‘சிவதா! சிவதா! சிவகாமி ஆண்டார், சிவனை அப்படித்தான் அழைப்பார். சிவனுக்கும் அப்படி அவர் அழைப்பது பிடித்துப் போனது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அவருக்கு மனசும், உதடும், ‘‘சிவதா சிவதா’’ என்று ஸ்மரித்துக் (நினைத்து) கொண்டேயிருக்கும். அப்படி அவர் அழைப்பதைக் கேட்பவர்கள் ‘இவர் சிவனை துதிக்கிறாரா இல்லை கொஞ்சுகிறாரா? என்பார்கள். சிவகாமி ஆண்டாருக்கு ஏறத்தாழ அறுபது வயது இருக்கும். கொஞ்சம் தடிமனான தேகம். மாநிறம். கொஞ்சம் பெண்மையின் சாயல் முகத்திலும் நடையிலும் இருக்கும். சொந்தம், சுற்றம் எல்லாமும் அந்த சிவன்தான். அவரின் முக்கிய வேலையே சிவத்தொண்டுதான்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி செய்வது, மலர்கள் கொண்டு சேர்ப்பது அவருக்கு மிகவும் பிடித்தவை. நான்கு அடி நீளமுள்ள ஒரு முங்கில் கழி. அதன் இரண்டு முனைகளிலும் பிரம்புக் கூடைகள் தொங்கும். ஒரு கூடையில் நந்தியாவட்டை, செம்பருத்தி, பவழமல்லி, விருப்பாட்சி, முல்லை, மல்லிகை என மலர்கள் இருக்கும். மற்றொரு கூடையில் வில்வம் மற்றும் நொச்சி இலை, அறுகம்புல் போன்றவை இருக்கும். காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும், நந்தவனத்தில் மலர்கள் பறித்துக் கோயிலுக்குச் சென்று கொடுப்பது அவரின் தினசரிப் பணி. ஒவ்வொரு பூவைப் பறிக்கும்போதும் சிவ நாமத்தை உச்சரிப்பதும், சிவன் நினைவாகவே இருப்பதும் அவர் வழக்கம். நெற்றியில் திருநீறு பூசி இருப்பார்.
காலம் தவறாமை அவரது சிறப்பு குணம். ஒரு நாளும் சிவனோ, சிவ பூஜை செய்யும் அந்தணரோ மலர்களுக்காக காத்துக் கிடந்தது கிடையாது. இரு மூங்கில் கூடைகள், இரு முனைகளிலும் தொங்கியபடி உள்ள அந்த மூங்கில் கழியை, அவர் தோளில் சுமந்து கொண்டு செல்வதே பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். ‘சிவதா சிவதா சிவதா’ என்று சொல்லிக் கொண்டே அவர் நடந்து செல்வதே ஒரு சிவ பூஜையைப் போலத்தான் இருக்கும். கிழக்கு மாட வீதியில் அவர் வருகையில், பார்ப்போர் ‘சிவதா! சிவதா!’ என்று குரல் கொடுப்பர்.
கரூரிலேயே, தெற்கு மாடவீதியில் ‘பசுமடம்’ எனும் சிவனடியார்களுக்கான மடம் ஒன்று உண்டு. அதில் ஒரு தீவிர சிவபக்தர். அவருக்கு இயற்பெயர் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. பரசுராமர் வைத்திருந்தது போல் மழு என்கிற ஆயுதத்தை, கையில் எப்பொழுதும் வைத்திருப்பார். சிவ பக்தியில் அவர் வித்தியாசமானவர். விசித்திரமானவரும் கூட! சிவ பக்தர்கள் யாரையாவது, எவராவது ஒருவர் துன்புறுத்தினால், கொதித்து எழுந்து தன் கையில் இருக்கும் ஆயுதத்தால் அவரைத் தாக்குவார். அதனாலேயே ‘எறிபத்தர்’ என்று அழைக்கப்பட்டார். அதுதான் தன் சிவத்தொண்டு என்று நினைத்து வாழ்ந்தவர்.
