``அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’
- என்பது எல்லாம் இந்த நாட்டில் பிரபலமான வாக்குகள்.
சரவணகுமார் என்ற சிறுவன் பார்வையற்ற பெற்றோர்களுக்கு செய்த பணிவிடையைப் பற்றி ராமாயணம் விரிவாக பேசு
கிறது. அந்த வரிசையில், பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்த உத்தமன் ஒருவனை பற்றியும், அவன் அடைந்த உயர்ந்த நிலையைப் பற்றியும் ஓர் அபூர்வமான வரலாறு விவரிக்கிறது. துவாரகையில் சிவசர்மா என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவர் வேத வேதாந்தங்களில் கரைகண்டவர். அவருடைய பிள்ளை சோமசர்மா. அவன் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கியதோடு, பெற்றோர்களைத் தெய்வமாகப் பாவித்து, அவர்களுக்குத் தொண்டு செய்து வந்தான்.
ஒருநாள்...
சிவசர்மாவிற்குத் தன் மகனை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதனால், அவர் உடனே சோமசர்மாவை அழைத்து,
``மகனே! தெய்வ அனுக்கிரகத்தால் எனக்கு அமிர்தகலசம் கிடைத்தது. நானும் உன் தாயும் புண்ணியத் திருத்தங்களுக்கும் புனிதத் தலங்களுக்கும் யாத்திரையாகப் போகப்போகிறோம். நீ அமிர்த கலசத்துடன் எங்களோடு வந்து, எங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்’’ என்றார். அதை ஏற்ற சோமசர்மா, அமிர்த கலசத்தோடு பெற்றோர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு முழு மனதோடு
பணிவிடைகள் செய்தான்.
சென்று கொண்டிருந்த வழியிலேயே சிவசர்மா, தன் தவ வலிமையால் தன் உடலிலும் தன் மனைவியின் உடலிலும் குஷ்டரோகத்தை வரவழைத்துக் கொண்டார். கடுமையாக துர்வாசனை வீசியது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், சோமசர்மா தன் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். பெற்றோர்களோ, அவனுடைய செயல் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடித்து, வார்த்தைகளால் வறுத்து எடுத்தார்கள். அவர்களின் மனம் கோணாமல் பணிவிடை செய்த மகனோ,
தனிமையில் வருந்தினான்;
``அமிர்த கலசம்தான் கையில் இருக்கிறதே! அதை ஒரு துளி அருந்தினாலும் போதும். இந்த நோய் போய்விடும். மிகவும் உத்தமர்களான நம் பெற்றோர்களுக்கு இந்த நோய் ஏன் வந்தது?’’ எனப் புலம்பினான். அது தெரிந்தது போல, சிவசர்மா தன் மகனை அழைத்து,
``அமிர்தத்தைக் கொடுத்து எங்கள் நோயைத்தீர்க்கும் எண்ணமே உனக்கு இல்லையா?’’ எனக் கத்தினார். சோமசர்மா ஓடிச் சென்று அமிர்த கலசத்தை எடுத்துத் திறந்தான். அதில் அமிர்தம் இல்லை. திடுக்கிட்ட சோமசர்மா,
``என் பெற்றோர்களுக்கு நான் செய்த தொண்டுகள் உண்மையாக இருந்தால், இந்தக் கலசத்தில் அமிர்தம் நிறையட்டும்’’ என வேண்டினான். அதே வினாடியில், அவன் கையில் இருந்த கலசத்தில், அமிர்தம் நிறைந்தது. அதை எடுத்துக் கொண்டு பெற்றோர்களிடம்
ஓடினான். அப்போது சிவசர்மா,
``மகனே! அமிர்த கலசத்தை நீ கொண்டு வந்த போதே அதில் அமிர்தம் இல்லை. எங்களுக்குத் தொண்டு செய்வதிலேயே உன் மனம் ஈடுபட்டதால், கலசம் காலியாக இருந்ததை, நீ கவனிக்கவில்லை. இப்போது நீ கொண்டு வந்த அமிர்தம் உன் முயற்சியால் கிடைத்தது. முயற்சியின்றிக் கிடைத்தால் அதன் அருமை தெரியாது. அதை உணர்த்தவே இவ்வாறு செய்தோம். மிக்க மகிழ்ச்சி. வேண்டும் வரத்தைக் கேள்!’’ என்றார்.
சோமசர்மா, பெற்றோர்களை வணங்கி,
``நோய் நீங்கி நீங்கள் இருவரும் பழைய படியே சுகமாக இருக்க வேண்டும்’’ என வேண்டினான். அதன்படியே பெற்றோர்கள் தங்கள் நோயை, தவ வலிமையால் நீக்கிக்கொண்டு ஆரோக்கியமாகக் காட்சியளித்தார்கள். மகன் மகிழ, அவனுக்கு ஆசி வழங்கிய பெற்றோர்கள், விஷ்ணுபதம் அடைந்தார்கள். சோமசர்மாவோ, பெற்றோர்கள் பெருமையை நினைத்து, அவர்கள் காட்டிய வழியில் முனிவர்கள் ஆசிரமங்கள்தோறும் தங்கி, விஷ்ணுவைத் தியானித்து வந்தான்; உயிர் பிரியும் காலத்திற்காகக் காத்திருந்தான்.
ஒருநாள்...
அவன் நிஷ்டையிலிருந்த போது, அசுரர்கள் கூட்டம் அந்த ஆசிரமத்தில் புகுந்தது. எல்லோரும் கூச்சலிட்டார்கள். சோமசர்மாவின் நிஷ்டை கலைந்தது. அப்போது,
``அசுரர்கள்! அசுரர்கள்!’’ என்ற ஓசை அவன் காதில் விழுந்தது.
``அசுரர்களா! அவர்கள் யார்? எப்படி இருப்பார்கள்?’’ என சோமசர்மா நினைத்துக் கொண்டிருந்த அதே வேளையில்... அவன் உயிர் பிரிந்தது. உடலை விட்டு உயிர் பிரியும் வேளையில் அசுரர்களை நினைத்ததால், அந்த சோமசர்மா அடுத்த பிறவியில் அசுரனாகப் பிறந்தான். விஷ்ணு தியானம் செய்து வந்தவனாக இருந்ததால், தலைசிறந்த விஷ்ணு பக்தனாகவும் திகழ்ந்தான்.
அப்போது அவன் பெயர் - பிரகலாதன். பிரகலாதனின் முற்பிறவி கதையான இது, பெற்றோர்களுக்குச் செய்யும் பணிவிடை களின் மகிமையையும் உணர்த்தும்.


