Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்பும் மரியாதையும் வேண்டுமா?

நம் அனைவருக்கும் தேவைப்படுவது அன்பும், மரியாதையும். அதுவும் வயது கூடும் பொழுது நம்மைப் பராமரிப்பது அவையே. வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது நமது சுற்றம். மரியாதை என்பது பூமராங்போல், நாம் அனுப்பும் வேகத்தில் பறந்து, திரும்பும் பொழுது பன்மடங்காக வேகத்துடன் வரும். ராமாயணத்தில் வானரப் படைக்கு ராமர் முதலில் கற்றுத் தருவது மரியாதை. அந்தப் பயிற்சியை சுக்ரீவனிடத்தில் தொடங்கினார்.

ஆரம்பத்தில் லட்சுமணனை அலட்சியப்படுத்தியதை கவனித்த ராமர், சுக்ரீவனை முதலில் வாலியிடம் தனியாக மோத அனுமதித்தார். வாலியிடம் உதை வாங்கிய சுக்ரீவன் எல்லோரிடமும் பணிவாக இருந்தான். லட்சுமணனுக்கும் ராமரிடம் செலுத்தும் அதே மரியாதையை எல்லோரிடமும் செலுத்த கற்றுக் கொண்டான். சுக்ரீவனைப் பார்த்து வானரப் படையும் கற்றுக் கொண்டது.

மரியாதை கொடுப்பதும் பெறுவதும் ஒரு உறவை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மரியாதை நம்பிக்கை கொடுக்கும். பின்பு, அன்பாக உருவெடுக்கும். யாரேனும் ‘‘உன் மேல் பெரும் அன்பு வைத்திருக்கிறேன்” என்று சொல்லி நம்பிக்கையை உடைத்தார்கள் என்றால் அவர்களுக்கு மரியாதையும் இல்லை, அன்பும் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தில் போர்க்களத்தில் தர்மர், போர் ஆரம்பிப்பதற்கு முன் தன் தேரை விட்டு இறங்கி எதிர்தரப்பில் இருக்கும் குரு மார்களையும், பெரியோர்களையும் வணங்கினார். இந்தச் செயலானது அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.

துரியோதனனோ அவனுடைய அணியில் இருப்பவர்களையே மதிக்கவில்லை. அவர்களை ஏசினான். அவமானப்படுத்தினான். விளைவு தோல்வி. பிறர் நம்மை நோக்கி வருவதற்கு, நம்முள் ஒரு காந்தம் தேவை. அந்த காந்தம் பிறரைப் பற்றி யோசிப்பது, அவர்களை பற்றியே அக்கறை கொள்வது, நம்மால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளைபற்றி யோசிப்பது. இந்த மனநிலை மனிதர்களை நம்மை நோக்கி இழுக்கும். பெரும்பாலான தலைவர்களுக்கு இந்த நேசம் இருந்தது.

அதே காந்தமானது தன்னைப் பற்றியே யோசித்தபடி இருந்தால், சிறு துரும்பு கூட அருகில் வரவே வராது. மக்கள் self centered மனோ நிலையில் இருப்பவர்களிடம் நெருங்க மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கை அவர்களைப் பற்றியே சிந்தித்து ஓய்ந்து போகும்.ராமாயணத்தில் ராவணன் தன்னைப் பற்றியே சிந்தித்து, தன் ஆசையை நிறைவேற்றுவதற்கு தன் குடும்பத்தையும், மக்களையும் இழக்கத் துணிந்தான். போரில் இறந்தவர்களை அவர்களுக்குரிய மரியாதை செய்யாமல் கடலில் வீசி எறிந்தான்.

ராமனை அனைவரும் விரும்பினர். அவன் சுற்றங்களும், எதிர் அணியில் இருந்து வந்த விபீஷணன், கும்பகர்ணன் என்று எல்லோருக்குமே ராமனின் மீது மரியாதை இருந்தது. ராமனுக்கு எல்லோர் மீதும் இருக்கும் அக்கறையும், அன்பும் அவனை நோக்கி பலரை வரச் செய்தது.ஜடாயுவிற்கு ஒரு தகப்பனுக்கு மகன் செய்யும் ஈமச் சடங்கினை செய்தார். போரில் உயிரை விட்ட வானரங்களின் உடலை பத்திரப்படுத்தி, பின்னர் ஹனுமான் சஞ்சீவினி மலையை எடுத்து வரும்பொழுது, அந்த வானரங்களின் உயிரை மீட்டார்.

பிறரின் வெற்றியை நம் வெற்றிபோல் கொண்டாடினால், வெற்றிகள் நம்மை நோக்கி வரும். பாரதத்தில் பாண்டவர்கள் விராட ராஜ்யத்திற்கு பெரும் உதவி செய்தனர். குரு க்ஷேத்திரத்தில் விராட சைன்யம் பாண்டவர்களுடன் கை கோர்த்தது. ராமாயணத்தில் ராமன் சுக்ரீவனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தான். வானரப் படையே அவனுக்கு சைன்யமானது. தேனீ போல் இருக்க வேண்டும். சுற்றுப் புறச்சூழல் ஆர்வலர்களுக்கு தெரியும், தேனீ தேன் சேகரிப்பதிலும், மகரந்தச் சேர்க்கையிலும் அது நமக்கு செய்யும் சேவை எப்படிப்பட்டதென்று.

ராமாயணத்தில் சுமந்த்ரன் என்கிற ஒரு தேரோட்டி இருந்தார். அவருக்கு அயோத்தியின் மீதும் அந்த மக்களின் மீதும் இருந்த பற்று, சேவை மனப்பான்மை அவரை அந்த நாட்டின் மந்திரியாக உயர்த்தியது. பதவியை நோக்கி அவர் அந்த அக்கறையை காட்டவில்லை. அவர் இயல்பிலேயே பண்புள்ளவராக இருந்தார். பதவி அவரைத் தேடி வந்தது.

அஸ்வத்தாமனோ உலகத்தில் உள்ள சிறந்தவைகள் எல்லாம் அவன் காலில் கொட்டிக் கிடந்தது. அவனுடைய பேராசை மேலும் மேலும் பொருட்களை குவிக்கச் செய்தது. முடிவில் பெரும் சாபத்திற்கு ஆளானான். நாம் நடந்து கொள்வதிலும், நம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொள்வதாலும் மட்டுமே, மக்களின் மனதில் நீங்காத இடத்தைத் தரும். நம்மை நோக்கி வரச் செய்யும்.

ரம்யா வாசுதேவன்