Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இறைவனும் மனிதனும்

கடவுள் நம்பிக்கை மனித குலத்துக்குத் தான் அதிகமாக இருக்கிறது. அதே மனித குலத்துக்குத்தான் கடவுள் மீது அவ நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது.

இதற்குப் புராண இதிகாச இலக்கியங்களைக் கூட நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை.

நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல், கடவுள் இருப்பைக் குறித்த சந்தேகம் சில திரைப்பாடல்களில் கூட அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறது.

அவன் பித்தனா? என்று ஒரு படம்.

அதில் கவியரசு கண்ணதாசனின் அருமையான பல்லவி.

கடவுள் இருக்கின்றானா?

மனிதன் கேட்கிறான்

அவன் இருந்தால்

உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

ஆனால் இதற்கு விடையும் அந்தப் பாடலிலே இருக்கிறது.

மனிதன் இருக்கின்றானா?

இறைவன் கேட்கிறான்....

அவன் இருந்தால்

உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

மனிதன் என்ற தன்மையோடு மனிதன் இருக்கிறானா? என்பதுதான் இந்த கேள்வியின் மையக்கருத்து.

இன்னொரு பாடல்.

கவிஞர் வாலி இறைவனுடைய இருப்பைப் பற்றி ஒரு பாடலில் மிக அழகாகச் சொல்லுகின்றார்.

“கடவுள் ஏன் கல்லானார்?” என்பதுதான் கேள்வி.

இந்தக் கேள்வியோடு பல்லவி தொடங்குகிறது. ஆனால் இதற்கான பதிலும் அந்த பாடலின் பல்லவியிலேயே இருக்கிறது.

“மனம் கல்லாய்ப் போன

மனிதர்களாலே...”

இன்னொரு பாடல். கவிஞர் கண்ணதாசனின் பாடல்.

இறைவன் உலகத்தைப் படைத்தானா?

ஏழ்மையை அவன்தான் படைத்தானா?

ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்

இறைவன் என்பவன் எதற்காக?

பொன்னகை அணிந்த மாளிகைகள்

புன்னகை மறந்த மண்குடிசை

பசி வர அங்கே மாத்திரைகள்

பட்டினியால் இங்கு யாத்திரைகள்

இரு வேறுலகம் இதுவென்றால்

இறைவன் என்பவன் எதற்காக?

இறைவன் எந்த வடிவத்தில் எங்கே இருக்கிறான் என்பதை விளக்கக்கூடிய பாடல்களும் இருக்கின்றன.

நான் கடவுளைக் கண்டேன் என்

குழந்தை வடிவிலே..

அவன் கருணையைக் கண்டேன்

கொஞ்சும் மழலை மொழியிலே..

இது கவிஞர் வாலியின் பாடல்.

இந்தப் பாடல் கடவுளின் தன்மையையும் இருப்பையும் காட்டுகின்றது.

இன்னொரு பாடல், இதுவும் வாலிதான்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் -அவன்

கருணை உள்ள நெஞ்சிலே கோயில் கொள்கிறான்.

கடவுள் இருக்கின்றானா? அவன் எங்கே வாழ்கிறான் என்கிற அந்த பாடலுக்கான பதில் இந்தப் பாடலிலே வெளிப்படுகிறது.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

இது இன்னொரு கண்ணதாசன் பாடல். மிக அழகாக கடவுளின் பண்பு நலன்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

புராண இதிகாசங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி, சாதாரண பாமர மக்களின் மனதில் இடம் பிடித்து, அவர்கள் சிந்தனையைத் தூண்டுகின்ற திரைப்படப் பாடல்களிலும் சரி, கடவுளைப் பற்றிய ஒரு விதமான புரிதலும், சில நேரங்களில் கடவுளைப் பற்றிய சந்தேகங்களும், மனிதனின் மனத்தில் இருந்து கொண்டே இருக்கின்றன என்பதைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.

சில நன்மைகள் நடக்கும்போது, கடவுளுடைய இருப்பை அவன் புரிந்து கொள்கின்றான். அல்லது புரிந்துக் கொண்டதாக நினைக்கின்றான்.

அவன் விரும்பாத, சில விளைவுகள் நடக்கின்ற பொழுது, அவன் கடவுளைக் குறித்து சந்தேகம் கொள்ளுகின்றான்.. அல்லது கடவுளின் மீது கோபப்படுகிறான்.

இந்த முரண்பாடுகள் ஏன் என்பதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம்.

தினசரி செய்தித் தாள்களில் பலவிதமான விபரீதமான செய்திகளை பார்க்கும் பொழுது நம்முடைய நெஞ்சு பதறுகிறது.

நம்முடைய பாரத தேசம் ஆன்மிகம் செழித்த தேசம். எல்லா அவதாரங்களும் இந்த பாரத தேசத்தில் தான் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஏராளமான கோயில்கள் இந்த பாரத தேசத்தில் இருக்கின்றன. பல அருளாளர்கள் இந்த பாரத தேசத்தில் பிறந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பாரத தேசத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கொலைகளும் கொள்ளைகளும் நடக்கின்றனவே, இத்தனை தெய்வங்கள் இருந்தும், இத்தனை அருளாளர்கள் அவதரித்த புண்ணிய பூமியாக இருந்தும், ஆயிரக்கணக்கான கோயில்கள் இருந்தும், அந்த கோயில்களில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்ற நிலை இருந்தும், இப்படிப்பட்ட தீமைகள், அவலங்கள், விபரீதங்கள், பாதகங்கள் நடக்க என்ன காரணம்?

அப்படியானால் நம்மைக் காக்க வேண்டிய தெய்வம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் சகஜமாக எழும்.

இந்தக் கேள்வி படிப்படியாக எங்கே போய் நிற்கும் என்றால், இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா? அவன் இருந்தால் இந்த உலகத்திலே இப்படிப்பட்ட தீமைகள் எல்லாம் நடக்குமா? இந்த உலகத்தைக் காக்க வேண்டிய கடமையில் உள்ள அந்த இறைவன் ஏன் காப்பாற்றுவது கிடையாது? என்று போகும். இன்னும் ஒரு படி மேலே போய், இறை நம்பிக்கை உடையவர்களும், அல்லது உடையவர்களாக நினைப்பவர்களும், சமயப் பெரியோர்கள் சொன்ன வாக்கு குறித்த சந்தேகங்களைக் கிளப்பும்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய அருட்பாடல்கள் பொய்யா? அவர்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட இறையருளும் பொய்யா? அவர்கள் இந்த மனித குலத்தை, இறை சிந்தனை குறித்த கற்பனையில், நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்களா? பொய்யாக வழிநடத்திய அவர்களும் பொய்யா? இப்படி இந்தச் சந்தேகமானது எல்லையற்று விரியும். இதற்கு முடிவே கிடையாது. சமயமும் பொய். இறைவனும் பொய். என்றால் சமயத்தையும் இறையருளையும் பற்றிச் சிந்தித்த இறையருளாளர்களின் அனுபவங்களும் பொய்யாய்ப் போய்விடுமே! இந்த அடிப்படையில் இறைவன் இல்லை என்ற முடிவுக்கு வருபவர்கள் உண்டு.

இறைவன் இருந்தாலும் அவன் செயல்படுவதில்லை என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு.

செய்யப்படாத இறைவன் இருந்தால் என்ன?

இல்லாவிட்டால் என்ன? என்று அடுத்த நிலைக்குப் போகும்.

தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும்)