Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஞானம் வேண்டுமா? செல்வம் வேண்டுமா?

இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகும் அனுமன், கர்நாடக மாநிலம் `தம்பிஹள்ளி’ என்னும் பகுதியில் அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ மாதவதீர்த்த மடத்தின் உள்ளே வீற்றிருக்கிறார். அனுமனை தரிசிப்பதற்கு முன்பாக, மாதவதீர்த்த மடத்தைப் பற்றி சற்று அறிவோம்.

அஷ்ட மடங்களை தவிர

ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார், துவைத தத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்ல, உடுப்பியில் அஷ்ட (எட்டு) மடத்தை உருவாக்கி, அதற்கு எட்டு சீடர்களுக்கு சந்நியாசம் கொடுத்து, கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்து, பர்யாயம் முறையில் பூஜையும் செய்ய ஆவணம் செய்தார். இந்த அஷ்ட மடங்களைத் தவிர, ``ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்’’, ``ஸ்ரீ நரஹரி தீர்த்தர்’’, ``ஸ்ரீ மாதவ தீர்த்தர்’’ மற்றும் ``ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்’’ ஆகிய தனது முதல் நான்கு சீடர்களுக்கு

சந்நியாசம் கொடுத்து, அவர்களுக்கு சில விக்ரகங்களையும் கொடுத்து பூஜிக்கவும், மக்களிடையே துவைதத்தை போதிக்கவும் ஆணையிட்டு, வேதவியாசரிடத்தில் பாடங்களை கற்க பத்ரிக்கு சென்று விட்டார்.

அதன்படி, முதல் சீடரான ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், இந்தியா முழுவதிலும் சஞ்சாரம் செய்து, மத்வர் கூறிய துவைத கருத்துக்களை மக்களிடையே எடுத்துரைத்தார். சில ஆண்டுகள் கழித்து, ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தரிடத்தில் பீடத்தை ஒப்படைத்துவிட்டு, கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு அருகேயுள்ள ஆனேகுந்தி என்னும் இடத்தில் பிருந்தாவனம் ஆனார்.

ராமரை பூஜிக்கும் சந்நியாசிகள்

இப்படியாக ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தரிடத்திலும், ஸ்ரீ மாதவ தீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரிடத்திலும், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், ஸ்ரீ மதுஹரி தீர்த்தரிடத்திலும் சந்நியாசம் கொடுத்து பொறுப்புகள் வழங்கப்பட்டது. ஸ்ரீ மதுஹரி தீர்த்தர்தான் முதல் முதலில் தன் குருவின் பெயரில் அதாவது `ஸ்ரீ மாதவ தீர்த்த மடம்’ என்று ஸ்தாபிக்கிறார். இந்த மடத்திற்கு `தம்பிஹள்ளி மடம்’, `மஜ்ஜிகேஹள்ளி மடம்’ ஆகிய வெவ்வேறு பெயர்களும் உண்டு. ஆக, இந்த மாதவ மடத்திற்கு ஸ்ரீ மதுஹரி தீர்த்தர்தான் முதல் துறவியாவார். மாதவ மடத்தின் பிரதான தெய்வம் ``ஸ்ரீ மூல வீர ராமர்’’. இந்த வீர ராமரையே தற்போது வரை வழிவழியாக பல சந்நியாசிகள் பூஜித்து வருகிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ மாதவ தீர்த்த மடத்தின் உள்ளே, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், பெரிய உருவில் காட்சியளிக்கிறார்.

