Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கருணைத் தாய் கர்ப்பரட்சாம்பாள்

தத்தமது பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். முதல் நண்பர், ‘‘என்ன சார், வீட்ல எப்படி பொழுது போகுது?’’ என்று கேட்டார். அதற்கு இரண்டாம் நண்பர், ‘‘வீட்ல மனைவிக்கு ஹெல்ப் பண்றேன். வாஷிங் மெஷின்ல துணிகள் துவைச்சு, காயப் போடறேன், காய்ந்த பின் எடுத்து மடித்து வைக்கிறேன். மனைவி சமையலுக்கு உதவியாக காய்களை நறுக்கித் தருகிறேன். ஏதேனும் பொருள் தேவையானால் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறேன். வீட்டில் ஒட்டடை அடிக்கிறேன்,

பழுதுபட்ட மின் கருவிகளையும், தண்ணீர் குழாய்களையும், சம்பந்தப்பட்ட பணியாளரை அழைத்து வந்து சரி செய்கிறேன். இப்படி பல உதவிகள்…’’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.

‘‘நீங்க வேலைக்குப் போய்கிட்டிருந்தபோது, இந்த வேலைகளை எல்லாம் உங்க மனைவிதானே செய்துகிட்டிருந்தாங்க? இப்ப வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால, வீட்ல நிறைய நேரம்

வெட்டியா இருக்க வேண்டியிருக்கறதால, நீங்க இந்தப் பணிகளைச் செய்யறீங்க. ஆனா, இது மனைவிக்கான உதவி இல்லைங்கறதை நீங்க புரிஞ்சுக்கணும். இப்படி நீங்க உதவி செய்யாட்டா, அந்தந்த வேலைகள் வீட்டில் அப்படியே நின்று விடாது. ஏற்கெனவே செய்து பழகியிருந்ததால மனைவி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளத்தான் செய்வாங்க. அதனால நீங்க செய்யறது உதவி அல்ல, பங்களிப்பு. சரியா?’’ என்று கேட்டார்.

‘‘அட, ஆமாம், சார். நீங்க சொல்றதுதான் சரி. இதெல்லாம் பரஸ்பரம் பணிப் பகிர்வுதான். மனைவி செய்வதெல்லாம் தனக்காக மட்டுமா, எனக்காகவும்தானே! இதிலே நான் கௌரவம் பார்த்தோ, ஆணாதிக்க நோக்கத்திலோ நடந்து கொள்வதில் தாம்பத்ய அர்த்தமே வீணாகிடுது. நீங்க சொன்னது ரொம்ப சரி. நான் மனைவிக்கு உதவி செய்யலே, பங்களிப்புதான் செய்யறேன்,’’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் இரண்டாம் நண்பர். இப்படி கணவன் - மனைவியிடையேயான புரிதல், பணிப் பங்கீட்டால் பெருகும் பாசம் எல்லாம்தான் இல்லறத்துக்கு பலம் சேர்க்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாகவே, ஓர் அரிய செயலை, தெய்வ நிலையிலேயே சிவபெருமான் நடத்திக் காட்டியிருக்கிறார்.

ஆமாம், அவர் தாயுமானவனாகவே திகழ்ந்திருக்கிறார். பூம்புகார் நகரில் வாழ்ந்து வந்தான் ரத்தினகுப்தன் என்ற வணிகன். அவனுடைய மகள் ரத்னாவதி. ஆழ்ந்த சிவ பக்தையான அவள் திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனை அனுதினமும் வழிபட்டு வந்தாள். அவளுக்குத் திருமணமாகி, முதல் பிரசவத்துக்கான நாளும் வந்தது. வழக்கம் போல தாயார் வீட்டிற்கு வந்து பேறுகால இன்பத்துக்காகக் காத்திருந்தாள்.

அச்சமயத்தில் அவளுடைய தாயார், காவிரியின் எதிர்க் கரையில் வாழ்ந்து வந்த உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சொந்த அனுபவ அடிப்படையில், இன்னும் நாலைந்து நாட்களில் மகளுக்குப் பிரசவம் ஆகலாம் என்று ஊகித்ததால், அவளைத் தனியே விட்டுவிட்டுச் சென்றாள் தாயார்.

