வரலட்சுமி விரதம்: 21.8.2026 - வெள்ளிக்கிழமை
ஆழ்வார்களின் பாசுரங்கள் சான்று
தாயார் சந்நதிக்குப் போய்விட்டுத்தான், பெருமாள் சந்நதிக்கு, வழிபாடு செய்யச் செல்ல வேண்டும் என்பதற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா? என்று கூட கேட்கலாம். ஆழ்வார்களின் பாசுரங்கள்தான், இதற்கு, மிகப்பெரிய சான்று. இதற்கு நிறைய பாசுரங்கள் உண்டு என்று சொன்னாலும் கூட, ஒரு சான்று
பார்ப்போம்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தின், முதல் மூன்று அந்தாதிகளைப் பாடிய வர்கள், முதல் ஆழ்வார்கள். அவர்கள் திருக்கோவலூரில், இடைக்கழியில் ஒரு மழை நாளில் அந்தாதி பாடுகிறார்கள். தமிழால் விளக்கேற்றி, அந்த வெளிச்சத்தில், இறைவனைக் காண, விழைகிறார்கள்.
அதில் முதல் ஆழ்வார், இந்த உலகத்தை அகல் விளக்காகக் கொண்டு, விளக்கேற்றுகின்றார். அடுத்த ஆழ்வார், அன்பையே அகலாகக் கொண்டு, விளக்கேற்றுகின்றார். இந்த இரண்டு விளக்கால், புற இருள் விலகுகிறது. அக இருளும் அகல்கிறது. பெருமாளினுடைய தரிசனம், நேரடியாகக் கிடைக்கிறது. அப்பொழுது, பெருமாள் தரிசனம் முதலில் கிடைத்ததா? இல்லை, மகாலட்சுமியினுடைய தரிசனம் முதலில் கிடைக்கிறதா? என்பதை பின்வரும், அவருடைய பாசுரம், தெரிவிக்கும்.
“திருக்” கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கண் அணி நிறமும் கண்டேன்; செருக்கிளறும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம், கைக்கண்டேன்;
என் ஆழி வண்ணன்பால் இன்று. என்பது, அவருடைய பாசுர வரிகள். இதில், முதன் முதலில், திருக் கண்டேன் என்று, மகாலட்சுமித் தாயாரை, கண்டதைத்தான் சொல்லு கின்றார். எனவே, பெருமாளைக் காண்பதற்கு முன்னாலே, மகாலட்சுமித் தாயாரைக் கண்டு, அவருடைய பேரருளைப் பெற வேண்டும்.
பகவானும் தாயாரும்
வேதம் பெரும்பாலும் பகவானைப் பற்றி சொல்லுகின்ற பொழுது மகா லட்சுமித் தாயாரையும் இணைத்தே பேசுகின்றது. குறிப்பாக பாஞ்சராத்திர சாஸ்திரம், தத் ஏதத் ஸூஷ்ம மிதுனம் என்கிறது. அதாவது பகவானும் தாயாரும் எனும் இரண்டு தத்துவங்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது எப்பொழுதும் இருக்கிறது. தாயாரின் பெருமை சொல்லப்படும் இடங்களில் பகவானின் பெருமையும், பகவானின் பெருமை சொல்லப்படும் இடங்களில் தாயாரின் பெருமையும் இணைத்தே சொல்லப்படுகிறது. இதை நம்மாழ்வார் கீழ் வரும் சரணாகதி பாசுரத்தால் பதிவு செய்கிறார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா;
நிகர் இல் புகழாய்; உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
மகாலட்சுமி அவதாரம்
பூலோகத்தில் பல்வேறு காரணங்களுக்காக பகவான் அவதரிக்கிறான். ஆனால் அவன் தனியாக அவதரிப்பதில்லை. அவன் அவதாரம் செய்யும் பொழுது மகாலட்சுமியும் அவதாரம் செய்வதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.ராகவத்வே பவத் ஸீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி என்பது விஷ்ணு புராணம்.
