Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சகல நோய்களையும் குணப்படுத்தும் சக்கரபாணி

கும்பகோணத்தில் உள்ள வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை, கடந்த சில இதழ்களில் தரிசித்து வருகிறோம். அந்த வகையில், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ``ஸ்ரீ சக்கரபாணி’’ கோயிலில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் அருள்பாலித்து வருகிறார்.

முதலில், கும்பகோணம் கோப்பு தெருவில் உள்ள ``ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலில்’’ இருக்கும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``வீர ஆஞ்சநேயரை’’ தரிசித்தோம். அடுத்ததாக, பட்டீஸ்வரம் ``ஸ்ரீ கோபிநாத பெருமாள் கோயிலில்’’ உள்ள இரட்டை ஆஞ்சநேயரை தரிசித்தோம். தற்போது சக்ரபாணி கோயிலில் உள்ள அனுமனை இந்த தொகுப்பில் தரிசிக்க இருக்கிறோம். ஆக, கும்பகோணத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த நான்கு அனுமன் அருள்பாலித்து வருகிறார்.

அசுரன் துன்புறுத்தல்

முன்னொரு காலத்தில், ரிஷிகள் தவம் செய்த இடம், சக்கரபாணி கோயிலாகும். அப்போது ``ஜலந்தன்’’ என்னும் அசுரன் முனிவர்களை துன்புறுத்தி வந்தான். அதே சமயத்தில், இப்பகுதியில் சூரியனின் வெப்பம் தகதகவென தகைத்தன. ஒரு பக்கம், ஜலந்தனின் அட்டகாசம். மறுபக்கம் சூரியனின் அதீத வெப்பம். செய்வதறியாது திகைத்த முனிவர்கள், சூரியனை வேண்டினர்.

``சூரிய தேவனே... உங்களது வெப்பமானது எங்களை சுட்டறித்து வாட்டி வதைக்கிறது. ஆகையால், தங்களின் வெப்பத்தை தனித்து, மழை பொழிய அருள் புரியவேண்டும்’’ என்று வேண்டினர்.

``இந்த உலகத்தில் நான்தான் உயர்ந்தவன். நான் இல்லையெனில் உலகம் இயங்காது. எனக்கு தெரியும் வெப்பத்தை உயர்த்த - குறைக்க.. யாரும் புத்திமதி சொல்ல அவசியமில்லை’’ என்று ஆணவ தொனியில் சூரியன் கூறினார்.

ஜலந்தனிடமிருந்தும், சூரியனிடமிருந்தும் தங்களை காப்பாற்றி அருளுமாறு, பகவான் விஷ்ணுவை வேண்டி ரிஷிகள் கடும் தவத்தில் ஈடுபட்டனர். தவத்தை மெச்சிய விஷ்ணு பகவான், முனிவர்களின் முன்பு தோன்றி, பிரச்னைகளை கேட்டறிந்தார். உடனே தனது வலது கையில் இருக்கக்கூடிய சக்கரத்தை உடனே ஏவினார்.

அந்த சக்கரம், சூரியனின் கதிர் அலைகளைவிட பல மடங்கு ஆற்றல் கொண்டதாக, சுழன்றுக்கொண்டே சூரியனை நோக்கி பாய்ந்தது. இதனைக்கண்ட சூரியதேவன், அச்சமடைந்து ஓடி மறைவான ஒரு இடத்தில் மறைந்துக் கொண்டார். மறைந்துக் கொண்ட அந்த இடத்தையும் சக்கரம் விடாமல், சூரியதேவனையே துரத்தியது. இதனால், சூரியதேவன் ஓடிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், விஷ்ணுடம் சரணாகதியடைந்தார்.

முதல் தனிக் கோயில்

``ஸ்வாமி.. என்னை மன்னியுங்கள். உலகத்திலேயே நான்தான் சக்தி படைத்தவன் என்கின்ற கர்வம் எனக்குள் தோன்றியது. அந்த கர்வத்தை நீங்கள் அடக்கிவிட்டீர்கள். இனி எக்காரணத்தைக் கொண்டும், கர்வம் கொள்ளமாட்டேன். என்னை மன்னித்து அருள்புரியவேண்டும் ஸ்வாமி’’ என்று சூரியதேவன் சரணாகதியடைந்ததும், விஷ்ணு பகவான் ஏவிய சக்கரம் நேராக ஜலந்தனை நோக்கி சுழன்று சென்றது. ஜலந்தன் பயத்தில் அங்கும் இங்கும் ஓடினான். விடாது துரத்திய சக்ரம், ஜலந்தனின் சிரசை கொய்தது. துடிதுடித்து ஜலந்தன் மாண்டுப் போனான். சலசலவென மழையும் பெய்ய தொடங்கியது. முனிவர்கள் மகிழ்ந்தனர். ஜலந்தனை வதம் செய்வதற்காகவும், சூரியதேவனின் அகந்தையை அகற்றவும் எடுத்த அவதாரமே சக்கரத்தாழ்வார். அத்தகைய அவதாரம் தற்போதுள்ள சக்கரபாணி கோயில் இடத்தில் நடைபெற்றதாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீ ரங்கம், திருமோகூர் ஆகிய இடங்களில் சக்கரத்தாழ்வாருக்குச் சிறப்பான சந்நதிகள் இருக்கின்றன. அதே போல், பல கோயில்கள் இருந்தாலும், இந்தியாவிலேயே சக்கரத்தாழ்வாருக்கென சந்நதி இல்லாமல் பிரத்யேகமாக தனியாக கோயிலே அமைந்த ஒரே விஷ்ணுகோயில் இதுதான்!

