Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சந்திராஷ்டம யோகம்!

ஒவ்வொரு மாதமும் பலர் சந்திராஷ்டமம் என்றாலே பல பணிகளை தள்ளி வைத்துவிடுவர். சிலருக்கு அச்சம் அதிகமாகவே இருக்கும் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சந்திரன் என்பது மிக முக்கியமான கிரகமாக இருக்கிறது. ஆகையால்தான், ஜோதிடத்தில் எவ்வளவோ பலன்கள், யோகங்கள் இருந்தாலும் தினசரி ராசிபலன் என்பது சில நற்பலன்களையும் தீய பலன்களையும் செய்கிறது. இவை நமக்கு நம்பிக்கை தந்தாலும், முழுமையான பலன் இவைகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும் என்பது நிச்சயம்தான். அந்த வகையில், மாதத்திற்கு ஒருமுறை வரும் சந்திராஷ்டமம் சிலருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இதே பலன் எல்லோருக்கும் இருக்கும் என்பது கிடையாது. சிலருக்கு சந்திராஷ்டமம் தடைகளையும் மன உளைச்சலையும் தந்தாலும் சில யோகங்களை செய்கிறது என்பது உண்மை. அதைத்தான் நாம் சந்திராஷ்டம யோகம் என்கிறோம். யாருக்கு சந்திராஷ்டமம் யோகம் செய்கிறது? எப்பொழுது யோகம் செய்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.

சந்திராஷ்டமம் என்பது என்ன?

ஒருவரின் ஜனன காலத்தில் ‘சந்திரன்’ எங்கு உள்ளதோ அதனை ‘ஜென்ம ராசி’ என்று அழைக்கிறோம். அந்த ராசிக்கு சந்திரன் எட்டாம் பாவகத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தைதான் ‘சந்திராஷ்டமம்’ என்கிறோம். அச்சமயம் ஜென்ம ராசியானது, அதாவது, சந்திரன் தனது சுய பலத்தை குறைத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே, சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

சந்திராஷ்டமத்தின் உட்ெபாருள் என்ன?

சந்திரன் என்பது மனோகாரகனாகவும், உடல் காரகனாகவும், தினம் வரும் தனகாரகனாகவும் இருக்கிறான். ஆகவே, மனோகாரகன் பாதிப்புகளுக்கு உள்ளாகும் காலத்திலும், அதன் ஆற்றல் குறைவு ஏற்படும் காலத்திலும் அதன் காரகங்களான மனம், உடல், பொருள் ஆகியவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அவ்வாறு பாதிப்புகள் ஏற்படுவதை நமக்கு உடனடியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது, அதிக கோபம், சிந்தனையின்மை, பதட்டம் இவற்றை கொடுத்து பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மையான சந்திராஷ்டமத்தின் உட்பொருள்.

சந்திராஷ்டம யோகம் என்பது என்ன?

பன்னிரெண்டு ராசிகளில் எல்லோருக்கும் சந்திராஷ்டமம் கெடுதலை செய்யாது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் விதி. அந்த விதியின் அடிப்படையில், ராசியும் லக்னமும் ஒன்றாக இணைந்த ஜாதகர்கள். அதாவது, துலாம் ராசியும் துலாம் லக்னமும் ஒன்றாக அமைந்தவர்களுக்கும், தனுசு ராசியும் லக்னமும் ஒன்றாக அமைந்தவர்களுக்கும் இந்த சந்திராஷ்டமம் யோகத்தை செய்கின்றன. இதுவே, சந்திராஷ்டம யோகம் ஆகும்.

ஒரு கிரகம் தனது அஷ்டமத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தில் தனது சக்தியை இழக்கின்றன. ஆனால், துலாம் ராசிக்கு எட்டாம் (8ம்) பாவத்திற்குள் சந்திரன் பிரவேசிக்கும் காலத்தில் சந்திரன் தனது உச்ச பலனை பெறுகின்றது. ஆகவே, அங்கு சந்திரன் தனது சந்திராஷ்டம வேலையை அதிகம் செய்வதில்லை. ஜாதகருக்கு நற்பலன்களை அளிக்கின்றன. அதுபோலவே, தனுசு ராசிக்கு எட்டாம் (8ம்) பாவகத்திற்குள் சந்திரன் பிரவேசிக்கும் காலத்தில் சந்திரன் ஆட்சிப்பலனை பெறுகிறது. ஆகவே, அங்கு சந்திரன் நற்பலன்களை அளிக்கும். இவர்களுக்கு சந்திரதிசா காலங்களில் சிற்சில அவமதிப்புகள் ஏற்பட்டாலும் பெறும் தன பாக்கியத்தை ஏற்படுத்தும் யோகமாக வேலை செய்யும்.

சந்திராஷ்டம யோகங்கள் யாவை?

* சாதாரணமாக இருப்பார்கள் இவர்களுக்கு பெரும் தன யோகத்தை கொடுக்கும் அமைப்பாக இருக்கும்.

* தாயினால் சிற்சில இடர்பாடுகள், பிரச்னைகள் இருந்தாலும் அவை உங்களை நல்வழிப்படுத்துவதற்காக அமையும்.

* சந்திர திசா காலங்களில் பெரிய பொருளாதார மாற்றத்தை சந்திப்பீர்கள். அவ்வாறு ஏற்படும் காலத்தில் அன்னதானம் செய்வது உங்களுக்கு சிற்சில இடர்பாடுகளை தடுக்கும் நிலை உண்டாகும்.

* மனம் இந்த சந்திராஷ்டம காலங்களில் தியானம் செய்தால் நிம்மதியையும் தீர்வையும் ஏற்படுத்தும் வழிகளை தரும். சந்திராஷ்டம யோகம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

* பௌர்ணமி தினங்களில் மாலை நேரத்தில் சந்திரனுக்கு பால், பழம், மல்லிகை வைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.

* எந்தக் கோயிலாக இருந்தாலும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, உங்கள் ஜென்ம ராசிக்கு அர்ச்சனை செய்து கொள்வது நலம் பயக்கும். அந்த அபிஷேக நீரை நீங்கள் ‘கோமுக’த்தில் (கோயிலில் அபிஷேகநீர் வரும் பசுவின் முக அமைப்பை உடைய பாதை) ஒரு பாட்டிலில் பிடித்து எடுத்துவந்து, நீங்கள் குளிக்கும் பொழுது சிறிது ஊற்றி பயன்படுத்தலாம். வீட்டில்கூட தெளிக்கலாம். இதனைத்தான் கோமுகித் தீர்த்தம் என்பார்கள்.

* சந்திரனோடு எந்த கிரகம் தொடர்பு கொள்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் அருகிலுள்ள ஜோதிடரை அணுகி பலன் பார்த்துக் கொள்வது சிறப்பு.

* சுனைகள் மற்றும் பாதாளத்தில் உள்ள நீர் ஊற்றுகளில் உள்ள நீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது நற்பலன்களை ஏற்படுத்தும்.

* அன்னதானம் செய்வது சிறந்த நற்பலன்களை ஏற்படுத்தும். எவ்வளவோ பரிகாரங்கள் இருந்தாலும், அன்னதானம் என்பது ஒருவரின் பசிப்பிணியை போக்குவதாகும். எனவே, அன்னதானம் செய்யுங்கள். சந்தோஷமாக செய்யுங்கள்.