பகுதி 2
ஸ்ரீ குரு பக்திநிதி தீர்த்தர்
தாராபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி கோயிலைப் பற்றி தகவலை கேட்டதும், அந்த ஊர் மக்கள் கூறிய ஒரே வார்த்தை, இந்த ஊர் காரர் லக்ஷ்மிபதி ராஜாவிடம் கேளுங்கள். அவர் இன்னும் விவரமாக ஹனுமந்தராய சுவாமியை பற்றி கூறுவார் என்றார்கள். யார் லக்ஷ்மிபதி ராஜா என்று ஆர்வமானோம்.
அவரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை கேட்டறிந்தோம். அவர் கூறியதாவது;
``இந்தியாவில் மொத்தம் ஒன்பது ஷேத்திரங்கள், மத்வ சம்ரதாய மக்களுக்கு முக்கியமானவை. அவை;
* உடுப்பி,
* ஸ்ரீ முஷ்ணம்,
* திருக்கோவிலூர்,
* சோளிங்கர் (எட்டினோடே),
* சுப்ரமண்யம்,
* தர்மஸ்தலா,
* முழுபாகல்,
* மந்திராலயம்,
* தாராபுரம்.
- ஆகும். இதில், தாராபுரம் ஷேத்திரம் மத்வ மக்களுக்கு விசேஷமான ஷேத்திரமாகும். எத்தனையோ வேத விற்பன்னர்களும், மத்வ மக்களும், வாழ்ந்த ஊராக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது.
பாண்டவர்கள் வாழ்ந்த பூமி
``தாரா” என்றால் ``கீர்த்தி” என்று பொருள். சங்க காலம் முதல் புகழோடு திகழ்ந்த ஊர், தாராபுரம். இன்னொரு பொருள் தரும் சொல்லாக, ``தாரா’’ என்றால் நீர் பெருக்கு என்றும் பொருளுண்டு. நீர் பெருக்கா? ஆம்! ஹனுமந்தராய சுவாமி கோயில் அருகில் ``அமராவதி நதிக்கரை” ஓடுகிறது. இதனாலும் இந்த ஊருக்கு தாராபுரம் என்னும் பெயர் வந்தது.
மேலும், புராணங்களில் தாராபுரத்தை ``விராடபுரம்” என்றும் கூறுவார்கள். அதாவது, பாண்டவர்களின் வனவாசத்தின் போது, 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாதவாசமும் செய்திருக்கிறார்கள். அஞ்ஞாதவாசம் என்றால், பிறர் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாமல், மறைவாக அல்லது தலைமறைவாக வாழுகின்றதை குறிப்பதே ஆகும்.
அந்த ஒரு வருடம், அஞ்ஞாதவாசத்தை விராடபுரத்தில் பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் ``விராடபர்வதம்” என்று தனியாக ஒரு பர்வதமே இருக்கிறது. அதில், பாண்டவர்கள் தங்கள் ரூபங்களை மறைத்துக்கொண்டு, வேஷம் தரித்து ஒரு ஆண்டு காலம் விராட புரத்தில் வாசம் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே நேர்க்கோட்டில்
திரேதா யுகத்தில் அனுமனாக அவதரித்து, ராமனுக்கு சேவை செய்தும், துவாபர யுகத்தில் பீமனாக அவதரித்து, ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகளை செய்தும், கலியுகத்தில் மத்வராக அவதாரம் எடுத்து, வேதவியாஸருக்கு சேவை புரிவதற்காகவும் வாயுபகவான் (அனுமன்) மூன்று அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கல்பவிருட்சமாய் பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீ ராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்திராலயமும், தாராபுரமும் ஒரே நேர்க்கோட்டிலே அமைந்திருப்பது தாராபுரத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது” என்று தாராபுரத்தின் ஆன்மிக பெருமைகளை சொல்லிக்கொண்டே வந்த லக்ஷ்மிபதி ராஜா, தாராபுரத்தில் பிருந்தாவனமான (ஜீவசமாதியான) மத்வ மஹான் ஸ்ரீ குருபக்திநிதி தீர்த்தரையும், ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமியையும் தொடர்புப்படுத்தி இன்னும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
பிளேக் நோயால் பாதிப்பு
இந்திய நாட்டில், சுதந்திரம் கிடைத்த ஆண்டான 1947 - ஆம் ஆண்டில், தாராபுரத்திற்கு ``பிளேக் (Plague)” என்னும் கொடிய நோய் ஒன்று கடுமையாக தாக்கியது. அந்த சமயத்தில், பிளேக் நோய்க்கு மருந்துகள் இல்லாததால், தாராபுரத்தில் பல ஆயிரம் மக்கள் மாண்டுபோனார்கள். இதனால், தாராபுரத்தைவிட்டே பலரும் வெளியேறும் சூழல் உருவானது.
இப்படி இருக்க, காடு ஹனுமந்தராய சுவாமியை மட்டும் கவனிக்க ஆட்கள் இருப்பார்களா என்ன? ஸ்வாமிக்கு பூஜைகள் இன்றி பல மாதங்களாக கோயில் பூட்டியே இருந்தது. நாட்கள் உருண்டோட... 1948 - ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வாக்கில் தாராபுரத்தில் பிளேக் நோய் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், ஹனுமந்தராய சுவாமியின் அருளால், பிளேக் நோய் முற்றிலுமாக நீங்கியது. அதன் பின்னர், அன்றைய சுகாதார அதிகாரிகள் தாராபுரத்தில் முகாமிட்டு, கிருமி நாசினி மருந்தைத்தெளித்து தூய்மை செய்தனர்.
மீண்டும் திறப்பு
தாராபுரம் மெல்லமெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. இருந்தபோதிலும், ஹனுமந்தராய சுவாமி கோயிலை திறந்து பூஜைகளை மேற்கொள்ளவோ.. அல்லது தரிசிக்க செல்லவோ பக்தர்கள் பயந்து நடுங்கினார்கள். காரணம், அப்போதுள்ள தாராபுரம் காடுகள் நிறைந்தது. மேலும், கம்பீரமான ஹனுமந்தராய சுவாமியை நீண்ட நாட்களாக தரிசிக்காமல் இருந்ததால், அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் மனதிற்குள் இருந்தது.
அப்போது, தாராபுரத்தில் வாழ்ந்து வந்த ஸ்ரீ குருபக்திநிதி தீர்த்தர் என்னும் மத்வ மகான், மிகத் துணிச்சலாக ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் நுழைவாயில் கதவுகளை திறந்தார். பல மாதங்களாக கோயில் பூட்டியே இருந்ததால், வளாகம் முழுவதும் ஒட்டடைகள் காணப்பட்டன. அவைகளை சுத்தம் செய்த குருபக்திநிதி தீர்த்தர், ஹனுமந்தராய சுவாமிக்கு பூஜைகளையும் மேற்கொள்ள தொடங்கினார்.
மேலும், 1948 - ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் கோயிலில் திருப்பணி வேலைகள் மேற்கொண்டு, மகாகும்பாபிஷேகமும் குருபக்திநிதி தீர்த்தரின் திருக் கரங்களினால் நடைபெறுகிறது. அன்று குருபக்திநிதி தீர்த்தர் ஆரம்பித்து வைத்த பூஜை, இன்றுவரை இடைவிடாது ஹனுமந்தராயருக்கு நடைபெற்று வருகிறது என்று சொன்னால், அது குருபக்தி நிதி தீர்த்தரின் தவவலிமை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!
(அடுத்த இதழிலும் ஹனுமந்தராய ஸ்வாமி தொடருவார்)


