Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏழரைச் சனி காலங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?

?ஏழரைச் சனி காலங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?

- சுப்ரமணியன், திருச்சி.

கட்டாயம் நடத்தலாம். ஒருவருக்கு 28 வயதில் ஏழரைச் சனி வந்தால் 36 வயது வரை அவருக்கு திருமணம் நடத்தாமல் இருக்க முடியுமா? நான் விருச்சிக ராசி. விருச்சிகத்தில் சனி இருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடைபெற்றது.

?‘‘இடும்பைக்கு இடும்பை”என்கிறார்களே, என்ன பொருள்?

- விஜயலட்சுமி, கோயம்புத்தூர்.

துன்பத்திற்கு துன்பம் என்று பொருள். 16 வயதில் மரணம் என்று மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிவபெருமானைச் சரணடைந்தார். காலனாகிய துன்பம் இவர் உயிரைக் கவர வந்து சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு துன்பமடைந்தது. இதைத்தான் துன்பத்திற்குத் துன்பம், இடும்பைக்கு இடும்பை என்று சொல்கிறார்கள்.

?அர்த்த பஞ்சக ஞானம் என்றால் என்ன?

- துரைராஜ், கோவிலம்பாக்கம்.

அர்த்த பஞ்சக ஞானம் என்பதை ஐம்பொருள் உண்மை என்று வைணவத்தில் சொல்லுவார்கள்.

1. ஜீவாத்மா

2. பரமாத்மா

3. பரமாத்மாவை அடைவதில் உள்ள தடை

4. தடையை நீக்கி அடையும் வழி

5. அடைவதால் பெறும் நன்மை.

இந்த ஐம்பொருள்களைப் பற்றிப் பேசுவதால் இதற்கு அர்த்த பஞ்சக ஞானம் என்று பெயர்.

?ஜோதிடத்தில் ஏழாம் பாவத்தை ஏன் களத்திர பாவம் என்று சொன்னார்கள்?

- அசோக்குமார், திருநெல்வேலி.

ஏழாம் பாவம் ஒன்றாம் பாவத்திற்கு நேர் எதிர் பாவம். ஒன்றாம் பாவத்திற்கு சரிசமமான பாவம். ஒருவன் இரண்டு விஷயங்களைத்தான் சரிசமமாக நினைப்பான். ஒன்று நட்பு. நட்பு வந்துவிட்டால் உயர்வு தாழ்வு கிடையாது. இரண்டாவது மனைவி. எனவேதான், ஏழாம் இடத்தை நட்பு மற்றும் மனைவி அல்லது கணவனுக்கான இடமாக வைத்தார்கள். கணவனும் மனைவியும் புரிந்துகொள்வதிலும், செயல்படுவதிலும் ஒருவரை ஒருவர் சம மதிப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஏழாம் பாவத்தை களத்திர பாவமாக வைத்தார்கள்.

?நேர்த்திக் கடனை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்?

- செல்லப்பன், துவாகுடி.

இதில் நாள் கணக்கு எதுவும் கிடையாது. எதற்காக வேண்டிக் கொண்டீர்களோ அது நிறைவேறியவுடன் எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ நிறைவேற்றி விட வேண்டும். காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டுமே தவிர நாள் கணக்கு போன்ற கணக்குகள் கிடையாது.

?வாஸ்து சாஸ்திரத்தில் அக்னி மூலையில் தண்ணீர் தேங்கக் கூடாது என்கிறார்களே!

- சாருமதி, விருத்தாசலம்.

எதிர்ப்பு சக்திகள் ஒன்றை ஒன்று இயங்க விடாது. அக்னி நெருப்பு. தண்ணீர் அதனை இயங்க விடாது. அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை அடுப்பில் ஊற்றினால் சமையலாகாது. எனவேதான் அக்னி மூலையில் சமையல் அறையை வைத்தார்கள். அங்கே தண்ணீர் தேங்கக்கூடாது என்றார்கள். யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிலும் ஒரு தர்க்க ரீதியான நியாயம் நமக்குப் புலப்படும்.

?விரதத்தால் என்ன பயன்?

- மோகன்குமார், தூத்துக்குடி.

எதை நினைத்து சங்கல்பித்துக் கொண்டு விரதமிருக்கிறீர்களோ அந்தப் பலன் உங்களுக்குக் கிடைத்து விடும் உதாரணமாக குழந்தைக்காக நீங்கள் சஷ்டி விரதம் இருக்கிறீர்கள் என்றால் குழந்தை கிடைப்பதுதான் விரதத்தின் பலன். இதுதவிர விரதம் என்பது பொதுவாக உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கும்.

