Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பக்தி இருந்தால் போதும்...

துக்காராம்! தூய்மையான பக்தியில் தலைசிறந்தவர். தன்னை மறந்த நிலையில் அற்புதமான பாடல்களைப் பாடிவந்தார். அப்பாடல்கள் அபங்கங்கள் எனப்பட்டன. துக்காராம் அவ்வாறு பாடும்போது, அவருடைய பக்தியிலும் கனிவான வடிவத்திலும் இனிமையான குரலிலும், தெய்வநாமங்களும் லீலைகளும் நிறைந்த பாடல்களிலும் மக்கள் மயங்கினார்கள். துக்காராம் பாடும் போது தாங்களும் அந்தப் பஜனைகளில் கலந்து கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து ஈடுபாட்டுடன் பாடினார்கள்.

சாதுக்கள், பாகவதர்கள், மகாபண்டிதர்கள் எனப் பற்பலரும் துக்காராமின் பாடல்களில் ஈடுபட்டு, அவரிடம் இருந்து அப்பாடல்களைப் பாடக் கற்றுக் கொள்ளக்கூடினார்கள். நாளாக நாளாக இவ்வாறு கூட்டம் பெருகியது. அதே காலத்தில் தேஹு என்ற அந்த ஊரில் வாழ்ந்து வந்த ராமேஸ்வரபட் என்ற பண்டிதருக்கு மனம் தாங்கவில்லை; ``எவ்வளவு படித்திருக்கிறோம் நாம். நன்றாக உபன்யாசம், சொற்பொழிவு செய்கிறோம். என்னுடைய பிரசங்கங்களுக்கு ஆட்களே வருவதில்லை.

ஆனால், இந்தத் துக்காராமின் பஜனைக்கு மட்டும் ஏராளமானோர் வருகிறார்களே! இவ்வளவுக்கும் இவர் படிக்காதவர், சமஸ்கிருதமே தெரியாதவர், மராட்டிய மொழியில் ஏதோ தானாகவே இட்டுக்கட்டி பாடுபவர். இவர் தன்னுடைய சாதூரியத்தால் ஊரையே கெடுக்கிறாரே’’ என்று புலம்பினார். அவருடைய புலம்பல் பரவலாக மக்களிடையே பரவியது. துக்காராமின் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே ஓடிப்போய் ராமேஸ்வர பண்டிதரின் கால்களில் விழுந்து வணங்கினார்; ``சுவாமி! அடியேன் ஏதாவது தவறு செய்துவிட்டேனா சுவாமி’’ என்று கேட்டார்.

பண்டிதரோ,``நீங்கள் தப்பைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லையே. உங்களுக்கு சாஸ்திரம் தெரியுமா? புராணம் தெரியுமா? சொந்தமாக எதையாவது கற்பனையாகப் பாடி, மற்றவர்களுக்கு இவ்வாறு சொல்லிக் கொடுப்பது பெரும்பாவம். அந்தப் பாவம் இதைக் கேட்பவர்களுக்கும் போய்ச் சேருகிறதே’’ என்றார். உடனே துக்காராம் கண்களில் கண்ணீர் வழிய,``அப்படியா சுவாமி! எனக்குத் தெரியவில்லையே இது. அறிவில்லாதவன் நான். நீங்கள் நன்றாகப் படித்த மகான். தயவுசெய்து என் தவறுகளை மன்னியுங்கள்!

நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லுங்கள்!’’ என வேண்டினார். பண்டிதர்,``இனிமேல் ஒரு அபங்கம் பாடல்கூட நீ பாடக் கூடாது; எழுதக்கூடாது. இதுவரை நீ எழுதிய எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடு!’’ என்றார்.

அவ்வாறே செய்வதாகச் சொல்லித் திரும்பினார் துக்காராம்; வழி நெடுக,``பாண்டுரங்கா! பண்டரிநாதா! அடியேன் அறியாமல் செய்த பிழைபொறுத்து எனக்கு அருள்புரிவாயா? இனிமேல் நான் ராமேஸ்வர பண்டிதர் சொன்னபடியே செய்கிறேன். உன் நாமத்தைத் தவிர வேறெதுவும் தெரியாதே எனக்கு. அதைத்தானே எனக்குத் தெரிந்த அரைகுறை மராட்டிய மொழியில், மனம்போன போக்கில் பாடி வந்தேன். அதன் மூலம் என்னையே மறந்திருந்தேன்.

