Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புதையலை இழந்துவிடாதிருங்கள்!

ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர், தன் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டு மிகவும் கவலைப்பட்டார். மக்கள் உழைப்பதைவிட சோம்பலை அதிகமாக விரும்பினார்கள். சிறிய பிரச்னைகளைக்கூட தீர்க்க முயற்சி செய்யாமல், பிறரைக் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் முயற்சி, பொறுப்பு உணர்வு, சிந்தனைத் திறன் போன்றவை குறைந்து காணப்பட்டன. இதை மாற்ற வேண்டும் என்று மன்னர் பல வழிகளில் அறிவுரை கூறினார். ஆனால் மக்கள் அதைக் கவனிக்கவில்லை. ஒருநாள், மக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று மன்னர் முடிவு செய்தார். அதிக மக்கள் நடமாடும் ஒரு நாற்சந்தியில் பெரிய கல்லொன்றை உருட்டி வைத்து, வழியை மறைத்தார். அதை யார் வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

பின்னர் அருகில் மறைந்து நின்று மக்களின் செயல்களை கவனித்தார். அந்த வழியாக பலர் சென்றார்கள். வியாபாரிகள், விவசாயிகள், படைவீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அந்தக் கல்லைக் கண்டார்கள். சிலர், “இது என்ன தொந்தரவு?” என்று புலம்பினார்கள். சிலர், “அரசாங்கம் சரியாக வேலை செய்யவில்லை” என்று குறை கூறினார்கள். ஆனால், அந்தக் கல்லை அகற்ற எவரும் முன்வரவில்லை. எல்லோரும் அதைச் சுற்றி விலகிச் சென்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

சில நாட்கள் கழித்து, மன்னர் நாட்டின் மக்களை அழைத்தார். அனைவரும் நாற்சந்தியில் கூடியபோது, மன்னர் அவர்களுடன் அந்தக் கல்லின் அருகில் சென்றார். பின்னர் தன் கைகளால் கல்லை உருட்டி ஓரமாக நகர்த்தினார். மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கல்லின் கீழே ஒரு பெரிய பை இருந்தது. அதை எடுத்துத் திறந்தபோது, அதில் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. மக்கள் அதைக் கண்டு வியந்தனர். பின்னர் மன்னர், அந்தப் பையில் இருந்த ஒரு குறிப்பை வாசித்தார்:

“இந்தக் கல்லை உருட்டித் தள்ளுகிறவர்களுக்கு இந்தப் பொற்காசுகள் அனைத்தும் சொந்தமாகும்.” இதைக் கேட்ட மக்கள் தலைகுனிந்தனர்.

தங்களுடைய சோம்பேறித்தனமும் அலட்சியமும் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கச் செய்தது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் குறை கூறுவதில் நேரத்தை செலவிட்டார்கள்; ஆனால் ஒரு சிறிய முயற்சியைக்கூட எடுக்கவில்லை. அதன் விளைவாக, தங்களுக்காக வைத்திருந்த புதையலை இழந்துவிட்டார்கள். அப்போது மன்னர், “வாழ்க்கையில் பல தடைகள் கல்லைப் போல நம் முன்னால் தோன்றும். அவற்றைக் கண்டு பயந்து விலகிச் சென்றால், அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆசீர்வாதங்களையும் வாய்ப்புகளையும் இழந்து விடுவோம். முயற்சி செய்பவர்களே வெற்றியையும் பலனையும் பெறுவார்கள்” என்று அறிவுரை கூறினார். இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான உண்மையை கற்றுத் தருகிறது. வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சவாலும் ஒரு தடையாக மட்டும் அல்ல; அது ஒரு புதிய வாய்ப்பிற்கான கதவாகவும் இருக்கலாம்.

சோம்பல், பயம், அலட்சியம் ஆகியவை நம்முடைய திறமைகளையும் ஆசீர்வாதங்களையும் மறைத்து விடுகின்றன. ஆனால் உழைப்பு, துணிவு, முயற்சி ஆகியவை மறைந்திருக்கும் புதையல்களை வெளிக்கொண்டு வருகின்றன.

எனவே, வாழ்க்கையில் வரும் தடைகளைக் கண்டு பின்வாங்காமல், அவற்றை எதிர்கொண்டு செயல்படுவோம். அப்போது மட்டுமே நமக்காக தேவன் வைத்திருக்கும் உண்மையான பொக்கிஷங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்; (நீதி13:4) இந்தக் கதையின் கருத்தை அழகாக எடுத்துக்காட்டும் வசனம் இதுவாகும். சோம்பேறித்தனத்தால் மக்கள் புதையலை இழந்ததுபோல, முயற்சியற்ற வாழ்க்கை ஆசீர்வாதங்களையும் வாய்ப்புகளையும் இழக்கச் செய்கிறது. ஆனால் சுறுசுறுப்பும், உழைப்பும் உள்ளவர்கள், தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.