Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்பான அரக்கி!

பகுதி 1

``ஹே ராமா! நான் இல்லாமல் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நீங்கள் இல்லாத நான் போலத்தானே!! இந்த அசோகவனத்தில் இருக்கின்ற மரங்கள், செடிகள், கொடிகள் என ஒவ்வொன்றுடன் பேசி உங்களுடனான என் காதலைச் சொல்லிவிட்டேன். ஆனாலும் தீர்ந்தபாடில்லை. நமக்கிடையே நடந்த இனிய நிகழ்வுகள் அத்தனையும் நினைவு கூர்ந்து என் நாட்களைக் கடத்துகிறேன்.

வழியெங்கும் கிடக்கும் கற்களில் உன் பாதம் பட்டால், நீ பொறுத்துக் கொள்ள மாட்டாய் என்று உனக்காக வழியெங்கும் மலர்களைத் தூவி வைத்திருக்கும் மரங்களைப் பார் என்று நீங்கள் சொன்னீர்கள். நான் அதை ரசித்தபடியே நடந்தேன். என்னவாயிற்று என் ராமனுக்கு? என்றெண்ணி, உங்கள் கையைப் பற்றினேன். புருவங்களை மேல் தள்ளி, விழிகளைப் பெரிதாக்கி, கூர்மையாக்கி, உன் கண்கள் காதல் மொழி பேசுகின்றன என்று நீங்கள் கூறினீர்கள். நாணத்தால் நான் சிவந்தேன். உன்னுடைய பாதங்களில் அணிந்திருக்கும் அணிகலன்களை போல, தளிரின் மீது அமர்ந்திருக்கும் வண்டுகளைப்பார், என்றீர்கள்.

இன்னும் கவிதையாய் நீங்கள் பேசிக் கொண்டே வந்தீர்கள். செய்யும் செயல் எல்லாவற்றையும் திறம்பட செய்வது உங்களின் இயல்பு. காதலிலும் அப்படியே! நம் காதல் ஜென்மாந்திரமானது, நிஜமானது. அந்தக் காதல் என்னை உங்களுடன் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் நான் வாழ்கிறேன். நான் சொல்வதெல்லாம் உங்களுக்கு கேட்கும். ஏனெனில், நான் என்பதே நீங்கள் அல்லவா?’’ என்று சீதை தனக்குள் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது பெருத்த ஆரவாரக் கூச்சல் கேட்டது. அரக்கியர் கூட்டம் ``ஹோ! ஹோ! ’’ என்று சப்தமிட்டபடி சீதாவைச் சூழ்ந்தது. அதில் ஒருத்தி, ``நீ என்ன முட்டாளா? ஒரே ஒரு தலையுள்ள மனிதனை இன்னமும் நினைத்து உருகுகிறாயா? பத்து தலை ராவணன், எங்கள் மகாராஜனை மணந்து கொள். உன்னை ராணி போல கொண்டாடுவான்’’ என்றுகூறி அரக்கியர் கூட்டம், கள் குடித்தபடி நடனம் ஆடியது. கூட்டத்தில் ஒருத்தி, ``போதும் நிறுத்துங்கள். நாளைப் பார்த்துக் கொள்ளலாம். எல்லோரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’’ என ஆணையிட்டது போல இருந்தது அவள் பேச்சு. எல்லோரும் கலைந்து சென்ற பின், அந்த அரக்கியப் பெண் சீதாவின் அருகில் சென்றாள்.

``தேவி! பயம் வேண்டாம். என்னை நீங்கள் நம்பலாம். நான் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்’’ என்றாள். அவளை விட்டுத் தள்ளிச் சென்ற சீதா, இதுவும் ராவணனின் மாயாஜால வித்தைகளில் ஒன்றாக இருக்கக்கூடுமோ என்று அஞ்சினாள்.``தேவி! நான் திரிசடை. வீடணனின் மகள். நாங்கள் அரக்கர் குலத்தில் பிறந்த போதும், அறத்தின் வழி நடப்பவர்கள். தர்மத்தின் வழி நடப்பவர்கள். என் தந்தை, உங்களை பெருமைப்படுத்தி எப்போதும் குறிப்பிடுவார்.