வாமனனாக சிறிய உருவத்தில் மகாபலியின் யாக சாலைக்கு பகவான் வந்தபோது கூட அவன் மார்பிலே மகாலட்சுமி இருந்தாள். அதை மான் தோலால் மறைத்துக்கொண்டு பகவான் வந்தான். பகவானுடைய அவதாரத்துக்கு, மகாலட்சுமி துணை புரிவதாக மகரிஷிகள் காட்டியுள்ளனர். அதனால் பகவானை பூஜை செய்யும்போது முழுமை யான பலனை அடைய மகாலட்சுமியையும் நாராயணனையும் சேர்ந்தே பூஜிக்க வேண்டும்.
நீ கூட உன் பெருமையை அறியமாட்டாய்
கூரத்தாழ்வான் தன்னுடைய ஸ்ரீ ஸ்தவம் என்கின்ற நூலில் மகாலட்சுமியைப் பார்த்துச் சொல்லுகின்றார்.
“அம்மா! லோகமாதா! நீ எப்பேர்ப்பட்ட பெருமை படைத்தவள் தெரியுமா? எல்லாவற்றையும் அறியும் சக்தி படைத்த நாராயணனும் உன்னுடைய மகிமையை அறியமாட்டான். ஏன், நீ கூட உன் பெருமையை அறிய மாட்டாய் ஆனால், உன்னை வழிபடும் அன்பர்களுக்கு உன் பெருமை தெரியும்.
எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள். ‘ஆகாயத் தாமரை’, ‘முயல் கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!
அந்த அற்புதச் ஸ்லோகம் இது.
தேவி தவந்மஹிமாதிர்ந ஹரிணா
நாபி த்வயா ஜ்ஞாயதேயத்யப்யேவமதாபி நைவ யுவயோ:
ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுணாம்
ஸர்வஜ்ஞதாயா விது: வ்யோமாம்போஜமிதந்தயா கில விதந்
ப்ராந்தோயமித்யுச்யதே ||
நம் பிரார்த்தனையை கேட்பவள்
இந்த ஸ்ரீ என்கின்ற மகாலட்சுமியை குறிப்பிடும் ஓரெழுத்து சொல்லுக்கு ஆறு அர்த்தங்கள் உண்டு.
* ஸ்ரீ யதே:
நம் எல்லோராலும் ஆஸ்ரயிக்கப்படுபவள் என்று பொருள் அவள் திரு வடியைப் பற்றினால் உத்தமமான பலன் கிடைக்கும். அவளுக்கு தண்டிக்கவே தெரியாது. பற்றுவதற்கு எளிமையானவள்.
* ச்ரயதே:
மகாலட்சுமி. தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். அந்த தாமரை மலரோ பகவானின் திருவடிகளின் மென்மையோடு போட்டி போடுகின்றனவாம். மகாலட்சுமியின் மென்மையான கைகள் பட்டாலே அவன் திருவடிகள் கன்றி போய் விடுகிறதாம். அப்படிப்பட்ட பகவானின் திருவடிகளை. மகாலட்சுமி தன்னுடைய மென்மையான திருக்கைகளால் பற்றி வருடுகிறாள். பகவானின் திருவடிகளை சார்ந்து இருக்கிறாள். அவளை நாம் சார்ந்து இருக்கிறோம். ச்ரயதே: என்றால் பகவானை ஆஸ்ரயித்திருப்பவள் என்று பொருள்.
ச்ருனோதி: நம் கஷ்டங்களைக் கேட்கின்றாள். ராமானுஜர் அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் என்றும் உலகத்துக்கும் தனக்கும் தாயாக பிராட்டியை சொல்லியிருக்கிறார். தாய் தன் குழந்தையின் துன்பத்தை எப்படிப் பொறுமையாக கேட்பாரோ, அப்படி மகாலட்சுமி கேட்பதால், அவரிடம் மன ஈடுபாட்டோடும், இயல்பாகவும், பிராத்தனை செய்கின்றோம். ச்ருனோதி: என்பதற்கு தன்னைத் தேடி வரும் அன்பர்களின் பிரார்த்தனையை முதலில் காது கொடுத்துக் கேட்கிறாள் என்று பொருள்.



