Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சகலத்தையும் அறிந்துள்ள தேவன்

ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. அந்த சிங்கம், காட்டின் ராஜாவாக அனைவராலும் பயபக்தியுடன் பார்க்கப்பட்டது. தினமும் மதிய நேரத்தில் அது ஒரு பெரிய மரத்தின் கீழ் வந்து ஓய்வெடுத்து தூங்கும். அதே மரத்தின் மேலே ஒரு குறும்புக்கார குரங்கு வசித்து வந்தது. சிங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரமெல்லாம், அந்த குரங்கு மெதுவாக கீழே இறங்கி வந்து, சிங்கத்தின் காதை தட்டிவிட்டு வேகமாக மீண்டும் மரத்தின் மேல் ஏறிப்போகும். திடீரென எழுந்த சிங்கம் சுற்றிலும் பார்த்து, யாரையும் காணாது மீண்டும் அமைதியாக படுத்துக்கொள்ளும். இது குரங்கிற்கு ஒரு விளையாட்டாக மாறியது. தினமும் இதையே செய்து,

“காட்டின் ராஜாவையே நான் ஏமாற்றுகிறேன். என்னை யாராலும் பிடிக்க முடியாது” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. சிங்கம் எதையும் அறியவில்லை என்று நினைத்து, தனது புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்ந்தது. இந்த சம்பவங்களை ஒரு நரி தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டே இருந்தது.

குரங்கை பிடிக்க இது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த நரி, ஒரு நாள் சிங்கம் தூங்கும் நேரத்தில் புதருக்குள் மறைந்து காத்திருந்தது. வழக்கம் போல குரங்கு கீழே இறங்கி வந்து சிங்கத்தை நெருங்கியது. அப்போது நரி திடீரென பாய்ந்து குரங்கை தாக்க முயன்றது. ஆனால் அடுத்த நொடியே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. இதுவரை அமைதியாக படுத்திருந்த சிங்கம் மின்னல் வேகத்தில் எழுந்து, தனது பலமான காலால் நரியை பலத்த அடியிட்டு தூரம் தூக்கி எறிந்தது. பயந்த நரி, உடனே அங்கிருந்து ஓடிப்போயிற்று. இதையெல்லாம் பார்த்த குரங்கு அதிர்ச்சியில் உறைந்துபோனது.

“சிங்கத்திற்கு எல்லாம் தெரிந்திருந்ததே!

நான் செய்த ஒவ்வொரு சேட்டையையும்

அது கவனித்திருந்ததே!” என்று உணர்ந்து பயத்தில் மீண்டும்

மரத்தின் மேல் ஏறிக்கொண்டது.

பிரியமானவர்களே, குரங்கின் சேட்டையை சிங்கம் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், சரியான நேரம் வரும் வரை அது அமைதியாக இருந்தது. அதுபோலவே, தேவன் சில நேரங்களில் அமைதியாக இருக்கிறார் என்பதால், அவர் எதையும் அறியவில்லை அல்லது செயல்படவில்லை என்று நாம் நினைக்கக்கூடாது. நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் தேவன் அறிந்திருக்கிறார். நம்முடைய கண்ணீர், வேதனை, ஜெபம், போராட்டம் அனைத்தையும் அவர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். சரியான நேரத்தில் அவர் நமக்காக செயல்படுவார். மனிதர்கள் நம்மை கைவிட்டாலும், தேவன் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார்.

“தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (1 யோவான் 3:20) ஆகையால், எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல், தேவனை முழுமையாக நம்பி வாழ்வோம். அவர் அமைதியாக இருந்தாலும், நம்மை பாதுகாத்துக்கொண்டே இருக்கிறார் என்பதை விசுவாசிப்போம்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.