அந்தப் பெரியவர் எப்போது நான் செய்வது பாவம் என்று உணர்த்திவிட்டாரோ, இனிமேல் அதைச் செய்ய மாட்டேன்’’ என்று அழுது கொண்டே வீடு திரும்பியவர், தன்னுடைய ஒரே செல்வமான, கண்ணின் மணி போலக் காத்து வந்த அபங்கங்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டினார். அந்த மூட்டையை இந்திராயணி ஆற்றில் எறிந்து விட்டார்; அங்கேயே ஆற்றங்கரையில் சோகமாக அமர்ந்திருந்தார். நேரம் போய்க்கொண்டிருந்தது.

துக்காராமின் மனைவி அவரைத் தேடி வந்துவிட்டாள்;``நீண்ட நேரமாக உங்களைக் காணோமே! இங்கே ஏன் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? வாருங்கள் வீட்டுக்கு!’’ என்று சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். வீட்டிற்குச் சென்ற துக்காராம், சிறகொடிந்த பறவையாக, வாய் மட்டும்,``பாண்டுரங்கா! பண்டரிநாதா!’’ என்று சொல்லிப் பாண்டுரங்கனை நினைத்த படியே தூங்கினார். பொழுது விடிந்தது. யாரோ கதவைத்தட்டும் ஓசை கேட்டது.

``யார்? யார்?’’ என்று கேட்ட படியே போனார் துக்காராம். அங்கே நின்றிருந்த பாண்டுரங்கன் கோயில் தலைமை அர்ச்சகர்,``துக்காராம்! துக்காராம்! இங்கே வாருங்கள்!’’ என்று உணர்ச்சிவசமாக அழைத்தார். அவர் கையில் துக்காராம் ஆற்றில் எறிந்த அபங்கங்கள் அடங்கிய மூட்டை இருந்தது. அதைப் பார்த்த துக்காராம் பதறினார்;``சுவாமி! என்ன இது? நான் செய்த பாவங்களை ஆற்றிலிருந்து நீங்கள் ஏன் எடுத்துக் கொண்டு வந்தீர்கள்?’’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

தலைமை அர்ச்சகரோ,``சுவாமி! நாங்கள் யாருமே இதை ஆற்றிலிருந்து எடுத்துக்கொண்டு வரவில்லை. பகவான் பாண்டுரங்கன், தானே போய் ஆற்றில் இறங்கி இந்த மூட்டையை எடுத்து வந்து, தன் தலையில் சுமந்து ஈரம் சொட்டச் சொட்ட நின்றுகொண்டிருந்தார். இன்று காலை வழக்கம்போல் கதவைத் திறந்து சுப்ரபாத சேவை செய்ய நுழைந்தபோது, இதைப் பார்த்துத் திகைத்தேன். என்ன மூட்டை இது என்று அதை எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, நீங்கள் எழுதிய அபங்கங்கள் என்று! ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எடுத்துக் கொண்டு உங்களிடம் ஓடோடி வந்தேன்’’ என்றார். துக்காராம் கைகளைக் கூப்பினார்;``பாண்டுரங்கா! பண்டரிநாதா! என்னை மன்னித்துவிட்டாயா? உன் கருணையே கருணை!’’ என்று தழுதழுக்கக் கூவினார்.

இந்த அதிசயம் ஊர் முழுதும் காட்டுத்தீயைப் போலப் பரவியது. பண்டிதரான ராமேஸ்வரபட் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே வெகுவேகமாக ஓடி வந்து கண்களில் கண்ணீர் வழிய,

``துக்காராம்! துக்காராம்! நீங்கள் எவ்வளவுபெரிய மகான்! பாண்டுரங்கனின் அபிமானம் நிறைந்த பக்தர் நீங்கள்! பாண்டுரங்கனே உங்கள் அபங்கங்களை ஆற்றில் இருந்து மீட்டு, தன் தலையில் சுமந்து நின்றார் எனும்போது, என் அறியாமையை உணர்ந்தேன். நானே மகாபாவி.

என்னை மன்னிக்க வேண்டும்! மன்னிக்க வேண்டும்!’’ என்று கதறித் துக்காராமின் திருவடிகளில் விழுந்தார். துக்காராமோ,``சுவாமி! சுவாமி! என்ன செய்கிறீர்கள் நீங்கள்? சாஸ்திரங்கள் அனைத்தையும் உணர்ந்த பெரிய பண்டிதர் நீங்கள்! உயர்ந்தவர்! அப்படிப்பட்ட நீங்கள் என் கால்களில் விழுவது எவ்வளவு பெரிய அபச்சாரம்! பாண்டுரங்கா! பாண்டுரங்கா!’’ என்று கண்களில் நீர் பெருகக் கைகளைக் கூப்பி வணங்கினார் துக்காராம்.

பி.என்.பரசுராமன்