Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இறைவனும் மனிதனும்

பகுதி 3

உயிர்களின் படிநிலைகளில், மனிதப் பிறவி உன்னதமானது.

மனிதன் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பதினால், அவனுக்கு பல நன்மைகளும் உண்டு. சிரமங்களும் உண்டு.

மனிதன் மனிதனைப்போல் வாழ முடியாமலும், விலங்குகள்போல வாழ முடியாமலும் தவிக்கிறான். மனிதன் தன் பகுத்தறிவால் உயர்ந்தவனாகக் கருதப்பட்டாலும், அதே பகுத்தறிவே அவனுக்குப் பல நேரங்களில் மனப்போராட்டங்களையும், குழப்பங்களையும் தந்துவிடுகிறது.

இதனை விளக்கும் கதை ஒன்று உண்டு.

இதனை ‘‘வியாச கீட சம்வாதம்” என்பார்கள்.

ஒருமுறை வியாச முனிவர் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாதையில் ஒரு சிறிய புழு (கீடம்) மிக வேகமாக நெளிந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதே நேரத்தில், அந்தப் பாதையில் ஒரு பெரிய ராஜவண்டி (தேர்) சக்கரங்கள் அதிர வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியின் சத்தத்தைக் கேட்டு அஞ்சியே அந்தப் புழு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அத்தனை வேகமாக ஓடியது.

இதைப் பார்த்த வியாசர் தனது ஞானக்கண்ணால் அந்தப் புழுவின் மனநிலையை அறிந்து, அதனிடம் பேசத் தொடங்கினார்.

வியாசர், ‘‘புழுவே! நீயோ மிகச்சிறிய ஜந்து. உனக்கென்று பெரிய அறிவோ, சுவையோ, உலக இன்பங்களோ கிடையாது. வெறும் மண்ணிலும் மலத்திலும் வாழ்கிறாய். உனக்கு ஏன் இந்த உயிர் பயம்? அந்தத் தேர்ச் சக்கரத்தில் மாட்டி நீ இறந்தால், அடுத்த பிறவியில் இதைவிட உன்னதமான ஒரு பிறவி உனக்குக் கிடைக்குமே? ஏன் இவ்வளவு தூரம் தப்பிக்க ஓடுகிறாய்?”

அதற்கு அந்தப் புழு அளித்த பதில் மனிதனின் ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் புரிய வைப்பதாக இருந்தது.

‘‘முனிவரே! உனக்கு ஏன் என் மீது இத்தனை பொறாமை? நான் புழுவாக இருந்தாலும், எனக்கு இந்த உடலின் மீதும், இந்த வாழ்வின் மீதும் பற்று இருக்கிறது. நான் புழுவாக வாழும் இந்த வாழ்க்கையிலும் எனக்கென்று சில இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களுக்குத் தங்களின் இன்பங்கள் பெரிதாகத் தெரிவதுபோல, எனக்கு என் நிலை சார்ந்த இன்பங்கள் பெரிதாகத் தெரிகின்றன. அதுமட்டுமல்ல, நான் போன பிறவியில் மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால், பகுத்தறிவு இருந்தும் நான் நல்வழியில் வாழாமல், பேராசையினாலும், சுயநலத்தினாலும் பாவங்களைச் செய்தேன். மனிதனாக இருந்தபோது ‘மனிதனைப்போல வாழத் தெரியாமல்’ விலங்குத்தனமாக வாழ்ந்ததால், தண்டனையாக இப்பிறவியில் புழுவாகப் பிறந்து விட்டேன். இப்போது எனக்குப் பழைய நினைவுகள் இருப்பதால், மீண்டும் மனிதனாகப் பிறந்து பாவம் செய்ய அஞ்சுகிறேன். அதே நேரம் புழுவாகவும் நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கிறேன்!”

மனிதன் ஏன் தவிக்கிறான் என்பதற்கான விடை இந்த உரையாடலில் ஒளிந்திருக்கிறது.

விலங்குகளுக்குப் பகுத்தறிவு கிடையாது. அவை பசி, தூக்கம், பயம், இனப் பெருக்கம் என்ற இயல்பான உணர்வு களோடு (Instinct) மட்டுமே வாழ்கின்றன. அவற்றுக்குக் கடந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ, பாவ புண்ணியங்களைப்பற்றிய பயமோ இல்லை. எனவே அவை நிம்மதியாக வாழ்கின்றன.

மனிதனுக்குப் பகுத்தறிவு என்ற உன்னதமான கருவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவன் அதைத் தன் ஆன்மிக மற்றும் ஒழுக்க உயர்வுக்குப் பயன்படுத்தாமல், விலங்குத்தனமான ஆசைகளை (பேராசை, குரோதம், பொறாமை) அடைவதற்கே பயன்படுத்துகிறான். இதன் விளைவாக, அவனால் விலங்கு களைப் போலக் கவலையின்றி வாழவும் முடிவதில்லை (ஏனெனில் பகுத்தறிவு குத்துகிறது);

அதே சமயம் உண்மையான மனிதனாக, ஒழுக்க நெறியோடு வாழவும் அவனுக்கு மனம் வருவதில்லை.