?ஆலங்குடி தவிர குருவினுடைய தலங்கள் வேறு இருக்கின்றதா?

- கஸ்தூரி பாலாஜி, காஞ்சிபுரம்.

நிறையத் தலங்கள் இருக்கின்றன. சூரியனார் கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே சூரியனுக்கு நேர் எதிரில் குரு பகவான் காட்சி தருகின்றார். தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திட்டை, வசிஷ்டேஸ்வரர் எனும் குரு பரிகாரக் கோவில். தமிழகத்திலேயே குரு பகவான் மூலவருக்கும் அம்பாளுக்கும் நடுவே ‘ராஜகுரு’வாக தனிச் சந்நதியில் அருள் பாலிக்கும் ஒரே அபூர்வ தலம் இதுவேயாகும். மதுரை உசிலம்பட்டி அருகே திடியன் மலை என்றொரு தலம் இருக்கிறது. அங்கே காசியில் இருந்து சிவலிங்கமும் குருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன.

14 சீடர்களுடன் அங்கே குரு பகவான் காட்சி தருகின்றார். சகாதேவன் குரு பகவானிடம் இங்கேதான் ஜோதிட சாஸ்திரத்தை கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு குரு பகவான் தனது சுய உருவமான சாந்த வடிவில் தனிச் சந்நதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

காஞ்சி அருகே பிள்ளையார் பாளையம் என்கிற இடத்தில் காயாகரோகனேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. குரு கோயில் என்கிறார்கள். விழுப்புரம் முன்னூரில் குருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது. பொதுவாகவே தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கித் தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் அவர் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இப்படிப் பல கோயில்கள் குருபகவானுக்கு இருக்கின்றன.

?கோயிலுக்குப் போகும்பொழுது நாம் எப்படிச் செல்ல வேண்டும்?

- வளர்மதி, திண்டிவனம்

மிகுந்த அலங்காரங்களோடு விலை உயர்ந்த ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்வது தவறு. காரணம், அங்கே பகவானை பார்ப்பதை விட நம்மை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடைய வழிபாட்டுக்கு நாம் இடைஞ்சல் செய்வதாக ஆகிவிடும். அடுத்ததாக கோயிலில் இறை வழிபாட்டில்தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய கண்களோ காதுகளோ மற்றவர்கள் மீது இருக்கக் கூடாது. இதை மிக எளிதாக கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லி இருக்கின்றார்.ஆடை அணிகலன் ஆபரணங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு இல்லை.

?நாம் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது நல்லதா? பிறர் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது நல்லதா?

- விஜயகுமார், கடலூர்.

நாம் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதில் தவறு கிடையாது. ஆனால், நாமும் நன்றாக வாழ வேண்டும்; பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்பது மிக நல்ல பிரார்த்தனை.

?நாம் நடைமுறையில் செய்கின்ற மிகப்பெரிய தவறு என்ன?

- ராஜேஷ், பெங்களூரு.

பிறரை எள்ளி நகையாடுவது, எளிதாக எடை போடுவது. ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர் கணித பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதிலே ஒரேஒரு மாணவன் மட்டும் சோர்வினால் தூங்கி விட்டான். இரண்டு மூன்று முறை எழுப்பியும் அவன் எழுந்திருக்கவில்லை அப்படியே விட்டு விட்டார்கள். வகுப்பறையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியே செல்லும் பொழுதுதான் அந்த மாணவன் எழுந்தான். ஆசிரியர் பாடத்தைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று நினைத்தான். அப்பொழுது கரும்பலகையில் ஒரு கணிதம் போடப்பட்டிருந்தது.

அடுத்த நாள் வீட்டுப் பாடமாக ஒரு கணிதத்தை ஆசிரியர் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்து தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டு அன்று இரவு முழுக்க கணிதத்தைப் போட்டு முடித்து விட்டான். அடுத்த நாள் ஐயா நீங்கள் நேற்று கொடுத்த வீட்டுப் பாடத்தை நான் முடித்து விட்டேன் என்று பேராசிரியரிடம் நீட்ட அவர் திகைத்துப் போனார். காரணம், அது யாராலும் போட முடியாத ஒரு அபூர்வமான கணிதம்.

