Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூத்து வருகிறது, புண்ணிய மாதம்..!

வழிபாடுகளின் வசந்த காலம் மீண்டும் ஒரு முறை நம் வாசலில்! இதோ, ரமலான் வந்துவிட்டது. இனி இல்லங்கள் தோறும் வேதம் ஓதப்படும் குரல்! உள்ளங்கள் தோறும் ஆன்மிக வெளிச்சம்!‘விழித்திரு... தனித்திரு.. பசித்திரு...’ எனும் மூன்று முத்திரை வாக்கியங்களும் அன்றாட வாழ்வில் ஒன்றிணையும் அற்புத மாதம் ரமலான்.“ரமலான் பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சுவனம்” என்று நவின்றார்கள் நபிகளார்(ஸல்) அவர்கள்.பொறுமை - நிலைகுலையாமை எனும் பண்பு இல்லாமல் நோன்புக் கடமையை நிறைவேற்றவே முடியாது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். அதிகாலை நான்கரை மணிக்குள் - அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு அந்தி நேரத்தில் சூரியன் மறையும் வரை ஒரு சொட்டு நீர்கூட பருகக் கூடாது.அதிகாலை நான்கு மணிக்கு உண்மையில் பசியே எடுக்காது. ஆகவே, பெரிய அளவில் எதுவுமே சாப்பிட முடியாது. ஆயினும் நோன்புக் கடமையை நிறைவேற்றவேண்டும் எனும் எண்ணத்தில் ஏதோ இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொள்வார்கள்.

இந்த உணவு காலை ஏழு மணிக்கெல்லாம் செரித்து, வயிறு காலியாகிவிடும். நோன்பு அல்லாத காலங்களில் காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வழக்கமான காலை உணவு நேரம் என்பதால், 11 மாதகால வழக்கத்தை ஒட்டி வயிறு கபகப என்று பசிக்கும். போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் அந்த நேரம் பார்த்துதான் சட்னிக்குத் தாளிப்பார்கள். அந்தத் தாளிப்பு மணம் மூக்கைத் துளைத்து வயிற்றில் ஒரு “படையெடுப்பையே” நடத்தும்.நோன்பு நேரத்தில் பொறுமையும் உறுதியும் இல்லாதவர்கள் இந்தப் ‘படையெடுப்பை’ எதிர்கொள்ள முடியாமல் நோன்பைக் கைவிடுவதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் அப்படி நேர்வதில்லை. இறைவனுக்காக நோன்பு வைத்திருக்கிறோம் எனும் எண்ணத்தில் உறுதியோடு இருந்து, அந்திசாயும் வரை ஆண்டவன் கட்டளையில் அடிபிறழாமல் இருப்பார்கள். அதனால்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: “ரமலான் பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சுவனம்.”

முன்னோர்களிடம் ஓர் அரிய வழக்கம் இருந்ததாம்..! ரமலான் மாதம் தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே அதை வரவேற்கத் தயார் ஆகிவிடுவார்களாம்.“இறைவா... தூய ரமலான் மாதம் வரவிருக்கிறது. அதை அடையும் நற்பேற்றை எங்களுக்கு அருள்வாயாக. அதுவரை எங்களை உயிருடன் வைத்திருப்பாயாக. ரமலானின் அத்தனை வழிபாடுகளையும் நிறைவேற்றும் வலிமையையும் மன உறுதியையும் வழங்குவாயாக” என்று இறைஞ்சிக் கொண்டே இருப்பார்களாம்.

அதேபோல் ரமலானுக்குப் பிந்தைய ஐந்து மாதங்களிலும், “இறைவா, ரமலானில் எங்களால் இயன்ற அளவு இறைவழிபாடுகளில் ஈடுபட்டோம். உன் வேதத்தை ஓதினோம். பகலில் பசித்திருந்தோம். இரவில் விழித்திருந்து உன்னை வழிபட்டோம். ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்களை அளித்தோம். இவற்றை எல்லாம் நீ ஏற்றுக்கொண்டு, எங்கள் பாவங்களை மன்னித்து மறுமையில் ஈடேற்றத்தைக் கனிந்தருள்வாயாக” என்று கண்ணீர் மல்க பிரார்த்திக் கொண்டே இருப்பார்களாம்.அந்த முன்னோர்களின் ஆன்மிக வாழ்வுடன் நம்முடைய ஆன்மிக வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் எத்துணை வேறுபாடு..! அவர்கள் உயர்ந்த இமயம் என்றால் நாம் படுபள்ளம். அவர்கள் யானை என்றால் நாம் சிற்றெறும்பாகக்கூட இல்லை.

இப்போது இறையருளால் ரமலான் எனும் தூய மாதத்தை அடையும் நற்பேற்றை இறைவன் நமக்கு அருளியுள்ளான். ரமலானை வரவேற்போம். ஒரு விநாடியைக்கூட வீணாக்கி விடாமல் இறைவழிபாட்டில் செலவிடுவோம்.அழுக்கு படிந்த இதயத்தை இந்த மாதத்திலாவது கொஞ்சம் வெளுக்கப் போடுவோம்..!ரமலானே வருக! அருள்வளத்தைத் தருக!

- சிராஜுல் ஹஸன்