உங்களுக்கு உதவுமாறு கூறியுள்ளார்’’ ``திரிசடை! இத்துணை காலமும் ராமனை நினைத்து நான் தவம் செய்ததன் பலன், இருண்டு கிடக்கும் இந்த நாட்களில் ஒரு ஒளிக்கீற்றாக நீ வந்திருக்கிறாய்! ஏறக்குறைய பத்து மாத காலம் கழிந்துவிட்டது. இந்த அசோகவனத்திற்கு வந்தது முதல் இன்று வரை நான் யாரிடத்தும் பேசியதே இல்லை. இன்று உன்னைப் பார்த்ததும் எனக்குப் பேசத் தோன்றுகிறது. உன் கண்களில் உண்மை தெரிவதை நான் உணர்கிறேன். என் உள் மனம் சொல்கிறது, நீ எனக்கு பிரியமானவள் என்று.’’

“உங்களைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு ஒரு மிக நல்ல ஓவியம், கொஞ்சம் புழுதி படிந்தது போலத் தோன்றும். உங்களிடம் என்றாவது ஒரு நாள் பேசியே தீர வேண்டும் என்று நான் காத்திருந்தேன். இன்று நான் இங்கு வரும்போது நல்ல சகுனங்கள் தோன்றின. என்னுடைய எண்ணம் ஈடேறிவிட்டது.’’ சீதா, திரிசடையின் கையைப் பற்றி கொண்டாள்.

அவளுக்குச் சிலிர்த்தது.

``மிதிலை அரண்மனையில், சிவதனுசு ஒன்று வம்ச வழியாக பூஜிக்கப்பட்டு வருகிறது. அதை வளைத்து, நாணேற்றி, சுயம்வர போட்டியில் வென்று என்னை ராமன் மணந்து கொண்டார். அந்த சிவதனுசு என்னிடம் பேசும். என் மீது அலாதிப் பிரியம். எனக்கும் மிகுந்த பாசமும் தோழமையும் உண்டு. நான் `சிவலா’ என்று செல்லமாக அழைப்பேன். இன்று உன் கையைப் பற்றியபோது, எனக்கு சிவலாவைத் தொடுவது போலவே இருந்தது. என் ராமன் விதிவசத்தால் வனவாசம் செல்ல நேர்ந்தது. வனவாசத்திற்கு அவர் புறப்படும்பொழுது நானும் அவருடன் வருவேன் என அடம் பிடித்தேன். என்னை வரவேண்டாம் என்று தடுத்தார்.

‘நின் பிரிவினை விடவும் சுடுமோ காடு’ என்று வற்புறுத்திதான் அவருடன் வனவாசம் வந்தேன். பதிமூன்று வருடங்கள் மிகவும் ரம்யமாக கழிந்தன. எங்கள் இருவர் வாழ்விலும் அந்த நாட்கள் வசந்த காலமாகத்தான் இருந்தது. எனக்கு எல்லாமும் ராமனே என்று இருந்த வரையில் எனக்கு எல்லாமே இன்பமாகத்தான் இருந்தது. ஒரு பொன்மான் என் கவனத்தை ஈர்த்தது. ராமனிடமிருந்து என்னை அது பிரித்தது. நானாகவே எனக்கு செய்து கொண்ட கொடுஞ்செயல்.

`தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று என்னை உணரச் செய்துவிட்டது. இந்தப் பாடத்தை நான் கற்றுக் கொள்ள, கொடுத்த விலை இந்தப் பிரிவு! அசோகவனத்தில் இந்தச் சிறை வாசம். யாரும் என்னிடம் பேசவில்லை. நானும் எவரிடத்தும் பேசவில்லை. சரி... உன்னைப் பார்த்தது முதல், நானே பேசிக் கொண்டிருக்கிறேன். நீ பேசு. உனக்கு திரிசடை என்று ஏன் பெயர் வைத்தார்கள். உன் தந்தையைப் பற்றிக் கூறு. உன் தாயைப் பற்றிக் கூறு. உன் வளர்ப்பைப் பற்றிக் கூறு.’’ என்று சீதாதேவி சொல்லிமுடித்தால்.

