அவர் யார் தெரியுமா? எப்பேர்ப்பட்ட குடும்பம் தெரியுமா? பெரிய பெரிய ஆன்மிகவாதிகள் எல்லாம் தோன்றிய குலம் அவர்களின் குலம்.”
எப்போது பார்த்தாலும் இப்படிச் சிலர் குலச்சிறப்பையும், குடும்பப் பாரம்பரியத்தையும் பெருமையாகக் கூறிக்கொண்டிருப்பார்கள்.
அவர்களின் முன்னோர்களான ஆன்மிகவாதிகள் செய்த எந்த நல்லறங்களையும் இவர்கள் செய்யமாட்டார்கள். அறப்பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள். இறைவனுக்கு அஞ்சியும் நடக்க மாட்டார்கள். ஆனால், குடும்பப் பாரம்
பரியம் குறித்தும், குலச்சிறப்பு குறித்தும் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
இதனால் ஏதேனும் பயன் உண்டா?
இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு முறை கூறினார்கள்:
“அறச்செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டுவருவதில்லை.”
அந்த அறச்செயல்கள் என்ன என்பதையும் நபிகளார் சுருக்கமாகப் பட்டியல் போட்டுத் தந்துள்ளார்.
“யார் சிரமப்படுபவருக்குக் காரியத்தை எளிதாக்குவாரோ அவருடைய காரியத்தை இறைவன் இம்மையிலும் மறுமையிலும் எளிதாக்குவான்.”
“அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவனும் உதவி செய்துகொண்டிருப்பான்.”
“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்.”
“இறையில்லத்தில் ஒன்றுகூடி
இறைவனின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால் அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. மேலும் அவர்களைக் குறித்து இறைவன் தன்னிடம் இருப்போரிடம் பெருமையுடன் பேசுகிறான்.”
“அறச்செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டுவருவதில்லை.” (ஸஹீஹுல் குதுபித்துஸ்ஆ)
அதாவது, ஒருவர் எந்த நல்லறங்களிலும் ஈடுபடுவதில்லை, பிறருக்கு உதவி செய்வதில்லை, மார்க்கம் கற்பதில்லை, வேதம் ஓதுவதில்லை, ஓதும் நல்லோர்களுடன் அமர்வதில்லை எனில்-
இவருடைய குலச்சிறப்பு மட்டுமே இவருக்குக் கை கொடுத்து விடுமா என்ன?
குலச்சிறப்போ குடும்பப் பாரம்பரியமோ இந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடாது. ஆகவே யாரும் குலச்சிறப்பை நம்பி நல்லறங்கள் புரியாமல் இருந்து
விடக்கூடாது.
ஆம். வம்சப் பெருமையாலோ, ‘நான் இன்ன குலத்தில் பிறந்தவன்’ எனும் குலப் பெருமையாலோ இறைவனின் நெருக்கம் கிடைத்துவிடாது.
நற்செயல்களாலும் நல்லறங்களாலும் மட்டுமே இறைவனை நெருங்க முடியும்.
நல்லறங்களில் அதிகம் ஈடுபடுவோம். இறைவனின் பேரருளைப் பெறுவோம்.
இந்த வார சிந்தனை
“நிச்சயமாக இறைவனிடத்தில்
அதிக கண்ணியத்துக்குரியவர் யார் எனில், உங்களில் அதிக இறையச்சம் உள்ளவர்தாம்.”(குர்ஆன் 49 :13)- சிராஜுல் ஹஸன்.


