Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தெரியாமல் காக்கும் தெய்வீகக் கரங்கள்

சேட்டைக்காரக் குரங்கு ஒன்று காட்டிலுள்ள ஒரு பெரிய மரத்தில் வாழ்ந்து வந்தது. அந்த மரத்தின் கீழ், அந்தக் காட்டின் ராஜாவான சிங்கம் தினமும் ஓய்வு நேரங்களில் வந்து படுத்து உறங்கும்.

சிங்கம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் வேளையில், குரங்கு மெல்ல மரத்திலிருந்து இறங்கி வந்து, சிங்கத்தின் ஒரு காதை லேசாகத் தட்டிவிட்டு, எதிர் திசையில் விரைவாக ஓடிப் போகும். சிங்கம் திடுக்கிட்டு அந்தத் திசையில் திரும்பிப் பார்க்கும்; யாரும் தெரியாததால் மீண்டும் அமைதியாகக் கண் மூடும்.

இந்தச் சேட்டையை தினமும் செய்து வந்த குரங்கு,

“காட்டின் ராஜாவையே ஏமாற்றி விளையாடுகிறேன்!” என்று தனக்குத்தானே பெருமை கொண்டு மகிழ்ந்தது.

“இத்தனை நாளாகியும் ராஜாவால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்ற எண்ணம் அதன் அகந்தையை மேலும் பெரிதாக்கியது.

இந்த நிகழ்வை தினமும் கவனித்து வந்தது ஒரு நரி.

ஒரு நாள், குரங்கு மரத்திலிருந்து கீழே வரும் சமயத்தில் அதை வேட்டையாட முடிவு செய்தது. சிங்கம் தூங்கும் நேரத்தை பார்த்து, புதரின் ஓரத்தில் பதுங்கி கொண்டு, குரங்கின் வருகைக்காகக் காத்திருந்தது.

வழக்கம்போல் குரங்கு தனது சேட்டையைச் செய்ய மரத்திலிருந்து இறங்கி, சிங்கத்தை நெருங்கியது.

“இதுதான் சரியான நேரம்!” என்று நினைத்த நரி, மறைந்திருந்த இடத்திலிருந்து குரங்கைப் பிடிக்க பாய்ந்தது.

ஆனால், குரங்கைத் தொடுவதற்கு முன்பே, அதுவரை அமைதியாக படுத்திருந்த சிங்கம், தன் வலிமையான கால்களால் நரியை இடியென ஓங்கி அடித்தது. நரி புதரைத் தாண்டி தொலைவில் போய் விழுந்தது. சிங்கம் மீண்டும் எதுவும் நடக்காததுபோல் அமைதியாகப் படுத்துக் கொண்டது.

என்ன நடந்தது என்று புரியாமல், மரண பயத்தில் குரங்கின் கால்கள் நடுங்கின. உடனே அது மரத்தில் மீண்டும் ஏறி ஒளிந்துகொண்டது.

இறைமக்களே, குரங்கைத் தாக்க வந்த நரியின் சூழ்ச்சியை சிங்கம் அறிந்திருந்தால், குரங்கின் தினசரி சேட்டையை அது அறியாமல் இருந்திருக்குமா?

சிங்கம் அமைதியாக இருந்ததால், அது எதையும் கவனிக்கவில்லை என்று குரங்கு தனது அறியாமையால் தவறாக எண்ணியது. இந்தக் கதையின் மையக் கருத்து இதுதான்.

சில நேரங்களில் அமைதி என்பது அறியாமை அல்ல. வெளியில் எதுவும் நடக்காதது போலத் தோன்றினாலும், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கும் ஒரு கண் இருக்கிறது. தாமதம்போல தெரியும் விஷயம் கூட, சரியான நேரத்திற்கான ஆயத்தமாக இருக்கலாம்.

நம்முடைய செயல்கள் யாருக்கும் தெரியவில்லை, யாரும் பார்க்கவில்லை என்று நினைப்பது மனிதரின் தவறான கணிப்பு. ஆனால், உண்மையில், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு எண்ணமும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தேவன் மௌனமாக இருப்பது, அவர் செயலற்றவர் என்பதற்கான அடையாளம் அல்ல. அவர் பொறுமையுடன் காத்திருந்து, தக்கநேரத்தில் தக்க செயலைச் செய்கிறவர். நம்மைவிட நம்மீது அதிக அக்கறை கொண்டவர். ஆபத்து நெருங்கும் நேரத்தில் கூட, நாம் அறியாமலேயே நம்மைக் காக்கிறவர்.

1 யோவான் 3:20-ல் வாசிக்கிறோம்: “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” ஆகையால், தேவன் கவனிக்கவில்லை என்று எண்ணி தவறாக வாழாமல், அவர் அனைத்தையும் அறிந்திருக்கும் தேவன் என்ற நம்பிக்கையோடு விழிப்புடன் வாழ வேண்டும்.

- அருள்முனைவர். பெவிஸ்டன்.