எந்த சிவ பக்தரையும் யாரும் நோகச் செய்வதை அவரால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உடனே கொதித்து எழுந்து அவரைத் தாக்கி விடுவார். இந்த உணர்வைத்தான் அவர் சிவ பூஜையாகவே நினைத்து இருந்தார். இந்தச் செயலை ஒரு வன்முறைச் செயலாக அவர் ஒரு நாளும் நினைத்ததே இல்லை. சந்தேகமோ, அச்சமோ அவருக்கு நேர்ந்ததே இல்லை. மற்றவர்கள் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை. அவரைப் பொறுத்தவரையில் சிவனும் அவன் அடியார்களும் எப்போதுமே எங்குமே பூஜிக்கத் தக்கவர்கள். ‘சிவோஹம் சிவோஹம்’ என்ற உச்சரிப்பும், சிவ நினைவுமாகவே இருந்தவர். கோயிலைச் சுற்றி வலம் வந்தபடியே இருப்பார்.
கரூர் நகரில் வாழ்ந்த பொழுதும், சிவகாமி ஆண்டாரும் எறிபத்தரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதில்லை.கரூர் நகரம், சோழ மன்னர்களின் மூன்றாம் தலைநகரமாக இருந்த காலகட்டம். புகழ்சோழன் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். அவரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இருப்பது தனிச்சிறப்பு. சைவ, வைணவ, சமண, பெளத்த மதங்கள் இடையே ஒற்றுமை கொஞ்சம் குறைந்து இருந்த காலமது.
கரூர் நகரின் நடுநாயகமாக கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அமைந்திருக்கும். பசுக்கள் தானாகவே சிவலிங்கத்தின் மேல் பால் பொழிந்ததாகவும், அதனால் சிவலிங்கத்தின் மீது பசுவின் காலடி பதிந்த சுவடுகள் இருப்பதாகவும் வரலாறு. அதனாலேயே அந்தக் கோயிலின் சிவனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். உயர்ந்த மதில் சுவரும், அகண்ட பிராகாரங்களும் அமைந்த திருக்கோயில். அமராவதி ஆறு, கரூர் நகரை வளமாக்கிக் கொண்டிருந்தது. புகழ்சோழன் சைவ சமயத்தின் மேல் கொண்ட மேலான ஈடுபாட்டால் கோயில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது. புகழ்சோழன், தன் மனதுக்கு நெருக்கமான தெய்வமாக கரூர் பசுபதீஸ்வரரை வழிபட்டு வந்தார்.
மலர்கள் பூஜைக்கு அளித்தும், உழவாரப்பணி செய்தும் வருகிற சிவகாமி ஆண்டார் எனும் ஒரு சிவத்தொண்டர்;
சிவத்தொண்டர் யாருக்கேனும் ஊறு செய்தால், சினம் கொண்டு தாக்கும் எறிபத்தர் எனும் ஒரு சிவத்தொண்டர்;
சிவநெறியே தனது ஆட்சியின் அறநெறியென ஆட்சி செய்யும் புகழ்சோழன் எனும் ஒரு சிவத்தொண்டர்.
இந்த மூன்று சிவநெறியார்களை, ஒரே நாளில், ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும் என்பது கரூர் பசுபதீஸ்வரரின் திருவுள்ளம்.
மூவரையும் ஒன்று சேர்க்க, அவர் தேர்ந்தெடுத்த திருநாள்- புரட்டாசி மாதம் அஷ்டமி திதி கூடிய நன்னாள். பசுபதீஸ்வரர் கோயிலில் விசேஷ பூஜைகளுக்கும் ஆராதனைகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை முதலே ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. சிவனும், உமையுடன், காலை முதலே கூடுதல் உற்சாகத்துடன் தயாரானார். அன்று காலை, சிவகாமி ஆண்டார் மலர் பறித்து கூடையில் சேர்த்துக் கொண்டிருந்தார். சிவதா! சிவதா! மனதில் ஒரு குதியல்! சிவதா என்றபடி திருநீறு பூசினார். சிவதா என்றபடி உருத்ராட்சம் அணிந்தார்.