ஓரிரு நாட்களில் வீட்டிற்குத் திரும்ப யத்தனித்தபோது பெருமழை காரணமாக காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால் அக்கரைக்குச் செல்ல படகு எதுவும் தயாராக இல்லை. ஒன்றும் செய்ய இயலாமல் தவியாய் தவித்தபடி தாயார் இக்கரையிலேயே தங்கி விட்டாள். அதேசமயம் புது உயிர் ஒன்றை உலகுக்குக் கொடுக்கக் கடுமையான பிரசவ வலியால் ரத்னாவதி தவித்தாள். தன் இறைவனான ஈசனை எண்ணி மனமுருக பிரார்த்தித்தாள்.

அவள் குரலைக் கேட்ட கயிலைநாதன், தானே ரத்னாவதியின் தாய் போல உருமாறி, அவர்கள் வீட்டில் தோன்றினார். தாயார் வந்துவிட்ட மகிழ்ச்சியில், ரத்னாவதி நிம்மதி அடைந்தாள். ஈசனும் அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புரிந்து அவள் சுகப்பிரசவம் காண வைத்தார். ஓரிரு நாட்கள் கழித்து சொந்தத் தாயார் வந்தபோது, அங்கிருந்து மறைந்தார், தாயுமானவர். விவரம் அறிந்த தாயும், மகளும் ஈசனின் திருவருளை எண்ணி மகிழ்ந்து மனம் உருகினார்கள். தன் மனைவியான பார்வதியை, இச்சேவை புரிய, ஐயன் அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால், மனைவியின் அந்தப் பணியைத் தன் பங்களிப்பாகச் செய்தார் அவர்! இந்தப் பண்புக்கு மேலும் உறுதியான சான்றாக, தன் இடது பாகத்தை மனைவிக்கு அளித்து, அர்த்த நாரீஸ்வரனாகவும் அவர் திகழ்கிறார்.

இந்த நிகழ்ச்சியால் நெகிழ்ந்து போன அம்பிகை, கருத்தரித்திருக்கும் தாயார்கள் அனைவருக்கும் அருட் கருணை பொழிய ‘கர்ப்ப ரட்சாம்பாளாக’ தனியே கோயில் கொண்டு மானிடப் பெண்களுக்கு சேவை புரிகிறாள். ‘அருள்மிகு கர்ப்ப ரட்சாம்பிகை’ என்றே இந்தக் கோயில் பொதுவாக அறியப்பட்டாலும், அங்கே ‘முல்லை வன நாதராக’, மூலவராக வீற்றிருக்கும் தன் கணவரின் ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் ஏற்கிறாள் அம்பிகை. ஏற்கெனவே இந்தச் சேவையில் அவர் அனுபவப்பட்டவர் அல்லவா? சரி, இப்போது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்கு அருகே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த அம்மனின் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி தண்டகாரண்யம் என்று அழைக்கப் பட்டது. நித்துருவர் என்னும் முனிவர் இங்கு ஆசிரமம் அமைத்து வேள்விகள் நடத்தி வந்தார். அவரும், அவர் மனைவி வேதிகையும் பல நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாமல் மனம் வருந்தினர். துயருற்ற தம்பதியினருக்கு கௌதம மகரிஷியும், கார்க்கேய மகரிஷியும் ஆறுதல் கூறி இந்தத் தலத்து இறைவனையும், பிராட்டியையும் வேண்டித் துதிக்குமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி முனி தம்பதி விரதம் காத்து இந்தத் தலத்து ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் உள்ளம் நெகிழ வழிபட்டனர். இறை அருளால் வேதிகை கருவுற்றாள். பூரண கர்ப்ப காலத்தில், முனிவர் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அப்போது ஊர்த்துவ பாதர் என்ற முனிவர், நித்துருவரின் ஆசிரமத்திற்கு வந்தார். கரு உருக்கொண்டிருந்த காரணத்தால் வேதிகையை மசக்கை நோய், வாந்தியும், மயக்கமுமாக வருத்திக் கொண்டிருந்தது. கர்ப்பப் பிணியின் உச்ச கட்டத்தில், உடல் நலம் பெரிதும் குன்றியிருந்த வேதிகையால், முனிவர் ஊர்த்துவ பாதருக்குச் சரியான முறையில் சேவை புரிய இயலவில்லை.

