Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தாமதமின்றி காக்கும் தாராபுரம் காடு ஹனுமந்தராயர்

ஒரு ஊரில் இருக்கக் கூடிய கோயிலுக்கு நாம் செல்லும் போது, அக்கோயிலை பற்றிய செய்திகளை பெரும்பாலும் அர்ச்சகர்கள் சொல்வார்கள் அல்லது கோயிலை நிர்வகிப்போர் கூறுவர். ஆனால், தாராபுரம் ``காடு ஹனுமந்தராய ஸ்வாமி’’ கோயிலைப் பற்றியும், தாராபுரம் ஊரைப் பற்றியும் அங்குள்ள மக்கள் அனைவருமே சிலாகித்து சொன்னார்கள்.

ஆக, நாம் கோயிலைப் பற்றி எழுதும் போது, அர்ச்சகர்கள் கூறும் தகவல்களை கொண்டு தரவுகள் மேற்கொண்டு, அதனை தொகுப்பாக வெளியிடுவது வழக்கம். இம்முறை, தாராபுரத்தில் உள்ள அத்துணை ஆன்மிக அன்பர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்டையில், இந்த தொகுப்பை பெருமையோடு வெளியிடுகிறோம்.

விதைக் களஞ்சியம்

திருப்பூர் மாவட்டத்தில் ``தாராபுரம்’’ இருந்தாலும், திண்டுக்கல், கரூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங் களில் இருந்தும், தாராபுரம் மிக அருகில் காணப்படுகிறது. குறிப்பாக, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலிருந்தும், தாராபுரத்திற்கு எளிதாக செல்ல முடியும். ஒரு வகையில் திருச்சியை போலவே தாராபுரமும் மையப்பகுதியில் அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. ஆம்! தாராபுரத்தில் இருந்து சுமார் 157 கி.மீ., பயணித்தால் திருச்சி. 138 கி.மீ., பயணித்தால் மதுரை. 148 கி.மீட்டரில் சேலம். 185 கி.மீட்டரில் புதுக்கோட்டை, இப்படி தாராபுரம் சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு மிக எளிதாக பயணிக்க முடியும்.

அதுமட்டுமா! 103 கி.மீட்டர் தூரத்தில் கேரள மாநிலமான பாலக்காடு வந்துவிடும். ஆக, கேரள மாநிலம் மிக அருகில்தான் உள்ளது. இதனால், தாராபுரம் எப்போதும் குளிர்ந்த நிலையில் அதாவது குளிர்ந்த காற்று வீசும், மழையும் அடிக்கடி நிகழும்.

மேலும், பலத்த காற்று வீசப்படுவதால், நூற்றுக் கணக்கான காற்றாலைகள் தாராபுரத்தில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தாராபுரம் - பொள்ளாச்சி சாலைப் பகுதிகளிலும், தாராபுரம் - காங்கேயம் சாலைப் பகுதிகளிலும், ஏராளமான காற்றாலைகளை காண முடியும். இதனால், தமிழகத்தின் முக்கியமான காற்றாலை நகரமாக தாராபுரம் திகழ்கிறது.

விவசாயம் நிறைந்த நகரம் அதாவது, தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, `‘விதைக் களஞ்சியம்’’ என்கின்ற சிறப்புப் பெயரை தாராபுரம் பெற்றுள்ளது. அதே போல், தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராகவும் திகழ்கிறது. தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால், தேங்காய் சாகுபடி செய்யப்படும் நகரங்களில் ஒன்றாக, தாராபுரம் இருக்கிறது.

விரைவில் கும்பாபிஷேகம்

ஒரு காலத்தில், சேரர்கள், மேற்கு கங்கபேரரசு மற்றும் கொங்கு சோழர்கள் கீழ் கொங்கு நாட்டின் தலைநகரமாக தாராபுரம் திகழ்ந்துள்ளது. ஆகையால்தான் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், தாராபுரத்திற்கு வருகை தரும்போது, தன் ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜரால் சுமார் பத்து அனுமன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், மிக முக்கியமான அனுமன், தாராபுரத்தில் இருக்கக் கூடிய ``அனுமந்தாபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய ஸ்வாமி’’ ஆவார். இவரைப் பற்றி கேள்விப்பட்ட நாம் தாராபுரத்திற்கு செல்ல தயாரானோம். சென்னையில் இருந்து கரூரும், கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக தாராபுரத்திற்கு வந்தடைந்தோம். காடு ஹனுமந்தராய ஸ்வாமி கோயில் அருகே வசிக்கும் குருபிரசாத் என்பவர், கோயிலுக்கு அழைத்துச் சென்று தகவல்களை திரட்ட உதவினார்.