சிவதா என்றபடி மூங்கில் கழியில் இரு புறமும் கூடைகளைக் கட்டினார். அதில் ஒரு நளினம் தெரிந்தது. ‘சிவதா! சிவதா! இன்றுதான், உன்னை ஏதோ புதிதாக, முதன் முதலில் பார்க்கப் போவதுபோல் என் மனது சொல்கிறேதே! ஏன் அப்படி? ஆனாலும் இதுகூட எனக்குப் பிடித்திருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் போதாதுதான். சிவதா! என்னை உன்னுடனே இருக்கச் செய்துவிடு!’ அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டார். அதில் நெகிழ்ந்து போனார். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கோயிலுக்குப் புறப்படத் தயாரானார்.
கோயிலின் வாசலில் மங்கள வாத்தியங்கள் இசைப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வேதம் ஓத, கோயிலுக்குள் வேதியர்கள் சென்று கொண்டிருந்தார்கள். எல்லா தரப்பு மக்களும் தங்கள் வீட்டில் கொண்டாடப்படுகிற விசேஷம் போல கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். தெருக்கள் முழுவதும் சிறிதும் பெரிதுமாக கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை நடந்து கொண்டிருந்தது. இனிப்புகள், பழங்கள், தின்பண்டங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
கரூர் நகரே கொண்டாட்டத்திற்குத் தயாரானது.அரசின் பட்டத்து யானை கோயிலின் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தது. யானையை, இரண்டு பாகன்களும், மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் அமராவதி ஆற்றின் கரைக்குக் கூட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். அமராவதியாற்றின் கரையில், திருவிழாவிற்கு வந்த ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருந்தது. முந்தைய நாள் உறுமி மேளம் இசைத்த கலைஞர்களும் அதே கரையில் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். யானையை எப்போது பார்த்தாலும் எல்லோருக்குமே ஒரு சந்தோஷமும், துள்ளலும் வரும். அதுவும் அரசின் பட்டத்து யானை என்றதும், கூடியிருந்தோருக்கு இன்னும் ஆனந்தம் பொங்கியது.
யானை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் குதூகலித்தது. அங்கிருந்த ஒரு இளைஞன், கரையில் வைத்திருந்த மத்தளத்தை அடிக்க ஆரம்பித்தான். சுற்றியிருந்த கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்ய, யானையும் ஆட ஆரம்பித்துவிட்டது. பாகன்களுக்கும் காவலர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தண்ணீரை யானை மேல் இறைத்து விளையாட, மத்தளம் இசை உச்சம் செல்ல எல்லோருமே பரவசத்தில் திளைத்தார்கள்.
நேரம் செல்வதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. கோயிலைச் சார்ந்த சிப்பந்திகள் இருவர் ஓடி வந்து பூஜைக்கு நேரமாவதைக் கூறி விரைவு படுத்தினர். அதை யாருமே பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அந்தக் கூட்டமும் யானையும் ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கு வந்த ஒரு பெரியவர் விவரம் புரிந்து, உரக்கப் பேசி அவர்கள் எல்லோரையும் கிளம்ப வைத்தார். எல்லோரையும் விரட்டுகிற தொனியில் தன் தோளிலிருந்த துண்டைச் சுழற்றினார். ஒருவழியாக எல்லோருமே கிளம்பத் தொட்ங்கினார்கள்.
