கு ஆதாரம் யார்?” என்ற அடுத்த கேள்வி எழும்.
இந்த முரண்பாடுதான் ஆன்மிகத் தேடலின் அழகு. இங்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது; எல்லாமே தொடர்ச்சியான அரைப்புள்ளிகளும் கால்புள்ளிகளும் முக்கால்புள்ளிகளும்தான்.
விடையைத் தேடி விரிந்தது பயணம் - அங்கு
விடையின் முடிவில் விளைந்தது கேள்வி!
‘‘கடவுள் இவர்தான்” கையில் கிடைத்தெனக்
கடந்திட நினைத்த கணமதில் தோன்றும்;
‘‘முடியவில்லையே” என்றொரு தத்தளிப்பு - அந்த முடிவற்ற தேடலே முழுமைப் பிறப்பு!
அப்படியானால், கடவுளைப் பற்றிய தேடல் எப்போது முடிவுக்கு வரும்? அப்போது என்ன உண்மையை உணர்வோம்? ஒரே பதில். நீங்கள் சொல்வதற்கு இருக்க மாட்டீர்கள் (ஸ்தூலமாக). அப்படியிருந்தால் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். பருப் பொருளாக(ஸ்தூல உடல்) நாம் இருக்கும் வரை, இந்த வினாக்களும் தவிப்புகளும் தொடரும்.
அந்தத் தேடல் முழுமையடைந்து, இறுதி விடை நமக்குத் தெரியவரும் தருணம் நாம் இந்த ஸ்தூல உடலை விட்டு நீங்கும் தருணம் (அல்லது அகங்காரமும் ‘நான்’ என்ற எண்ணமும் முற்றிலும் அடங்கும் தருணம்) மட்டுமே!
ஆனால், அப்படிப்பட்ட ஒரு இறுதிப் பேருண்மை பிடிபடும்போது, அதைப் பகிர்ந்துகொள்ள அல்லது விவரிக்க ‘நாம்’ (நம்முடைய அகந்தையும் ஸ்தூல வடிவமும்) அங்கு இருக்கமாட்டோம்.மெய்யை அடைந்தவன் மௌனமாகிவிடுகிறான்;
மௌனமானவன் அதை வெளியே வந்து சொல்வதில்லை. கேள்வி கேட்கும் மனிதன் இருக்கிறான்; ஆனால் இறுதி விடை அவனுக்கு முழுமையாகப் பிடிபடும் போது அந்த மனிதன் என்ற வடிவம் கரைந்துவிடுகிறது.இதை ஒரு வாழ்வியல் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வோம்.
ஒரு திருவிழா நடக்கிறது. குழந்தை தாயை விட்டுப் பிரிந்துவிட்டது. தவிக்கிறது.தாயைத் தேடித் தவித்த குழந்தை, ஒவ்வொருவரைப் பார்த்தாலும் என் தாய் எங்கே என்று கேட்கும். கண்ணீ ருடன் தேடும். அந்தத் தேடல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஊரெல்லாம் தேடும்.; கண்களில் நீரோடு ஒவ்வொரு
வரிடமும் கேட்கும்.கோபப்படும்., அழும்.
அதுபோலத்தான் மனிதனும் கடவுளை வெளியே தேடும்போது நூறு கேள்விகளோடும், வாதங்களோடும், நூல்களோடும், சொற்பொழிவுகளோடும் அலைகிறான். கடவுளைப் பற்றி மணிக்கணக்காகப் பேசுகிறான், விவாதிக்கிறான்.
இப்பொழுது குழந்தை விஷயத்திற்கு வாருங்கள். சட்டென்று தாய் தென்பட்டு விடுகிறாள்.குழந்தை தன் தாயைக் கண்டடைந்து அவளின் அரவணைப்பில் ஐக்கி யமாகிவிட்டால்? அப்புறம் அதற்கு உலகமும் தேவையில்லை, வாதங்களும் தேவையில்லை. தாயின் ஸ்பரிசத்தில் அதன் அத்தனை கோபமும் அழுகையும் அன்பாகக் கரைந்துவிடுகிறது.
அதுபோலத்தான், ஆன்மா தன் மூலத்தை (கடவுளை) அடைந்துவிட்ட நிலையில், பேச்சுகளும் விவாதங்களும் தேவையற்றதாகி விடுகின்றன.எதையெல்லாம் தேடி அலைந்தோமோ, எதைப் பற்றியெல்லாம் ‘‘இதுவா, அதுவா?” என்று கேள்வி கேட்டோமோ, அது நம்முள் கை கூடிவிட்ட தருணத்தில் மனம் அமைதி கொள்கிறது.
தாயின் மடியில் அமர்ந்த குழந்தைக்குப் பிறகு பேச்சு எதற்கு? வெறும் ஆனந்தக் கண்ணீரும், சொல்லில் அடங்காத மௌனமும் மட்டுமே எஞ்சும்.தேடலின் இரைச்சலில் தொடங்கி, கண்டடைதலின் பேரமைதியில் (சும்மா இருத்தலில்) முடியும் இந்தத் தத்துவம் தான் கடவுள் தத்துவம்.இதில் இன்னொரு கோணமும் உண்டு. திருவிழாவில் குழந்தை மட்டும் தாயைத் தேடவில்லை. தாயும் குழந்தையைத் தேடுகிறாள்.தேடல் ஒருதலைப்பட்சமானது அல்ல; அது பரஸ்பரமானது. மகா ஞானிகள் மிக நுட்பமாக இதைச் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் இறைவனை உண்மையிலேயே தேடுங்கள். காரணம் இறைவனும் உண்மையிலேயே உங்களைத் தேடுகின்றான்.
ஈஸ்வரலாபம் சேதனனுக்கு. (ஜீவாத்மாவுக்கு)
சேதன லாபம். (ஜீவாத்ம லாபம் ஈஸ்வரனுக்கு)
அதாவது தாயைப் (கடவுளை)ப் பெற்றதால் குழந்தைக்கு(ஜீவனுக்கு) மகிழ்ச்சி.
குழந்தையைப் பெற்றதால் தாய்க்கு மகிழ்ச்சி.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையேயான உறவு இதுதான். பக்தன் இறைவனை அடைவதில் அவனுக்கு முக்திப்பேறு கிடைக்கிறது; அதே நேரத்தில், தன் பக்தனின் ஆன்மாவைத் தழுவிக்கொள்வதில் இறைவனும் பூரிப்படைந்து நிறைவடைகிறான். இருவரின் தேடலும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் அந்தத் தருணம்தான் பரிபூரணமான ஆனந்த நிலை.நாம் கடவுளைத் தேடி கோவில்களுக்கும், ஆன்மிக நூல்களுக்கும், தத்துவங் களுக்கும் செல்வது ஒருபுறமிருக்க, நம்மைத் தேடி அந்தப் பரம்பொருளும் பல வடிவங்களில் வந்துகொண்டே இருக்கிறான்.
பல ஞானிகள், ‘‘நான் கடவுளைத் தேடவில்லை; கடவுள்தான் என்னைத் தேடிப் பிடித்துக்கொண்டார்” என்று கூறுவதன் அர்த்தம் இதுதான்.