மிக விரைவாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், கோயிலில் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கு இடையில், கோயிலை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார், கோயில் நிர்வாகிகளுள் ஒருவரான பிந்துமாதன். அவர் கூறியதன் சாராம்சம்;

89வது அனுமன்

மத்வ மகான்களில் மிக முக்கியமானவர், ஸ்ரீ வியாசராஜர். பிரகலாதனின் அடுத்த அவதாரம் பாகலிகராஜா (பாஹ்லிகா), பாகலிகராஜரின் அடுத்த அவதாரம் வியாசராஜர், ஸ்ரீ வியாசராஜரின் அடுத்த அவதாரம்தான் ஸ்ரீ ராகவேந்திரர். இப்படி வியாசராஜர் முற்பிறப்பிலும், அடுத்தபிறப்பிலும் அவதாரங்களை எடுத்து பல ஆன்மிக சாதனைகளை செய்துள்ளார். அத்தகைய ஆன்மிக சாதனைகளை புரிந்த வியாசராஜர்தான் ``காடு ஹனுமந்தராய ஸ்வாமியை’’ தாராபுரத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது என்னைப் போன்ற ஆன்மிக அன்பர்களுக்கு கூடுதல் பெருமை! மகான் ஸ்ரீ வியாசராஜர், சுமார் 732 அனுமன்களை இந்தியா முழுவதிலும் பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதில், 89வது அனுமனாக ``காடு ஹனுமந்தராய ஸ்வாமியை’’ பிரதிஷ்டை செய்திருக்கிறார், மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தர். முன்னொரு காலத்தில், ``விராடபுரம்’’ என்றே தாராபுரம் அழைக்கப்பெற்றது. அந்த சமயத்தில், இந்த காடு ஹனுமந்தராய ஸ்வாமியை பீமன் பூஜித்ததாகவும், புராணங்கள் தெரிவிக்கின்றன. பீமன் பூஜைகளை செய்தமையால் காடு ஹனுமந்தராய ஸ்வாமிக்கு பீமனைப் போல் மீசை உண்டு. காடு ஹனுமந்தராய ஸ்வாமி என்று இவருக்கு பெயர் வரக் காரணம், விராடபுரம் பகுதி முழுவதும் காடுகள் நிறைந்த பகுதியாகும். இதனால், அனுமனுக்கு காடு ஹனுமந்தராய ஸ்வாமி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. காடு ஹனுமந்தராய ஸ்வாமி பிரதிஷ்டை ஆன பிறகுதான் மற்ற சந்நதி ஸ்வாமிகள் ஒவ்வொன்றாக பிரதிஷ்டை ஆகியிருக்கிறார்கள்.

குறிப்பாக, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சந்நதி, ராமர் சந்நதி, ஜெயதீர்த்தர் மற்றும் ராகவேந்திரர் ஆகியோர்களின் மிருத்திகா பிருந்தாவனம், பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஆக, அனுமன் பிரதிஷ்டைக்கு பிறகு, அதாவது பிற்காலத்தில்தான் பிற சந்நதிகள் ஒவ்வொன்றாக விரிவடைந்திருக்கிறது. இக்கோயில் அனுமனின் கையில் சௌகந்திகா புஷ்பம் வைத்திருக்கிறார். சௌகந்திகா புஷ்பம், என்றைக்குமே ஆஞ்சநேயருக்கே உரித்தானது. இந்த சௌகந்திகா புஷ்பத்தை அனுமன் வளர்த்து, அந்த வளர்ந்த சௌகந்திகா புஷ்பத்தைக் கொண்டு அனுதினமும் ராமரை பூஜித்து வந்திருக்கிறார் என்று ``கிம்புருஷ கண்டத்தில்\” (Kimpurusha Khanda) கூறப்பட்டுள்ளது.

பீமனும் அனுமனும்

துவாபரயுக காலத்தில், ராமரின் மீது அலங்கரிக்கப்பட்ட சௌகந்திகா புஷ்பம் ஒன்று, திரௌபதிக்கு கிடைக்கிறது. ஆனால் அந்த பூ, நிர்மால்யமாக (வாடிய பூ) இருப்பதால், இதே போன்று வேறொரு சௌகந்திகா புஷ்பம் தனக்கு வேண்டும் என்று பீமனிடத்தில், திரௌபதி கேட்கிறாள். ஆகையால், சௌகந்திகா புஷ்பத்தை தேடி பீமன் செல்கிறார்.

அப்போது, காட்டில் ஒரு வயதான குரங்கு ஒன்று இருப்பதை பீமன் பார்க்கிறார். பீமன் செல்லும் நட்டநடு வழியில் அக்குரங்கு அமர்ந்துள்ளது.``ஹேய்.. குரங்கே.. நகர்ந்து செல். நான் செல்ல வேண்டும் வழிவிடு’’ என்று அதட்டினார், பீமன். குரங்கு நகரவில்லை. ``குரங்கே உன்னை என்ன செய்கிறேன் பார்’’ என்று குரங்கினை தூக்க முயல்கிறார். ஆனால், குரங்கை சுற்றும் அசைக்க முடியவில்லை. பீமன் கையெடுத்து வேண்டுகிறான். தன் சுய ரூபத்தை காட்டிய அனுமன்;``மிக பெரிய யுத்தம் வரப்போகிறது. பகவான் கிருஷ்ணர்தான் ரதம் ஓட்டும் சாரதியாக, உங்களுடன் துணையிருப்பார். சுவாமி சாரதியாக இருப்பதால், நான் ரதக் கொடியில் அமரப் போகிறேன். உங்களுக்கு போதிய சக்தி கிடையாது. ஆனால், பகவான் உங்களுடன் இருப்பதனால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளின் பலம் அதிகமாகியிருந்து, உங்களின் பலம் குறைவாக இருக்கும்போது, கொடியில் இருக்கும் நான், ``ஓங்கார’’ ஒலியெழுப்புவேன். (இந்த ஓங்கார சப்தம் ``சுதர்சன மந்திரத்தில்’’ வருகிறது) அந்த ஓங்கார ஒலியின் மூலமாக, எதிரிகளின் பலத்தை குறைக்கச் செய்வேன். உனக்கு பலம் போதாது, என்னை ஆலிங்கனம் செய்துக்கொள்’’ என்று அனுமனும் பீமனும் கட்டித் தழுவிய இடமாக இந்த தாராபுரம் காடு ஹனுமந்தராய ஸ்வாமியின் கோயில் இருந்துள்ளது.

