Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பக்தனுக்காக பகவானே செய்த நீத்தார்கடன்!

உலகப் புகழ் பெற்ற பாடலை எழுதியவர்! குஜராத்தி மொழியின் `ஆதி கவி’ எனப் புகழப் பெற்றவர், நரசிம்ம மேத்தா. 1414-ஆம் ஆண்டு, குஜராத்தில் உள்ள தலாஜா எனும் ஊரில் பிறந்த இவர் வாழ்வின் பிற்பகுதி, `ஜுனா காத்’ (Juna Gadh) எனும் ஊரில் கழிந்தது. நரசிம்ம மேத்தாவின் தந்தை பெயர் பலராம மேத்தா. இவர், நரசிம்ம வழிபாட்டில் மிகுந்த ஊக்கம் கொண்டவர். அதன் காரணமாகவே தனக்குப் பிறந்த குழந்தைக்கு நரசிம்ம மேத்தா என்று பெயரிட்டார். செல்லப் பிள்ளையாக வளர்ந்த நரசிம்ம மேத்தா, சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்தார். அதன்பின், நரசிம்ம மேத்தா தன் சித்தப்பாவின் மகன் அரவணைப்பில் வாழ்ந்துவந்தார். சித்தப்பாவின் மகன் நரசிம்ம மேத்தாவைவிட வயதில் மூத்தவர். திருமணம் ஆனவர்.

ஒரு நாள்... நரசிம்ம மேத்தாவின் அண்ணி அவரை மிகவும் கடுமையாக ஏசினாள்;

‘‘உன் செயல்கள் எதுவும் சரியில்லை. நீ செய்வது எதுவும் பிடிக்கவில்லை. உன்னால் எங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. இனிமேல் இப்படி இருந்தால் இந்த வீட்டில் உனக்குச் சோறு கிடையாது. போ! போ!’’ என்று விரட்டினாள். அண்ணியின் சொற்கள் நரசிம்ம மேத்தாவின் மனத்தில் தைத்தன. மனம் உடைந்து போனார். உடனே வீட்டை விட்டு வெளியேறினார். வெளியேறியவர், போய்க்கொண்டே இருந்தார்.

‘‘அண்ணி சொன்னது தவறு இல்லை. ஒழுங்காகப் படிக்காமல் எந்தவிதமான வேலையும் செய்யாமல் யாருக்கும் பலனில்லாமல் வெட்டித்தனமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தால் யார்தான் ஏச மாட்டார்கள்? ஆகவே அண்ணி பேசியதில் தவறு இல்லை. இதே போல் தானே முன்பு துருவன் அவமானப்படுத்தி விரட்டப்பட்டான். துருவன் என்னைவிட மிகவும் சிறியவன் ஆயிற்றே, துருவனைப் போன்று மன உறுதியுடன் நான் தவம் செய்து, இறை அருளைப் பெறவேண்டும்’’ என்றெல்லாம் சிந்தித்தவாறே நடந்து கொண்டிருந்தார், நரசிம்ம மேத்தா.

நீண்ட தூரம் (ஏறத்தாழ 60 கிலோ மீட்டர்) போன பிறகு, நடந்து வந்த களைப்பு, கைகளிலும் கால்களிலும் காட்டு முட்களும் கற்களும் குத்திய வலிகள் வேறு! நரசிம்ம மேத்தாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது அவர் கண்களின் எதிரே ஒரு பெரும் குளம் தெரிந்தது. அந்தக் குளத்தில் இறங்கிய நரசிம்மமேத்தா நீரை அள்ளி அள்ளிக் குடித்தார். களைப்பு நீங்கியது. குளத்தின் எதிர்க் கரையில் பாழடைந்த ஒரு கோயில் தென்பட்டது. மெள்ளமெள்ள அந்தக் கோயிலை அடைந்து உள்ளே போனார்.

