Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறிய ஆரம்பத்தை அற்பமாக எண்ணாதிருங்கள்

ஒரு பெரிய ஆலமரத்தின் கிளையில் பிறந்த ஒரு விதை, காற்றில் பறந்து வந்து வெறிச்சோடிய நிலத்தில் விழுந்தது. சுற்றிலும் கற்கள், முட்செடிகள், குப்பைகள். அருகில் விழுந்த மற்ற விதைகள் அதைப் பார்த்து சிரித்தன.

“இங்கேயா வளரப் போகிறாய்? இந்த நிலத்தில் எதுவும் உயிர் வாழாது!” என்றது ஒரு இலை.

“நீ விழுந்த இடமே உனக்கு முடிவு” என்றது ஒரு கல். ஆனால், அந்த விதை மட்டும் அமைதியாக இருந்தது. சில நாட்களில் மழை பெய்தது. மண் நனைந்தது. விதை முளைக்கத் தொடங்கியது. அப்போது ஒரு ஆடு வந்து அதன் மென்மையான தளிரை கடித்துவிட்டது.

“இப்போது உன் கனவு கலைந்ததா?” என காற்று, கேலி செய்தது. விதை வலியால் நடுங்கியது. ஆனால் அது இறக்கவில்லை. மீண்டும் முளைத்தது. மாதங்கள் கடந்தன. கடும் வெயில். தண்ணீர் இல்லை. அதன் இலைகள் உலர்ந்தன. அருகிலிருந்த பல செடிகள் வாடி விழுந்தன.

“இதுதான் உன் முடிவு” என்று சூரியன் சிரித்தது போல தோன்றியது. ஆனால், அந்தச் சிறிய செடி, தன் வேர்களை இன்னும் ஆழமாக அனுப்பியது. மேலே வளர முடியாத நாட்களில், கீழே வளர கற்றுக்கொண்டது. ஒருநாள் இரவில் பெரிய புயல் வந்தது. மின்னல், இடிமுழக்கம்... மரங்கள் பல முறிந்து விழுந்தன. சிறிய செடியும் கிட்டத்தட்ட பிடுங்கப்பட்டு போயிற்று. அப்போது அந்த விதை முதன்முறையாக மனம் கலங்கியது.

“இறைவா, ஏன் இத்தனை சோதனைகள்? நான் என்ன தவறு செய்தேன்?” என்று வானத்தை நோக்கி கேட்டது. அப்போது அதன் அருகில் இருந்த ஒரு பழைய கல் பேசத் தொடங்கியது.

“நான் நூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். என்னை மழையும் வெயிலும் மாற்றவில்லை. ஏனெனில் நான் ஒரு உணர்வற்ற கல். ஆனால் நீயோ ஒரு விதை. உன் வலிகள் உன்னை மாற்றுவதற்குதான் வரும். நீ மண்ணுக்குள் புதைக்கப்பட்டதைக் கல்லறை என்று நினைக்காதே; அது உனக்கான கருவறை” அந்த வார்த்தைகள் செடியின் உள்ளத்தில் ஒலித்தன. சில மாதங்கள் உருண்டோடின. ஒருகாலத்தில் அதைக் கேலி செய்த விதைகள் எல்லாம் மறைந்துவிட்டன. சிலவற்றை பறவைகள் தின்றன. சிலவற்றை வெயில் சுட்டது.

சிலவற்றை மக்கள் மிதித்துச் சென்றனர். ஆனால் அந்த விதை மட்டும் ஒவ்வொரு காயத்தையும் தனது வேராக மாற்றிக் கொண்டது. ஒவ்வொரு தோல்வியையும் தனது பலமாக்கிக் கொண்டது. இறுதியில் ஒரு நாள்... அந்த வெறிச்சோடிய நிலத்தின் நடுவில், வானத்தைத் தொடும் அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் நின்றது. அதன் கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டின. அதன் நிழலில் பயணிகள் ஓய்வெடுத்தனர். குழந்தைகள் விளையாடினர். வெயிலில் வாடியவர்கள் அதன் நிழலைத் தேடி வந்தனர். ஒரு சிறுவன் மரத்தைப் பார்த்து, தன் தாத்தாவிடம் கேட்டான்.

“தாத்தா, இந்த ஆலமரம் எப்படி இவ்வளவு பெரியதாய் வளர்ந்தது?” தாத்தா சிரித்துக்கொண்டே பேச துவங்கினார்.

“இதன் மரத்தின் கதையை யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் ஒரு உண்மை மட்டும் எனக்கு தெரியும். இது நல்ல நிலத்தில் பிறந்ததால் பெரியதாகவில்லை. கடினமான நிலத்தில்கூட தன் வலிமையை கைவிடாமல் நின்றதால் பெரியதாகியது” என்று கண்கலங்கி கூறினார். காற்று மெதுவாக மரத்தின் இலைகளை வருடியது. அப்போது அந்த ஆலமரம் மனதிற்குள் சொன்னது;

“என்னை வளர்த்தது மழை மட்டும் அல்ல; என்னை உடைக்க வந்த புயல்களும்தான். என்னை உயர்த்தியது வெற்றி மட்டும் அல்ல; என்னை அழவைத்த தோல்விகளும்தான். நான் விழுந்த இடத்தில் சருகாகவில்லை. நான் கண்ட வலிகளை உரமாக்கினேன். அதனால் இன்று அனைவரும் அண்ணாந்து பார்க்கும் ஆலமரமாக நிற்கிறேன்” என்றது. இறைமக்களே, வாழ்க்கை உங்களை மண்ணுக்குள் புதைத்துவிட்டதாக தோன்றலாம். ஆனால் தேவனுடைய கரங்களில் இருக்கும் விதை ஒருபோதும் அழிவதில்லை. அவர் நட்டதை அவர் வளர்ப்பார். இன்று நீங்கள் விதையாக இருந்தாலும், நாளை பலருக்கு நிழல் தரும் ஆலமரமாக உங்களை தேவன் எழுப்புவார். ஆகவே, கண்ணீரோடு விதையுங்கள்; விசுவாசத்தோடு காத்திருங்கள்; தேவன் தமது காலத்தில் உங்களை மகிமையாய் உயர்த்துவார். விதையாக இருப்பதை நிறுத்தாதவர்கள்தான் ஒருநாள் ஆலமரமாகிறார்கள்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.