Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிள்ளைப் பாசம்

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவலை. நியாயமான கவலைகளும் உண்டு; அநியாயமான கவலைகளும் உண்டு. நியாயமான கவலை ஒன்றை வியாசர் சொல்கிறார். பார்ப்போம். பசுக்களின் தாயும் சொர்க்கலோக வாசியுமான காமதேனு, சொர்க்கலோகத்தில் அழுது கொண்டிருந்தது.அதைக் கண்ட தேவேந்திரன், காமதேனுவின் அழுகைக்கான காரணத்தைக் கேட்கத் தொடங்கினார்.‘‘மங்கலகரமானவளே! ஏன் இப்படி அழுகிறாய்? தேவதைகளும் மனிதர்களும் பசுக்களும் நலம்தானே? நீ இப்படி அழுகிறாய் என்றால், அது அல்ப காரணத்திற்காக இருக்காது என்பது தெரியும். ஏன் அழுகிறாய்? சொல்!’’ என்றார்.

காமதேனு பதில் சொல்லத் தொடங்கியது; ‘‘தேவராஜனே! உங்களுக்கு என்ன? ஒரு கஷ்டமும் இல்லை. நானோ, என் பிள்ளையைக் குறித்து வருத்தப்படுகிறேன். அதனால்தான் இந்த அழுகை.

‘‘அதோ பாருங்கள்! பூமியில், பலமில்லாத என் சின்னக் குழந்தையைக் கலப்பையில் கட்டித் தார்க்கோலால் குத்துகிறார்கள் பாருங்கள்! சாப்பிட விடாமல் இப்படிக் கஷ்டப் படுத்துகிறார்களே! இம்சை தாங்காமல் தளர்ந்து போயிருக்கும் அந்தச் சின்னக் கன்றை நினைத்துத்தான் நான் நடுங்குகிறேன்; அழுகிறேன்’’ என்று சொன்ன காமதேனு பசுக்கள் படும் துயரத்தை மேலும் விவரிக்கத் தொடங்கியது.

‘‘சற்று பலம்வாய்ந்த மாட்டின் மீது அதிக அளவில் பாரத்தை ஏற்றுகிறார்கள். பலம் குறைந்து பிராணனும் குறைந்து இளைத்துப்போய், நரம்புகள் வெளியே தெரியும்படி இருக்கும் மற்றொன்றோ, கஷ்டத்தோடு பாரத்தைச் சுமக்கிறது. அதை எண்ணி வருந்துகிறேன்; அழுகிறேன்’’ என்றது காமதேனு.தேவேந்திரன் தொடர்ந்தார்; ‘‘அழகான மனம் கொண்டவளே! உன் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் துயரப்படும் போது, இந்த ஒரு பிள்ளை மட்டும் துயரப்படுவதைக் கண்டு அழுகிறாயே, ஏன்?’’ எனக் கேட்டார்.

காமதேனு பதில் சொன்னது, ‘‘தேவேந்திரா! ஆயிரக்கணக்கான எல்லாப் பிள்ளைகளும் எனக்குச்சமம் தான். இருந்தாலும் அதிகமாகக் கஷ்டப்படும் பிள்ளை விஷயத்தில், அதிகமான இரக்கம் உண்டாகிறது’’ என்றது. காமதேனுவின் வார்த்தைகளைக் கேட்டு, தேவேந்திரன் ஆச்சரியப்பட்டார்; காமதேனுவின் துயரத்தைப் போக்குவதற்காக, உடனே பெரும் மழையைப் பொழிந்தார். காமதேனுவால் சொல்லப்பட்ட பசுவைக்கட்டி அடித்துக் குத்தி உழுது கொண்டிருந்தவர், வேலையை நிறுத்திப் பசுவை அவிழ்த்து விட்டார்.காமதேனுவின் அழுகை நின்றது.தாய்ப் பாசத்தின் பெருமையை விளக்கும் இக்கதை, பிள்ளைப்பாசம் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மையையும் விளக்குகிறது.

தொகுப்பு: V.R.சுந்தரி