அற்புதமான சிவலிங்கம் கண்களை மட்டும் அல்லாமல் கருத்தையும் கவர்ந்தது. சிவலிங்கத்தின் முன்னால் ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வில்வங்கள் சிதறிக்கிடந்தன. அவற்றைப் பார்த்தவுடன், ‘‘ஒரே ஒரு வேளை மட்டும் பூஜை நடைபெறும் போலிருக்கிறது இங்கு!’’ என்று நினைத்த நரசிம்ம மேத்தா, சிவலிங்கத்தின் முன்னால் அமர்ந்தார். எப்போதோ கேட்டு மனதில் பதிந்த சிவ நாமாவளிகள் நினைவுக்கு வந்தன.

மனம் உருகி ஆத்மார்த்தமாகச் சிவ நாமாவளிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்தாரோ தெரியாது. தன்னை மறந்த நிலையில், யாரோ ஒருவர், தன்னை நெருங்கித் தொடுவதை உணர்ந்தார் நரசிம்ம மேத்தா. கண்களைத் திறந்து பார்த்தால், தலையில் ஜடா மகுடம் ஒளி வீச, அதில் பிறை நிலவும் இடம்பெற்று இருந்தது. ஆம்! சிவபெருமானே எதிரில் வந்திருந்தார். சிவபெருமான் தன் கையை நரசிம்ம மேத்தாவின் தலையில் வைத்து, ‘‘அப்பா! நீ திருமாலுக்குப் பணிவிடைசெய்யப் பிறந்தவன். உன் உறுதி கண்டு மகிழ்ந்தேன். பத்து நாட்களாக நீ செய்யும் அருந்தவம் கண்டு, உன் அன்னை பார்வதி மனம் குளிர்ந்தாள். என்னுடன் வா!’’ என்றார்.

நரசிம்ம மேத்தா எழுந்தார். கை கால்கள் மரத்துப்போயிருந்தன. எழுந்திருக்க இயலாமல் கால்கள் தள்ளாட மெள்ள எழுந்து சிவபெருமானைப் பின் தொடர்ந்தார். ஆகாய வீதியில் சந்திரன் பவனி வந்து கொண்டிருக்க, எங்கு பார்த்தாலும் அமிர்தமயமாக நிலவொளி வீசிக்கொண்டிருந்தது. கோயிலை விட்டு வெளியே வந்த சிவபெருமான், எதிரில் இருந்த குளக்கரையில் இருந்த பெரிய அரசமரத்தின் மீது நரசிம்ம மேத்தாவை அமரவைத்து, தானும் அருகில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு, ‘‘நரசிம்மா! எதிரில் தெரியும் வெட்டவெளியைப்பார்!’’ என்றார் சிவபெருமான். நரசிம்ம மேத்தா பார்த்தார். எங்கிருந்தோ இனிய புல்லாங்குழல் ஓசை காற்றில் தவழ்ந்து வருவது கேட்டது.

அந்தக் காட்டின் நடுவில் கண்ணபிரான் கோபிகைகளுடன் கூடிப் புல்லாங்குழல் ஊதி, வட்ட வடிவமாக நின்று ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஆடுவதும் பாடுவதும் நரசிம்ம மேத்தாவுக்குத் தெரிந்தன. (இத்தகவல்கள் அனைத்தையும் நரசிம்ம மேத்தா தன் பாடல்களில் விரிவாகவே பதிவுசெய்து வைத்திருக்கிறார். நாம் பார்த்தது சுருக்கமே) அதைப் பார்த்துக் கொண்டிருந்த நரசிம்ம மேத்தாவிற்கு ஒரு சந்தேகம் தோன்றியது.

‘‘ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு கண்ணன் பாடிக் கொண்டிருக்கின்றார்; ஆடிக் கொண்டிருக்கின்றார். இது எப்படி சாத்தியம்?’’ என்று சந்தேகம் வந்தது. தன்னுடைய சந்தேகத்தை அப்படியே தன் அருகிலிருந்த சிவபெருமானிடம் கேட்டார்; ‘‘சுவாமி! இவ்வளவு கண்ணன் இருக்கிறார்களே! இவர்களில் யார் உண்மையான கண்ணன்?’’ என்று கேட்டார். அதற்குச் சிவபெருமான், ‘‘நரசிம்மா! இங்கு பார்க்கக்கூடிய அவ்வளவும் கண்ணனே! காரணம்? ஒவ்வொரு கோபிகையும் கண்ணன் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அதற்காகவே அத்தனை வடிவங்களாகக் கண்ணன் காட்சி தருகின்றான்.

