Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மனத் துயரம் நீக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

நம்மால் இயலாததை நடத்தி வைப்பவர்கள்தான் மகான்கள். வடிவம் - காலம் - இடம் என்னும் அனைத்தையும் கடந்தவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட மகான்கள் நமக்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பார்கள். ஆனால், நாம் அவர்களிடம் குறுக்கு வழியைக் காண்பிக்கக் கூடாது. ஏனங்குடி புத்தகரம் எனும் ஊரில் சுவாமிநாதன் என்பவர் வாழ்ந்து வந்தார். ஏதோ பேச்சு வழக்குக்காக அல்ல; உண்மையிலேயே வாழ்ந்து வந்தவர் அவர். ஈசுவர பக்தி; அடியார்களிடம் அன்பு; வேதாந்த சாஸ்திரங்களை அடிக்கடி கேட்பது; கேட்ட அவற்றை மனத்திற்குள்அடிக்கடி நினைத்துப் பார்ப்பது; இல்லற தர்மத்தை முறை தவறாமல் நடத்துவது என, உத்தமராகவே வாழ்ந்துவந்தார், சுவாமிநாதன்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், மனதால்கூட மற்றவர்க்குத் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தவர். என்ன செய்ய? தூய்மையான ஆடையில்தானே கறை படிகிறது! அதுபோல, மிகவும் உத்தமரான சுவாமிநாதனுக்கு ஒரு பெரும் பிரச்சனை வந்து, அவர் மனதை மட்டுமல்ல! அவர் குடும்பத்தையே ஆட்டிப் படைத்தது. தன் மகள் விசாலாட்சி மூலமாகவே, சுவாமிநாதன் துயரவலைப்பட்டார்.பின்னிப் பிணைத்த அந்த வலை, என்ன செய்தும் அறுந்து போவதாக இல்லை.

விசாலாட்சி பருவம் அடையும் முன்பாகவே, அவள் உடம்பு முழுதும் சரும ரோகம் என்னும் நோய் பரவி,மேல் தோல் எல்லாம் தடித்துக் கறுத்துப் போய்விட்டது. நாளாக நாளாக நோய் தன் பலத்தைக் காட்டியது. நமைச்சல் தாங்காமல் கல்லில் தேய்த்தல், மரத்தில் தேய்த்தல், நகங்களால் சொறிதல் என, எந்நேரமும் செய்துகொண்டிருந்தாள் விசாலாட்சி. உடம்பு முழுவதும் ரத்தம் துளிர்த்து, நீர் வடிய துர்நாற்றம் வீசத் தொடங்கியது. ஈக்கள் மொய்த்தன. பார்த்தவர்கள் எல்லாம் புருவங்களைச் சுருக்கி அருவருப்பை வெளிப்படுத்தினார்கள்.

பல வழிகளிலும் மருத்துவம் பார்த்தார் சுவாமிநாதன்.

பணம் போனதே தவிர, நோய் போகவில்லை. இவ்வளவு நடந்தும், ஒருநாள்கூட சுவாமிநாதன் தெய்வத்தை இகழவில்லை; யாரிடமும் கோபப்படவும் இல்லை. அவர் உள்ளத்தில் இருந்த தெய்வபக்தி, அணுவளவும் குறையவில்லை.ஒருநாள், வெளியில்போன சுவாமிநாதன், சிவனடியாரான பெரியவர் ஒருவரைச் சந்தித்தார்; அது மட்டுமல்ல! தன் வழக்கப்படி அவரை உடனே வீட்டிற்கு அழைத்து வந்து, உட்கார வைத்து உபசாரமும் செய்தார். அதன்பின், தன் மகளுக்கு உண்டான நோயை விவரித்து, ‘‘நாங்கள் படும் வேதனை, தெய்வத்திற்குத்தான் தெரியும். இத்துயரம் தீர, ஏதாவது வழியிருந்தால், தாங்கள்தான் சொல்லி அருள வேண்டும்” என வேண்டினார்.

வந்த அடியார் வாய் திறந்தார்; “உத்தமமான பக்தன் நீ! உனக்கு நான் என்ன சொல்ல? உன் மகளுக்கு வந்திருக்கும் நோய், பாவ கர்மத்தால் உண்டானது.எந்த சிகிச்சையாலும் தீராது. ஆனால் நோய் தீர வேறொரு வழியுள்ளது...” என்று அடியார் சற்று இடைவெளி விட ;சுவாமிநாதன் கண்களில் ஆர்வம் மின்ன, அடியார் வார்த்தைகளில் மேலும் கவனம் செலுத்தினார்.

அடியார் தொடர்ந்தார் ‘‘ஒரே நாளில் ஒரு லட்சம் அடியார்களுக்கு அன்னம் படைத்தால், கர்ம வினையின் பலம் குறையும். நன்மை கிடைக்கும்” என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த சுவாமிநாதனின் முகம் சற்று வாடியது.

“சுவாமி! ஒரு லட்சம் அடியார்களுக்கு அன்னம் படைக்கும் தகுதி அடியேனுக்கு இல்லை. என்ன செய்ய?” என்றார். ஏன்? சுவாமிநாதனிடம் பணம் இல்லையா? அல்லது, மனம் இல்லையா? இரண்டும் இருக்கின்றன. ஆனால், ஒரு லட்சம் அடியார்களை ஒரே நாளில் ஒன்று கூட்டுவது என்பது, நடக்கக் கூடிய காரியமா? அதனால்தான் சுவாமிநாதன் அவ்வாறு கூறினார்.

ஆனால், அடியார் அதற்கும் ஒருவழி கூறினார்; அதையும் திருமூலர் வாக்காகவே கூறினார்;

“அடியார்களை அழைத்து அன்னமிடும் பக்தா! சுவாமிநாதா!

“தண்டறு சிந்தைத் தபோதனர் தாம் மகிழ்ந்து

உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று

எண்டிசை நந்தி எடுத்து உரைத்தானே

(திருமந்திரம் - 1858)

‘‘சிந்தையில் தூய்மை, தவம் ஆகியவற்றைக் கொண்ட அடியார் உண்டது... மூன்று உலகங்களும் உண்டதாகும். அவர்கள் ஏற்றது மூன்று உலகங்களும் ஏற்றதாகும்.

“வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண்

அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம்

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்

முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

(திருமந்திரம் - 1866)

“உத்தம அடியார்கள் உண்டது, மும்மூர்த்திகளும் உண்டதற்குச் சமமாகும். சித்தம் தெளிந்த அந்த அடியார் உண்ட மீதியை உண்டால் முக்தி உண்டாகும்.“அப்பா! சுவாமிநாதா! திருமூலர் சொன்னதையே உனக்குச் சொன்னேன். அவர் சொன்னபடி, பிரம்ம ஞானி ஒருவரைத் தேடிப் பிடி! அவருக்கு அமுது படை! அது மூன்று உலகங்களிலும் உள்ளவர்களுக்கு அமுது படைத்த பலனைத்தரும் “ என்றார் அடியார்.

சுவாமிநாதனுக்கு முகத்தில் சந்தோஷ ரேகைகள் படரத் தொடங்கின; உடனே அவை சந்தேகக் கோடுகளாக மாறின.

ஆம்! உத்தமமான பிரம்மஞானி யார் என்று எப்படி அறிவது?

ஆகையால், ‘‘சுவாமி! நீங்கள் சொல்லும் பிரம்ம ஞானியை, அடியேன் எங்கு தேடிப் பிடிப்பேன்? தயவுசெய்து, தாங்களே அதற்கும் ஒரு வழியைக்காட்டி அருள வேண்டும்’’ என வேண்டினார், சுவாமிநாதன்.‘‘ஆமாம்! உனக்கு வழி சொன்னால், அதையும் நீங்களே தேடிப் பிடித்துக் கொடுங்கள் என்று, எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமாக்கும். போ! நீயே போய் தேடிப் பிடி!” என்று கோபப்படவில்லை அடியார்; பொறுமையையும் இழக்கவில்லை. மாறாக, “முடியாததால்தானே, நம்மைக் கேட்கிறார்” என்று வழி கூறினார்.

“நீங்கள் சொன்னது நியாயம்தான். பிரம்ம ஞானியைக் காண்பது சுலபமல்ல. திருவாரூருக்குச் செல்லுங்கள்! அங்கே ஓடம்போக்கி ஆற்றின் கரையில் ,மகான் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ‘தட்சிணாமூர்த்தி’ என்று, சிதம்பரம் நடராஜப் பெருமானே திருநாமம் சூட்டியிருக்கிறார். அவருக்குப் பிச்சை இடுங்கள்! அதன்பின் அவர் கொடுப்பதை வாங்கி, உங்கள் மகளுக்குக் கொடுத்து விட்டு, நீங்களும் உட்கொள்ளுங்கள்! உங்கள் கர்ம வினை தீரும்; சுகம் பெறுவீர்கள் நீங்கள்” என்றார் அடியார்.

சுவாமிநாதன் சம்மதித்தார்

“சுவாமி! வரும் வியாழக்கிழமை அன்று நீங்கள் சொன்னபடியே செய்கிறேன். தாங்களும் கூடவே வர வேண்டும். தயவு செய்து தாங்கள், அடியேன் இல்லத்திலே இப்போது பிச்சை ஏற்க வேண்டும்” என வேண்டினார்.அடியாராக வந்தவரோ, “இப்போது எனக்கு நீங்கள் அமுது படைத்தால், எனக்குப் பசி தீரும். ஆனால், அது ஒருவருக்கு இட்ட புண்ணியத்தை மட்டும்தான் தரும். பிரம்மஞானி ஒருவருக்கு அமுது படைத்துவிட்டு, அந்தப் பிரசாதத்தோடு துறவி ஒருவருக்கு அமுது இட்டால், அது கோடி துறவியர்க்கு அமுது படைத்த புண்ணியத்தைத் தரும்.

பசிப் பிணியோடு பாவப்பிணியும் தீரும். ஆகையால், வரும் வியாழக்கிழமை அன்று, திருவாரூருக்கு வந்து தட்சிணாமூர்த்தி நைவேத்தியத்தோடு, பிச்சை ஏற்கிறேன்” என்று கூறிவிட்டு, வெளியே சென்று விட்டார்.அன்போடு அவரை வழியனுப்பி வைத்த சுவாமிநாதன், அன்றே தன் குடும்பத்தோடு விரதம் இருக்கத் தொடங்கினார். வியாழக்கிழமை வந்தது. குடும்பத்தோடு திருவாரூர் போய், அங்கே அபிஷேக அர்ச்சனாதிகள், அடியார் பூஜை ஆகியவற்றிற்குத் தேவையானவைகளை அளித்தார் சுவாமிநாதன்.

அதன்பின் அங்கே திருக்குளத்தில் நீராடி, ஆசாரத்தோடு பழவகைகளைத் தாங்கி, தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திரு முன்னால் சென்று, அவரைப் பலமுறை வலம் வந்து வணங்கி நமஸ்காரம் செய்தார்.சுவாமிகளோ சித்திரத்தில் உள்ள தீபத்தைப்போல, அசையாமல் அமர்ந்திருந்தார். அந்த நிலையைக் கண்ட சுவாமிநாதனுக்கு என்னவோ செய்தது; மெய் சிலிர்த்தது; கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய, தட்சிணாமூர்த்தி சுவாமிகளைத் துதித்து ஒரு பதிகமே பாடிவிட்டார்.பத்துப் பாடல்கள் கொண்ட அப்பதிகத்தில் இருந்து, ஒரே ஒரு பாடலாவது பார்க்கலாம்.

மமர் ஒழித்து அருளும் நிற்கே

மாறு யான் செய்வது என்னே

கமல நல் சரணம் எந்தன்

கருத்திடை இருத்தல் அன்றித்

தமரொடும் திருவாரூரில்

தட்சிணாமூர்த்தி என்னும்

சமரச குருவாய் வந்த

சச்சிதானந்த வாழ்வே

சுவாமிநாதன் பாடி முடித்ததும், நிஷ்டையில் இருந்த சுவாமிகள் கண்களைத் திறந்து பார்த்தார். அவர் பார்வை தன் மீது விழுந்ததும், சுவாமிநாதன் தன்னை மறந்தார்; சூழ்நிலைகளை மறந்தார்; வினைகள் விலகின; ஆத்ம அனுபவத்தில் உண்மையான தெய்வீக நிலையில் லயித்துப் போனார்.

கொஞ்சநேரம் ஆனது. சுவாமிநாதன் மெள்ள மெள்ளத் தன் நிலைக்குத் திரும்பினார். இருந்தாலும் இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாத தன் அனுபவத்தை மறுபடியும் மறுபடியும் நினைத்தார்; மனம் உருகியது; எதற்காக வந்தோம் என்பதையே மறந்து விட்டார் அவர்.

அருகில் இருந்த உறவினர்கள் சும்மா இருப்பார்களா?

“பெண்ணைப் பற்றிச் சொல்லுங்கள்! சொல்லுங்கள்!” என்று தூண்டினார்கள். அதன் பின்னர் உலக இயலுக்குத் திரும்பிய சுவாமிநாதன், பலமுறை சுவாமிகளை வலம் வந்து வணங்கி, தன் மகளின் நிலையை விவரித்து, நோய் தீர்க்க வேண்டினார். அவர் அருகிலேயே, மகள் விசாலாட்சியும் கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தாள். அவளை ஆழமாக ஒருபார்வை பார்த்த சுவாமிகள், “என்னடி வேண்டும்? என்னடி வேண்டும்?” என்று பலமுறை கேட்டு, அவள் உடம்பின் மீது காறி உமிழ்ந்தார்.விசாலாட்சிக்கு உடனே புத்தியில் தெளிவும் விவேகமும் உண்டாயின.

அவள், “உன் திருவடி வேண்டும்! உன் திருவடி வேண்டும்!” எனக் கூறி, சுவாமிகள் உமிழ்ந்ததை ஏற்று, சற்று உட்கொண்டு, மீதியைச் சந்தனம்போலத் தன் உடம்பில் தடவிக்கொண்டாள்.

இதை ஏற்கிறோமோ இல்லையோ? அதனால் சித்த புருஷர்களுக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை . கண்டதை நினைத்து, உடம்பையும் மனதையும் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கும் நமக்கு வியர்க்கும்; ஒரு மாதிரியான வாசம் வீசும். ஆனால், உளத் தூய்மை பெற்ற உத்தமர்களுக்கோ சித்த புருஷர்களுக்கோ, நம்மைப்போல வியர்க்காது. அதே சமயம் அவர்களிடம் இருந்து நறுமணம் வீசும்.

கோயில்களுக்குப் போய், ஏதோ ஒரு விதமாகத் தெய்வதரிசனம் கூடச் செய்து விடலாம். ஆனால், உத்தமர்களின் தரிசனமோ - சித்த புருஷர்களின் தரிசனமோ கிடைப்பது மிகமிகக் கடினம். அவர்களின் அருள் கிடைப்பது அதைவிடக் கடினம். லட்சத்தில் / கோடியில் ஒருவருக்குத்தான் வாய்க்கும்.நம் ஆராய்ச்சியெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. சித்த புருஷரான சுவாமிகள் உமிழ்நீரைத் தன் உடம்பில் சந்தனம் போலத் தடவிக்கொண்ட விசாலாட்சியைப் பார்த்த சுவாமிகள், “அடி வேண்டினால் நோய் பொடியாய் உதிரும்'' என்றார்.

அதே விநாடியில், விசாலாட்சி உடம்பில் இருந்த தீராத சரும நோய் தீர்ந்தது. மேலும் அவளுக்கு விவேகம் கூடியது. மடத்திற்கு அருகிலேயே உள்ள ‘மகாபாப நிவாரணத் தீர்த்த’த்தில் விசாலாட்சியை நீராடச் செய்து, சுவாமிகள் ஆராதனைக்குரிய நைவேத்தியங்களை அவள் கையாலேயே பரிமாறச் செய்தார்கள்.சுவாமிநாதன் தன் குடும்பத்தோடு, மிகுந்த பக்தியோடும் அன்போடும் சுவாமிகளுக்குப் பிச்சை செய்வித்தார். மிகுந்ததைப் பிரசாதமாக, அங்கு வந்திருந்த துறவிகளுக்கும் மற்றவர்களுக்கும் அளித்து, உணவு வகைகளும் படைத்தார்; மிச்சம் இருந்ததைத் தன் குடும்பத்தோடு சேர்ந்து உண்டார்.

அதேபோல, மாலையிலும் வந்து, சுவாமிகளை வழிபட்டு, பால்-பழங்கள் முதலானவற்றை நிவேதனம் செய்தார். சுவாமிநாதன். முன்போலவே, சுவாமிகள் உண்டு மிகுந்ததைக் குடும்பத்தோடு உண்ட சுவாமிநாதன், இரவானதால் மனைவி-மகளோடு உறக்கத்தில் ஆழ்ந்தார்.மறுநாள்! அதிகாலை நேரம். விழித்தெழுந்த விசாலாட்சியின் உடம்பில், பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. கரும்பாறை போலத் தடித்துப் படர்ந்திருந்த ‘படைகள்’ முழுதும், அப்படியே பொடிப் பொடியாக அவள் ஆடையில் உதிர்ந்திருந்தன.

கருத்துப் படர்ந்திருந்த அவை விலகியதும், விசாலாட்சியின் உடம்பு, மாசு மருவற்று விளங்கியது. விசாலாட்சி மட்டுமல்ல! அவள் பெற்றோர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

நோய் நீக்கம் தந்த சித்த புருஷரான தட்சிணாமூர்த்தி சுவாமிகளை வணங்கி, அங்கேயே தங்கிப் பணி விடைகள் செய்த சுவாமிநாதன், சிலநாட்கள் சென்றதும் தம் இருப்பிடம் திரும்பினார்.

மனத் துயரம் தீர்க்கும் மகான்கள் என்றும் உண்டு! எங்கும் உண்டு! இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு இது.

பி.என். பரசுராமன்