Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தாய்- தந்தை இருவரில் யாருக்கு முன்னுரிமை?

“இறைத்தூதர் அவர்களே... அறப்போருக்குச் செல்லும் அரசுப் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று துடிப்புடன் வந்து நின்றார் ஓர் இளைஞர். அந்த இளைஞரை ஏற இறங்கப் பார்த்தார் இறைத்தூதர். மீசை இப்போதுதான் அரும்பு விடத் தொடங்கியிருந்தது. விடலைப் பருவம் தாண்டாத வயது.

“உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார் நபிகளார்.

“ஆம். இருவருமே இறையருளால் உயிருடன் இருக்கிறார்கள்” என்றார் அந்த இளைஞர்.

“அப்படியானால் நீ சென்று உன் பெற்றோருக்குப் பணிவிடை செய்” என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார், அண்ணல் நபிகளார்.

இன்னொரு இளைஞருக்கு ராணுவத்தில் சேர எல்லாத் தகுதிகளும் இருந்தன. அவரும் நபிகளாரிடம் வந்து தம்மை அறப்போர்ப் படையில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார்.

“உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கினாயா?” என்று கேட்டார் இறைத்தூதர் அவர்கள்.

“இல்லை” என்றார் அந்த இளைஞர்.

“உன்னை உன் தாய் எப்படி அனுப்பி வைத்தார்?” என்று நபிகளார் கேட்க, “அவர் அழுதுகொண்டே இருந்தார். தாயின் அழுகையைப் பொருட்படுத்தாமல் நான் வந்துவிட்டேன்” என்றார் அந்த இளைஞர்.

“உடனே இங்கிருந்து செல். அழுத நிலையில் விட்டுவந்த உன் தாயை சிரிக்க வை. பெற்றோரின் மகிழ்ச்சியில்தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது” என்றார் நபிகளார்.

ஒரு முறை இறைத்தூதரிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தாய் - தந்தை இருவரில் நான் யாருக்கு முன்னுரிமை தரவேண்டும்?” என்று கேட்டார்.

“உன் தாய்க்கு” என்றார் நபிகளார்.

இதுபோல் மூன்று தடவை அந்த மனிதர் கேட்டபோதும் மூன்று தடவையும் “உன் தாய்க்குத்தான் முன்னுரிமை தரவேண்டும்” என்று கூறினார் நபிகளார். நான்காவது தடவையாகக் கேட்ட போது “உன் தந்தைக்கு” என்றார்.

இந்த நபிமொழிக்கு மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளிக்கும்போது, தந்தையை விட தாய்க்கு மூன்று மடங்கு உரிமை அதிகம் உண்டு என்கிறார்கள்.

“தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது” என்று கூறி தாய்மையைப் போற்றினார் தாயுள்ளம் கொண்ட தாஹா நபிகளார்(ஸல்).

இறைவன் தன் இறுதிவேதத்தில் கூறுகிறான்.

“பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்றுத் தன் வயிற்றில் அவனைச் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வரவேண்டியுள்ளது.” (குர்ஆன்31:14)

ஆனால் இன்றைய நிலை?

தாய் - தந்தையரை மரியாதை இல்லாமல் திட்டுகிறார்கள்,

மனத்தைப் புண்படுத்துகிறார்கள்,

அடிக்கிறார்கள், வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள்,

முதியோர் இல்லத்தில் தள்ளி விடுகிறார்கள்,

ஏன் - சொத்துக்காகப் பெற்றெடுத்த தாயையே கொலை செய்யவும் துணிகிறார்கள்.

இவை அனைத்தும் இறைவனின் சாபத்தையும் கோபத்தையுமே வரவழைக்கும் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.

வயதான தாய்- தந்தையருக்குப் பணிவிடை செய்து, அதன்மூலம் புண்ணியங்களைச் சேர்த்து இறையருளைப் பெறுவோம்.

இந்த வார சிந்தனை

“பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உங்களிடம் இருந்தால் அவர்களைச் ‘சீ’ என்றுகூடக் கூறாதீர்கள். அவர்களிடம் கடிந்து பேசாதீர்கள். மாறாக, கண்ணியத்துடன் பேசுங்கள்.”(குர்ஆன் 17:23)

- சிராஜுல்ஹஸன்.