ஆகவே அவ்வளவும் கண்ணன்தான். இனி நீ அந்தக் கண்ணனின் அருளை வேண்டினால், உனக்கும் அதே போலக் கண்ணனின் அருள் கிடைக்கும்’’ என்றார். அதே வினாடியில் கண்ணன், இவர்கள் இருந்த மரத்தின் அடியில் வந்து நின்றார். அதைக் கண்டவுடன் ‘பளிச்’சென்று மரத்திலிருந்து இறங்கிய நரசிம்ம மேத்தா, கண்ணன் திருவடிகளில் விழுந்தார். திருவடிகளில் விழுந்த நரசிம்ம மேத்தாவை மென்மையாக எடுத்து, ‘‘அப்பா! குழந்தாய்! இன்று நீ பார்த்த இந்த பிருந்தாவனக் காட்சிகளை அப்படியே பாடலாகப் பாடு! உன் வாழ்க்கையில் அருள் கவி பிறக்கும்’’ என்று சொன்ன கண்ணன், தனது வன மாலையில் இருந்த துளசித் தளங்களை, நரசிம்ம மேத்தாவின் வாயில் இட்டார்.

சிவபெருமான் புன்முறுவல் பூத்தார். கண்ணன் அங்கிருந்து மறைந்தார். நரசிம்மமேத்தா, சிவபெருமானுடைய கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, சிவபெருமான் மீது அருமையான பாடல் ஒன்றைப் பாடினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான், ‘‘அப்பா! நரசிம்மா! உன் கவிதைகளும் பக்தியும் சூரிய சந்திரர்கள் உள்ள வரை நிலைபெற்று இருக்கும்’’ என்று ஆசிகூறி மறைந்தார். நரசிம்ம மேத்தா சிவலிங்கத்தின் முன்னால் அமர்ந்த படியே சிவத் தியானத்தில் ஆழ்ந்தார். அதே சமயம்... நரசிம்ம மேத்தாவைக் காணாமல் அவருடைய சித்தப்பா முதலானவர்கள் எல்லாம் தவித்தார்கள். சித்தப்பா தன் மருமகளை அழைத்து, ‘‘என்ன நடந்தது? அவனைக் காணவில்லையே’’ என்று வருத்தத்துடன் கேட்டார்.

மருமகள் நடந்த உண்மையை அப்படியே சொன்னாள்; `‘நான் திட்டியது தவறுதான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள். சித்தப்பாவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. ஊர் முழுதும் நரசிம்ம மேத்தாவைத் தேடுவதற்காக ஆட்கள் பலரையும் அனுப்பினார். அவர்களும் கிணறு, குளம், குட்டை, பாழடைந்த மண்டபங்கள், காடு என்று பற்பல இடங்களிலும் தேடித் திரும்பினார்கள். இப்படியே பதினைந்து நாட்கள் கடந்தன. ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வந்து, ‘‘காட்டுக்குள்ளே குளத்துக்கு அருகில் பாழடைந்த கோயிலில் வேத கோஷம் கேட்டது’’ என்றான். அதைக் கேட்ட சித்தப்பா திடுக்கிட்டார். காரணம்? அந்தக் காலத்தில் ஒரு சிலர் நரபலி இடுவது உண்டு. அதைக் கேட்டு சித்தப்பா நடுங்கினார்.