கனவில் வந்த அனுமன்

சுமார் ஒரு ஐந்து அடி உயரம் இருப்பார். தினமும் இவருக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. வியாசராஜர்தான் பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்பதற்கு ஏற்ப, ஒரு பக்க முகம், கையில் சௌகந்திகா புஷ்பம், வாலில் சிறிய மணி ஆகியவை அனுமனிடத்தில் காணப்படுகின்றன. இந்த அனுமன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும், அனுமனை நினைத்து அவரவர் சக்திக்கு ஏற்றாற் போல், பிரதக்ஷண நமஸ்காரங்களை செய்தால், மனதில் எண்ணிய காரியங்கள் கிட்டும். அதே போல், இங்கு பல மகான்களின் மூலபிருந்தாவனங்கள் காணப்படுவதால், இம்மடம் சாந்நித்யம் நிறைந்த இடமாகும். கேட்டது நிச்சயம் கிடைக்கும். இப்படி இந்த மடத்தை பற்றி கேள்விப்பட்ட புஜங்கராவ் - சீதாம்மாள் தம்பதிகள், தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி அனுமனுக்கும், இங்குள்ள மகான்களின் பிருந்தாவனத்திற்கும் காலையிலும் மாலையிலும் பிரதக்ஷண நமஸ்காரங்களை பக்தியுடன் செய்தும், ஒரே ஒரு பொழுது உணவை மட்டும் உண்டும், அனுமனே கதி என்று அவர் மீது துதி பாடியும், ஸ்லோகங்களை சொல்லியும் அங்கேயே தங்கி சேவை செய்து வந்திருக்கிறார்கள்.

ஒரு நாள் இரவில், தம்பதிகளின் கனவில் தோன்றிய அனுமன்

``உங்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. ஆனால், பிறக்கும் குழந்தை ஞானத்தால் நிறைந்து இருக்க வேண்டுமா? அல்லது செல்வத்தால் நிறைந்து இருக்க வேண்டுமா?’’ என கேட்க...

``எங்கள் குழந்தை, ஞானத்தால் நிறைந்து இருந்தால் போதும்’’ என்று கூறியிருக்கிறார்கள். அனுமன் ஆசீர்வதித்து மறைகிறார். புஜங்கராவ் - சீதாம்மாள் தம்பதிக்கு ஒரே மகிழ்ச்சி. சிறிது நாட்களிலேயே சீதாம்மாள் கருவுற்று அழகான ஆண் குழந்தை பெற்றெடுக்கிறாள். அக்குழந்தைக்கு பிரகலாதன் என்று பெயர் வைக்கிறார்கள். ஞானத்தில் அதிபுத்திசாலியாக நிகழ்கிறான், பிரகலாதன்.

ஞானம் கிடைத்தால் செல்வம் வந்துவிடும்

அதனால், வெகு காலத்திலேயே பிரகலாதனால் குடும்பம் செல்வம் செழிப்போடு வாழ்ந்தது. ஒரு நாள், திருடன் இவர்களது வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் உள்ள அத்தனை செல்வங்களையும் கொள்ளை அடித்து சென்றுவிட, புஜங்கராவ் குடும்பம் வாடியது. இருந்தபோதிலும், தன் கல்வி ஞானத்தை வைத்து, குடும்பத்தை காப்பாற்றினான், பிரகலாதன். அதோடு மட்டுமல்லாது, மிக குறுகிய காலத்தில் பிரகலாதனால் மீண்டும் செல்வந்தராக குடும்பம் உயர்ந்தது. அப்போதுதான் புஜங்கராவிற்கும் சீதாம்மாளுக்கும் புரிந்தது. ``ஆஹா... அன்று அனுமன் கனவில் வந்து கேட்கும்போது, நாம் சரியாக `ஞானம்’ என்றோம். செல்வம் என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்? என்று சிலாகித்தனர். இத்தகைய சக்திவாய்ந்தவர், மாதவ மடத்தினுள் இருக்கும் அனுமன்!

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 7 வரை.

எப்படி செல்வது: பெங்களூரில் இருந்து 86 கி.மீ., பயணித்தால் ஸ்ரீ மாதவ தீர்த்த மடத்தை அடைந்துவிடலாம். ஆந்திரா - கர்நாடகா எல்லை பகுதி என்பதால் வேலூரில் இருந்து 122 கி.மீ., தூரத்திலும் இந்த மடத்தை அடையலாம்.