கும்பகோணம் தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் உள்ளே இருக்கும் அனுமனை சென்ற இதழில் தரிசித்தோம். இதே கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரத்தில் இரட்டை ஆஞ்சநேயர் இருக்கிறார்.
பாழடைந்த கோயில்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. பயணித்தால், கோயில்கள் நிறைந்த பட்டீஸ்வரம் என்னும் ஊர் உள்ளது. இவ்வூர், கும்பகோணம் - தஞ்சை ஆகிய இரு ஊர்களுக்கு நடுவில் அதாவது எல்லை பகுதியில் அமைந்துள்ளது. பட்டீஸ்வரத்தில், ஸ்ரீ கோபிநாதபெருமாள் கோயில் உள்ளது. இங்குதான் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த இரண்டு அனுமன்கள் உள்ளனர். இந்த கோயில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது. திருச்சியில் உள்ள திருவெள்ளாரை ஸ்ரீ புண்டரிகாக்ஷ பெருமாள் கோயிலில் எப்படி ராஜகோபுரம் பாதியாக (மொட்டை கோபுரம்) காணப்படுகிறதோ, அது போலவே, இக்கோயில் ராஜகோபுரமும் பாதியில் காணப்படுகிறது. கோயில் வளாகத்தைச் சுற்றிலும், செடி கொடிகள் நிறைந்து பெரிய புதர்கள் காணப் படுகின்றன. அதே போல், கோபிநாதபெருமாளின் சந்நதியும் முழுமையாக பாழடைந்து காணப்படுகிறது. இருப்பிலும், மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தற்போது ராஜகோபுரம் உள்பட கோபிநாதபெருமாள் கோயிலில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாழடைந்த சந்நதியில் இருந்து திருமேனிகளை மீட்டு, புதியதாக சந்நதிகளை கட்டிவருகிறார்கள். மிக விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கோலாகலமாக நடைபெற்ற திருவிழாக்கள்
ஒரு காலத்தில், இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள், ரோகிணி நட்சத்திர நாளில் ஊர்வலம், ஏகாதசி அன்று சிறப்பு பூஜைகள், தட்சிணாயிண மற்றும் உத்தராயண புண்ய காலங்களில் சிறப்பு வழிபாடு என கொண்டாடப்பட்ட கோயிலாகும். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், மீண்டும் இந்த விழாக்களை கொண்டாட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. அந்த காலத்தில், கோயில் வளாகத்தில் முரசு, மேள - தாள வாத்தியங்கள் என எப்போதும் மங்கள இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் காலப் போக்கில் நின்றுவிட்டது.முன்னொரு காலத்தில், சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்திருக்கிறது ``பழையாறை’’ (பட்டீஸ்வரம்) என்னும் பகுதி. கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தூரத்திலும், தஞ்சையில் இருந்து 36 கி.மீ., தூரத்திலும் பழையாறை பகுதி இருக்கிறது. இன்றும் சோழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ``சோழன் மாளிகை’’ அதற்கு சான்றாக விளங்குகிறது.
திரௌபதி கேட்ட மலர்
மேலும், பல முக்கியக் கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. அதில் ஒன்றாக ``ஸ்ரீ கோபிநாதப் பெருமாள் கோயில்’’ கருதப்படுகிறது. பட்டீஸ்வரத்தில் உள்ள ``தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு’’ அருகிலும், ``கைலாசநாதர் கோயிலுக்கு’’ கிழக்கிலும் இந்த கோபிநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மிக பெரிய தமிழ்பண்டிதரான உ.வே.சாமிநாதையர், இக்கோயிலை ``தென்னகத்தின் துவாரகை’’ என்று புகழ்ந்து பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ராமாயண காலத்தில், லட்சுமண சீதாவுடன் ராம அவதாரக் கோலத்தை அனுமனுக்கு காட்டிய இடம் என்பதால் இக்கோயில் மேலும் சிறப்புகளை பெறுகிறது. அதே போல், அழகான ``அல்லி மலர்கள்’’ நிறைந்த பெரிய குளம் ஒன்றும், அதைச் சுற்றி வாழைத் தோப்பும் இருந்திருக்கிறது. இக்குளத்தில் பூக்கும் அல்லி மலர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.காரணம், ஆயிரம் இதழ்களுடன் பூத்துக் குலுங்குமாம். நறுமணம், சுற்றுவட்டார பகுதி முழுவதும் வீசுமாம். இதனை அறிந்த திரௌபதி, அல்லி மலர் ஒன்றை தேடி தனக்கு கொடுக்குமாறு பீமனை அனுப்புகிறாள்.