பாதி குளியலில் புறப்பட்டதில், யானைக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. போட்ட குதி ஆட்டத்தில் இன்னமும் பசி கூடியது. வரும் வழியில் ஒருவன் கரும்பு விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஒன்றைப் பிடுங்கி யானை சாப்பிட்டபடி நடக்கத் துவங்கியது. பாகனுக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது, இன்னமும் யானைக்கு எந்த அலங்காரமும் செய்யவில்லையே என்று. நெற்றியில் விபூதி இட வேண்டும், மேலும், முகப்பில் முகப்பு பட்டை அணிவிக்க வேண்டும், மணிகள் பொருத்திய சங்கிலியை அணிவிக்க வேண்டும் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, தலைமை பாகன் மிகவும் பற்றமானான். இரண்டாவது பாகன் யானைக்குத் திருநீறு பூசுவதில் ஈடுபட்டான்.
காவலாளி, ‘இன்னும் யானைக்கு முகப்புப் பட்டம் கட்டவில்லையா?’ என்று அதட்டினான். ஆளுக்கு ஆள் நாட்டாமை செய்ய, ஒரு குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் ஒருவன் ராஜவீதி வழியாகப் போக வேண்டாம். நேரமாகி விடும். இந்தக் குறுகிய தெருவில் செல்லலாம் என முட்டாள்தனமான யோசனை சொல்ல, யானையும் அந்த ஐவரும் புறப்பட்டார்கள். ஒரு பாகன் ‘இது என்ன இடைஞ்சலாய்’ என்று பாதி தின்று கொண்டிருந்த கரும்பை யானையிடமிருந்து பிடுங்கி விட்டெறிந்தான். யானை இன்னும் கொஞ்சம் எரிச்சல் ஆனது. சமயம் தெரியாமல் மத்தளம் வாசிப்பவன், தாள கதியில் இசைக்கத் துவங்கினான். ஆடியபடியே, ஒரு சிறு கூட்டம் அந்தக் குறுகிய சந்தில் யானையைப் பின் தொடர்ந்து நுழைந்தது.
சிவகாமி ஆண்டார் அப்போதுதான் இரு பூக்கூடைகளைக் கொண்ட அந்த மூங்கிலை தோளில் சுமந்து, அதே குறுகிய தெருவில் நடந்து வந்தார். சிவ பூஜையை மட்டுமே மனதில் நினைத்து பூக்கூடைகளைச் சுமந்தபடி அவர் ‘சிவதா சிவதா’ என்று சொல்லியபடி முன்னே சென்றார். பின்னே வரும் யானையையும் அந்தச் சிறு கூட்டத்தையும் அவர் கவனிக்கவில்லை. மத்தள ஓசை உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. யானைக்கு சிவகாமி ஆண்டார் சுமந்து சென்ற மூங்கில், கரும்பாகத் தெரிந்திருக்க வேண்டும். யானை அந்த மூங்கிலை லேசாக தும்பிக்கையால் இழுக்க, நிலை தடுமாறி பூக்கூடைகளுடன் சிவகாமி ஆண்டார் தரையில் விழுந்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
யானைதான் தன்னை தள்ளி விட்டுச் சென்று கொண்டிருக்கிறது என நினைத்தார். கீழே விழுந்ததில் கையிலும் காலிலும் சிறு காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால், அந்த வலியை விட, சிவகாமி ஆண்டாருக்கு, ‘பூக்கள் மொத்தமும் தரையில் சிதறி விட்டதே! இப்பொழுது நான் சிவ பூஜைக்கு எப்படி மலர்களைச் சேமிப்பேன். என் பசுபதீஸ்வரன் நான் கொண்டுவரும் மலர்களுக்காகக் காத்திருப்பானே.’ அந்த உணர்வுதான் அவருக்கு மேலோங்கி இருந்தது. அதனால் ஒரு பக்கம் துக்கம், மறுபக்கம் தன்னுடைய இயலாமை என எல்லாமும் சேர்ந்து கொண்டது. ஓங்கிய குரலில் ‘சிவதா சிவதா’ என்றார்.