ஆகவே அவளால், எழுந்து அவரை வரவேற்கவோ, தண்ணீர், உணவுப் பொருட்களை அளிக்கவோ கொஞ்சமும் இயலவில்லை. கிட்டத்தட்ட மயக்கமுற்றிருந்த அவளது நிலமை புரியாத முனிவர், கடும் கோபம் கொண்டார். ஒரு முனிவரின் மனைவியாக இருந்து கொண்டு, சக முனிவரை வரவேற்கக்கூட இயலாத அவளுடைய ‘அலட்சியத்தை’ அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே, அவள் மேல் கோபம் கொண்டு, ‘எந்த காரணத்தால் நீ என்னை உபசரிக்கவில்லையோ, அது வீணாகப் போகட்டும்,’ என்று கடுமையாக சாபம் இட்டுவிட்டுப் போய்விட்டார். அதன் விளைவாக வேதிகையின் கரு கலைந்தது.

பெரிதும் பாதிக்கப்பட்ட அவள், அனலில் இட்ட புழுபோல் துடித்தாள். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா! கர்ப்ப ரட்சாம்பிகையையும், ஈசன் முல்லைவன நாதரையும் மானசீகமாக வேண்டி, தன் கருவைக் காத்திடுமாறு இறைஞ்சினாள். உடனே ஈசன், அம்பிகையை நோக்க, நழுவிய கருத் தொகுதியை, சட்டென்று ஒரு குடத்தில் ஏந்திக் கொண்டாள் அம்பிகை. அந்தக் குடமே வேதிகையின் செயற்கை கர்ப்பப்பை ஆயிற்று! சிதைவுற்றிருந்த கரு ஒன்றா இணைந்து முழுமையாகி, குழந்தையாகப் பிரசவமும் ஆயிற்று!

(மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்கச் சவால்களைக் கொண்ட பெண்கள் தற்போதைய In Vitro Fertilisation முறையில், மகப்பேறு அடைகிறார்களே, இதற்கு இந்த ஆன்மிகச் சம்பவம் மூல காரணமாக இருக்குமோ!)அதேசமயம், முற்றிலும் பலவீனப்பட்டிருந்த வேதிகையால், தன் குழந்தையான நைதுருவனுக்கு பாலூட்ட இயலவில்லை. இதற்கும் அம்பிகை ஒரு வழி செய்தாள். அவளுடைய ஆணைப்படி, தெய்வப் பசுவான காமதேனு அங்கே தோன்றி குழந்தைக்குப் பால் தந்தருளினாள். தொடர்ந்தும், நிரந்தரமாகவும் வேதிகைக்கு உதவுவதற்காக காமதேனு தன் கால் குளம்பினால் பூமியைத் தோண்ட, அங்கே ஒரு பாற்குளமே உருவானது!

பெரும் பேறு பெற்ற வேதிகையும், முனிவரும், தெய்வ மருத்துவர்களாகத் தோன்றிய கர்ப்ப ரட்சாம்பிகையையும், முல்லைவன நாதரையும் நெஞ்சார நன்றி சொல்லித் துதித்தார்கள். வேதிகையோ ஒருபடி மேலே போய், தனக்கு உதவியது போலவே பிற பெண்மணிகள் அனைவருக்கும், அவரவர் நிலை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுடைய கரு காத்து அருள வேண்டும் என்று வரம் கோரினாள்.அன்று முதல் கர்ப்ப ரட்சாம்பிகை, தன்னை வழிபடும் கர்ப்பிணிகளின் கருவைக் காத்து சுகப்பிரசவம் அருள்கிறாள். அதனால் கரு காத்த நாயகி என்றும் போற்றி வழிபடப்படுகிறாள்.ஆலயத்தின் பெரிய பிராகாரத்தில் முல்லைவன நாதர் சந்நிதியும், வடக்கில் அம்பிகை சந்நிதியும் அமைந்துள்ளன.