‘‘நரசிம்மனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவனை அழித்து விட்டதாக இந்த உலகம் நம்மைத் தூற்றுமே’’ என்று பயந்து, அந்த மாடு மேய்க்கும் சிறுவனையே வழிகாட்டச் சொல்லிக் கோயிலுக்குப் போனார். அங்கே சிவலிங்கத்தின் முன்னால் நரசிம்ம மேத்தா கண்மூடி அமர்ந்திருந்தார். உடம்பெல்லாம் இளைத்துப் போய், எலும்பும் தோலுமாக இருந்தார், ‘‘அப்பா!’’ என்று அலறிய படியே நரசிம்ம மேத்தாவைக் கட்டிக் கொண்டார் சித்தப்பா. கண் விழித்தார் நரசிம்ம மேத்தா. கண்ணனைப் பற்றிய அற்புதமான பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்ட சித்தப்பா திகைத்தார்;‘‘இருப்பது சிவன் கோயில்! பாடுவது கண்ணன் புகழ்! இவனோ கல்வி கேள்விகளில் சிறந்தவன் இல்லை. கவித்திறமை என்பது கொஞ்சம்கூடக் கிடையாது. இப்படிப்பட்ட திறமை இவனுக்கு எப்படி வந்தது?’’ என்று வியந்தார்.

‘‘அப்பா! நரசிம்ம மேத்தா! நீ இப்படியிருந்தால் ஊரார் என்னையல்லவா ஏசுவார்கள்? ஆகவே தயவுசெய்து எழுந்திரு! வீட்டுக்குத் திரும்பி வா!’’ என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனார். அதன் பின் நரசிம்ம மேத்தாவிற்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் மாணிக்க கவுரி. இல்லறம் நல்லறமாக நடந்தது. முதலில் ஓர் ஆண்குழந்தையும் பிறகு ஒரு பெண் குழந்தையும் ஆக இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்தபோது அவைகளுக்குக் கண்ணனருளாலே, கண்ணனே முன் நின்று திருமணம் நடத்திய அதிசயங்கள் விரிவானவை. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், அவரைப் பிடிக்காதவர்கள் பலர் உண்டு.

நரசிம்ம மேத்தா மட்டும் விதிவிலக்கா என்ன? அவருக்கு மிகவும் வேண்டியவர்களே, அவர் பேரும் புகழும் பெற்றுச் சிறந்தோங்குவதைக் கண்டு பொறாமை பட்டார்கள். அது இன்னும் விபரீதமானது. அவர்களில் முக்கியஸ்தர்கள் சிலர் நேரே, ஜூன் காட் அரசரிடம் போய், ‘‘மன்னா! நரசிம்ம மேத்தாவின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. வீதிகளில் கூடிக் கும்மாளம் போடுகிறான். அதில் பெண்களையும் இழுத்து விட்டு ஆடச் செய்கிறான். இப்படியேபோனால் என்ன ஆகும்?’’ என்று புகார் சொன்னார்கள். அரசரும் நரசிம்ம மேத்தாவை அழைத்து, ‘‘உங்களைப்பற்றிப் பலவிதமான புகார்கள் வருகின்றன.

நீங்கள் குற்றமற்றவராக இருந்தால், நீங்கள் வணங்கும் கண்ணனே உங்களுக்கு மாலை இட வேண்டும்’’ என்று நிபந்தனை விதித்தார். நரசிம்ம மேத்தா அங்கேயே அமர்ந்து தன்னுடைய மன உருக்கத்தை, அப்படியே கண்ணனிடம் முறையிட்டுப் பாடல்களாகப் பாடினார். (அப்பாடல்கள் ஹர்மாலா என்ற பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளன) நரசிம்ம மேத்தா பாடி முடித்ததும் அங்கே அரண்மனைக்கோயில் கதவுகள் தாமாகவே திறந்தன. கண்ணன் வெளிவந்தார்.