கொஞ்சம் தட்டுத் தடுமாறி எழுந்தார். கீழே விழுந்த மூங்கிலை எடுத்தார். முன்னே சென்ற யானையின் பின்புறத்தில் ஓங்கி அடித்தார். யானைக்கு அது உறைக்கவே இல்லை. கூடவே வந்த பாதுகாவலர்களும் யானைப் பாகன்களும் இதை சட்டை செய்ய வில்லை. கண்டும் காணாதது போலச் சென்றது, சிவகாமி ஆண்டாருக்கு மிகவும் வேதனை அளித்தது.
‘சிவதா ! சிவதா ! இதைக் கேட்க யாருமே இல்லையா? சிவதா!’ அனிச்சையாகக் குரல் எழுப்பினார்.
அவரின் கூச்சல் அந்தத் தெருவின் ஒரு முனையில் நின்றிருந்த எறிபத்தருக்குக் கேட்டது. ஓடோடி அவர் அருகில் வந்தார். ‘என்ன ஆயிற்று?’ என்றார். அவர் நடந்த அத்தனை விவரங்களையும் கூறினார்.ஏறிபத்தர் வெகுண்டார். பரசு ஆயுதத்தை ஓங்கியபடி யானையின் முன் சென்று மறித்தார். மத்தள ஓசை ஒரு புறம். யானையைப் பின் தொடர்ந்த கூட்டத்தின் ஆரவாரம் மறுபுறம். யானைக்கு, பாதி குளியலில் கிளம்பியது, கரும்பைப் பாதி தின்று கொண்டிருக்கும்போதே பிடுங்கியது என ஆத்திரம் பொங்கியது.
இப்பொழுது தன் முன்னே யாரோ ஒருவர் ஒரு மழுவைக் காட்டி எதிரில் நிற்பதைப் பார்த்துக் கலவரமானது. அவரைத் தும்பிக்கையால் தள்ள முற்பட்டது. எறிபத்தர், மலர்கள் கொண்டு வந்த சிவனடியார் மண்ணில் விழுந்தது மட்டுமே, மனதில் ஓட, தன்னுடைய பரசு ஆயுதத்தால் யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினார். யானை அலறல் சத்தத்துடன் தரையில் விழுந்தது. துடித்தது. மாண்டது. இரண்டு பாகன்களையும் விரட்டி, இழுத்துப் பிடித்தார். தன் பரசு ஆயுதத்தால் வெட்டினார். இருவர் தலைகளும் தரையில் உருண்டன. மூன்று காவலாளர்களையும் தேடிப் பிடித்தார். ஒவ்வொருவர் தலையையும் ஆயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். மத்தள ஓசை நின்றது. அந்தக் குறுகிய தெரு முழுவதும் இரத்த வெள்ளம்.மொத்தத்தில் ஐந்து ஆட்களும் யானையும் இறந்து கிடந்த காட்சி காண்போரைக் கலங்க வைத்தது.
கோயிலின் முகப்பில், இரத்தம் தோய்ந்த அந்த வீதியின் நடுவில், தரையில் சம்மணமிட்டு, எறிபத்தர் ‘சிவோஹம் சிவோஹம்’ என்று சொன்னபடி, அமர்ந்திருந்தார். அவர் கையில் உள்ள பரசு ஆயுதத்தில் இருந்து இரத்தம் இன்னமும் வழிந்து கொண்டிருந்தது.குழுமி இருந்த மக்கள் அனைவரும் செய்வது அறியாது திகைத்து, உறைந்து நின்றனர்.அங்கே, பணியிலிருந்த ஒரு அரண்மனை ஊழியன் அரசனிடம் ஓடோடிச் சென்றான். “மன்னா! நம் ஈஸ்வரன் கோயில் வாசலில் நம் பட்டத்து யானை, இரு பாகன்கள், மூன்று காவலாளிகள் இறந்து கிடக்கிறார்கள். வீதியெங்கும் இரத்த வெள்ளம். அநேகமாக சைவ மதம் அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களின் செயலாக இருக்கக் கூடும் மன்னா!” எனத் தவறான செய்தியைச் சொல்ல, புகழ்சோழனுக்கு மிகுந்த கோபம் உண்டானது.