விழித்துக்கொண்டு கேட்ட மாணவர்களால் கூட போட முடியாத அந்த கணக்கை தூங்கிக் கொண்டிருந்த மாணவன் எப்படி துல்லியமாக போட்டான் என்று ஆசிரியர் வியந்து போனார். அவன் தூங்கியதைப் பார்த்து சிரித்த மாணவர்கள் இப்பொழுது அவன் திறமையைப் பார்த்து திகைத்துப் போனார்கள். தேவையற்ற முறையில் அந்த மாணவனை எண்ணி நகையாடி, அவனுடைய திறமையைப் பற்றி தவறாக எடை போட்டது குறித்து வருந்தினார்கள். அந்த மாணவன்தான் சார்ஜர் பெர்னாட் டான்சிக். பின்னால், மிகச் சிறந்த விஞ்ஞானியாக மாறினார். இது ஏதோ வெளிநாட்டுக் கதை என்று நினைக்காதீர்கள். நம் நாட்டிலும் இப்படிப்பட்ட கதை உண்டு.

ஸ்ரீரங்கத்தில் வரதராஜன் என்று ஒரு வைணவ குரு ஒருவருக்கு சமையல்காரர் இருந்தார் குருவைச் சந்திப்பதற்காக சில வித் வான்கள் வந்தார்கள்.வந்த நேரத்தில் குரு வெளியே போயிருந் ததால் சமையல்காரர் அவர்களை உட்காரச் சொன்னார். வரும்வரை அவர்கள் தங்களுக்குள் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சமையல்காரர் என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது சமையல்காரருக்கு இந்த விஷயம் எல்லாம் என்ன தெரியப் போகிறது என்று நினைத்துக் கொண்டு முசலகிசலயம் என்கிற புத்தகத்தை நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேலியாக சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

அவரும் சரி இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார். அடுத்த நாள் அவர் உணவளிக்கும் பொழுது குருவிடம் கேட்டார். நேற்று வந்த வித்வான்கள் முசலகிசலயம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந் தார்களே அந்த புத்தகம் என்ன என்று கேட்ட பொழுதுதான் அவருக்கு வந்த வித்வான்கள் இவரை கேலி செய்தது தெரிந்தது. அவர்கள் உன்னை உலக்கை கொழுந்து என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னவுடன் சமையல்காரருக்கு வருத்தமாகிவிட்டது.

அவரை ஆறுதல்படுத்திய குரு அவருக்கு முறையாக கல்வியைச் சொல்லித் தந்து அதே பெயரிலேயே ஒரு நூலை எழுதி அவர்கள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்ய வைத்தார். சமையல்காரர் என்று எள்ளி நகையாடி அவருடைய திறமையை கேலி செய்து விட்டோமே என்று கேலி பேசிய வித்வான்கள் வெட்கித் தலைகுனிந்தார்கள். அந்த சமையல்காரர் பெயர் தான் வாதிகேசரி அழகிய மணவாளசீயர். அவருக்குக் கல்வி சொல்லித் தந்த குருதான் பெரியவாச்சான்பிள்ளை. வைணவ அறிஞர். பல தத்துவ நூல்களை எழுதியவர்.

?கோபூஜை செய்வது நல்லது என்கிறார்கள் ஆனால் அதனைச் செய்வதற்கு வசதி இல்லை?

- வித்யா கணேஷ், உளுந்தூர்பேட்டை.

சாஸ்திரம் எந்த விஷயத்தையும் முழு மனதோடு செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிர, செய்ய முடியாதவர்களுக்கு அதனுடைய பலனை வேறு வகையில் தருவதற்கும் தயாராக இருக்கிறது. உதாரணமாக கோதானம் செய்ய வேண்டும். ஒரு மாட்டின் விலை 40 ஆயிரம் 50,000 என்று இருக்கும் பொழுது சாதாரண மக்களால் எப்படி கோதானம் செய்ய முடியும்? அதனால் சாஸ்திரம், எள் பசு செய்து, அதை பசுவாக நினைத்துக் கொண்டு மந்திரப் பூர்வமாக தானம் செய்யலாம். கோ பூஜை செய்ய முடியவில்லை என்றால் கோ பூஜை செய்கின்ற இடத்திலே, பசுவைத் தொட்டு வணங்கி ஆசிகள் பெறலாம். கோயில்களிலே பசு மடங்கள் இருக்கின்றன. உங்களால் இயன்ற கீரையோ வாழைப் பழமோ அல்லது, பசு பராமரிப்பதற்காக கொஞ்சம் பணமாக தரலாம். அங்கே உள்ள பசுவை நீங்கள் வணங்கி வரலாம். இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

தேஜஸ்வி