?கட்டுப்பாட்டுடன் சிறுக சிறுக தேவைக்கேற்றவாறு செலவழித்தாலும் திடீரென உண்டாகும் எதிர்பாராத மருத்துவ செலவுகளால் கடன் வாங்கி அவதிப்பட நேரிடுகிறதே, இதுவும் கர்ம வினைதானா? இது தீர வழி சொல்லுங்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அனுபவித்து தீர்ப்பதுதான் வழி. அதனை எதிர்கொள்ளும் மனோபலத்தையும் உடல் பலத்தையும் அடியேனுக்குத் தந்து துணைநிற்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுவதே பரிகாரங்கள் என்பது. இதுபோக ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தபிரான் சொன்னதை அவ்வப்போது நினைவில் கொண்டு வாருங்கள். வீண் பகட்டு மற்றும் மாயைக்கு மயங்கி கடனை வாங்கியாவது செலவழித்தால்தான் அதன் தரம் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு மாயைக்குள் நாம் சிக்கி இருப்பதே இதற்குக் காரணம். நோய் வரும் என்பது வேண்டுமானால் கர்மவினை எனும் விதியாக இருக்கலாம். அதனை எப்படி எதிர்கொண்டு வெல்லலாம் என்பது நம்முடைய மதியில்தானே இருக்கிறது.
?வாஸ்துபடி ஒரு பிளாட்டின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்?
- வாசுதேவன், தி.நகர் - சென்னை.
செவ்வக வடிவில் இருக்க வேண்டும். நீளம் மற்றும் அகலம் இரட்டைப்படை எண்ணாக இருப்பது அவசியம். உதாரணத்திற்கு ஒரு கிரவுண்ட் எனப்படும் 2400 சதுர அடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீளம் 60 அடியாகவும் அகலம் 40 அடியாகவும் இருப்பது உத்தமம்.
?தற்போதுள்ள சூழலில் அட்டாச்டு குளியல் & கழிப்பறைகள்தான் அமைத்துத் தருகிறார்கள், அப்படி இருப்பது சரிதானா?
- பத்மினி சத்யராஜன், கரூர்.
நிச்சயமாக சரியில்லை. முதலில் சாஸ்திரத்தின்படி வீட்டிற்குள் குளியல் மற்றும் கழிப்பறைகள் இருக்கக்கூடாது. இவை இரண்டுமே கொல்லைப்புறம் என்று அழைக்கப்படும் தோட்டத்தில்தான் அமைக்க வேண்டும். பெருநகரங்கள் மற்றும் அபார்ட்மெண்ட்களில் வீட்டிற்குள்ளேயே குளியல் மற்றும் கழிப்பறைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அவற்றை அறைகளோடு இணைக்காமல் தனியாக அமைப்பது நல்லது. இதுபோக இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்காமல் தனித்தனியேதான் அமைக்க வேண்டும். கழிப்பறை மற்றும் குளியலறை இரண்டுமே எதிர் எதிர் வினைகளைப் புரிபவை. கழிப்பறை என்பதை என்னதான் நாம் சுத்தமாக வைத்திருந்தாலும் அங்கே கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். குளியல் அறை என்பது நம் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்குகின்ற இடமாக இருப்பதோடு நோய்த்தொற்றுக் கிருமிகள் எதுவும் நம்மை அண்டாது பாதுகாக்கின்ற பகுதியாகவும் இருக்கிறது. வெளியில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கச் செல்கிறோமே ஏன்? அழுக்குகளும் வியர்வையில் வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகளும் நம்மை விட்டு அகல வேண்டும் என்பதற்காகத்தானே. அப்படியிருக்க கிருமிகள் வாசம் செய்துகொண்டிருக்கும் கழிப்பறையை குளியல் அறையோடு இணைத்து வைப்பது என்பது நிச்சயமாக ஆரோக்யத்தைத் தராது. இடப்பற்றாக்குறையின் காரணமாக வேறு வழியின்றி அட்டாச்டு குளியல்-கழிப்பறைகளை அமைப்பவர்கள் குறைந்தபட்சமாக இவை இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு வைத்திருக்க வேண்டும். அத்துடன் குளியலறைப் பகுதிக்கும் கழிப்பறைப் பகுதிக்கும் ஒன்றரை அடி உயர வித்தியாசம் இருப்பதும் ஓரளவிற்கு நன்மையைத் தரும்.
?ஒரு நபரின் பிறந்த தேதி சொத்து வாங்குவதை பாதிக்கிறதா?
- மாரிமுத்து, சேலம்
நிச்சயமாக பாதிக்காது. பிறந்த தேதியைக் கொண்டு சொத்து வாங்க முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்க இயலாது. எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவரால் சொத்து வாங்க முடியும். அவரது ஜனன ஜாதக அமைப்புதான் இதனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் லக்ன பாவம், நான்காம் பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் இவற்றின் பலம்தான் சொத்து வாங்கும் யோகத்தினைத் தரும். ஒரு சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் இருந்தாலும் அவர்களால் அதனை அனுபவிக்க இயலாமல் போகும். சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பார்கள். இதனையும் அவர்களது ஜாதக பலம்தான் தீர்மானிக்கும். பிறந்த தேதி என்பது சொத்து வாங்குவதை நிச்சயமாக பாதிக்காது.
?மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை வரனாகத் தேர்வு செய்யலாம்?
- பி.கனகராஜ், மதுரை.
மூலம் மட்டுமல்ல, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் எந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த வரனையும் தேர்வு செய்யலாம். நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பொருத்தம் பார்ப்பது மட்டுமே சரியல்ல. அவரவர் பிறந்த ஜனன ஜாதகத்தைக் கொண்டுதான் பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு எல்லை வரைதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷம் என்றும் மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வது முற்றிலும் தவறான கருத்து.
?நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டால் நன்மை உண்டாகுமா?
- எம்.சிவா, ராமநாதபுரம்.
நவகிரகங்களில் சூரியனைத் தவிர மற்ற கோள்கள் அனைத்தும் இறைவன் இட்ட ஆணையை சரிவரச் செய்யும் பணியாட்களே. நவகிரகங்களுக்கும் தலைவனான இறைவனைத்தான் வணங்க வேண்டுமே தவிர நவகிரகங்களை பகவான் என்ற பட்டத்துடன் அழைப்பதோ அல்லது அவர்களை தனியாக வணங்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய ஹவிர்பாகத்தினை ஹோமத்தின் மூலமாக வழங்க வேண்டும் என்று நமது சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. அதனால்தான் நம் வீட்டினில் நவகிரக ஹோமத்தினை நடத்துகிறோம். அதுபோன்று ஹோமம் செய்யும் நேரத்தில் உபயோகிப்பதற்குத்தான் நவகிரகங்களுக்கு என்று தனியாக வேதமந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. அதனைக்கொண்டு கிரகங்களைத் தனியாக வணங்கி வழிபட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சூரியனை மட்டும் சூரிய நாராயண ஸ்வாமி என்று அழைப்போம், அத்துடன் அவரை வணங்குவதற்கு என அருண பாராயணம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற மந்திரங்கள் உண்டு. சூரியனைக் கூட படமாக வைத்து வழிபடக்கூடாது. பிரத்யட்சமாக சூரியனை நோக்கி நமஸ்காரம் செய்து வழிபட வேண்டும்.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.