உடனே குதிரையில் ஏறி, கோயிலை நோக்கி விரைந்தான். குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். மாண்டு கிடந்த ஐவரையும், பட்டத்து யானையையும், கண்டான். என்ன நடந்திருக்கக் கூடும் என யோசிக்கும் முன், அங்கே சம்மணமிட்டு அமர்ந்திருந்த எறிபத்தரைக் கண்டான். அவரது நெற்றியில் திருநீறு, அதனுடன் இரத்ததுளிகள், கழுத்தில் உருத்ராட்ச மாலையிலும் இரத்தம் தோய்ந்திருந்தது. நிகழ்ந்தது என்ன? யூகிக்க முடியாமல், அவருக்கு நேராகத் தரையில் மண்டியிட்டு அமர்ந்தார். “என்ன ஆயிற்று?” அரசன் கேட்க, ஏறிபத்தர் நடந்தவற்றை மிக நிதானமாக விவரித்தார்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நடக்க முடியாமல் ‘சிவதா சிவதா’ என்று முனகியபடி மன்னர் அருகில் சிவகாமி ஆண்டார் வந்தடைந்தார். ‘எல்லாமும் என்னால்தான். என்னை பூக்களுடன், யானை தள்ளி விட்டதாக நினைத்தேன். பாகன்களும், காவலாளிகளும் என் அலறலைக் கேட்காமல் சென்றதில், பாழாய்ப்போன கோபத்தில் கதறி, கூக்குரல் எழுப்பிவிட்டேன். மன்னா! எல்லோர் உயிரும் போக நானே காரணம். என்னைக் கொன்றுவிடுங்கள்.’ மன்னன் முன் மண்டியிட்டார்.
எறிபத்தர் விவரித்ததைக் கேட்டும், சிவகாமி ஆண்டார் புலம்பியதைக் கேட்டும், அரசனுக்கு முழு விவரம் புரிந்தது. எறிபத்தர் எதிரில், தரையில் பணிந்து வணங்கினார்.
‘ஐயனே! என்னை மன்னிக்க வேண்டும். சிவதா! சிவதா! என்று மூச்சுக்கு மூச்சு ப்ரார்த்திக்கும் இந்தச் சிவனடியாரையும், சிவோஹம் என்று ஜபித்தபடியிருக்கும் தங்களுக்கும் என் வணக்கங்கள். தாங்கள் இருவரும்தான் என்னை மன்னிக்க வேண்டும். யானை தவறிழைத்திருக்கலாம்.
அது ஒரு விலங்கு. பாகன்கள், காவலாளிகள் தவறிழைத்திருக்கலாம். அவர்கள் தவறுக்கு நான்தான் தார்மீகப் பொறுப்பு. மன்னன் சீரான ஆட்சி புரிந்தால், இதுபோன்ற துயரம் நிகழ்ந்திருக்குமா? இன்று சிவனுக்கு உகந்த ஒரு திருநாள்! இந்த நாளில் ஒரு சிவனடியாரின் மனம் வேதனைப் படும்படி நடந்து கொண்டதற்காக நான் உங்கள் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன். இந்தத் தவறு என்னுடையது. இதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியவனும் நானே. இந்தாருங்கள், என்னுடைய வாள். என் தலையை வெட்டி விடுங்கள்.
எனக்கு இந்தத் தண்டனையைக் கொடுப்பதற்குத் தகுதியானவர் நீங்கள்தான். ஆகட்டும்.. என்னைச் சிரச்சேதம் செய்யுங்கள். என்னை இந்தப் பழியிலிருந்து காத்து அருளுங்கள்.’ எறிபத்தரின் கையில் வாளைத் திணித்தார். அவரின் முன் தலை குனிந்து தயாரானார்.
