Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அருள் மழையே வா...!

“மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி பொழிகிறதா?”

மாதம் மும்மாரி பொழிந்ததெல்லாம் அந்தக் காலம்.

இது நவீன யுகம் அல்லவா? மழைக் காலத்தில்கூட வெயில் கொளுத்துகிறது.

பருவமழையின் அளவு குறைந்து வருவதாக வானிலை மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் தென்மேற்குப் பருவ மழை பதினைந்து விழுக்காடு குறைந்திருப்பது கவலை அளிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் பல ஊர்களிலும் மழை வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

பல பள்ளிவாசல்களில் சிறப்பு துஆக்கள் ஓதப்படுகின்றன.

‘விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது’ என்பார் வள்ளுவர்.

‘வானிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் புல்கூட முளைக்காது’ என்று பொருள்.

அதனால்தான் “மழை ஓர் அருள்” என்கிறது இறுதி வேதம் குர்ஆன்.

நபிகளார்(ஸல்) காலத்தில் ஒரு முறை கடும் வறட்சி ஏற்பட்டது.

இறைத்தூதர் நபிகள் நாயகத்திடம் வெள்ளிக்கிழமையன்று ஒருவர் வந்து முறையிட்டார்.

“இறைத்தூதர் அவர்களே, தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கால்நடைகள் அழிந்துவிட்டன. உண்பதற்கு எதுவும் இல்லை. சாலைகளில் (வணிகப்) போக்குவரத்து நின்றுவிட்டது. எனவே மழைக்காக வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

இறைத்தூதர் பிரார்த்தித்தார். சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டன. மழை பொழியத் தொடங்கியது. அந்த வெள்ளிக் கிழமையன்று தொடங்கிய மழை மறு வெள்ளி வரை நீடித்தது. தேவைக்கும் அதிகமாகவே கொட்டித் தீர்த்தது.

உடனே மக்கள் இறைத்தூதரிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே, மழையால் வீடுகள் இடிந்துவிட்டன. மழையை நிறுத்துமாறு இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று முறையிட்டனர்.

மழை இறைவனின் ஓர் அருட்கொடை. அதை “வேண்டாம்” என்று மறுப்பது இறையருளையே மறுப்பதாகும். ஆகவே, நபிகளார் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்:

“இறைவா..! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது இந்த மழையைத் திருப்பி விடுவாயாக. எங்களுக்குப் பாதகமாக இதை நீ அமைத்து விடாதே. பெரும் மலைகள், சிறு குன்றுகள் ஆகியவற்றின் உச்சிகளிலும், ஓடைப் பகுதிகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீதும் இந்த மழையைப் பொழியச் செய்வாயாக.”

இந்த நிகழ்வை நேரில் பார்த்த நபித் தோழர்கள் கூறுகிறார்கள்- “இறைவன் மீது ஆணையாக. இறைத்தூதர் அவ்வாறு பிரார்த்தித்ததும் மேகங்கள் கலைந்து சென்றுவிட்டன. அவற்றில் எதையும் நாங்கள் காணவில்லை” என்று.

மனம் உருகி நாம் செய்யும் பிரார்த்தனைகளை இறைவன் மனமுவந்து ஏற்று அருள்கிறான் என்பதையே இந்த நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

இந்த வார சிந்தனை

“கார்முகில்களிலிருந்து நாம் மழையைப் பொழியச் செய்யவில்லையா? தானியங்களையும் தாவரங்களையும் அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக.” (குர்ஆன் 78: 14-16)

- சிராஜுல்ஹஸன்