கருவறையில் கர்ப்ப ரட்சாம்பிகை, கருணை பொங்கும் முகத்துடன் காட்சி அளிக்கிறாள். ‘கவலைப்படாதே, நான் இருக்கிறேன். உன் வம்சம் தழைக்க அருள்கிறேன்,’ என்று தன்னை வணங்கும் பெண்களுக்கு நிம்மதி ஆறுதலை அளிப்பது போல இருக்கிறது அம்பிகையின் கருணைப் பார்வை.

எவ்வாறு பரிகாரத்தை மேற்கொள்வது?

திருமணம் ஆகாத மகளிரும், பல காலம் மகப்பேறு இல்லாத பெண்டிரும் இந்தக் கோயிலுக்கு வந்து அந்தப் பேறுகளைப் பெற முதலில் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை சந்நிதியில் மனமுருகித் தொழுகிறார்கள். பிறகு, தான் கொண்டு வந்த அல்லது கோயில் கடையில் விற்கப்படும் நெய்யினால் அன்னையின் கர்ப்ப கிரகப் படியை மெழுகுகிறார்கள். அந்த நெய்ப் பரவலின் மீது கோலமிடுகிறார்கள். அதன் பிறகு அன்னைக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். மனம் உருகிய இந்தப் பிரார்த்தனைக்கு விரைவில் திருமணம் கை கூடுகிறது, குழந்தை பாக்கியமும் கிட்டுகிறது.

திருமணமாகி வெகு காலத்திற்கு குழந்தைப்பேறு இல்லாத மகளிர், தொட்டில் பிரார்த்தனையை மேற்கொள்கிறார்கள். அதாவது, கர்ப்ப ரட்சாம்பிகையின் பாதத்தில் உள்ள ‘ஸ்கந்தர்’ திருவுருவை அர்ச்சகர் மூலமாக வாங்கி தம் முந்தானையில் ஏந்திக் கொள்கிறார்கள். பிறகு அருகிலுள்ள தங்கத் தொட்டிலில் அந்தக் குழந்தை விக்ரகத்தை இட்டு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இந்த

வழிபாட்டுக்குப் பிறகு அன்னையின் அருள் அவர்கள் வயிற்றில் கருவாகத் தங்குகிறது. இந்தத் தங்கத் தொட்டில் பிரார்த்தனை இங்கு மிகவும் பிரசித்தமாக உள்ளது.அவ்வாறு கர்ப்பமுற்ற பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற, மீண்டும் கர்ப்ப ரட்சாம்பிகை கோயிலுக்கு வருகிறார்கள். கூடவே நல்ல சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வருகிறார்கள்.

(வீட்டிலிருந்தும் எடுத்து வரலாம் அல்லது கோயில் கடையில் வாங்கிக் கொள்ளலாம்) இந்த விளக்கெண்ணெயை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் அதனை அன்னையின் பாதத்தில் வைத்து அர்ச்சித்து, மந்திரித்துக் கொடுக்கிறார். பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் இந்த எண்ணெயைத் தடவிக் கொண்டால், எந்தக் கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ்கிறது என்பது பல்லாயிரக்கணக்கான பக்தைகளின் அனுபவ நம்பிக்கை.

அன்னையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் மீண்டும் வந்து அன்னைக்கு துலாபாரம் கொடுத்தோ, புடவை சாற்றியோ தம் நன்றிக் கடனை சமர்பிக்கிறார்கள்.கருவுக்கு உயிர் கொடுக்கும் அன்னை கருகாத்த நாயகியும், உருவான உயிர் நோயுறும்போது அதனைத் தீர்த்தருளும் நாயகன் முல்லைவன நாதரும் என்றென்றும் பெண்களுக்கு உற்ற துணையாய் இருந்து அருள் புரிகிறார்கள். அதை அனுபவிக்கும் பெண்கள் அந்த உண்மையை நெகிழ்ச்சியுடன் உணர்ந்து அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

ப்ரபுசங்கர்