முதலில் அனுமனுக்கு

மேலும், எங்கெல்லாம் ``ராமாயணம்’’, ``ராம சரித்திரங்கள்’’, ``ராம மந்திரங்கள்’’ சொல்லப்படுகிறதோ... அங்கெல்லாம் அனுமன் வந்தமர்ந்து கேட்பார் என்கிறது, கிம்புருஷ கண்டம். எந்த ராமர் கோயில்களாக இருந்தாலும், அனுமனுக்கே முதல் பூஜை நடைபெறும். இன்றும் அயோத்தியில், அனுமாருக்கே முதலில் பூஜை அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பிறகுதான் ராமருக்கு நடைபெறும். அதே போல், இக்கோயிலிலும் காடு ஹனுமந்தராய ஸ்வாமிக்கே முதலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிறகுதான் மற்ற சந்நதி ஸ்வாமிகளுக்கு பூஜைகள் நடைபெறும்.ஆங்கிலேயர் காலத்தில், தீரன்துறை என்னும் பிரிட்டிஷ் கலெக்டருக்கு ராஜபிளவு நோய் ஏற்படுகிறது. ஏதேதோ செய்து பார்த்தும், தீரனின் நோய்க்கு தீர்வு எட்டவில்லை.

கர்ப்பகிரகத்தை கட்டிய ஆங்கிலேயதுறை

யார்மூலமாகவோ காடு ஹனுமந்தராய ஸ்வாமியை பற்றி தெரிந்துக்கொண்டு, தாராபுரத்திற்கு வருகிறார். கோயிலிலேயே தங்கியிருந்து காடு ஹனுமந்தராய ஸ்வாமியை சில காலம் வழிபாடுச் செய்கிறார். ராஜபிளவு நோய் தீரனுக்கு குணமாகிறது. அனுமனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது, காடு ஹனுமந்தராய ஸ்வாமி கோயிலின் கர்ப்பகிரகம் சற்று இடித்த நிலையில் இருந்துள்ளதால், அதனை மீண்டும் புதுப்பித்து கொடுக்கிறார். எப்போதும், காடு ஹனுமந்தராய ஸ்வாமி கர்ப்பகிரகம் மேலே அதாவது அனுமனுக்கு மேலே முழுவதும் மூடாமல் வெட்டவெளியாகத்தான் காணப்படும். இதனை பலரும் மூடிவிட்டு கோபுரம் எழுப்ப முயன்றனர். ஆனால், தான் சூரிய பகவானின் சீடன் என்றும், சூரியனின் நேரடி தொடர்பு தனக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தன் கர்ப்பகிரகம் வெட்டவெளியில் இருப்பதாகவும், கோபுரம் எழுப்ப முயன்றவரின் கனவில் அனுமன்கூற, வெட்டவெளியை மூடும் முயற்சி கைவிடப்பட்டது.

பிணியைப் போக்குவார்அனுமன்

கும்பாபிஷேக பணிகள் கோயிலில் விரைவாக நடைபெற்றுவருகிறது. 75 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டது. கும்பாபிஷேகம் அன்று அனைவரும் இக்கோயிலுக்கு வரவேண்டும். இதுதான் கோயில் நிர்வாகி பிந்துமாதவன் கூறிய சாராம்சம். மேலும் அவர்கூறியதாவது; இக்கோயிலுக்கு வருவோருக்கு ``ஹெல்த் இன்சூரன்ஸை’’ பயன்படுத்த தேவையே இல்லை என்றும் சிரித்துக் கொண்டார். அதாவது எவர் ஒருவர் காடு ஹனுமந்தராய ஸ்வாமியை மனதார வேண்டுகிறார்களோ, அவர்களின் பிணியை நொடி பொழுதில் நீக்கி அருள்புரிகிறார். இன்றும் தாராபுரத்தில் வாழும் மக்களின் பலப் பல நோய்களில் இருந்து காத்து அருள்கிறார், காடு ஹனுமந்தராய ஸ்வாமி!

(அடுத்த இதழிலும் ஹனுமந்தராய ஸ்வாமி தொடருவார்)

ரா.ரெங்கராஜன்