நாயக்கர்கள் கட்டிய கோயில்

சக்கரபாணி ஸ்வாமிக்கு, மூன்றாவது கண் உள்ளதாகவும், அக்கண், எதிரிகளிடமிருந்து பக்தர்களை காப்பதாகவும் ஐதீகம். இந்த கோயிலில், ``அமிர்த புஷ்கரணி’’ என்னும் பெயரில் திருக்குளம் ஒன்றும் உள்ளது.

இந்த கோயிலின் கட்டிடக்கலை மற்றும் அதில் இடம்பெற்றுள்ள கலைநயமிக்க வடிவமைப்புகளை பார்க்கும் போது, இக்கோயில் சுமார் 15-ஆம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். மேலும், கும்பகோணத்தில் உள்ள ராமசுவாமி கோயில் மற்றும் சாரங்கபாணி கோயில் ஆகியவையும் நாயகர்கள் கட்டியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இரு வாயில்கள்

சக்கரபாணி கோயில் சந்நதிகள் முழுவதும் கருங்கற்கலால் கட்டப்பட்டுள்ளன. கோயில்களில் காணப்

படும் தூண்கள் மிக நேர்த்தியாக உள்ளதால், அத்தூண்கள் அனைத்தும் சிறப்பு பெற்றவை. அதே போல், ``தட்சிணாயன வாயில்’’, ``உத்தராயண வாயில்’’ என இரு வாயில்கள் இருக்கிறது.

அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதமும், சக்கரபாணி ஸ்வாமியை தரிசிக்க, தட்சிணாயன வாயில் வழியாகதான் செல்ல வேண்டும்.

அதே போல், சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களில் சக்கரபாணியை தரிசிக்க உத்தராயண வாயில் வழியாகதான் செல்ல வேண்டும். இந்த தட்சிணாயன, உத்தராயண வாயில்கள் இங்கு விசேஷமாக பார்க்கப்படுகிறது. இதே போல், ஸ்ரீ சாரங்க பாணி கோயிலிலும் காணமுடிகிறது.

மன்னரின் சிலை

இரண்டாம் சரபோஜி மன்னருக்கு, தீராத நோயால் அவதிப்பட்டுவந்தார். இதனால், சக்கரபாணி பெருமாளிடம் வேண்டிக்கொள்ள, அந்த நோயிலிருந்து குறுகிய நாட்களுக்குள் சரபோஜி குணமடைந்துவிட்டார். இதனை நினைவு கூறும் விதத்தில், சக்கரபாணியை வழிபடுவது போன்ற வெண்கலச் சிலை ஒன்றும் இங்கு உள்ளது.

இக்கோயிலில், சக்கரத்தாழ்வார், ``சக்கரபாணி’’ என்னும் திருநாமத்தைக் கொண்டு அருள்பாலித்து வருகிறார். மேலும், எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஒரு ஆயுதத்தை ஏந்தியவாறு, பகவான் சக்கரபாணி காட்சியளிக்கிறார். விஜயவல்லி என்னும் திருநாமத்தில் தாயார், தனி சந்நதிக்கொண்டு சேவை சாதிக்கிறார். சூரியதேவன், சரணாகதி அடைந்து, மீண்டும் தனது முழு ஆற்றலையும் பெற்றதால், இந்த தலம் ``பாஸ்கர க்ஷேத்திரம்’’ என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில், ``சுதர்சன ஹோமம்’’, ``திருமஞ்சனம்’’, ``சஹஸ்ரநாமம் அர்ச்சனை’’ ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. மிக முக்கியமாக, கோதுமை பாயசம், இங்கு விசேஷம். இருந்தபோதிலும், சக்கரபாணி கோயிலுக்குள் நுழைந்து, சக்கரபாணி ஸ்வாமியையும், விஜயவல்லி தாயாரையும் எளிமையாக பிரதட்சணம் செய்து மனதார வழிபாடு செய்தாலே போதுமானது, சக்கரபாணி அருள்புரிவார்.

கொடிமரம் அருகே அனுமன்

இக்கோயிலின் கோபுரம் மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு காணப்படுகிறது. துவஜஸ்தம்பம் அதாவது கோயில் கொடிமரம் அருகில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த மிக கம்பீரமான ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

இவரை காணும்போதே சாந்நித்தியம் நிறைந்தவர் என்று நன்கு தெரிகிறது. ஒரு பக்க முகம், கையில் சௌகந்திகா புஷ்பம், ஆஞ்சநேயரின் தலைக்கு மேலே வால், அதில் சிறிய மணி என வியாசராஜர் பிரதிஷ்டை செய்ததற்கான அனைத்து அம்சங்களும் காணப்படுகின்றன. இன்றும் மத்வ சம்ரதாயத்தின்படி தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு விசேஷ அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். சூரியனின் அகந்தையை போக்கியதன் நினைவு கூரும் விதத்தில், மாசி மகத்தன்று இங்குள்ள சுதர்சன மூர்த்திக்கு, சூரியதேவன் பூஜைகள் செய்யும் வைபவம் நடைபெறும்.

அதேபோல், நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும். இதே மாசி மகத்தன்று, ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. சித்திரையில் சாரங்கபாணி சுவாமியுடன் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆவணியில் பவித்தோற்சவம், வைகாசி பௌர்ணமி அன்று தெப்போற்சவம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமா.. இங்குள்ள அனைத்து சைவ மற்றும் வைணவக் கோயில்களிலும், ``மாசிமகம்’’ அன்று கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும். மேலும், அகம்பாறை விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், விஜயவல்லி தாயார் ஆகிய பிற சந்நதிகளையும் தரிசிக்கலாம்.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை: 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. தொடர்புக்கு: சௌந்தர ராஜா பட்டர் - 94863 10896.

*அமைவிடம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ரயில் நிலையத்தில் இருந்தும் 2கி.மீ., தூரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது.