Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடிது கொடிது வறுமை கொடிது

‘மிடிமையில் அழிந்திடேல்’ என்கிறார் பாரதியார்.

‘மிடிமை’ என்னும் சொல்லுக்கு வறுமை என்று பொருள். “வறுமையில் வாடி வதங்கி அழிந்துவிடாதே” என்கிறார் பாரதியார்.

‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார், தமிழ் மூதாட்டி ஔவை.

“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்கிறது நல்வழி.

“ஆபுத்திரன் கை அமுதசுரபி இது” என்று பசிப்பிணிக்கு எதிராகக் குரல் கொடுத்த காவியம் மணிமேகலை.

இறைத்தூதர் நபிகளாரும் வறுமை இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்பவே பாடுபட்டார். “வறுமை (இறைவனையே) நிராகரிக்கும் அளவுக்கு உங்களை ஆபத்தில் தள்ளிவிடும்” என்று எச்சரித்தார். ஆகவே, எந்தெந்த வழிகளில் எல்லாம் வறுமையை விரட்ட முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் விரட்டினார்.

ஒருமுறை ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டார். உடனே, நபிகளார் தொழுவது, நோன்பு நோற்பது என்றெல்லாம் வழிபாடுகளைப் பட்டியல் இடவில்லை. “பசித்தவர்க்கு உணவளியுங்கள்; அதுதான் இஸ்லாம்” என்றார்.

“ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் யார் உதவுகிறார்களோ அவருக்கு இரவெல்லாம் நின்று வணங்கிய நன்மையும் பகல் எல்லாம் நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கும்” என்றார், நபிகளார். சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் வறுமையை நீக்க பாடுபடுவதும் ஆன்மிக வழிபாடுகளுக்கு இணையானதே என்கிறது இஸ்லாமியத் திருநெறி.

வறுமையற்ற சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே குர்ஆன் கூறும் பொருளியல் கொள்கைகளும் அமைந்துள்ளன. “செல்வம் உங்களில் ஒரு பிரிவினரிடம் மட்டுமே குவிந்து தேங்கிவிடக் கூடாது” என்று கட்டளை யிட்டதன் மூலம் செல்வப் பரவலுக்கும் அதன் மூலம் வறுமை ஒழிப்புக்கும் வித்திட்டது வான்மறை குர்ஆன்.

வறுமைக்கான இன்னொரு காரணம் வீண்விரயம். இதை அடியோடு தடுத்து நிறுத்தினார் நபிகளார். “வீண்விரயம் செய்பவர் ஷைத்தானின் சகோதரர்கள்” என்கிறது குர்ஆன்.

நபிகளார் மதீனாவில் ஒரு சிறிய அரசை அமைத்ததும் அவர் செய்த முதல் வேலை வழிபாட்டிற்காக ஒரு பள்ளிவாசலை அமைத்ததுதான். அதற்கு அடுத்தபடியாக அவர் செய்த பணி, மதீனாவில் ஒரு வணிகச் சந்தையை (மதீனா மார்க்கெட்) ஏற்படுத்தியதுதான். உற்பத்தியாளர்கள் எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாகத் தங்களின் பொருள்களை அங்கு வந்து விற்கலாம் என்று அறிவித்தார். இன்றைய உழவர் சந்தை திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி திட்டம் அது.

மிடிமையில்- வறுமையில் வாடி மக்கள் அழிந்துவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த மார்க்கம் இறைமார்க்கம்..!

இந்த வார சிந்தனை

“உண்ணுங்கள்; பருகுங்கள். ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.” (குர்ஆன் 7:31)

- சிராஜுல்ஹஸன்