Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி

*பன்முகத் தோற்றம்

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி கொண்டாடும் முறை விதம் விதமாக இருக்கிறது. சிலர் மூன்று நாட்கள் கொண்டாடுகின்றனர். சிலர் 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். இப்படி வெவ்வேறு மரபுகள் இந்த தீபாவளிப் பண்டிகையின் இருப்பது ஒரு சுவாரஸ்யம். அதைப் போலவே செய்யும் இனிப்புகள், வழிபாட்டு முறைகள் என பன்முக தோற்றத்தோடு, இந்த ஒற்றை பண்டிகை உல்லாசம் தரும் உயர்ந்த பண்டிகையாக விளங்குகிறது. எப்படிப்பட்ட முறையில், எந்தக் கதைப் பின்னணியில், எந்த சம்பிரதாயத்தின் படி கொண்டாடினாலும் தீபாவளியின் அடிப்படை சந்தோஷம் அகலாமல் அப்படியே இருக்கிறது.

*யுகங்களை இணைக்கும் நரகன் கதை

நரகாசுரன் கதையின் இன்னொரு சிறப்பு உண்டு. வெவ்வேறு அவதாரங்களை நரகாசுரன் கதை இணைக்கிறது. வராக அவதாரத்தில் தோன்றிய கதை, கண்ணன் அவதாரத்தில் முடிகிறது. வாமன திருவிக்ரம அவதாரமும்கூட அடுத்தடுத்து நடந்த அவதாரங்கள். ஆனால் நரகாசுரனின் தோற்றமும் அழிவும் வெவ்வேறு யுகங்களை இணைக்கிறது. வெவ்வேறு அவதாரங்களை இணைக்கிறது என்பது புராண இதிகாசங்களை ஆராய்பவர்களுக்கு வியப்பான செய்தி. முதல் யுகத்தில் தோன்றிய நரகாசூரன், மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில், பகவான் கண்ணனால் வெல்லப்படுகின்றான். அந்த நரகாசூரன் கதையை நினைத்து கொண்டாடும் தீபாவளி பண்டிகை, நாம் வாழும் கலியுகத்திலும் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இது வேறு புராணக் கதைகளுக்கு இல்லாத சிறப்பு.

*தீபாவளி என்பது காரணப்பெயர்

தீபாவளி என்பது காரணப்பெயர். ஆவளி என்பது வரிசை. வரிசையாக பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாமாவளி என்று சொல்கிறோம் அல்லவா. அதைப் போல தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதையே தீபாவளி என்கிறோம். நரகாசூரன் விழுந்த தினமும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி ஆக இருந்ததால், ஏற்கனவே கொண்டாடப்பட்ட தீபாவளியை, நரகன் கதையோடு இணைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று கொள்ள வேண்டும்.

*கங்கா ஸ்நானம்

கங்கைக்கு மூன்று பெயர் உண்டு. அது ஆகாயத்தில் இருக்கும் போது மந்தாகினி. பாதாளத்தில் அதற்குப் பெயர் பாகீரதி. பூமியில் அதற்கு கங்கை. கங்கையை நினைத்து வணக்கம் தெரிவித்தாலும், கண்ணாரக்கண்டு தரிசனம் செய்தாலும், கங்கை நீரை ஸ்பரிசித்தாலும், கங்கையில் மூழ்கினாலும், கங்கையில் நின்று கொண்டு பூஜித்தாலும், பித்ருக்களுக்கு அர்க்யம் விட்டாலும், கங்கையில் மூழ்கி அதனுடைய மண்ணெடுத்து வணங்கினாலும் சகல பாவங்களை நசுக்கும். கங்காஷ்டகம் எனும் ஸ்லோகத்தில் கங்கையை பற்றி ஆதிசங்கரர் கங்காஷ்டகம் ஸ்லோகத்தை தீபாவளியன்று அவசியம் பாராயம் செய்ய வேண்டும்.

*தீபாவளியில் சொக்கட்டான் ஆட்டம்

வங்காளத்தில் தீபாவளியை மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். காளிதேவி தனது உக்கிரத்தை தணித்த நாளாக தீபாவளி அமைகிறது. தீபாவளியன்று கயிலாயத்தில் ஈஸ்வரன் தேவியும் சொக்கட்டான் ஆடியதாகவும் அதில் தேவிதான் வெற்றி மேல் வெற்றி பெற்றதாகவும் சொல்கிறார்கள். அதனால் வட இந்தியாவில் முக்கியமாக குஜராத்தில் தீபாவளி அன்று இரவு சொக்கட்டான் ஆடும் பழக்கம் கடைபிடிக்கிறார்கள். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பார்வதியின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

*அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்

நரகன் ஜீவாத்மா. அவனிடத்திலே மண்டியிருந்த மாயை என்னும் இருள் நீங்கியது. ஜீவாத்மாவின் அகங்காரமாகிய இருட்டு ஒழிந்தால் அப்பொழுது பிறப்பது மகிழ்ச்சி ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தீபாவளியில் மூன்று பொருள்களை பிறருக்கு அளிக்க வேண்டும். ஒன்று நாம் புத்தாடைகள் வாங்கும் பொழுது யாராவது புத்தாடை வாங்க முடியாத ஒரு ஏழைக்கு நம்மால் இயன்ற புத்தாடையை வாங்கித் தரவேண்டும். தண்ணீர் தானம் செய்ய வேண்டும். யாராவது ஒரு அதிதிக்கு நாம் உணவளிக்க வேண்டும். குறைந்தபட்சம் நம்முடைய வீட்டில் உள்ள பட்சணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை ஆண்டாள் ‘‘அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்’’ என்ற பாசுரத்தில் தெரிவிக்கிறாள். அம்பரம் என்பது ஆடைகள். ‘‘ஏக ஸ்வாது ந புஞ்சித:’’ என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. சோறு, தண்ணீர் போன்றவற்றை பிறருக்கு தராமல் தனித்து அனுபவிக்கக்கூடாது என்பது பொருள்.