எறிபத்தர், தனது வலது கையில் தன் மழுவையும், இடது கையில் மன்னர் அளித்த வாளையும் மாறிமாறி பார்த்தார். இரண்டையும் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டார்.
‘என்ன இது. இப்படி ஒரு மாபெரும் தவறு இழைத்து விட்டேன். என்னை அந்தச் சிவனே மன்னிக்க மாட்டான். இது போன்ற ஒரு அரசன் எங்கும் இருக்க முடியாது. ஒரு பெரிய அரசன் இவ்வளவு உயர்ந்த சிவனடியாராகவும் இருக்க முடியுமா?’ என்று புலம்பலானார்.
‘சிவன் மீது பக்தி, சிவனடியார் மீது பக்தி இருக்க வேண்டியதுதான். ஆனால், நான் ஏன் இப்படியொரு வன்முறையாளனாக மாறிப் போனேன். எத்தனை பேர்! எத்தனை துடிப்புகள்! எத்தனை வதைகள்! போதும் நான்தான் இங்கு தவறானவன்.’ வாளை மன்னர் கையில் கொடுத்து, அவரைப் பார்த்துப் பேசலானார், “அரசே! நீங்கள் தவறேதும் இழைக்கவில்லை. நான்தான் கண்மூடித்தனமாக இப்படி ஒரு பாதகத்தைச் செய்து விட்டேன்.
நீங்கள்தான் என் தலையைக் கொய்ய வேண்டும்.” அரசர், “இல்லை.. இல்லை நான்தான் தண்டனையை ஏற்க வேண்டும்.”சிவகாமி ஆண்டார் விக்கித்து இருவரையும் பார்த்தார். ஆலய கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டபடி, ‘சிவதா! சிவதா! என்னை நான் மாய்த்துக் கொள்கிறேன்.’ என்றபடி அரசரின் வாளைப் பறிக்க முற்பட்டார். மூன்று சிவனடியார்களும் ஒரு புள்ளியில் இணைந்த அந்தக் கணம், பசுபதீஸ்வரன் உமையுடன் வானில் தோன்றினார். ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசனைக் கண்டதும், மூவரும் பரமானந்தம் கொண்டனர்.‘எறிபத்தரே! புகழ்சோழனே! இனிய சிவதாவே! உங்களின் சிவத்தொண்டு பற்றி, இந்த அகிலம் உணரவே, இந்த நிகழ்வு நடந்தேறியது. உங்கள் இறைப் பணி தொடரட்டும்.’ என சிவன் மூவரையும் ஆசிர்வதித்தார்.
யானையும், உயிர் துறந்த ஐவரும் உயிர்த்தெழுந்தனர்.எங்கும் மகிழ்ச்சி பொங்கியது.எறிபத்த நாயனார் ‘சிவோஹம்! சிவோஹம்!’ என்றபடி சிவனைத் தொழுதபடி கோயிலுக்குள் நுழைந்தார்.புகழ்சோழ மன்னர், தனது பட்டத்து யானையிலேறி, ‘சிவமயம்! சிவமயம்!’ என்று முழங்கியபடி புறப்பட்டார்.சிவகாமி ஆண்டார் உற்சாகமாக பூக்கூடைகள் கொண்ட மூங்கில் கழியைச் சுமந்தபடி, ‘சிவதா! சிவதா!’ என அகமகிழ்ந்து ஈஸ்வரன் சந்நதி நோக்கி நடந்தார்.சந்நதியில் ஒரு சிவனடியார் பாடிய பதிகம் காற்றில் நிறைந்திருந்தது.
விண்ணுலாமு மதி சூடி வேதமே
பண் உளார் பரமாய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே!!
கோதண்டராமன்