அகங்காரத்தை நீக்கிய அனுமன்
காடு மலைகளை தாண்டி வந்த பீமனுக்கு, அல்லியின் நறுமணம் வீசத் தொடங்கியது. வீசும் நறுமணத்தையே பின்தொடர்ந்து சென்றார், பீமன். சற்று தூரத்தில் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார், அனுமன். அனுமனின் அருகில் சென்று, அனுமனை சாதாரண குரங்கு என்று எண்ணிய பீமன்;
``ஹேய் குரங்கே.. வழிவிடு. நான் செல்ல வேண்டும்’’ என்று கூறினார். பீமனின் அகங்காரத்தை அகற்ற தீர்மானித்த அனுமன்;
``நான் ஒரு வயதானவன். ஆகையால், என்னை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, பிறகு நீங்கள் செல்லலாம்’’ என்று குரல் நடுநடுக்க கூறினார். இவ்வளவுதானா.. என்று பீமன், அனுமனை பல முறை தூக்க முயன்றும், பீமனால் அனுமனை தூக்க முடியவில்லை. பீமனின் அகங்காரம் சுக்குநூறாக உடைந்தது. தான் செய்த தவறுக்காக, அனுமனின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
தவறை உணர்ந்த பீமனுக்காக தன் விஸ்வரூபத்தைக் காட்டிய அனுமன், திரௌபதி கேட்ட ஆயிரம் இதழ்களைக் கொண்ட `சஹஸ்ரதள’ மலரை, பீமனுக்கு வழங்கி ஆசீர்வதித்தார். இன்றும் இக்குளம் இருப்பதாக கூறப்படுகிறது.
மன்னர்களை பெருமைபடுத்தும் கல்வெட்டுகள்
கோபிநாதப் பெருமாள் கோயிலில் உள்ள மண்டபத்திற்கு முன்பாகத் தனிச் சந்நதியில் ``இரட்டை ஆஞ்சநேயர் ஸ்வாமி’’ மகான் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால், மேலும் இக்கோயில் புகழோங்கி காணப்படுகிறது. இக்கோயில், திவ்ய தேசங்களில் ஒன்று இல்லையென்றாலும், பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் உயர்ந்த நிலையில் மகாமண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை ஆகியவை உள்ளன. 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தில், இந்த கோயிலின் மையப் பகுதியை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் 13-ஆம் நூற்றாண்டில், பிற்காலச் சோழர்கள் புதுப்பித்து, விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் அழகாக இருந்திருக்கிறது. முகலாயர்களின் படையெடுப்பின் போது அவைகள் அழிக்கப்பட்டன. எஞ்சிய ஒரே ஒரு கோபுரமும் மொட்டை கோபுரமாக பாழடைந்திருந்தது. (தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது)இக்கோயில் அருகில் உள்ள மற்ற கோயில் கல்வெட்டுகளில், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர பேரரசர்களின் வம்சத்தினர்கள், கோபிநாதபெருமாளுக்கு பல தொண்டுகளை செய்ததாக குறிப்பிடுகின்றன.
மீண்டும் பழைய நிலைமைக்கு வரவேண்டும்
பாதிநிலையில் இருந்த ராஜகோபுரத்தை, தற்போது உயர்த்தி எழுப்பி கட்டி, வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோபுரத்திற்குள் உள்ளே நுழைந்து வந்தவுடன், இடது பக்கத்தில் மிக பெரிய இரண்டு பனைமரங்கள் காணப்படுகின்றன. இவைக்கு கீழே சங்கு-சக்கரம் சுதை வடிவில் காணப்படுகிறது. அதன் அருகில், கூடாரம் அமைத்து வியாசராஜர் பிரதிஷ்டை செய்த இரட்டை ஆஞ்சநேயர் இருக்கிறார். ஒரு அனுமன் சதுர வடிவிலும், மற்றொரு அனுமன் நீள வடிவிலும் காணப்படுகிறார்கள். சனிக் கிழமைகளில் சில பக்தர்கள் வருகிறார்கள்.
சில படிகளை ஏறி மண்டபத்திற்குள் நுழைந்தால், ருக்மணி - சத்யபாமா சமேதராக ஸ்ரீ கோபிநாதப் பெருமாளை தரிசிக்கலாம். இவர் மிகச் சிறிய வடிவில் காணப்பட்டாலும், அழகான தோற்றம் கொண்டவராக இருக்கிறார். 10 ஆண்டிற்கும் மேலாகச் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, மீண்டும் பழையபடி கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொடர்புக்கு: 94433 92795/ 82205 38838.
எப்படி செல்வது?: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்திலும், தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து 36 கி.மீ. தூரத்திலும் இக்கோயிலை அடையலாம்.