``உங்களுக்கு எல்லாமும் நிறைவாகவே நடக்கும். உங்களுக்கான என் பிரார்த்தனை கண்டிப்பாக அதை நிறைவேற்றித் தரும். என்னைப் பற்றிச் சொல்கிறேன். என் தந்தை வீடணன், ராவணனின் இளைய சகோதரர். சிவபக்தர். ஆகவே, சிவனுக்கு மிகவும் பிடித்தமான திரிசடை, அதாவது மூன்று இதழ்கள் கொண்ட வில்வ இலை - என்பதை எனக்குப் பெயராக வைத்தார்கள். என் தாய் சரமை. எங்கள் எல்லோருக்கும் இறைபக்தி மிகவும் உண்டு. எனக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும். ஒரு நாள் நானும் மற்ற அரக்கர் குலத்தைச் சேர்ந்த சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது, மரத்தில் ஒரு அணில் ஏறிக் கொண்டிருந்தது. அதைக் குறி வைத்து சிறுமிகள் கல் எறிந்தார்கள். அந்த அணில், மரத்தின் தடிமனான கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக மேலே ஏறிக் கொண்டிருந்தது. அது தப்பிப்பதற்கு என்ன வழி என்று நான் யோசித்தேன்.

அருகில் இருந்த உணவு கூடத்தில் அமைந்திருந்த மணியை அடித்தேன். இது கல் எறிந்து கொண்டிருந்த சிறுமிகளின் கவனத்தை திசை திருப்பியது. உணவு கூடத்தின் மணி அடித்தால் சிறப்பு உணவு வந்திருக்கிறது என்று பொருள். எல்லோரும் கல்லைத் தூக்கி எறிந்து விட்டு, உணவு கூடத்தை நோக்கி விரைந்து வந்தார்கள். அங்கு உணவு எதுவுமே தயார் நிலையில் இல்லாததைக் கண்டு மணியின் பக்கம் நின்று கொண்டிருந்த என்னைக் கோபமாக நோக்கினார்கள்.

``ஏ திரிசடை! எதற்கு எங்கள் விளையாட்டைக் கெடுத்தாய். உன்னால் அந்த அணில் தப்பிவிட்டது பார். ஒரு அருமையான அணில் கறி விருந்து இன்று எங்களுக்குக் கிடைத்திருக்கும். உன்னால் எல்லாம் கெட்டுவிட்டது’’ என என்னைக் கடிந்து கொண்டார்கள்.நான் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் புன்னகைத்தவாறே கிளம்பிவிட்டேன். என்னமோ தெரியவில்லை. எந்த உயிரையும், யாரும் துன்புறுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எனக்கு எல்லா உயிர்களிடத்துமே அன்பாக இருப்பது பிடிக்கும். யாருக்கும், எந்தக் தீங்கும், என்றும் செய்துவிடக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறேன். இன்று வரையில் நான், வெறும் காய், கனிகளையே புசிக்கிறேன். என்னுடைய இந்த வளர்ப்பிற்கு என்னுடைய தாயும் தந்தையுமே காரணம். அவர்கள், நீதி, நேர்மை, சத்தியம், நியாயங்களைப் பற்றி அடிக்கடி எனக்கு

உபதேசிப்பார்கள்’’ என்றாள், திரிசடை.

``திரிசடை! அற்புதம்! உன் எண்ணம் எவ்வளவு உயரியது! எண்ணம் போலத்தான் வாழ்வு அமையும் என்பார்கள். நிச்சயம் உன் வாழ்வு மிகவும் சிறப்பாக அமையும். உன்னைச் சந்தித்தது என் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு’’ என்றால், சீதை``நான் உங்களை சீதம்மா என்று அழைக்கலாமா?’’``அப்படியே ஆகட்டும். எனக்கும் நீ அப்படிக் கூப்பிடுவது பிடித்திருக்கிறது’’ பேசிக் கொண்டிருக்கும்போதே சீதாவின் இடது கண் துடிப்பதை திரிசடை கண்ணுற்றாள்.

``சீதம்மா! உங்கள் இடது கண் துடிக்கிறதே. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது. நிச்சயமாக நீங்களும் உங்கள் நாயகனும் கூடிய விரைவில் இணையப் போகிறீர்கள். எங்கிருந்தோ ஒரு பொன் நிறத் தும்பி பறந்து வந்து, உங்கள் காதில் ஊதிப் போவதை நான் பார்த்தேன். ஒரு தூதுவன் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்க வரப்போகிறான்.’’

``அப்படியா! உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.

இதுபோல மிதிலை நகரில் ராமனை முதன் முதலில் நான் சந்தித்த நாள் அன்றும் எனது இடது கண் துடித்தது’’``அப்படியா! நல்லது. நான் இப்பொழுது கிளம்புகிறேன் சீதம்மா! கூடிய விரைவில் உங்களுடனேயே இரவு வேளைகளில் தங்குவது போல ஏற்பாடு செய்து கொள்கிறேன்’’திரிசடை இரவில் சீதாவுடன் தங்கத் துவங்கினாள். ஒரு நாள் அதிகாலைப் பொழுதில் திரிசடை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். சீதாவின் மனதில் குழப்பங்கள் நீடித்தன.

உறக்கம் வராமல் சீதாவின் மனது இடதும் வலதுமாக அலை பாய்ந்தது. மனத்திரையில் இரண்டு சீதாக்கள் நின்று கொண்டு உரக்கப் பேசினார்கள். மங்களகரமான வடிவத்துடன், புன்னகை பூத்த முகத்துடன் ராமனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு சீதா. கருப்பு நிற ஆடை அணிந்து, கலைந்த கேசம், அழுது வீங்கிய கண்கள் என அசோகவனத்தில் ஆயுள் முழுவதும் இருந்து விடப் போகிறோம் என்கின்ற துயரத்தில் மற்றொரு சீதா. இரண்டு சீதாக்களும் மாறி மாறிப் பேசத்துவங்கினார்கள்.

வில்லை முறித்து, உன்னை மணந்து கொண்ட வெற்றியை நினைக்கையில் உன் மனது பூரிக்கவில்லையா? உன்னைக் கரம் பிடித்து, எல்லோர் முன்னிலையிலும் அக்னியை வலம் வந்து, சப்தபதி மந்திரம் ஓதி ‘என்னில் பாதி நீ’ என்று உறுதி சொன்ன ராமன் வருவது திண்ணம்!’’“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டாய். அதற்காகக் கோபம் கொண்டு, உன்னை தன் மனத்திலிருந்து ராமன் அழித்து விட்டான். நீ காலம் முழுவதும் அசோகவனத்தில்தான் இருக்கப் போகிறாய்’’“ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என வாழ்பவன் உன் ராமன். இடர் சிறிதும் நேராமல் காக்கும் வீரன் உன் ராமன். நீங்கள் இருவரும் இணைவது நிச்சயம்.”

“கொண்டு சென்ற அரக்கன் உன்னை உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஓய்ந்துவிட்டான் உன் ராமன். உன்னை ராமன் மறந்தும்விட்டான். துறந்தும்விட்டான். அவன் உன்னை மீட்க வரப்போவதில்லை.”“அறத்தின் நாயகன் ராமன்தான். எல்லோரிடத்தும் அறத்தைக் காக்கும் ராமன், அவனின் நாயகியான உன்னிடத்தில் நிச்சயமாக அறம் காப்பான். ராமனின் உயிர் நீயல்லவா! உன்னைவிட்டு அவனால் வாழ முடியுமா? உன்னை மீட்பான்.”

“அறத்தைக் காப்பவன் ராமன். உண்மைதான். அயோத்தி மக்களை காக்க வேண்டியது அறமா? அல்லது உன்னை மீட்க வேண்டியது அறமா? எதற்கு முன்னுரிமை கொடுப்பான்?”

இரண்டு சீதாக்களும் வாதம் செய்வதைக் கேட்கையில் எந்த சீதா சொல்வது நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனம் முழுவதும் கவலைச் சூழ்ந்து கொண்டது. பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம் வந்துத் திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா? இல்லை.

இரக்கமற்று ராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் இருக்கின்றானா? அவனையே நினைத்து நினைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறேன் நான் என்பதை யார் அவனுக்குச் சொல்வார்கள்? இப்படியாக எதிர்மறை எண்ணங்கள் அணிவகுத்தன. சீதாவினால் தன் துயரத்தை அடக்க முடியவில்லை. வேறு வழியின்றி அருகில் உறங்கிக் கொண்டிருந்த திரிசடையை உலுக்கி விழிக்கச் செய்தாள்.

திரிசடை, “என்னவாயிற்று? சீதம்மா!”“என்னுடைய ஒரே ஆறுதலே! திரிசடையே! ராமன் என்னை மீட்பான் என்கிற என் எண்ணம் வலுவிழந்து கொண்டிருக்கிறது. என்னால் இந்த நிலையைக் தாங்க முடியவில்லை. என் உயிரை நானே மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.”``சீதம்மா! கவலையை விடுங்கள். அன்று உங்கள் இடது கண் துடித்த போது நான் குறிப்பிட்டேன். உங்களின் நாயகன் வருவார். உங்களுடன் இணைவார். இது நிச்சயம். அதிகாலைப் பொழுதில் எனக்கு வந்தக் கனவை உங்களுக்கு விவரிக்கிறேன். அதிகாலை கனவு கண்டிப்பாகப் பலிக்கும் என்று என் தாயார் கூறுவார்.”

``என் தாயை ஒத்த திரிசடையே! கனவினை கூறுவாய்!’’

``கழுதைகள் பூட்டிய ரதத்தில், ரத்தம் படிந்த ஆடையுடன், எண்ணெய் வழிந்த தலையுடன் ராவணன் தெற்கு நோக்கிச் செல்கின்றான். ஒரு பெரும் கூட்டமும் கூடவே செல்கிறது. தோரண கம்பங்கள் சாய்ந்துக் கிடக்கின்றன. யானையின் தந்தங்கள் முறிந்துள்ளன. பூரண கும்பத்திலிருந்து புனித நீருக்கு பதிலாக கள், நுரை பொங்க வெளியேறுவதைக் கண்டேன். மங்கையர்களின் தாலிகள் தானாகவே கழுத்திலிருந்து கழன்று விழுகின்றன. மண்டோதரி தலைவிரிகோலமாக இருக்கின்றாள். அதோடு மட்டுமல்ல, இரண்டு சிங்கங்கள், நிறைய புலிகளுடன் கூட்டமாய் வந்து, மத யானைகளின் கூட்டத்தை அடித்துக் கொல்வதாய் கனவு வந்தது.

மங்களகரமான தோற்றத்தை உடைய ஒரு மங்கை, திருவிளக்கு ஒன்றினை ஏந்தி ராவணனின் மனையிலிருந்து வெளிப்பட்டு வீடணனின் கோயிலில் அடி எடுத்து வைப்பதாக கனவில் தெரிந்தது. கனவு நிறைவடையும் முன்பே நீங்கள் என்னை எழுப்பிவிட்டீர்கள்.’’``அமுதத்திற்கும் மேலான வார்த்தைகளைக் கூறி என்னைப் பலப்படுத்தி இருக்கிறாய். மிகுந்த நம்பிக்கையையும் மன தைரியத்தையும் நான் அடைகிறேன். உன்னுடைய சீதம்மாவிற்காக ஒன்று செய்வாயா? நீ மறுபடியும் உறங்கத் துவங்கு. உனக்கு நல்ல கனவுகள் வரட்டும்.

எனக்கு அவைகள் உரமூட்டட்டும்.’’ என சீதா தன் தோள் மீது திரிசடையை சாய்த்துக் கொண்டாள். சீதாவின் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர் திரிசடையின் தோளைத் தொட்டது.அப்பொழுது எதிர்பாராதவாறு ராவணன் மிகுந்த அலங்காரத்தோடு அசோக வனத்திற்குள் நுழைந்தான். அரக்கியர்களை விலகச் சொல்லி, தான் மட்டும் தனியனாய் சீதையை நெருங்கினான்.

(தொடரும்)

கோதண்டராமன்