இந்த ‘‘இடைப்பட்ட நிலை” (Limbo) தான் மனிதனின் ஒட்டுமொத்தத் துயரத்திற்கும் காரணம்.

மனிதப் பிறவி என்பது சோதனையான பிறவி.

ஒருபக்கம் உச்சி. ஒருபக்கம் அதல பாதாளம். இரண்டுக்கும் நடுவில் அவன்.

புழுவாய்த் தொடங்கி மனிதனாய் உயர்ந்தவன், அதற்கும் மேலே ஒரு நிலை அடையவேண்டும் அல்லவா.

இதுவரை சிந்திக்கும் திறன் இல்லாததால் இயல்பாய் நடந்தான். இப்போது பகுத்தறியும் திறன் பெற்றதால் சுதந்திரமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். இதனை சற்று ஆழமாகச் சிந்திப்போம். விலங்குகளுக்குப் புண்ணியமும் இல்லை, பாவமும் இல்லை; ஏனெனில் அவற்றுக்கு எது சரி, எது தவறு என்று பிரித்தறியும் ‘‘பகுத்தறிவு” இல்லை. புலி மானைக் கொன்றால் அது பாவம் அல்ல, அது அதன் பசி.

ஆனால், மனிதன் அப்படியல்ல. அவனுக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தன் பகுத்தறிவையும் அன்பையும் பயன்படுத்தி அவன் இறைநிலைக்கு உயர முடியும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும். (திருக்குறள்)

அதே பகுத்தறிவை எதிர்மறையாகப் பயன்படுத்தி, உலகிலேயே மிகக் கொடூரமான மிருகமாகவும் அவனால் மாறமுடியும்.

இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு கயிற்றின் மீது நடப்பதைப் போன்றது தான் மனித வாழ்க்கை.

அதனால்தான் இது ‘‘சோதனையான பிறவி”.

ஒரு புழு அடுத்த பிறவியில் பூச்சியாகவோ, பறவையாகவோ மாறுவது அதன் கைகளில் இல்லை. அது இயற்கையின் நியதிப்படி, கர்ம வினைகளின் சுழற்சிப்படி படிப்படியாக மேல்நோக்கி நகர்த்தப்படுகிறது. அங்கே ‘‘சுய தேர்வு” (Choice) கிடையாது. மனிதனாகப் பிறந்தவுடன் இயற்கை தன் பொறுப்பை மனிதனிடமே ஒப்படைத்துவிடுகிறது.

‘‘உனக்கு ஆறாம் அறிவையும், சிந்தனைத் திறனையும் கொடுத்து விட்டேன். இனி நீ மேலே உயரப் போகிறாயா அல்லது மீண்டும் கீழே விழப் போகிறாயா என்பதை நீயே முடிவு செய்துகொள்” என்று இயற்கை விலகிவிடுகிறது.

விலங்காக இருந்தவரை இயற்கை நம்மை ஓட்டியது. மனிதனான பிறகு ஸ்டீயரிங் (Steering) நம் கைக்கு வந்துவிட்டது.

இப்போது எங்கு திருப்புவது என்பது நம் பொறுப்பு.

புழுவாய்த் தொடங்கி மனிதனாய் உயர்ந்தவன், மனித நிலையைத் தாண்டி அடைய வேண்டிய அந்த உன்னத நிலையைத்தான் நம் ஆன்மிகம் ‘‘இறைநிலை” (Divinity), ‘‘முக்தி” (Liberating Consciousness), அல்லது ‘‘மனிதநேயத்தின் உச்சம்” என்கிறது.

விலங்கு நிலை என்பது ‘நான், எனது பசி, எனது இனம்’ என்ற சுயநலம் சார்ந்தது.

மனிதன் தன் பகுத்தறிவால் ‘பிறர் நலன்’ குறித்துச் சிந்திக்கும்போது மனிதனாகிறான். ‘அனைத்தும் ஒன்றே’ என்று உணரும்போது இறைநிலைக்கு உயர்கிறான். இயற்கை நமக்குக் கொடுத்த இந்த ‘‘பகுத்தறிவு” மற்றும் ‘‘சுதந்திரம்” என்ற இரண்டு வரங்களையும் சாபமாக மாற்றிக் கொள்ளாமல், அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு (Higher Evolution) பயன்படுத்துவதே மனிதப் பிறவியின் உண்மையான நோக்கம்.

இந்த இடத்தில்தான் அவனுடைய தவிப்பு அதிகமாகிறது. விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து வந்ததால், ஒரு பக்கம் விலங்குணர்ச்சி, எதையும் எப்படியும் அனுபவித்து விட வேண்டும் என்று துடிக்கிறது. ஐம்புலன் இன்பங்களை அடக்க முடியவில்லை. அதேநேரத்தில் அவனுடைய அறிவு. இவைகளெல்லாம் பயனில்லை. இதற்கு மேலே ஒரு நிலையை அடைய வேண்டும் என அவனை யோசிக்க வைக்கிறது.

இந்தத் தடுமாற்றத்தில் இருந்து அவனை மீட்டெடுக்க, ஆன்மிகம் இறைவன் என்ற கருத்து அவனுக்கு வழிகாட்டுகிறது.

அந்த வழியையாவது அவன் பிடித்துக் கொண்டானா? யோசிப்போம்.