நரசிம்ம மேத்தாவுக்கு மாலை அணிவித்து அவர் நிரபராதி என்பதை அனைவரும் அறியச் செய்தார். (இது நடந்தது 1456 - ஆம் ஆண்டு) அதே போல், ஒருநாள்... நரசிம்ம மேத்தாவின் தந்தைக்கு சிரார்த்த நாள். ஏற்பாடு களையெல்லாம் செய்து முடித்தார், நரசிம்ம மேத்தா. நெய் தேவையாக இருந்தது. நரசிம்ம மேத்தா கடை வீதிக்குச் சென்றார். அங்கே கடை வீதியில், பக்தர்கள் குழு, ‘‘விட்டல! விட்டல! ஜய ஜய விட்டல!’’ என்று நாம சங்கீர்த்தன பஜனை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்! அதைப் பார்த்ததும், நரசிம்ம மேத்தாவின் மனம் மாறியது. சிரார்த்தத்திற்காக நெய் வாங்க வந்ததை மறந்து, பக்தர் குழுவோடு சேர்ந்து, ‘‘விட்டல! விட்டல!’’ என்று நாம சங்கீர்த்தனம் பாடி ஆடத் தொடங்கிவிட்டார்.

அதே சமயம்...

நரசிம்ம மேத்தாவின் வீட்டில், அவர் மனைவி மாணிக்கக் கௌரி, சமையல் வேலைகளைச் செய்து முடித்துவிட்டாள். சிரார்த்தத்தில் பங்கேற்கும் அந்தணர்களும் வந்து விட்டார்கள்; காத்திருந்தார்கள். அப்போது இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்தன. வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த சூரியன் நகரவில்லை. நரசிம்மமேத்தாவும் (இறைவனே அந்த வடிவில்) நெய்யுடன் வீட்டிற்குள் வந்தார். சிரார்த்தம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. வந்திருந்த அந்தணர்களும் விடைபெற்றுச் சென்றார்கள். சூரியன் நகரத் தொடங்கியது.

நரசிம்ம மேத்தாவின் மனைவியும் பொருட்களையெல்லாம் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.அந்த நேரத்தில் நரசிம்மமேத்தா நெய்யுடன் அவசர அவசரமாக ஓடி வந்தார். மனைவியிடம் புலம்பத் தொடங்கினார்;‘‘எவ்...வளவு கால தாமதம்செய்து விட்டேன்! பெரும் தவறு! பெரும் தவறு! சிரார்த்தம் எப்படி நடக்கும்? சிரார்த்தத்திற்காக வந்த அந்தணர்கள் கோபித்து விட்டார்களா?’’ என்று கேட்டுப் பதறினார். அதைக் கேட்ட மனைவி குழம்பினாள்; ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

‘‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? நீங்கள்தான் காலையிலேயே நெய்யுடன் வந்து, சிராத்தம் செய்து அந்தணர்களை வழியனுப்பி வைத்தீர்களே!’’ என்றாள் மனைவி. விநாடி நேரத்தில் நரசிம்மமேத்தா நடந்ததை உணர்ந்து கொண்டார். பகவான் பாண்டுரங்கனே தன் வடிவில் வந்து சிரார்த்தத்தை நடத்தி விட்டுப் போயிருக்கிறார் என்பதை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தெய்வம் தன் பக்தனுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் என்பதை விளக்கும் நிகழ்வு இது.

பாடும் பணியே தன் பணியாய்க் கொண்ட நரசிம்ம மேத்தா, அதைத் தொடர்ந்து செய்து வந்தார். அவருடைய பாடல்கள் பல இடங்களிலும் பரவி, மக்களிடையே பக்தியையும் நல்ல ஒழுக்கத் தையும் பரப்பின. அந்தக் காலகட்டத்தில்தான் அவர் இருந்த ஜூன்காட் நகரம் பகைவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. நரசிம்மமேத்தா அமைதியை விரும்பி அங்கிருந்து புறப்பட்டு, மங்ரோல் எனும் ஊருக்குச் சென்று வாழத் தொடங்கினார். கிபி 1480ல் தமது 66-வது வயதில், நரசிம்ம மேத்தா இறைவன் அடி சேர்ந்தார். நரசிம்மமேத்தா பாடிய `வைஷ்ணவ ஜனதோ’ என்னும் பாடல், மிகவும் புகழ்பெற்றவை.

பி.என்.பரசுராமன்