Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலையப்பனுக்கு பக்தி ஒன்றே போதும்!

திருப்பதி மலை அருகிலுள்ள ஓர் கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்து வந்தார். இவர், திருவேங்கடவனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக் கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…'’ வேண்டும் என பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக (முக்தி) வசிக்க வேண்டும் என்பதுதான். இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா..

பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணை கொண்டு சிறுசிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,``ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா…’’ என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார். அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சந்நதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு சென்று பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன.

தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ? என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான். மறுநாள் அவன் சந்நதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். குழம்பிப் போன அவர் கனவில், சீனிவாசன் தோன்றினார்.

“மன்னா… பீமன் என்ற மண்பானை செய்பவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார். மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன். அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்து பூக்கள்கூட கிடைக்கவில்லையா?’ என்றான்.

“அரசே… நான் பரம ஏழை. இந்த வேலையைவிட்டுவிட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை செய்யும் முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.

இதைக் கேட்ட தொண்டைமான் நெகிழ்ந்து, அந்த ஏழை பாண்டம் செய்பவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகிவிட்டார். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்துவிட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால்தான், இப்போதும் திருப்பதியில், பீமன் என்னும் அந்த பக்தனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில், இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்